Download Unicode Font

 

 

Index

12- ஹஜ் செய்பவர் மீதும் பிறர் மீதும் நன்மையை ஏவுவது கடமையாகும்


நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் பேணித் தொழுவதும் ஹஜ் செய்பவர் மீதும் பிறர் மீதுமுள்ள முக்கியக் கடமைகளில் உள்ளவைகளாகும். இதனை அல்லாஹ் தனது வேதத்தின் மூலமாகவும் தனது தூதரின் வாயிலாகவும் கட்டளை யிட்டுள்ளான்.

மக்காவிலும் பிற பகுதிகளிலும் வசிப்பவர்களில் பலர், பள்ளிவாயில்களுக்கு வராமல், வீடுகளிலேயே தொழுது கொள்வது மார்க்கத்திற்கு முரணான, தவறான செயலாகும். இச்செயலை விட்டும் மக்களைத் தடுப்பதும் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழ ஏவுவதும் கடமையாகும்.

பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களின் வீடு பள்ளியிலிருந்து தூரமாக இருந்ததால், வீட்டிலேயே தொழுது கொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு, நீர் தொழுகைக்கான -பாங்கு- அழைப்பை செவிமடுக்கின்றீரா? என்று கேட்க, அதற்கு அவர்கள், ஆம்! என்றார்கள். அவ்வாறானால் அதற்கு நீர் பதிலளித்து -பள்ளிக்கு- வரவேண்டும் என்றார்கள். -மற்றொரு அறிவிப்பில்- உமக்கு அனுமதி இருப்பதாக நான் கருதவில்லை என்று கூறியதாக வந்துள்ளது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத்)

நிச்சயமாக நான், தொழுகையை ஆரம்பிக்கக் கட்டளையிட்டு, மக்களுக்குத் தொழ வைக்க ஒருவரை நியமித்துவிட்டு, (பள்ளிக்கு) தொழவராத ஆண்களிடம் சென்று அவர்களை அவர்களின் வீடுகளுடனே தீயிட்டுக் கொளுத்த நினைக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

(مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ)
பாங்கைக் செவிமடுத்தும் -பள்ளிக்கு- தொழவராதவர்களுக்கு தொழுகையில்லை (ஏற்றுக் கொள்ளப்படாது) மார்க்கம் அனுமதித்துள்ள காரணம் உடையவரைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : இப்னுமாஜா)

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :


مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ كَمَا يُصَلِّي هَذَا الْمُتَخَلِّفُ فِي بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَعْمِدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الْمَسَاجِدِ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ خَطْوَةٍ يَخْطُوهَا حَسَنَةً وَيَرْفَعُهُ بِهَا دَرَجَةً وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلَّا مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُؤْتَى بِهِ يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ

நாளை அல்லாஹ்வை, முஸ்லிமாக சந்திக்க விரும்புபவர் இத்தொழுகைகளை அதற்காக அழைக்கப்படும் இடத்தில் (பள்ளியில்) பேணித் தொழுது கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய நபிக்கு நேரான வழிகளைக் காட்டியுள்ளான். நிச்சயமாக இத்தொழுகைகளும் அந்த நேரான வழிகளில் உள்ளவைகளாகும். (ஜமாஅத் தொழுகையை விட்டும்) பின்வாங்கிய இன்ன மனிதன் தன் வீட்டில் தொழுது கொள்வது போன்று நீங்கள் உங்கள் வீட்டில் தொழுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் உங்கள் நபியின் வழியை விட்டுவிட்டீர்கள். நீங்கள் உங்கள் நபியின் வழியை விட்டுவிட்டால் நிச்சயமாக நீங்கள் வழிகெட்டு விட்டீர்கள். ஒருவர் அழகிய முறையில் உளுச் செய்து தூய்மையாகி, இப்பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளிக்குச் செல்வாரானால் அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான். ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். நம்மைக் கவனித்ததில், நயவஞ்சகத் தன்மை மிகவெளிப் படையாகத் தெரியும் முனாஃபிக்குகளைத் தவிர வேறு எவரும் (ஜமாஅத்தை விட்டும்) பின்வாங்குவதை நான் பார்த்ததில்லை. நிச்சயமாக -பலவீனமான ஒருவர்- இருவரின் துணையுடன் கைத்தாங்களாக அழைத்து வரப்பட்டு -தொழுகைக்காக- வரிசையில் நிற்கவைக்கப்படுவார். (நூல் : முஸ்லிம்)

