Download Unicode Font

 

 

Index

14- ஜியாரத்தின் சட்டங்களும் ஒழுக்கங்களும்


மஸ்ஜிதுன் நபவிக்குச் செல்வது சுன்னத்தாகும். அங்கு ஹஜ்ஜுக்கு முன்போ அல்லது பின்போ சென்று வரலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

(صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ)
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட நன்மையுடையதாகும்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

( صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ )
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட சிறப்பு மிக்கதாகும். (அறிவிப்பவர்: இப்னுஉமர்-ரலி, நூல்: முஸ்லிம்)

( صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ صَلَاةٍ فِي هَذَا)
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது என்னுடைய இந்தப் பள்ளியில் நூறு தொழுகையைத் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சுபைர் -ரலி, நூற்கள் : அஹமத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்)

( صَلَاةٌ فِي مَسْجِدِي هذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ )
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளி களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது அது தவிர உள்ள பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூற்கள் : அஹமத், இப்னுமாஜா)
இது பற்றி மேலும் பல நபிமொழிகள் வந்துள்ளன.

ஜியாரத் செய்பவர் பள்ளியை வந்தடைந்ததும் வலது காலை முன்வைத்து பிற பள்ளிகளில் நுழையும் போது கூறும் பின்வரும் துஆவைக் கூறி நுழைவது சுன்னத்தாகும்.

بِسْمِ اللهِ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ، أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ، أَللَّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

மஸ்ஜிதுன் நபவியில் நுழையும் போது மட்டும் கூறவேண்டிய பிரத்தியேக திக்ர் -துஆ- எதுவும் கிடையாது.

பிறகு அவர் இரண்டு ரகஅத்கள் தொழுவது சுன்னத்தாகும். அதில் இம்மை, மறுமையின் நல்ல தேவைகளில் தான் விரும்புவதை அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார். அந்த இரண்டு ரகஅத்களையும் புனித ரவ்லாவில் தொழுவது சிறப்பு மிக்கதாகும்.
( مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ )
என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜைது -ரலி, நூல் : புகாரீ)

தொழுத பிறகு அவர், நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் அவர்களின் தோழர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) அவர்களின் கப்ர்களையும் ஜியாரத் செய்வார். நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு எதிரே ஒழுக்கத்துடன் நின்று, பணிவான சப்தத்துடன்

اَلسَّلاَمُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ وَرَحْمَةُ اللهِ وَبَرَكُاتُهُ
(அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்! வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்!) என்று ஸலாம் கூறவேண்டும்.
( مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ )
என் மீது யாரேனும் ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக என்னுடைய ரூஹை அல்லாஹ் மீட்டுத் தருகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : அபூதாவூத்)

ஜியாரத் செய்பவர், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்கள் மீது அல்லாஹ்வின் அமைதி உண்டாவதாக!, அல்லாஹ்வின் படைப்பினங்களில் சிறந்தவர்களே! உங்கள் மீது அல்லாஹ்வின் அமைதி உண்டாவதாக!, தூதர்களின் தலைவர் அவர்களே! இறையச்சமுடையவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே! உங்கள்மீது அல்லாஹ் வின் அமைதி உண்டாவதாக! நிச்சயமாக நீங்கள் இறைத் தூதை எடுத்துரைத்துவிட்டீர்கள்! அமாநிதத்தை ஒப்படைத்து விட்டீர்கள்! சமுதாயத்திற்கு உபதேசம் செய்துவிட்டீர்கள்! அல்லாஹ்வுடைய பாதையில் இயன்றவரை போராடிவிட்டீர்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறுவாரானால் தவறில்லை. ஏனெனில் இவையனைத்தும் நபி (ஸல்) அவர்களின் தன்மைகளில் உள்ளவைகளே!

பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி அவர்களுக்காக துஆச் செய்யவேண்டும்.

 يَأَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
ஆகவே முஃமின்களே! நீங்கள் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (33:56) என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க ஸலவாத்தையும் ஸலாமையும் இணைத்துக் கூறுவது மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகும்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக் கும் ஸலாம் கூறி அவர்களுக்காக துஆச் செய்யவேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் இரு தோழர்களுக்கும் ஸலாம் சொன்னால் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அபூபக்ர் அவர்களே! உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக! என்னுடைய தந்தையே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! என்ற வார்த்தையைவிட அதிகமாகப் பெரும்பாலும் கூறமாட்டார் கள். இதனைக் கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

-கப்ருக்குச் சென்று ஸலாம் கூறும்- இந்த ஜியாரத் ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண் களுக்கு கப்ர் ஜியாரத் என எதுவும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள், கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களையும் அதனை வணங்குமிடமாக்குபவர்களையும், அதில் விளக்கேற்றுபவர் களையும் சபித்துள்ளார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : திர்மிதி)

நபி (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழவேண்டும் என்ற நோக்கத்தில் மதீனாவுக்குச் செல்வது, அங்கு அல்லாஹ்விடம் துஆச் செய்வது மற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்டவைகளைச் செய்வது யாவும் -மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில்- ஆண், பெண் அனைவருக்கும் பொதுவான அனுமதியாகும்.
• ஜியாரத் செய்ய வந்திருப்பவர் ஐவேளைத் தொழுகைகளையும் மஸ்ஜிதுன் நபவியில் தொழுவதும், அதிக நன்மைகளைப் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதிகமாக திக்ர், துஆ மற்றும் நஃபிலான வணக்கங்களில் ஈடுபடுவதும் சுன்னத்தாகும்.

• புனித ரவ்லாவில் நஃபிலான தொழுகைகளை அதிகமாகத் தொழுவது விரும்பத்தக்க செயலாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அதனைப் புகழ்ந்து
( مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ )
என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் எனக் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜைது -ரலி, நூல் : புகாரீ)

ஜியாரத் செய்ய வந்திருப்பவர்களும் பிறரும் ஃபர்ளான தொழுகைகளில் ரவ்லாவை விட்டும் முன்னே சென்று முடிந்தவரை முதல் வரிசையில் தொழ முயலவேண்டும். அது கிப்லா திசையில் விரிவாக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் சரியே! முதல் வரிசையைப் பற்றி ஆர்வமும் ஆசையுமூட்டி பல ஸஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளன.

( لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا . . )
பாங்கிலும் முதல் வரிசையிலும் உள்ளதை (நன்மைகளை) மக்கள் அறிந்து கொண்டால், அதனை குலுக்கல் முறையில் தான் பெறமுடியும் என்றிருந்தால் குலுக்கலிடுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

( . . تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ )
முன்னே வாருங்கள்! என்னைப் பின்பற்றி (உங்கள் தொழுகையை) நிறைவேற்றுங்கள்! உங்களுக்குப் பின் உள்ளவர்கள் உங்களைப் பின்பற்றி (அவர்களின் தொழுகையை) நிறைவேற்றிக் கொள்ளட்டும்! ஒரு கூட்டம் தொடர்ந்து (தொழுகைக்குத்) தாமதமாக வருவார்களானால் அல்லாஹ் அவர்களை பின்தங்கியவர்களாக்கி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : முஸ்லிம்)

(لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ عَنِ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ فِي النَّارِ)
ஒரு சமுதாயம் முதல் வரிசையை விட்டும்; தொடர்ந்து தாமதமாக வருவார்களானால் அல்லாஹ் அவர்களை நரகில் பின் தங்கியவர்களாக்கி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா -ரலி, நூல்: அபூதாவூத்)

( . . أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ يُتِمُّونَ الصُّفُوفَ الْأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ )
மலக்குகள் தங்கள் இரட்சகனிடத்தில் வரிசையாக (அணிவகுத்து) நிற்பது போன்று நீங்களும் வரிசையாக நிற்க மாட்டீர்களா? என நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மலக்குகள் தங்கள் இரட்சகனிடத்தில் எவ்வாறு வரிசையாக நிற்பார்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் முந்தய வரிசைகளைப் பூர்த்தியாக்குவார்கள், வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் இணைந்து நிற்பார்கள் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா -ரலி, நூல் : முஸ்லிம்)
இந்தக் கருத்தில் அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன. இவைகள் நபி (ஸல்) அவர்களின் -காலத்தில் இருந்த- பள்ளிக்கும், அது விரிவாக்கப்படுவதற்கு முன்னரும் விரிவாக்கப்பட்ட பின்னரும் உள்ள பிற பகுதிகளுக்கும் உரிய பொதுவான செய்திகளாகும்.

