Download Unicode Font

 

 

Index

3- ஹஜ் செய்பவர் இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கும் எல்லையை அடைந்ததும் செய்ய வேண்டியவை


எல்லையை -மீகாத்தை- அடைந்து விட்டால் குளித்து, நறுமணம் பூசிக் கொள்வது விரும்பத்தக்க செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமிற்காக நிய்யத் வைத்த போது தைக்கப்பட்ட ஆடையைக் கழற்றினார்கள், மேலும் குளித்தார் கள். (அறிவிப்பவர் : ஜைது பின் ஸாபித் -ரலி, நூல் : திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமிற்காக நிய்யத் வைப்பதற்கு முன்பும் (துல்ஹஜ் 10-ம் நாள்) இஹ்ராமைக் களைந்து, கஃபாவைத் தவாஃப் செய்வதற்கு முன்பும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசிவிட்டேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

உம்ராவிற்காக நிய்யத் வைத்து இஹ்ராமான நிலையிலிருந்த ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டபோது, குளித்து விட்டு, அதனை ஹஜ்ஜுக்குரிய இஹ்ராமாக நிய்யத் வைத்துக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள்.

அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபா எனும் இடத்தில் பிரசவித்த போது, குளித்து விட்டு, (இரத்தம் வெளியேறாமல்) துணி வைத்துக் கட்டிக் கொண்டு இஹ்ராமிற்காக நிய்யத் வைத்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : முஸ்லிம்)

மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வரும் நிலையில் இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கும் எல்லையை அடைந்த பெண்கள், குளித்துவிட்டு பிற மக்களுடன் இஹ்ராமிற்காக நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கஃபாவை தவாஃப் செய்வதைத் தவிர மற்ற அனைத்தையும் (பிறரைப் போல்) செய்து கொள்ளலாம் என்பதையும் ஆயிஷா (ரலி) மற்றும் அஸ்மா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளைகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இஹ்ராமிற்காக நிய்யத் செய்பவர் மீசை, நகம், வெட்கத்தலங்களின் முடி, அக்குள் முடி ஆகியவற்றைக் கவனித்து, இஹ்ராமிற்காக நிய்யத் வைத்ததற்குப் பிறகு அவைகளை எடுக்கும் அவசியம் ஏற்படாதவாறு, தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்வது விரும்பத்தக்கச் செயலாகும். ஏனெனில் இஹ்ராமிற்காக நிய்யத் வைத்த பிறகு இவைகளை எடுப்பது கூடாது.

முஸ்லிம்கள் இக்காரியங்களை எல்லாக் காலங்களிலும் கடைபிடிப்பதை நபி(ஸல்) அவர்கள் மார்க்கமாக்கியுள்ளார்கள்

 

(الْفِطْرَةُ خَمْسٌ الْخِتَانُ وَالِاسْتِحْدَادُ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَنَتْفُ الْآبَاطِ)

ஐந்து காரியங்கள் இயற்கை நடைமுறைகளாகும். அவை : விருத்த சேதனம் -கத்னாச்- செய்தல், வெட்கத்தலங்களின் முடிகளைக் களைதல், மீசையைக் கத்தரித்தல், நகங்களை வெட்டுதல், அக்குளின் முடிகளைக் களைதல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)


(وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبِطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً)

மீசையைக் குறைத்தல், நகங்களை வெட்டுதல், அக்குள் முடியைக் களைதல், வெட்கத்தலங்களின் முடியை மழித்தல் ஆகியவற்றை 40 நாட்களுக்கு அதிகமாக (எடுக்காமல்) விட்டுவிடக் கூடாதென எங்களுக்கு காலம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது என அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல் : முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் காலம் நிர்ணயித்தார்கள் என்ற வாசகம் நஸயீயின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அஹமத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும், நஸயீயில் இடம்பெற்ற அதே வாசகம் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.

