Index | Subscribe mailing list | Help | E-mail us

பாடம் - 5

அப்துர்ரஹ்மான் மன்பயீ, Makkah

முஹ்கம், முதஷாபிஹ்

المحكم والمتشابه

 

அல்குர்ஆன் வசனங்களின் கருத்தைப் புரிவதை கவனத்தில் கொண்டு, வசனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

 

1) முஹ்கம் (உறுதிசெய்யப்பட்டது)

2) முதஷாபிஹ் (இரு கருத்துக்கு வாய்ப்பானது)

அதாவது முஹ்கமான வசனங்கள் முடிவாக ஒரே கருத்தைத்தான் தரும். குப்பத்தை விரும்புகிறவர்கள் அதிலே மாற்றுக் கருத்துக் கூறி குழப்பம் செய்ய முடியாது. ஆனால், முதஷாபிஹான வசனங்கள் இரு கருத்து கொள்கிற விதத்தில் வாசகங்களை கொண்டிருக்கும். வழி தவறியவர்கள் தங்கள் தவறான கருத்துக்கு சாதகமாக அதற்கு விளக்கமளித்து குழப்பம் செய்யமுடியும்.

இது குறித்துப் பேசும் குர்ஆன் வசனமானது:

 

هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُوْلُوا الْأَلْبَابِ
 

அவனே உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் உறுதிசெய்யப்பட்ட வசனங்களும் -அவையே இவ்வேதத்தின் தாய்- இரு கருத்துக்கு இடம் தருகிற வேறு சில வசனங்களும் உள்ளன. எவர்களின் இதயங்களில் சருகல் இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் (அதற்கேற்ப) விளக்கத்தை நாடியும் அதில் இருகருத்துக்கு இடம் தருபவற்றை தொடர்கின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர (மற்றவர்கள்) அதன் விளக்கத்தை அறியமாட்டார்கள். அவர்கள், இதனை நம்பினோம், அனைத்தும் எங்கள் ரட்சகனிடமிருந்து வந்தவையே என்று கூறுவார்கள். அறிவுடையவர்கள் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 3:7)

முதஷாபிஹான ஆயத்துக்களை வைத்து குழப்பம் செய்வதற்கு உதாரணமாக கீழ்காணும் வசனத்தை சிலர் கையாளுவதை குறிப்பிடலாம்.

அல்குர்ஆனின் 2:154 வது வசனம், அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள் அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் அறியமாட்டீர்கள்.

என்று குறிப்பிடுவதால், நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களை அழைத்து பிரார்த்திக்கலாம் என்று சிலர் கருத்துக் கூறி வழி கெடுக்கின்றனர்.

இந்த வசனத்தில் நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் இதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்ட ஷஹீதுகளின் உயிர்கள் சொர்க்கத்தில் பச்சை நிறத்துப் பறவைகளின் உடலினுல் இருக்கும் அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித்திரியும்" என்று கூறியிருப்பதையும் (நூல்: முஸ்லிம், 3500) கருத்தில் கொள்வதில்லை.

இத்தகையவர்கள் அல்குர்ஆனின் அடிப்படையாகிய ஓரிறைக் கொள்கைக்கு எதிராக அல்குர்ஆனின் வசனத்தையே பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள், இதன் மூலம் 3:7ல் "குழப்பத்தை நாடி" என்று அல்லாஹ் பழித்துக் கூறுவது நிதர்சனமாகிறது.
 

அல்லாஹ்வைத்தவிர மற்றவர், முதஷாபிஹின் கருத்தை அறிய முடியாதா?


முதஷாபிஹான வசனங்களின் பொருளை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். அதற்கான காரணம் மேற்கூறிய 3:7வது வசனத்தில் இடையில் செய்யும் நிறுத்தத்தினால் இப்படிப் பொருள் வருகிறது. அதாவது:
 

وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ

என்று நிறுத்திவிட்டு,

 

وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ

 

என்பதை தனியாக துவக்குவது. இதன் காரணமாக, "அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறிவதில்லை. கல்வியில் தேர்ந்தவர்கள் இதனை நம்பினோம்.. என்று கூறுவார்கள்" என்று பொருள் வருகிறது.

