Download Unicode Font

 

 

Index

15- எச்சரிக்கை


பொதுமக்களில் சிலர் எண்ணிக்கொண்டிருப்பது போல் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது ஹஜ்ஜின் கடமையான செயல்களிலோ, அல்லது அதன் நிபந்தனை களிலோ உள்ளதன்று. மாறாக மஸ்ஜிதுன் நபவிக்கு வருகை தருபவர்கள் அல்லது அதனருகில் இருப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது விரும்பத்தக்க செயலாகும்.

மதீனாவை விட்டும் தூரமாக இருப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பயணம் மேற்கொள்வது கூடாது. மாறாக புனிதப் பள்ளிக்கு -மஸ்ஜிதுன் நபவிக்கு- செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் பயணம் மேற்கொள்வது சுன்னத்தாகும். பள்ளிக்கு வருகை தருபவர் நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் இரு தோழர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்வார். மஸ்ஜிதுன் நபவியை ஜியாரத் செய்வதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் அவர்களின் இரு தோழர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்யும் வாய்ப்பும் கிடைத்து விடுகிறது.
(وَلَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ َمَسْجِدِي هَذا وَالْمَسْجِدِ الْحَرَامِ وَالْمَسْجِدِ الْأَقْصَى )
மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -நன்மையை நாடி- பயணம் மேற்கொள்ளக் கூடாது. அவை : மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய மஸ்ஜித், மஸ்ஜிதுல் அக்ஸா என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பாளர் : அபூஸயீத் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் கப்ரையோ அல்லது பிறரின் கப்ரையோ -ஜியாரத் செய்ய- பயணம் மேற்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்திருந்தால் அதனை உம்மத்தினருக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருப்பார்கள். அதன் சிறப்பையும் கூறியிருப்பார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் மக்களுக்கு மிகத் தெளிவாக உபதேசம் செய்பவர்கள், அனைவரையும் விட அல்லாஹ்வைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள், அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவர்கள். நிச்சயமாக அவர்கள் மக்களுக்கு மிகத் தெளிவாக -மார்க்கத்தை- எடுத்துரைத்து விட்டார்கள். தம் உம்மத்தினருக்கு நல்லவைகள் அனைத்தையும் எடுத்துச் சொல்லி விட்டார்கள். அனைத்துத் தீமைகளை விட்டும் எச்சரித்து விட்டார்கள். மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -வேறு எங்கும் நன்மையை நாடி- பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரித்த நபி (ஸல்) அவர்கள்,
( لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ )
உங்கள் வீடுகளை கப்ருகளாக்கிவிடாதீர்கள்! என்னுடைய கப்ரை விழாவாக ஆக்கிவிடாதீர்கள்! என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்! நிச்சயமாக நீங்கள் எங்கிருந்து ஸலவாத்துக் கூறினாலும் அது என்னை வந்தடையும் என்றும் கூறியுள்ளார்கள் எனும்போது கப்ர் ஜியாரத்திற்காக பயணம் செய்வதை எவ்வாறு அனுமதித்திருப்பார்கள்?!
(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல்:அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்ற கூற்று அவர்கள் கப்ரை விழாக் கூடமாக்குவதற்கும் அவர்களை அளவு கடந்து புகழ்வதற்கும் வறம்புமீறி உயர்த்துவதற்கும் -சுருக்கமாகக் கூறவேண்டுமானால்- நபி (ஸல்) அவர்கள் எதனை பயந்து எச்சரித்தார்களோ அவை கள் அனைத்தும் அரங்கேறுவதற்குக் காரணமாக அமையும். அதிகமான மக்கள் இத்தவறுகளைச் செய்யக் காரணம் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்குப் பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்று அவர்கள் -தவறாக- நம்பியிருப்பதே!

நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் மேற்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது என சில ஆதாரங்கள் கூறப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்களின் தொடர்களை உடைய, மாறாக, அவைகள் -நபி (ஸல்) அவர்கள் கூறாததை, அவர்கள் கூறியதாக- இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ள செய்திகளாகும். ஹதீஸ் கலை வல்லுனர்களான தாரகுத்னீ, பைஹகீ, ஹாஃபிழ் இப்னு ஹஜர் போன்றோர் அதன் பலவீனங்களைக் கூறி எச்சரித்துள்ளார்கள். எனவே -இட்டுக் கட்டப்பட்ட- அந்தச் செய்திகளை மூன்று பள்ளிவாயில்களைத் தவிர -வேறு எங்கும் நன்மையை நாடி- பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ் களுக்கு எதிராகக் கூறுவது கூடாது.