ஆண்களோ, பெண்களோ இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கும் போது தலையில் (முடி) எதையும் எடுக்க மார்க்கத்தில் வழிகாட்டப் படவில்லை.
தாடியைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அதனை மழிப்பதோ, குறைப்பதோ கூடாது. மாறாக தாடியை பூரணமாக, அடர்த்தியாக வைப்பது கடமையாகும்.

 

( خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ )

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை முழுமையாக்குங்கள்! மீசையைக் கத்தரியுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)


( جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ )

மீசையைக் கத்தரியுங்கள்! தாடியைத் தொங்கவிடுங்கள்! நெருப்பு வணங்கிகளுக்கு மாறு செய்யுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைர-ரலி, நூல்: முஸ்லிம்)

இக்காலத்தில் பெரும்பாலான மக்கள் இந்த நபிவழிக்கு மாற்றமாக நடப்பதும் தாடி வைப்பதை எதிர்ப்பதும் -அதனை மழித்து விட்டு- பெண்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஒப்பாக காட்சியளிக்க விரும்புவதும் பெரும் சோதனையான நிலைதான். அதிலும் குறிப்பாக, மார்க்கக் கல்வியுடன் தொடர்புடைய வராகவும் அதனை போதிப்பவராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் இவ்வாறு செய்வது மிகப்பெரிய சோதனையே! -இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்-

அல்லாஹ் நமக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நபி வழியை உறுதியாகப் பற்றிப்பிடித்து, அதன் வழிநடக்கவும், அதன்பால் பிறரை அழைக்கவும் வழிகாட்டுவானாக! -அவ்வழியை பலர் புறக்கணித்தாலும் சரியே!-

அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அவனே சிறந்த பொறுப்பாளன்! மகத்துவமிக்க, மிக உயர்ந்தவனான அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டு) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.

பிறகு, ஆண்கள் ஒரு மேலாடையையும் ஒரு கீழாடையையும் (இஹ்ராமாக) அணிந்து கொள்ள வேண்டும். அவை தூய்மையாகவும் வெண்மையாகவும் இருப்பது விரும்பத் தக்கது. மேலும் இஹ்ராமின் போது செருப்பு அணிந்திருப்பதும் விரும்பத்தக்க செயலாகும்.


( . . وَلْيُحْرِمْ أَحَدُكُمْ فِي إِزَارٍ وَرِدَاءٍ وَنَعْلَيْنِ . . )

உங்களில் ஒருவர் ஒரு மேலாடையுடனும் ஒரு கீழாடையுடனும் செருப்புகளுடனும் இஹ்ராமிற்காக நிய்யத் வைத்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)


பெண்களைப் பொருத்தவரை கறுப்பு, பச்சை நிறம் உட்பட தான் விரும்பிய எந்த நிற ஆடைகளிலும் இஹ்ராமிற்காக நிய்யத் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவை ஆண்களின் ஆடைகளுக்கு ஒப்பாக இருக்கக் கூடாது. மேலும் அவர்கள் இஹ்ராமுடைய நிலையில் நிகாப் (கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மறைக்கும் ஆடை) அணிவதும் கை உறைகள் அணிவதும் கூடாது. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த பெண்கள் நிகாப் மற்றும் கை உறை அணிவதைத் தடுத்துள்ளார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ )


எனினும் நிகாப் மற்றும் கை உறை தவிர உள்ள ஆடைகளைக் கொண்டு முகத்தையோ, கைகளையோ மறைத்துக் கொள்ளலாம்.

பொதுமக்களில் சிலர் பெண்கள் பச்சை அல்லது கருப்பைத் தவிர வேறு (நிற) ஆடைகளை இஹ்ராமாக அணியக் கூடாது என்று கருதுகின்றனர். இவ்விருநிறங்களையும் குறிப்பாக்கு வதற்கு (மார்க்கத்தில்) எந்த ஆதாரமும் கிடையாது.

