Index |Subscribe mailing list | Help | E-mail us

இறைமறை கூறும் இறையச்சமுடையோர் யார்?

நெல்லிக்குப்பம் மஹ்பூப், துரபா

 

"லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" எனும் திருக் கலிமாவை ஒருவன் உளமாற ஏற்றுக் கொண்டு, அதனை மொழிந்தால், இஸ்லாமியர்களுக்கான முழு இலக்கணமும் இல்லாதிருந்தாலும் அவன் முஸ்லிமாகக் கருதப்படுகிறான்.

இந்தத் திருக்கலிமாவை ஒருவன் சொல்வதால் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் வந்து விட்டாலும், இதனை அவன் மொழிந்ததால் மட்டும், இறைவனின் அன்பையும் நேசத்தையும் பெற்ற சிறந்த கண்ணிய மிக்க ஒரு முஸ்லிமாக திகழ முடியாது. அந்த சிறப்பினை அடைய வேண்டுமானால் இறைவன் எதிர்பார்க்கும் இறையச்சம் அவனது உள்ளத்தில் முழு இடம் பிடித்திருக்க வேண்டும். இந்த இறையச்சம்தான் ஒருவனை சிறந்த முஸ்லிமாக, இறைவனின் அன்பிற்குரியவனாக ஆக்குகிறது. இதற்கு பின் வரும் வசனம் சான்றாக இருப்பதை காணலாம்.


إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ (الحجرات)


அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியமிக்கவர் உங்களில் மிகுந்த இறையச்சமுடையவர்களாகும்.

(அல் குர்ஆன்: 49:13)

இதே பொருளினைக் கொண்டிருக்கும் ஒரு நபி மொழியும் சான்றாக அமைந்துள்ளது.


عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه قِيلَ يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَكْرَمُ النَّاسِ قَالَ أَتْقَاهُمْ » رواه البخاري.


(நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்? என்று வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், " மனிதர்களிலேயே (அல்லாஹ்வை) அதிகம் அஞ்சுபவர்தான்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள். நூல் புஹாரி.

போலியான இறையச்சம்:
இறையச்சம் என்பது வணங்கி வழிபடும் நேரத்தில் மட்டும் வெளிப்படும் போலியான பக்தி அல்ல. நமது எல்லா நிலைகளிலும், எல்லாச் செயல்பாடுகளிலும் அது மிளிர வேண்டும். வணக்கத்தின் போது மட்டும் இறைவனை அஞ்சிடும் பலர் மற்ற நேரங்களில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என்று கருதி செயல் பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்களது நிலையினை மாற்றிக் கொள்ளாத வரை இறைமறை கூறும் இறையச்சமுடையோர் பட்டியலில் ஒரு போதும் இடம் பிடிக்க முடியாது. நாம் வணக்கமாக கருதிடும் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் மட்டுமல்மலாமல் நமது ஒவ்வொரு அசைவிலும் இறையச்சம் வெளிப்பட வேண்டும்.

பிராணிகள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளும் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்தி சொல்லி இருக்கும் செய்தி ஹதீஸ் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நமக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் ஒரு பூணையின் காரணத்தினால் நரகத்திற்கும், வேறொரு பெண் ஒரு நாயின் காரணத்தினால் சுவர்க்கத்திற்கும் சென்றதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி நமக்கு இன்றும் ஒரு சிறந்த படிப்பினையாக விளங்குகிறது. சுவர்க்கம், நரகம் செல்வதற்கு நாய், பூணை முழுகாரணமல்ல. அந்த பிராணிகளோடுள்ள பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட இறையச்சம், இறையச்சமின்மையே காரணம். பிராணிகளின் விஷயத்திலேயே இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும் எனப் போதிக்கும் இஸ்லாம் மனிதர்களோடுள்ள பரிமாற்றத்தில் இறைவனை அஞ்ச வேண்டும் என்பதில் எந்தளவிற்கு கண்டிப்பு காட்டும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வணக்க வாழிபாடுகளில் மட்டும் இறையச்சத்தை வெளிப்படுத்தி விட்டு, மற்ற தனது செயல்பாடுகளில் அந்த இறையச்சம் இல்லாதபோது அந்த வணக்கம் போலியான வணக்கமாக கருதப்பட்டு, நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதும் இந்த நபி மொழியிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

"எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும்." என்ற கருத்தைப் போதிக்கும் வசனங்கள் குர்ஆனின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெற்றுள்ளன. அதனை எழுதுவதற்கு இந்த சிறிய இடம் போதுமாகாது.