இக்கருத்தின் படி குர்ஆனிலே அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமே புரிந்து கொள்ள முடியாத வசனங்கள் உண்டு என்றாகிறது. இந்தக் கருத்துக்கு எதிராக, குர்ஆனின் எல்லா வசனங்களுக்கும் விளக்கம் கூறப்படுகிறது, மொழி பெயர்ப்பும் செய்யப்படுகிறது! மேலும் மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ் இறக்கிய வேதத்தில் மனிதர்களின் எவருமே புரிந்து கொள்ளமுடியாத வியத்தைக் கூறினால் அது பயனற்ற செயல் அத்தகைய பயனற்ற செயலை அல்லாஹ் செய்வானா? என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விக்கு, இக்கருத்தைக் கொண்டோர் சார்பில் அளிக்கப்படும் பதில் என்னவெனில், அல்லாஹ்வை தவிர(யாரும்) அதன் விளக்கத்தை அறிய மாட்டார் என்பதின் கருத்து என்னவென்றால், அதன் யதார்த்தமான விளக்கத்தை என்பதாகும். ஏனெனில் குர்ஆனில் கூறப்படும் சில விசயங்களை நாம் மேலோட்டமாக குறுகிய அளவில் தான் புரிந்து கொள்கிறோம். அது யாராக இருந்தாலும்.

உதாரணத்திற்கு மறுமை நாளில் நன்மை தீமையை நிறுக்க தராசு இருப்பதாக (21:47) குர்ஆனில் கூறப்படுகிறது. சொர்க்கத்தில் சுவைமாறாத பால் ஆறுகளும் சுவையான மது ஆறுகளும் சுத்தமான தேன் ஆறுகளும் ஓடுவதாக (47:15) கூறப்படுகிறது.

இதனையெல்லாம் உலகத்தில் நாம் அறிந்துள்ள பொருள்களோடு ஒப்பிட்டு மேலோட்டமாக புரிந்து கொள்கிறோம். ஆனால் மறுமையில் அவை எப்படி இருக்குமோ அப்படியே எதார்த்தமான நிலையில் புரிவதில்லை. இது போன்றவற்றைத்தான் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அதன் சரியான விளக்கத்தைப் புரிவதில்லை என்கிறோம் என்று கூறுகிறார்கள்.

இதன் படி இரு கருத்துடையவர்களுக்கு மத்தியில் முரண்பாடு இல்லை. ஒவ்வொருவரும் மற்றவர் விளக்கத்தை ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறார்கள்!
 

நபியவர்களின் எச்சரிக்கை!


இரு பொருள் கொள்கிற குர்ஆன் வசனத்தை எடுத்துக்கொண்டு குழப்பம் செய்கிற விதத்தில் அதையே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் பற்றி நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். அது பற்றிய ஹதீஸ் வருமாறு:

நபி(ஸல்) அவர்கள், குர்ஆனின் 3:7வது வசனத்தை இறுதிவரை ஓதிவிட்டு, முதஷாபிஹான வசனத்தையே தொடர்ந்து கொண்டிருப்பவர்களை நீ கண்டால் அவர்களைத் தான் அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இரு! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
 

 

தொடரும்...



பாடம் ஐந்துக்கான கேள்விகள்:

 

1) முஹ்கம், முத்தஷாபிஹான ஆயத்து என்றால் என்ன? விளக்குக!


2) வழிதவறியவர்கள் குர்ஆன் ஆயத்துக்கு தவறான விளக்கம் கூறி குழப்பம் ஏற்படுத்துவதை தெளிவு படுத்த ஒரு ஆயத்தையும், அதற்கு கூறப்படும் தவறான விளக்கத்தையும் கூறுக!


3) "முத்தஷாபிஹ்" விளக்கத்தை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியவே முடியாது என்போர் கூறும் விரிவான விளக்கம் யாது? உதாரணத்துடன் விளக்குக!


4) முத்தஷாபிஹான ஆயத்தையே தொடர்ந்து கொண்டிருப்பவர் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது என்ன?