Index

 

  

குரங்கு விசாவில்..

(நீதிக்கதை)

 

ஓர் அரபுநாட்டு வனவிலங்குக் காட்சியகத்தில் பல்வகை விலங்குகள் இருந்தன. இல்லாத விலங்குகளில் சிங்கமும் ஒன்று.

காட்சியகத்துக்காக வெளிநாட்டிலிருந்து சிங்கம் ஒன்றை வாங்குவது என்று A.R.D. முடிவு செய்தது. சிங்கத்தை வாங்கும் பொறுப்பு, கொள்முதல்துறை நிர்வாகியான மிஸ்ரியிடம் விடப் பட்டது.

பல நாட்டிலிருந்தும் கொட்டேஷன் (Quotation) பெறப்பட்டு பரிசீலனை முடிந்த பின்னர், குறைந்த விலையில் கிடைப்பதால் இந்தியாவிலிருந்து ஒரு சிங்கம் வாங்குவதென்று முடிவு செய்து, சிங்கம் ஒன்று இந்தியாவிலிருந்து காட்சியகத்துக்கு வந்தும் சேர்ந்தது.

சிங்கத்துக்கு உணவளிக்கும் பணிக்கு ஓர் இந்தியர் அமர்த்தப் பட்டார்.

முதல்நாள், பத்து பொட்டலங்கள் வறுத்த வேர்க்கடலை சிங்கக் கூண்டுக்குள் வீசப் பட்டன.

'ஆஹா, என்னை வாங்கியிருக்கும் முதலாளிக்குத்தான் என்மீது எவ்வளவு அக்கரை! நெடுந்தூரம் பயணம் செய்திருப்பதனால் முதல்நாள் நமக்கு மாமிசம் ஒத்துக் கொள்ளாது என்று நினைத்து வறுத்த கடலை போடச் சொல்லியிருக்கிறார்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, கடலையைச் சீண்டாமல் சிங்கம் பட்டினி கிடந்தது.

இரண்டாவது நாளும் பத்து பொட்டலங்கள் வறுத்த வேர்க்கடலை சிங்கக் கூண்டுக்குள் வீசப் பட்டன.

இரையைத் தேடி விரைந்தோடிய சிங்கத்துக்கு வறுத்த வேர்க்கடலைப் பொட்டலங்களை மீண்டும் பார்த்து விட்டுக் கடும் சினம் ஏற்பட்டது. ஆனால், இரை போட்டவரிடம் திரும்பி வருவதற்கு முன்னர் அவர் போய் விட்டார்.

மூன்றாம் நாள் சிங்கத்துக்கு 'இரை' கொண்டு வந்த இந்தியரைப் போட விடாமல் சிங்கம் தடுத்து விட்டுக் கேட்டது:

"நான் யார் என்று உனக்குத் தெரியுமா?"

"என்ன இப்படிக் கேட்டு விட்டாய்? காட்டுக்கே ராஜாவான சிங்கமல்லவா நீ?"

"ம்... நல்லது. நான் என்ன சாப்பிடுவேன் என்று தெரியுமில்லையா?"

"ஆகா ... ஏன் தெரியாமல்? ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் எல்லா விதமான மாமிசங்கள்"

"தெரிந்திருந்தும் ஏன் எனக்கு வறுத்த கடலைப் பொட்டலங்களை உணவாகப் போடுகிறாய்?"

"ஓ ... அது வந்து ... உன்னை எங்கள் முதலாளி இங்குக் கொண்டு வந்திருப்பது குரங்கு விசாவில்"

இதனால் பெறப்படும் நீதி என்னவெனில், எவ்வளவுதான் பசித்தாலும் சிங்கம் வறுத்த வேர்க்கடலையைத் தின்னாது.

 

oOo

 

அட்டவணை