ஹஜ் செய்பவரும் பிறரும் அல்லாஹ் ஹராமாக்கியவைகளை விட்டும் விலகிக் கொள்வதும் அவைகளைச் செய்துவிடாமல் மிக எச்சரிக்கையாக இருப்பதும் கடமையாகும். அவைகளில் சில :

விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, திருட்டு, வட்டியை உண்ணுதல், அனாதைகளின் பொருளை அபகரித்தல், கொடுக்கல் வாங்களில் ஏமாற்றுதல், அமாநித மோசடி, போதைப் பொருள் உட்கொள்ளுதல், புகை பிடித்தல், கரண்டைக்குக் கீழ் ஆடை அணிதல், பெருமை, பொறாமை, முகஸ்துதி, புறம், கோள், முஸ்லிம்களை கேலி செய்தல், இசைத் தட்டு, வீணை, ஆர்மினியம் போன்ற வீணான பொழுது போக்குச் சாதனங் களான இசைக் கருவிகளைப் பயன்படுத்துதல், பாட்டுக் கேட்டல், கொட்டு போன்றவைகளைக் கொண்டு தாளமிடுதல், தாயம் மற்றும் சதுரங்கம் விளையாடுதல், சு10தாடுதல், மனிதர்கள் மற்றும் உயிருள்ளவற்றின் உருவம் வரைதல் -புகைப்படமெடுத்தல்-, அதற்கு உடன்படுதல்.

இவை அனைத்தும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது அனைத்துக் காலங்களிலும் அனைத்து இடங்களிலும் ஹராமாக்கியுள்ள, மார்க்கத்திற்கு முரணான செயல்களாகும்.

எனவே ஹஜ் செய்பவர்களும் அல்லாஹ்வுடைய வீடுள்ள புனித மக்காவில் வசிப்பவர்களும் பிறரைவிட இவ்விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்புனித பூமியில் அல்லாஹ்வுக்கு மாறுசெய்வது பெருங்குற்றமும் கடும் தண்டனைக்குரிய செயலுமாகும்.


 وَمَنْ يُرِدْ فِيْهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيْمٍ 
. . . . மேலும் அதில் (மஸ்ஜிதுல் ஹராமில் பாவம் செய்தலெனும்) அநியாயத்தைக் கொண்டு யார் (அசத்தியத்தின் பால்) சாய்வதை நாடுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையிலிருந்து நாம் சுவைக்கச் செய்வோம் என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 22:25)

ஹரமில் அநீதம் செய்ய நாடுபவனை அல்லாஹ் இவ்வாறு எச்சரித்துள்ளான் என்றால், அதனைச் செய்பவனுக்கு எப்படிப் பட்ட தண்டனை கிடைக்கும்!? நிச்சயமாக அது மிகப் பெரியதாகவும் மிகக் கடுமையானதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இதனை விட்டும் மற்ற அனைத்துப் பாவங்களை விட்டும் விலகிக் கொள்வது கடமையாகும்.

ஹஜ் செய்பவர் -நாம் மேற்குறிப்பிட்டுள்ள- பாவங்களை விட்டும் மேலும் அல்லாஹ் ஹராமாக்கியுள்ள மற்ற -அனைத்துச்- செயல்களை விட்டும் விலகிக் கொள்ளாதவரை அவருக்கு ஹஜ்ஜுடைய நன்மையோ, பாவமன்னிப்போ கிடைக்காது.
( مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ)
இச்சையான செயலில் ஈடுபடாமல், பாவம் செய்யாமல் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்பவர், அவருடைய தாய் அன்று அவரைப் பெற்றெடுத்ததைப் போன்று (பாவமற்று) திரும்புகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ)

மார்க்கம் தடுத்துள்ள இச்செயல்களை எல்லாம் விட மிகக் கொடிய, மிகப் பெரும்பாவங்கள் பல உள்ளன. அவைகளில்:

