பக்காப் படிக்கு முக்காப்படி அளக்கிறார் நேசகுமார்.

இஸ்லாம் என்றால் என்னவென்றே விளங்காமல் நேசகுமார் என்பவர் ”பக்காப்படிக்கு முக்காப்படி அளந்து கணக்கு காட்டுகிறார். இவர் அளக்கும் படி சரியில்லை என்று ஏற்கெனவே திருப்பி அனுப்பியும், வருடம் கடந்து சென்று விட்டதால் மக்கள் மறதியை தனக்கு சாதகமாக்கி மீண்டும் அளவு சரியில்லாத பழையப் பக்காப் படியோடு மீண்டும் நேசகுமார்.

”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை”
”முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்”

இதை வாய் மொழிந்தவர்கள் இஸ்லாம் என்ற வட்டத்தில் நுழைந்து முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவ்வளவுதான் இஸ்லாம்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித்தூதர் என்று இஸ்லாம் சொல்வதால், நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அப்படி வருவதாக நம்பி, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் யாரையேனும் நபியாக நம்பிக்கை கொண்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராவார். அதனால்…

//ம்யூஸ் என்பவர் அபூ முஹையிடம் இரு கேள்விகள் கேட்டிருக்கின்றார். மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று சொல்வீர்களா, உடலை இஸ்லாமியச் சமாதியில் அடக்கம் செய்ய மறுப்பீர்களா என்று.

இதற்கு அபூ முஹை ‘அழகாக’ பதிலளிக்கிறார். கிப்லாவை நோக்கி வணங்குபவர்களை முஸ்லிம்கள் இல்லை என்று அறிவிக்கும் அதிகாரம் எந்த முஸ்லிமுக்கும் கிடையாதாம். மேலும் இறந்த பின் உடலை முறையாக அடக்கம் செய்வது – அது யார் என்றாலும் இஸ்லாமியர்களது நம்பிக்கையாம்.

எப்படி ஏமாற்றுகிறார்கள் பார்த்தீர்களா. அதே கிப்லாவை(காபா) நோக்கி வணங்குகிறவர்கள் தானே அகமதி முஸ்லிம்கள். அவர்களை மட்டும் முஸ்லிம்கள் இல்லையென்று அறிவிக்கும் அதிகாரம் உங்களுக்கு எப்படி கிட்டியது? அவர்கள் கிப்லா பக்கமே போகக் கூடாது என்றுதானே பாகிஸ்தான் தனது பாஸ்போர்ட்டில் மதம் என்று ஒரு பிரிவைச் சேர்த்து அவர்களை சவுதிக்காரர்கள் அடையாளம் கண்டு கொள்ள வழி செய்து தருகிறது.
பஹாய்களும் அதையேதானே செய்து வந்தார்கள்? – உங்களை விட அதீத ஈமான் கொண்டு, நல்லவர்களாக ஏக இறைவனை வணங்கிவருகிறார்களே – அவர்களை, அவர்களே முஸ்லிம் இல்லை என்று சொல்லும் படி ஓட ஓட அடித்து விரட்டியது யார்? அந்த அதிகாரம் உங்களுக்கு எப்படி கிட்டியது?//

- கிப்லாவை நோக்கினால் மட்டும் போதாது, முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதித்தூதர் என்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். நேர்மையான பக்காப்படி கொண்டு அளக்கட்டும் என்று மீண்டும் நேசகுமார் என்பவருக்கு சொல்லிக் கொண்டு -

-இஸ்லாத்தை முறையாக விளங்காமல், அரைகுறையாக விளங்கிச் செயல்பட்டு அதனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தி, ஏனைய முஸ்லிம்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் பெயர் தாங்கி முஸ்லிம் என்றாலும், ”நாம் அறுத்ததை புசித்து நமது கிப்லாவை நோக்குபவன் முஸ்லிம்” என்று இஸ்லாம் சொல்வதால் ் இவனை முற்றாக இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை. – Muse அவர்களின் பின்னூட்டத்திற்கு சரியாகத்தான் அபூ முஹை பதிலளித்திருக்கிறார்.