மேலும் வரிசையின் வலது புறத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஆர்வமூட்டிய ஹதீஸ்களும் வந்துள்ளன.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த பள்ளியின் அமைப்பில் வரிசையின் வலதுபுறம் ரவ்லாவுக்கு வெளியே இருப்பது அனைவரும் அறிந்ததே! இதன் மூலம் ரவ்லாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட முந்தய வரிசை களுக்கும் வலது புறத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதும் ரவ்லாவில் தொழ முயற்சிப்பதைவிட இவ்விரண்டிலும் நின்று தொழ முயற்சிக்கவேண்டும் என்பதும் தெளிவாகிறது. இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்தால் இதுவே மிகத் தெளிவான முடிவாகும்.
- அல்லாஹ்வே நேர்வழிகாட்டுபவன்-

• நபி (ஸல்) அவர்களின் அறையைத் தொடுவதோ, முத்தமிடுவதோ, அதனை வலம் வருவதோ கூடாது. நிச்சயமாக முன்சென்ற நல்லோர்(நபித் தோழர்)களில் எவரும் இவ்வாறு செய்ததாக ஆதாரமில்லை. இது மார்க்கத்தில் தடுக்கப்படவேண்டிய பித்அத் -நூதனச்- செயலாகும்.

தன் தேவையை நிறைவேற்றவோ, கஷ்டத்தை நீக்கவோ, நோயைக் குணமாக்கவோ, அல்லது இது போன்ற எதனையும் நபி (ஸல்) அவர்களி(ன் கப்ரி)டம் கேட்டுப் பிரார்த்திப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இவை அனைத்தையும் அல்லாஹ் வைத் தவிர வேறு எவரிடத்திலும் கேட்கக் கூடாது. மரணித்தவர் களிடம் இவைகளைக் கேட்பது அல்லாஹ்வுக்கு இணைவைத்து அல்லாஹ் அல்லாதோரை வணங்கும் செயலாகும்.

மார்க்கம் இரண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1-அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவரும் வணங்கப்படக் கூடாது.
2-அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியைத் தவிர பிற முறைகளில் அவன் வணங்கப்படக் கூடாது.
இதுவே, நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை, நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவதன் பொருளாகும்.

• நபி (ஸல்) அவர்களி(ன் கப்ரி)டம் எவரும் -ஷஃபாஅத்தை- பரிந்துரையை (நேரடியாகக்) கேட்கக் கூடாது. பரிந்துரை என்பது அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாகும். எனவே அதனை அவனைத் தவிர பிறரிடம் கேட்பது கூடாது.

 قُلْ ِللهِ الشَّفَاعَةُ جَمِيْعاً 
பரிந்துரைகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் என்று நபியே நீர் கூறுவீராக! என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்.
(அல்குர்ஆன் 39:44)

யாஅல்லாஹ்! என் விஷயத்தில் உனது நபி (செய்யும்) பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! யாஅல்லாஹ்! என் விஷயத்தில் உன்னுடைய மலக்குகளும் முஃமின்களான உனது அடியார்களும் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்சென்றுவிட்ட (நான் இழந்துவிட்ட சிறு குழந்தைகளான) என்னுடைய சந்ததியினர் என் விஷயத்தில் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! என்பன போன்ற துஆக்களைக் கேட்கலாம்.

பரிந்துரை மற்றும் அதல்லாத வேறு எந்த ஒன்றையும் மரணித்து விட்டவர்களிடம் கேட்கக் கூடாது. அவர்கள் நபிமார்களாகவோ அல்லது நபியல்லாத பிறராகவோ யாராக இருந்தாலும் சரியே! இவ்வாறு கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை, மேலும் மரணித்துவிட்டவர்களை விட்டும் -மார்க்கம் விதிவிலக்காகக் கூறியுள்ளதைத் தவிர- மற்ற அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன.

( إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ )
மனிதன் மரணித்து விட்டால் மூன்றைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் துண்டித்துவிடுகின்றன. அவை : நிலையான தர்மம், பயனளித்துக் கொண்டிருக்கும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் ஸாலிஹான சந்ததி என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தபோதும் மறுமையில் அவர்களை சந்திக்கும் போதும் மட்டும்தான் அவர்களிடம் பரிந்துரைக்காக வேண்டிக் கொள்ள அனுமதியுள்ளது. அப்போதுதான் அவர்களால் அதனைச் செய்ய முடியும். (மறுமையில்) பரிந்துரைக்க வேண்டுவோருக்காக அல்லாஹ் விடம் முன்சென்று பிரார்த்திக்க முடியும். இவ்வுலகில் -அவர்கள் உயிருடன் இருந்த போது செய்த பரிந்துரைகள்- அனைவரும் அறிந்ததே! அது அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல. மாறாக அது அவர்களுக்கும் அவர்கள் அல்லாத பிறருக்கும் பொதுவானதாகும். எனவே ஒரு முஸ்லிம் தன் சகோதரரை நோக்கி எனக்காக அல்லாஹ் விடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்! என்ற பொருளில் எனக்காக இந்த காரியத்தில் என்னுடைய இரட்சகனிடம் பரிந்துரை செய்யுங்கள்! என்று கூறுவதற்கு அனுமதியுள்ளது. கோரப்படும் தேவைகள் ஹலாலானவைகளாக இருந்தால் அவர் தன் சகோதரருக்காக அதை அல்லாஹ்விடம் பரிந்துரைத்துப் பிரார்த்திக்க அனுமதியுள்ளது.

ஆனால் மறுமை நாளில் அல்லாஹ்வின் அனுமதியின்றி எவரும் -எவருக்காகவும்- பரிந்துரைக்க முடியாது.
 مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ 
. . அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? . . என அல்லாஹு தஆலா கேட்கின்றான்.
(அல்குர்ஆன் 2:255)

மரணத்திற்குப் பிறகுள்ள நிலை என்பது : மரணத்திற்கு முன்னுள்ள மனிதனின் நிலையுடனோ, அல்லது அவன் அழிக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்படும் (மறுமை) நிலையுடனோ ஒப்பிட முடியாத தனிப்பட்ட நிலையாகும்.

-மார்க்கம் விதிவிலக்காகக் கூறியுள்ளதைத் தவிர- மரணித்து விட்டவரின் அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவர் முன்செய்த தன் செயல்களுக்கு பொறுப்பாகிவிடுகிறார்.

மார்க்கம் விதிவிலக்காகக் கூறியவைகளில் மரணித்தவர் களிடம் பரிந்துரைக்காக வேண்டுவது இடம்பெறவில்லை. எனவே அதனை அவ்விதிவிலக்குடன் இணைப்பது கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தமது மரணத்திற்கு பிறகு பர்ஸக் எனும் திரைவாழ்வில் நிச்சயமாக ஷுஹதாக்களின் வாழ்வை விட மிகச் சிறந்த வாழ்வில் உள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் நிச்சயமாக அது மரணத்திற்கு முன்னுள்ள வாழ்வின் வகையைச் சார்ந்ததோ அல்லது மறுமை வாழ்வின் வகையைச் சார்ந்ததோ அல்ல. மாறாக அந்த வாழ்வின் தன்மையையும் எதார்த்த நிலையையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாது. இதனால்தான் முன்சென்ற நபிமொழியில்

( مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ )
என் மீது யாரேனும் ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக என்னுடைய ரூஹை அல்லாஹ் மீட்டுத் தருகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : அபூதாவூத்)

நிச்சயமாக அவர்கள் மரணித்துவிட்டார்கள், அவர்களின் ரூஹ் அவர்களின் உடலை விட்டும் பிரிந்து விட்டது, எனினும் அது ஸலாம் கூறப்படும் போது (அதற்கு பதிலுரைப்பதற்காக) திரும்பக் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் மரணத்தைப் பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல ஆதாரங்கள் உள்ளன. இது அறிஞர்களின் ஒருமித்த கூற்றுமாகும். எனினும் ஸலாத்திற்கு பதிலுரைப்பதற்காக அவர்களுக்கு மீண்டும் ரூஹ் கொடுக்கப்படுவது திரைவாழ்விற்கு தடையாக இருக்காது.