மரணித்துவிட்டவர்களிடம் பிரார்த்திப்பது, அவர்களிடம் அடைக்கலம் தேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அவர்களுக்காகப் பலியிடுவது, அவர்களை அழைப்பவர் களுக்காக அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்றும் அவர்களின் நோயை குணப்படுத்துவார்கள் என்றும் காணாமல் போனவற்றை மீட்டுத்தருவார்கள் என்றும் மேலும் இவை போன்றவைகளையும் நம்புவது. இது அல்லாஹ் ஹராமாக்கியுள்ள மிகப் பெரிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்) ஆகும். இது ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த -சிலைவணங்கிகளான- இணைவைப்பாளர்களின் வழிமுறையாகும். இவ்வழிமுறை களை மறுப்பதற்காகவும் அதனை விட்டும் -மக்களைத்- தடுப்பதற்காகவுமே அல்லாஹ் பல தூதர்களை அனுப்பினான், பல வேதங்களை இறக்கினான்.

எனவே ஹஜ் செய்பவர்களும், மற்றவர்களும் இச்செயல்களை விட்டுத் தவிர்ந்திருப்பதும் மேற்கூறப்பட்டவைகளில் எதையேனும் இதற்கு முன் செய்திருந்தால் அதற்காக பாவ மன்னிப்புத் தேடிக் கொள்வதும் கடமையாகும். மேலும் பாவமன்னிப்புத் தேடிய பிறகு புதிதாக ஹஜ்ஜைத் துவங்குவதும் கடமையாகும். ஏனெனில் நிச்சயமாக பெரிய ஷிர்க் அனைத்து அமல்களையும் அழித்துவிடும்.
 وَلَوْ أَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوْا يَعْمَلُوْنَ 
மேலும் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்தால் அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டும் அழிந்துவிடும் என அல்லாஹ் கூறுகின்றான்.
(அல்குர்ஆன் 6:88)

அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்தல். உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் மீதோ, கஃபா மற்றும் அமாநிதம் போன்றவைகளின் மீதோ சத்தியம் செய்தல் - பிறர் பார்க்க வேண்டும், பிறர் தன்னைப் புகழவேண்டும் என்பதற்காக நல்லறங்கள் புரிதல் - அல்லாஹ்வும் நாடினான், நீங்களும் நாடினீர்கள்! - அல்லாஹ்வும் நீங்களும் இல்லை என்றால்! - இது அல்லாஹ்வின் மூலமும் உங்கள் மூலமும் கிடைத்தது! - என்பன போன்ற வார்த்தைகளைப் பயன் படுத்துதல். இவை அனைத்தும் சிறிய இணைவைத்தலின் வகையைச் சார்ந்தவைகளாகும்.
மார்க்கத்திற்கு முரணான, ஷிர்க்கான இவ்வனைத்தையும் விட்டு தானும் தவிர்ந்து கொண்டு, பிறருக்கும் உபதேசம் செய்வது கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

( مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ )
அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்பவர் நிச்சயமாக நிராகரித்து விட்டார் -அல்லது- இணைவைத்துவிட்டார்.
(அறிவிப்பவர் : இப்னுஉமர் -ரலி, திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)

( مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ )
சத்தியம் செய்பவர் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)
( مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا )
அமாநிதத்தைக் கொண்டு சத்தியம் செய்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. (அறிவிப்பவர்: புரைதா-ரலி, நூல்: அபூதாவூத்)

( إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ قَالَ الرِّيَاءُ )
நிச்சயமாக உங்கள் விஷயத்தில் நான் மிக அதிகமாகப் பயப்படுவது சிறிய இணைவைத்தலைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சிறிய இணைவைத்தல் என்றால் என்ன? என -நபித்தோழர்கள்- கேட்டார்கள். அதற்கு முகஸ்துதி (பிறர் பார்த்துப் போற்றுவதற்காக அமல் செய்தல்) என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: மஹ்மூத்-ரலி, நூல்: அஹமத்)