”பஹாய்கள்” முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை, கிப்லாவை நாளெல்லாம் முன்னோக்கினாலும் ஒரு புண்ணியமும் இல்லை அறியவும்.

ஆரம்பத்தில் இவருடைய வாதங்கள் ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது. இப்பெல்லாம் என்ன ஆச்சு இவருக்கு…?

அன்புடன்.
அபூ முஹை

அவதூறு பரப்புவதும் கொலையை போன்றதே!

70- யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார்.தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது எதன்மூலம் ஒருவர் தம்மைத்தாமே தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். இறை நம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். யார் ஒர் இறை நம்பிக்கையாளரை இறைமறுப்பாளர் (காஃபிர்)என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் பின் ளஹ்ஹாக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி-6047: ஸாபித் பின் ளஹ்ஹாக்(ரலி)

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு

தேனீ யுனிகோடு எழுத்துருவை தமிழ் உலகத்திற்கு தந்த உமர் அவர்கள் இன்று (12.07.2006) மாலை 5.30 -க்கு இவ்வுலகத்தை விட்டு மறைந்தார்.

யுனிகோடுவின் பல்வேறு வகை பயன்பாடுகள் மற்றும் RSS ஓடை பற்றிய கட்டுரைகளோடு இவரின் தமிழ் அகராதியும் பிரபலமானவை. யுனிகோடுவின் வளர்ச்சி பற்றி பேசப்படும் தளங்கள் மற்றும் மடலாற்குழுமங்களில் உமர் அவர்களின் கட்டுரைகளை காணலாம்.

அனைத்து தளங்களிலும் பயன்படுத்தும் வகையில் இயங்கு எழுத்துரு (THENEE.eot) தயாரித்து அனைவரின் நேரத்தையும், சிரமத்தையும் குறைத்தவர் உமர் அவர்கள்.

உமர் அவர்கள் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு பொழப்பு.

மனிதர்களுக்கு சேவை புரிவதும் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்வதும் ஒழுக்கப் பண்பாடடின் ஒரு முக்கிய அம்சமாகும். ஒழுக்கவியலுடன் தொடர்புள்ள சிந்தனையாளர்கள் அனைவருமே தம் அறிவுரைகளில் மனிதகுல சேவைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறே உலகத்தின் எல்லா மதங்களும் அதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டுள்ளன. இதை அம்மதங்களின் வேதங்களிலும், ஆகமங்களிலும் காணலாம்.

படைப்பினங்களுக்கு பணி செய்வது இறைவனுக்குச் செய்யும் சேவையாக இஸ்லாம் கருதுகிறது – இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவியாகவும், மனிதர்களுக்கு ஒத்துழைப்பு செய்வதை, இறைவனுக்கு செய்யும் ஒத்துழைப்பாகவும் கருதுகிறது இஸ்லாம்.

விசுவாசிகளே! – நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன், 5:2)

பிற மனிதர்களின் உயிர், உடமை, மானம், மரியாதைகளை, தனது உயிர், உடமை, மானம், மரியாதைகளைப் பாதுகாப்பது போல் காத்திட வேண்டுமெனக் கட்டளையிடுகிறது இஸ்லாம். மனித வாழ்வின் அனைத்து நன்மையான அம்சங்களிலும், பயபக்தி விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, உறுதுணையாக இருக்க வலியுறுத்துகிறது. பாவமென வகுக்கப்பட்ட அநியாயச் செயல்களில், வரம்பு மீறி ஈடுபடுபவர்களுக்கு, எவ்விதத்திலும் உதவியாக – உறுதுணையாக இருக்கக் கூடாது எனவும் எச்சரிக்கிறது. பாவம் செய்பவனையும், பாவம் செய்பவனுக்கு உதவியாக இருப்பனையும் – ”நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.” இறைவனின் இந்த எச்சரிக்கைகளுக்கு செவி கொடாதவன் எவனும் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களே!