 وَلاَ تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِيْ سَبِيْلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَ 
அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நிச்சயமாக நீங்கள் எண்ணவேண்டாம். மாறாக அவர்கள் தங்கள் இரட்சகனிடத்தில் உயிருள்ளோராக இருக்கின்றார்கள். அவனால் அவர்கள் உணவளிக்கப் படுகின்றார்கள் (3:169) என்ற வசனம், ஷஹீதாக மரணித்தவர் களின் திரைவாழ்விற்கு தடையாக இல்லாதது போன்று (ஸலாத்திற்கு பதிலுரைப்பதற்காக மீண்டும் ரூஹ் கொடுக்கப் படுவது நபி (ஸல்) அவர்களின் திரைவாழ்விற்கும் தடையாக இருக்காது).

இவ்விஷயத்தை நாம் விரிவாக விளக்கியுள்ளதற்குப் பல காரணங்கள் உள்ளன. நாம் மேற்கூறிய விஷயத்தைப் -பிரித்துப் பார்க்க முடியாமல்- ஒன்றென நினைத்துவிடும் பலர், அல்லாஹ்வுக்கு -இணைவைக்கும்- ஷிர்க்கின் பக்கமும் அல்லாஹ்வை விட்டுவிட்டு கப்ரை வணங்குவதற்கும் சென்று விடுகின்றனர். மார்க்கத்திற்கு மாற்றமான அனைத்துக் காரியங்களை விட்டும் நம்மையும் முஸ்லிம்கள் அனைவர் களையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக!

ஜியாரத் செய்ய வருவோரில் சிலர் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கருகில் சப்தத்தை உயர்த்துவதும் அங்கு அதிகநேரம் நிற்பதும் மார்க்கத்திற்கு மாற்றமான செயலாகும். நபி (ஸல்) அவர்களின் சப்தத்தை விட தம் சப்தத்தை உயர்த்துவதை விட்டும், சிலர் சிலரிடம் சப்தமாக பேசுவது போன்று அவர்களிடம் சப்தமாக பேசுவதைவிட்டும் மக்களை அல்லாஹ் தடுத்துள்ளான். மேலும் அவர்கள் முன் சப்தத்தை தாழ்த்திக் கொள்ளுமாறு தூண்டியுள்ளான்.

 يَأَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا لاَ تَرْفَعُوْا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلاَ تَجْهَرُوْا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لاَ تَشْعُرُوْنَ – إِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللهِ أُولَئِكَ الَّذِيْنَ امْتَحَنَ اللهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيْمٌ 
விசுவாசிகளே நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். மேலும் உங்களில் சிலர் மற்ற சிலருடன் உரக்கப் பேசுவதைப் போல் அவரிடம் பேசுவதில் (சப்தத்தை உயர்த்தி) நீங்கள் உரக்கப் பேசாதீர்கள். (ஏனெனில் இதனால்) நீங்கள் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் உங்களுடைய (நன்மையான) செயல்கள் அழிந்துவிடும். - நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் (பேசும் பொழுது) தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறாரே அத்தகையோர் - அவர்களுடைய இதயங்களை பயபக்திக்காக அல்லாஹ் பரிசுத்தமாக்கி வைத்தானே அத்தகையோராவார். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (அல்குர்ஆன் 49:2-3)

நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு அருகில் அதிக நேரம் நிற்பதும் (அங்கு நின்று கொண்டு) மீண்டும் மீண்டும் பலமுறை ஸலாம் கூறுவதும் கப்ருக்கு அருகில் கூட்டம் கூடுவதற்கும், அதிக நெரிசலுக்கும், சப்தம் உயர்வதற்கும் காரணமாகிறது. இது (மேற்கூறப்பட்ட) தெளிவான வசனங்களில் அல்லாஹ் முஸ்லிம்களுக்குக் கூறும் கட்டளைக்கு மாறுசெய்வதாகும். நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதும் மரணித்த பின்னரும் மதிக்கப்பட வேண்டியவராவார்கள். அவர்களின் கப்ருக்கருகில் மார்க்க ஒழுக்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடுவது முஃமினுக்கு அழகல்ல.