குளித்து, தூய்மையாகி, இஹ்ராமுடைய ஆடையை அணிந்த பிறகு தான் நிறைவேற்ற விரும்பும் ஹஜ் அல்லது உம்ரா வழிபாட்டைத் துவங்குதாக மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

 

( إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى . . )

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : உமர் -ரலி, நூல் : புகாரீ)

மேலும் அவர் நினைத்ததை நாவினால் மொழிவது ஸ{ன்னத்தாகும். அவர் உம்ராச் செய்ய நினைத்திருந்தால் லப்பைக்க உம்ரதன் என்றோ, அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன் என்றோ கூறவேண்டும். அவர் ஹஜ் செய்ய நினைத்திருந்தால் லப்பைக்க ஹஜ்ஜன் என்றோ, அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன் என்றோ கூறவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.

அவர் இவ்விரண்டையும் நிறைவேற்ற நினைத்திருந்தால் அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன் வஹஜ்ஜன் என்று கூறவேண்டும். மேலும் இதனை தனது வாகனமான கால்நடை அல்லது பேருந்து அல்லது இவைதவிர உள்ள வாகனத்தில் அமர்ந்த பின்னர் கூறுவதே சிறந்ததாகும். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்து, இஹ்ராமிற்காக நிய்யத் வைக்கும் எல்லையை கடக்கும் போதுதான் தல்பியாக் கூறினார்கள். இதுவே அறிஞர்களின் கூற்றுக்களில் மிகச் சரியான கூற்றாகும்.

(பொதுவாக) நிய்யத்தை நாவால் மொழிவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. எனினும் இஹ்ராமின் போது நபி (ஸல்) அவர்கள் நாவினால் மொழிந்ததாக ஹதீஸ் வந்துள்ளதால் இஹ்ராமின் போது மட்டும் நாவினால் மொழிய அனுமதியுள்ளது.

தொழுகை, தவாஃப் போன்ற எதிலும் நிய்யத்தை நாவால் மொழியக் கூடாது. -குறிப்பிட்ட- இந்தத் தொழுகையைத் தொழ நிய்யத் செய்கிறேன் என்றோ, -குறிப்பிட்ட- இந்த தவாஃப் செய்ய நிய்யத் செய்கின்றேன் என்றோ நாவினால் மொழியக் கூடாது. மாறாக இவ்வாறு நாவினால் மொழிவது மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட செயலாகும். இதனை (பிறர் கேட்கும் அளவு); சப்தமாகக் கூறுவது மிக அருவருப்பான செயலும் பெருங்குற்றமுமாகும். நிய்யத்தை நாவினால் மொழிவதுதான் மார்க்கச் சட்டம் என்றிருந்தால் அதனை நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக விளக்கிக் கூறியிருப்பார்கள். அதனை தம் சொல்லாலும் செயலாலும் சமுதாயத்திற்கு தெளிவாக்கியிருப்பார்கள். அதனை நமக்கு முன் சென்ற நல்லோர்(களான ஸஹாபாக்)கள் நடைமுறைப் படுத்தியிருப்பார்கள். ஆனால் இவ்வாறு நபி (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாதிருப்பது நிச்சயமாக இது பித்அத்தான செயல் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

( . . وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ . . )

-மார்க்கத்தில்- புதிதாக உருவாக்கப்பட்டவைகள் செயல்களில் மிகக் கெட்டவைகளாகும். -மார்க்கத்தில்- புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து -பித்அத்து-ம் வழிகேடாகும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : முஸ்லிம்)


( مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ )

நம்முடைய -மார்க்க- விஷயத்தில் அதில் இல்லாததை யாரேனும் புதிதாக உருவாக்கினால் அது -அல்லாஹ் விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல்- மறுக்கப்பட்டுவிடும்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)


( مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ )

யாரேனும் -மார்க்கத்தில்- நாம் கட்டளையிடாத ஏதேனும் ஒரு செயலைச் செய்தால் அது -அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல்- மறுக்கப்பட்டுவிடும்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம்)

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்