எனினும் இதே கருத்தை வலியுறுத்தும் ஒரு நபி மொழியை உங்களது நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.


عن أبي ذر قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي


அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள், தீமையை தொடர்ந்து நன்மையைச் செய்து விடு. அது தீமையை அழித்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் பழகு" என்று எனக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் திர்மிதி.

இந்த நபி மொழியில் இடம் பெற்றுள்ள "எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்கிக் கொள்ளுங்கள்" என்ற வாசகம்தான் இங்கே கவனிக்கத்தக்கதாகும். இறையச்சம் என்பது எல்லா இடத்திலும் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.

இறையச்சத்தின் பயன்கள்:


وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا الله (النساء)


உங்களுக்கும், முன் வாழ்ந்த வேதக்கார்களுக்கும் "அல்லாஹ்வையே அஞ்சிக் கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்தோம். (அல் குர்ஆன்: 4:131).

இறையச்சத்தை வலியுறுத்தியும், அதனால் கிடைக்கும் பயன்களை எடுத்துக் கூறும் சில வசனங்களையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ


விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக் கொள்ளுங்கள்ளூ நிச்சயமாக முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம். (அல்குர்ஆன் 3:102)

 

 


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلاً سَدِيداً - يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزاً عَظِيماً

 
விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நேர்மையான கூற்றையே கூறுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களுடைய செயல்களை சீர்படுத்துவான். உங்களது குற்றங்களை மன்னிப்பான். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடப்பவர்கள் மகத்தான வெற்றியை அடைந்து விட்டார்கள். (அல்குர்ஆன்: 33: 70-71).

மேற்கூறப்பட்ட வசனங்களில் இறைவனை அஞ்ச வேண்டிய அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பயனையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இறைவனை அஞ்சி நடப்பவர்களுக்கு கிடைக்கும் வெகுமதிகள் குறித்து 55-வது அத்தியாயத்திலும், 78-வது அத்தியாயத்திலும் மேலும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஏராளமான சிறப்புகள் பல உள்ள செய்தியை குர்ஆனின் பல அத்தியாங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இடச் சுறுக்கம் கருதி அவற்றை எடுத்து எழுதாமல் இங்கு விடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் அந்த வசனங்களின் மொழிபெயர்ப்பை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும். அதனால் நாம் இறைவனை அஞ்சக் கூடியவர்களாக ஆகி, அந்த வெகுமதிகளை அடைந்து கொள்ள அது காரணமாக அமையும்.

இம்மைப் பயன்கள்:
இறையச்சம் ஒருவனின் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டால் அவனது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பிற்குரியதாக அமைகிறது. காரணம் எல்லா நேரத்திலும் தான் இறைவனின் கண்காணிப்பில் இருப்பதாக உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள அவன், இறைவனின் கோபத்திற்குரிய தீய செயல்களான பொய், புறம், வஞ்சகம், பொறாமை, குரோதம், திருட்டு, கொலை, கொள்ளை, மோசடி, ஏமாற்றுதல் போதைப் பழக்கம், விபச்சாரம் ஆகியவற்றில் எந்த ஒன்றையும் செய்யத் துணிவு கொள்ளமாட்டான். இதற்கு மாற்றமாக இறைவனின் நேசத்தைப் பெற்றுத் தரும் சிறப்பிற்குரிய செயல்களான தொழில் நேர்மை, பெற்றோரைப் பேணல், உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்பு பாரட்டுதல், அண்டை வீட்டாரிடம் நட்புடன் பழகுதல் விருந்தினர்களை உபசரித்தல், விருந்தோம்பல், எல்லா நிலையிலும் உண்மை பேசுதல் போன்ற அனைத்து நற்பண்புகளுக்கும் சொந்தக்காரனாக திகழ்கிறான். எந்த சூழ்நிலையிலும் அவனது வாழ்வில் ஆனந்தம் கரைபுரண்டு ஓடும். மேலும் அல்லாஹ்வின் நேசர்களில் ஒருவனாக மாறிவிடுகிறான். இது இறையச்சத்தினால் இவ்வுலகில் ஏற்படும் பயன்களில் சிலதாகும்.