இறைவனுக்கு இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக, இஸ்லாம் மனிதக் கொலையை இரண்டாவது பெரும் பாவமாகக் கருதுகிறது. கொலை செய்பவன் எவனும் இஸ்லாத்தை அறிந்த உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.

நபிமொழிகள்

”மனித குலம் முழுவதும் அல்லாஹ்வின் குடும்பமாகும். மனிதகுலத்திற்கு அதிக நன்மை செய்வர்கள்தான் அல்லாஹ்விடத்தில் அதிக அன்பிற்குரியவர்கள்”. (நபிமொழி, மிஷ்காத்)

”எவன் மனிதர்கள் மீது கருணை புரிவதில்லையோ அவன் மீது இறைவன் கருணை புரிவதில்லை” (நபிமொழி, புகாரி)

கருணை புரிபவர்கள் மீது கிருபையுள்ள இறைவன் கருணையைப் பொழிகின்றான். (எனவே நீங்கள்) பூமியில் இருப்பவர் மீது கருணை புரியுங்கள், வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கருணையைப் பொழிவான்”. (நபிமொழி திர்மிதி)

”இங்கு கருணைபுரிவது என்பது, பரஸ்பரம் அனுதாபம் கொள்வது, உங்களுக்கு மத்தியில் – உங்களுக்கு நெருக்கமானவர்களிடையே நீங்கள் புரியும் கருணையைக் குறிப்பிடவில்லை. மாறாக மனித இனத்தின் ஒவ்வொரு பொது மனிதனுடனும் நீங்கள் கருணை புரிய வேண்டும்” (நபிமொழி, தப்ரானி) என்பதுதான் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

நாங்கள் அமர்ந்திருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். ”உங்களில் சிறந்தவர் யார்? தீயவர் யார்? என அறிவிக்கட்டுமா” என்று கேட்டார்கள். நாங்கள் மெளனமாக இருந்தோம். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். ”இறைத்தூதர் அவர்களே! எங்களில் நல்லவர் யார், தீயவர் யார் என்பதை அவசியம் அறிவியுங்கள்” என்று எங்களில் ஒருவர் பதிலளித்தார்.

”உங்களில் எவரிடம் மக்கள் நன்மையை எதிர்பார்க்கிறார்களோ, மேலும் உங்களிடமிருந்து எந்தத் தீமையும் ஏற்படாது – நாம் பாதுகாப்பாக இருப்போம் என மக்கள் கருதும் அளவுக்கு எவருடைய நடத்தை அமைந்திருக்குமோ அவர்தான் உங்களில் சிறந்தவர்”
”மேலும் எவர்களிடமிருந்து நன்மை எதிர்பார்க்கப்படவில்லையோ, எவருடைய தீங்கிலிருந்து மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்களோ அவர்தான் உங்களில் தீயவர். (நபிமொழி – அஹமத், திர்மிதி)

மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை – இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை – இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.

//இதில் என்ன கொடுமை என்றால், இதைச் செய்தது இந்திய இராணுவம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, யூதர்கள், அவர்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் இஸ்லாமிஸ்ட் கும்பல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும்.// – பிணங்களின் மீது ஏறி நின்று, மத வண்ணம் பூசும் இதெல்லாம் ஒரு பொழப்பு. அனாதைப் பிணங்களை சாலையில் கிடத்தி, வசூலித்து வயிறு வளர்ப்பவர்களை நினைவூட்டுகிறது.

நன்றி: கோவி.கண்ணன்

நடுநிலையாளர்களுக்கு.

தற்கொலையும் நரக நெருப்பும்……

69- யார் மலையின் மீதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில்(தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தை கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொணடேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி: 5778 அபுஹூரைரா(ரலி)

இஸ்லாமிய வகுப்புகள்