( لَا تَقُولُوا مَا شَاءَ اللَّهُ وَشَاءَ فُلَانٌ وَلَكِنْ قُولُوا مَا شَاءَ اللَّهُ ثُمَّ شَاءَ فُلَانٌ )
அல்லாஹ்வும் இவரும் நாடியது நடந்து விட்டது என்று கூறாதீர்கள்! மாறாக, அல்லாஹ் நாடியது நடந்தது. பிறகு இவர் நாடினார் என்று கூறுங்கள்.
(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி, நூல் : அபூதாவூத்)

( أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ فَقَالَ جَعَلْتَنِي لِلَّهِ عَدْلًا بَلْ مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ )
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்து விட்டது என ஒரு மனிதர் கூறினார். அதற்கு அவர்கள், என்னை நீர் அல்லாஹ்வுக்கு நிகராக்கிவிட்டீர்? மாறாக, அல்லாஹ் மாத்திரம் நாடியதே நடந்தது (என்று கூறுவீராக!) என்றார்கள்.
(அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் -ரலி, நூற்கள் : அஹமத், நஸாயீ)

இந்த ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ஏகத் துவத்தை பாதுகாத்துள்ளார்கள் என்பதையும் பெரிய, சிறிய இணைவைப்புகளை விட்டும் எவ்வாறு எச்சரித்துள்ளார்கள் என்பதையும் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. மேலும் மக்களின் ஈமானைப் பாதுகாப்பதிலும் அல்லாஹ்வுடைய கோபத்திற்குக் காரணமானவைகளை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் தனது சமுதாயம் ஈடேற்றம் பெற வேண்டுமென அவர்களுக்கிருந்த ஆவலையும் உணர்த்து கின்றன. அல்லாஹ் அவர்களுக்கு அதற்காக மிகச் சிறந்த நற்கூலி வழங்குவானாக! நிச்சயமாக அவர்கள் -மார்க்கத்தை- மிகத் தெளிவாக எடுத்துரைத்து விட்;டார்கள். -மார்க்கத்திற்கு முரணானவைகளை- கடுமையாக எச்சரித்துவிட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க, அவனது அடியார்களுக்கு அழகிய முறையில் உபதேசித்து விட்டார்கள். அல்லாஹ்வின் அமைதியும் அருளும் அவர்கள் மீது மறுமை நாள்வரை தொடர்ந்து பொழியட்டுமாக!

ஹஜ் செய்ய வந்திருப்பவர்களிலும் மக்கா, மதீனாவில் வசிப் பவர்களிலும் உள்ள மார்க்க அறிஞர்கள் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளைப் போதிப்பது கடமையாகும். அல்லாஹ் ஹராமாக்கியுள்ள அனைத்து வகை இணைவைத்தல்களையும் ஏனைய பாவங்களையும் விட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். அதற்குரிய ஆதாரங்களை எடுத்துரைத்து அவைகளை மிகத் தெளிவாக விளக்கிச் சொல்லவேண்டும். இம்முயற்சியால் -அறியாமை- இருள்களிலிருந்து மக்களை வெளியேற்றி -நேர்வழி எனும்- ஒளியின்பால் கொண்டு செல்லமுடியும். மேலும் -மார்க்கத்தை- மிகத்தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்குமாறு அல்லாஹ் (அறிஞர்களாகிய) இவர்கள் மீது கடமையாக்கி யுள்ளதை இம்முயற்சியின் மூலம் நிறைவேற்றியவர்களாக முடியும்.


 وَإِذْ أَخَذَ اللهُ مِيْثَاقَ الَّذِيْنَ أُوْتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلاَ تَكْتُمُوْنَهُ 
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் (உங்களுக்கு கொடுக்கப் பட்ட) வேதத்தை மறைத்துவிடாது மக்களுக்குத் தெளிவாக நீங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) . . என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:187)

வேதவாசிகளில் உள்ள அநியாயக்காரர்கள் மறுமையை விட இவ்வுலக பயன்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சத்தியத்தை மறைப்பதில் கடைபிடித்த முறையை இந்தச் சமுதாய அறிஞர்கள் கடைபிடிக்கக் கூடாது என்று எச்சரிப்பதே இந்த வசனத்தின் நோக்கமாகும்.