இறையச்சமுடையோர் யார்?
இறையச்சமுடையோர்தான் இறைவனின் அன்பையும், அவனிடம் கண்ணியத்தையும் பெறுவதற்குரியவர் என்தையும், இறையச்சத்தினால் அவர்களுக்கு இருஉலகிலும் கிடைத்திடும் பயன்களையும் தெரிந்து கொண்ட நாம், இறையச்சமுடையோர் என்பர் யார்? என்பதையும் தெரிந்தாக வேண்டும். காரணம் பெரிய தாடி, தலைப்பாகை சகித்துடன் ஊர் சுற்றித்திரியும் சிலரை மட்டுமே தக்வாதாரிகள் (இறையச்சமுடையோர்) என்றும், தக்வாதாரிகளின் அடையாளங்களாக இஸ்லாத்தில் இல்லாத சிலவற்றையெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். இதனால் சமூகத்தில் போலிகள் உருவாகி சமூகத்திற்கு பெரும் அவமான சின்னங்களாக அவர்கள் திகழ்கிறார்கள். இறைவன் கூறி இறையச்சமுடையோர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் சிலர் தடம் புரண்டுவிட்டுள்ளார்கள். எனவே, இறைவன் யாரை இறையச்சமுடையோர் என்று கூறியுள்ளான் என்பதை தெரிந்து கொண்டால் போலிகளை அறவே ஒழித்து விடலாம் என்பதுடன் நாமும் இறையச்சமுடையோர் தான் என்ற சத்தியத்தையும் புரிந்து கொள்ளலாம். மேலும் இறையச்சமுடையோராக எல்லாராலும் ஆக முடியும் என்ற உண்மையையும் தெரிந்து கொள்ளலாம்.

அல் பகரா அத்தியாத்தின் ஆரம்பத்தில் இறைவன் இறக்கிய வேதமான குர்ஆன் இறையச்சமுடையோர்களுக்கு நேர்வழி காட்டும் என்று கூறிவரும் தொடரில், அந்த இறையச்சம் உடையோர் என்பர் யார்? என்பதற்கான தெளிவான ஆறு அடையாளங்களை அல்லாஹ் கூறியுள்ளான். இந்த ஆறு அடையாளங்கள் யாரிடத்தில் இருக்கின்றனவோ அவர்கள் அனைவரும் இறையச்சமுடையோர்கள்தான். அவர்கள் இறைவன் காட்டிய நேர்வழியில் உள்ளார்கள். அவர்களே வெற்றியாளர்கள் என்ற சான்றும் பகருகிறான்.

இறையச்சமுடையோர்களுக்கான ஆறு அடையாளங்கள்:
1. மறைவானவற்றை,
2. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது இறங்கிய வேதத்தை,
3. முன் சென்ற இறைத்தூதர்கள் மீது அருளப்பெற்ற வேதங்களை,
4. மறுமையை விசுவாசம் கொள்ளுதல்.
5. தொழுகையை நிலைநிறுத்துதல்,
6. இறைவன் வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தல்,


இறைவன் கூறிய இறையச்சமுடையோர்களுக்கான இந்த ஆறு அடையாளங்கள் உங்களிடத்தில் நிறைந்துள்ளனவா? ஆம் எனில் நிச்சயமாக நீங்களும் இறையச்சமுடையோர்தான். அதில் எந்த சந்கேமும் இல்லை. இந்த ஆறு பண்புகளில் ஏதேனும் ஒன்றில் உங்களிடம் குறை ஏற்படுமானால் அதனை நிவர்த்தி செய்து இறையச்சமுடையோர்களில் உள்ளவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் இறையச்சமுடையோர்களாக ஆக்கி, அவனது நேசத்திற்கும், திருப்பொருத்ததிற்கும் உரியவர்களாக ஆக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.