இது போல் ஜியாரத் செய்பவர்களிலும் மற்றவர்களிலும் சிலர் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கருகில் கப்ரை முன்னோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி பிரார்த்திக்க முயற்சிக்கின்றனர். இவை அனைத்தும் முன்சென்ற நல்லோர்களான நபித்தோழர்களின் செயலுக்கும் அவர்களின் அனைத்து நல்லறங்களிலும் அவர்களைப் பின்பற்றியவர்களின் செயலுக்கும் மாற்றமாகும். மாறாக இது மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட -பித்அத்-தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

( . . فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ )
நீங்கள் என்னுடைய வழிமுறையையும், எனக்கு பின் தோன்றும் நேர்வழி பெற்ற, நுண்ணறிவுடைய கலீஃபாக்களின் வழிமுறையையும் பின்பற்றிக் கொள்ளுங்கள்! அதனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! அவைகளை கடவாய்ப் பற்களால் மிக வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். (மார்க்க) விஷயங்களில் புதிதாக ஏற்படுத்தப்படுபவைகளை விட்டும் உங்களை எச்சரிக்கை செய்கிறேன். நிச்சயமாக புதிதாக ஏற்படுத்தப்படுபவை அனைத்தும் பித்அத்களாகும். அனைத்து பித்அத்களும் வழிகேடாகும்.
(அறிவிப்பவர் : இர்பாழ்-ரலி, நூற்கள் : அபூதாவூத், அஹ்மத்)

( مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ )
நம்முடைய -மார்க்க- விஷயத்தில் அதில் இல்லாததை யாரேனும் புதிதாக உருவாக்கினால் அது -அல்லாஹ்விடத் தில் ஏற்றுக் கொள்ளப்படாமல்- மறுக்கப்பட்டுவிடும்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

( مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ )
யாரேனும் -மார்க்க விஷயத்தில்- நாம் கட்டளையிடாத ஏதேனும் ஒரு செயலைச் செய்தால் அது -அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல்- மறுக்கப்பட்டு விடும். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம்)

(அலீ -ரலி, அவர்களின் பேரரான) ஜைனுல் ஆபிதீன் அலீ பின் ஹுஸைன் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் கப்ரருகில் துஆச் செய்தவராக ஒருவரைக் கண்டார்கள். உடனே அதனை விட்டும் அவரைத் தடுத்தார்கள். பிறகு, நான் என்னுடைய தந்தை (ஹுஸைன் -ரலி) அவர்களிடமிருந்தும் அவர் எனது பாட்டனார் (அலீ -ரலி) அவர்களிடமிருந்தும் அவர், நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் கேட்ட ஹதீஸை நான் உனக்கு கூறட்டுமா? என்னுடைய கப்ரை விழாவாக்கா தீர்கள்! உங்களுடைய வீடுகளை கப்ருகளாக்காதீர்கள்! என் மீது ஸலவாத்துக் கூறுங்கள்! நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களுடைய ஸலாம் நிச்சயமாக என்னை வந்தடையும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.