 

 إِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللهُ وَيَلْعَنُهُمُ اللاَّعِنُوْنَ – إِلاَّ الَّذِيْنَ تَابُوْا وَأَصْلَحُوْا وَبَيَّنُوْا فَأُولَئِكَ أَتُوْبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيْمِ 
தெளிவான அத்தாட்சிகளிலிருந்தும் நேர்வழியிலிருந்தும் நாம் இறக்கிவைத்துள்ளதை - அதனை நாம் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னர், நிச்சயமாக மறைக்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். (மனித இனம், ஜின், மலக்குகள் ஆகியோரில்) சபிப்பவர்களும் சபிக்கின்றனர். (தாங்கள் மறைத்தவற்றிற்காக மன்னிப்புக் கோரி) தவ்பாச் செய்து (தங்களைச்) சீர்திருத்திக் கொண்டு (அவற்றை) தெளிவாகவும் எடுத்துரைக்கின்றனரே அத்தகையோரைத் தவிர, அப்போது அவர்கள் - அவர்களை நான் மன்னித்துவிடுகிறேன். இன்னும் நான் தான் அதிகமாக தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவன், மிக்க கிருபையுடையவன் என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 2:159-160)

மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதும், அவர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தின் பக்கம் மக்களுக்கு வழிகாட்டு வதும், நிச்சயமாக மிகச் சிறந்த வணக்கமும் மிக முக்கியக் கடமையுமாகும் என்பதை அல்குர்ஆனின் பல வசனங்களும் நபிமொழிகளும் உணர்த்துகின்றன. நிச்சயமாக இது நபிமார்களின் வழியும் மறுமை நாள்வரை அவர்களைப் பின்பற்றுவோரின் வழியுமாகும். அல்லாஹு தஆலா கூறுகிறான்:

 وَمَنْ أَحْسَنُ قَوْلاً مِمَّنْ دَعَا إِلَى اللهِ وَعَمِلَ صَالِحاً وَقَالَ إِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ 
எவர் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறு கின்றாரோ, அவரை விட சொல்லால் மிக்க அழகானவர் யார்?
(அல்குர்ஆன் 41:33)


 قُلْ هَذِهِ سَبِيْلِيْ أَدْعُوْا إِلَى اللهِ عَلَى بَصِيْرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِيْ وَسُبْحَانَ اللهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِيْنَ 
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக் கின்றோம். அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (அல்குர்ஆன் 12:108)


( مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ )
யாரேனும் நல்லவற்றின் பக்கம் வழிகாட்டினால் அதனை செய்பவரைப் போன்று -வழிகாட்டியவருக்கும் நன்மையுண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் - ரலி, நூல் : முஸ்லிம்)

فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
அல்லாஹ்வின்மீது சத்தியமாக, அல்லாஹ் உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உமக்கு சிவந்த ஒட்டகம் இருப்பதை விட உமக்குச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி)க்கு கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது-ரலி, நூற்கள்: புகாரீ, முஸ்லிம்)

இதுபற்றி மேலும் பல இறைவசனங்களும் நபிமொழிகளும் உள்ளன.

அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கும் பணியிலும் மக்களுக்கு வெற்றிக்கான வழிகாட்டுவதிலும் அழிவை விட்டும் அவர்களைத் தடுப்பதிலும் ஈமானுள்ள, மார்க்க அறிஞர்கள் பன்மடங்காக உழைத்தாகவேண்டும். இன்று மனோஇச்சைகள் மிகைத்துவிட்டன. அழிவின் ஆரம்பமும் வழிகேட்டின் அடையாளங்களும் பரவிவிட்டன. நேர்வழியின்பால் அழைப் பவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். வழிகேட்டின் பாலும் வரம்பு மீறுதலின் பாலும் அழைப்பவர்கள் அதிகரித்து விட்டனர். எனவே குறிப்பாக இக்காலத்தில் அழைப்பாளர்கள் மிகவும் கடுமையாக உழைத்தாகவேண்டும். அல்லாஹ்வே உதவியாளன். மகத்தான, உயர்ந்தவனான அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.
 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்