இத்தலைப்பு தொடர்பான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் அதனைக் கண்டு ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும் அதில் சிலவற்றை தங்கள் முன் வைக்கின்றேன்;

مَنْ حَجَّ وَلَمْ يَزُرْنِيْ فَقَدْ جَفَانِيْ
யார் ஹஜ் செய்து, என்னை ஜியாரத் செய்யவில்லையோ நிச்சயமாக அவர் என்னை வெறுத்துவிட்டார்.

مَنْ زَارَنِيْ بَعْدَ مَمَاتِيْ فَكَأَنَّمَا زَارَنِيْ فِيْ حَيَاتِيْ
நான் மரணித்ததற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்பவர் நான் உயிருடன் இருக்கும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.

مَنْ زَارَنِيْ وَزَارَ أَبِيْ إِبْرَاهِيْمَ فِيْ عَامٍ وَاحِدٍ ضَمِنْتُ لَهُ عَلَى اللهِ الْجَنَّةَ
ஒரே வருடத்தில் என்னையும் எனது தந்தை இப்ராஹீம் அவர் களையும் ஜியாரத் செய்தவருக்கு அல்லாஹ்விடத்தில் சொர்க் கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.


مَنْ زَارَ قَبْرِيْ وَجَبَتْ لَهُ شَفَاعَتِيْ
என்னுடைய கப்ரை ஜியாரத் செய்தவருக்காக என்னுடைய பரிந்துரை கடமையாகிவிட்டது.
ஹதீஸ்களாக கூறப்படும் இவை போன்றவைகளை நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கான எந்த ஆதாரமும் கிடையாது.

ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தல்கீஸ் எனும் நூலில் இது தொடர்பான அறிவிப்பாளர்களின் பல வரிசைகளைக் கூறிவிட்டு இந்த ஹதீஸின் அனைத்துத் தொடர்களும் பலவீனமானவைகளே! என்று கூறியுள்ளார்கள்.

இச்செய்தி தொடர்பாக வரும் எந்த ஒன்றும் ஆதாரப் பூர்வமானதல்ல என ஹாஃபிழ் உகைலீ அவர்கள் கூறியுள் ளார்கள். இந்த ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்டவைகளே! என ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.

இச்செய்திகளை நீங்கள் அறிந்து, நினைவில் நிறுத்தி, பிறருக்கும் எடுத்துரைக்க இதுவே போதுமானதாகும். இதில் ஏதேனும் ஒரு செய்தி ஆதாரப் பூர்வமானதாக இருந்திருந்தால் அதனை செயல்படுத்துவதிலும் மக்களுக்கு விளக்கிக் கூறுவதிலும் அதன்பால் அவர்களை அழைப் பதிலும் நபித்தோழர்கள் மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்திருப்பார்கள். ஏனெனில் நிச்சயமாக நபிமார்களுக்குப் பிறகு அவர்களே மக்களில் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் சட்டங்களையும் அவன் தன் அடியார்களுக்கு இட்ட கட்டளைகளையும் நன்கறிந்தவர்கள், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு மக்களுக்கு அதிகமாக உபதேசம் செய்தவர்கள். இத்தகையோர் -மேற்கூறிய- எதனையும் செய்ததாக எந்தச் செய்தியும் வராதது அவைகள் மார்க்கத்தில் உள்ளவையல்ல என்பதை உணர்த்துகிறது.

மேற்கண்ட செய்திகளில் ஏதேனும் ஒன்று ஆதாரப் பூர்வமானதாக இருந்திருந்தால் -இதுதொடர்பான ஹதீஸ்களை ஒருங்கிணைக்கும் விதமாக- கப்ரை ஜியாரத் செய்வதற்காக பயணம் செய்யாமல் -வேறு நோக்கத்திற்காக பயணிக்கும் போது கப்ரைக் கண்டால் அதனை ஜியாரத் செய்வதை- மார்க்கம் அனுமதித்துள்ள ஜியாரத்துடன் இதனையும் இணைப்பது அவசியமாகியிருக்கும். -ஆனால் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை- மிகத் தூய்மையான, மிக உயர்ந்தவனான அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்