இதனை ஹாஃபிழ் முஹம்மது பின் அப்துல் வாஹித் மக்தஸீ அவர்கள் தனது அல்அஹாதீஸுல் முக்தாரா எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஜியாரத் செய்வோரில் சிலர் தொழுகையில் நிற்பது போன்று வலது கையை இடது கையின் மீது வைத்து அதனை நெஞ்சின் மேற்பகுதியிலோ அல்லது அதற்குக் கீழோ வைத்த வாறு நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறும் போதோ அல்லது அவர்களல்லாத அரசர்கள், தலைவர்கள் போன்றோருக்கோ இதுபோன்ற அமைப்பில் ஸலாம் கூறுவதற்கு அனுமதி யில்லை. இது போன்ற பணிவும் அடக்கமும் வழிபாடும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கு முன்னிலையிலும் செய்யக் கூடாது. இவ்வாறே மார்க்க அறிஞர்கள் கருதுவதாக இமாம் ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரீ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். முன்சென்ற நல்லோர்(நபித்தோழர்)களின் நேர்வழியைப் பின்பற்றுவதை இலட்சியமாகக் கொண்ட ஒருவர் -நாம் கூறிய- இவ்விஷயத்தைப் பற்றி சிந்தித்தால் மிகத்தெளிவாகப் புரியும்.

குருட்டு பக்தியும் மனோஇச்சையும் கண்மூடிப் பின்பற்றும் தனிமனித வழிபாடும் மிகைத்து விட்டதன் காரணத்தினால், முன்சென்ற நல்லோர்(நபித்தோழர்)களின் வழியின் பக்கம் மக்களை அழைப்பவர்களைப் பற்றி சிலர் தீய எண்ணம் கொண்டுள்ளனர். அவர்களைப் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்விடம் உள்ளது. நாம் அல்லாஹ்விடம் நமக்கும் அவர்களுக்கும் நேர்வழியையும், அசத்தியத்தைப் புறக்கணித்து சத்தியத்தைத் தேர்ந்தெடுக்கும் பாக்கியத்தையும் கேட்போம். நிச்சயமாக அவனே மிகத்தூய்மையானவன், மிகச்சிறந்த பொருப்பாளன்.

மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் கப்ரை முன்னோக்கியவாறு வெகுதூரத்தில் நின்று கொண்டு ஸலாம் கூறுபவர்களாகவோ, பிரார்த்திப்பவர்களாவோ, உதடுகளை அசைப்பது போன்ற அனைத்தும் நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள பித்அத்களின் வகையைச் சேர்ந்தவைகளே! மார்க்கத்தில் அல்லாஹ் அனுமதிக்காததை புதிதாக ஏற்படுத்துவது எந்த முஸ்லிமுக்கும் அழகல்ல. ஒருவர் இச்செயலின் வாயிலாக அல்லாஹ்வைத் தூய்மையாக நேசிப்பதை விட்டும் தூரமாகி, அவன் வெறுப்பின் பக்கம் மிக நெருங்கிவிடுகிறார்.
இச்செயலையும் இதுபோன்றவைகளையும் தடுத்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,

لَنْ يُصْلِحَ آخِرَ هَذِهِ اْلأُمَّةِ إِلاَّ مَا أَصْلَحَ أَوَّلَهَا
இச்சமுதாயத்தில் முந்தய காலத்தில் வாழ்ந்தவர்களை எது சீர்திருத்தியதோ அதுதான் இச்சமுதாயத்தின் பிந்திய காலத்தவர்களையும் சீர்திருத்தும் என்றார்கள்.

நிச்சயமாக இச்சமுதாயத்தில் முந்தய காலத்தில் வாழ்ந்தவர்களை நபி (ஸல்) அவர்களின் நெறியிலும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள், இறைப்பொருத்தத்தைப் பெற்ற நபித் தோழர்கள், அவர்களை நல்லவற்றில் பின் தொடர்ந்தோர்கள் ஆகியோரின் வழியிலும் சென்றதுதான் சீர்திருத்தியது என்பது அனைவரும் அறிந்ததே! எனவே இச்சமுதாயத்தின் பின் தோன்றல்கள் இவ்வழியை பற்றிப் பிடித்து செல்லாதவரை சீர்திருத்தம் அடையமுடியாது.

முஸ்லிம்கள் அனைவரும் நேர்வழியிலும் வெற்றிப் பாதையிலும் செல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக! இம்மையிலும் மறுமையிலும் அவர்களை கண்ணியப் படுத்துவானாக! நிச்சயமாக அவனே கொடையாளன். கிருபையாளன்.
 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்