Index | Subscribe mailing list | Help | E-mail us

 
பாடம் - 5

உளு செய்யும் முறை

1. நிய்யத்து வைப்பது
- (நிய்யத்து வைப்பதென்றால் மனதால் உளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)
அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதெல்லாம் எண்ணங்களை வைத்துத்தான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

2. உளு செய்யுமுன் பிஸ்மி சொல்வது
- (உளு செய்யும் போது) யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு உளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - இப்னுமாஜா, திர்மிதி, அபூதாவூத்)

3. மிஸ்வாக் செய்து கொள்வது
- என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு உளுவின் போதும் மிஸ்வாக் செய்யும்படி நான் கட்டளையிட்டிருப்பேன் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

4. இரண்டு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது
- உத்மான் (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை எடுத்து தனது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள்..... என் உளுவைப்போலதான் நபி (ஸல்) அவர்கள் உளு செய்ய நான் பார்த்தேன் எனவும் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

5. வாய்க்கும், நாசிக்கும் தண்ணீர் செலுத்துவது
- நபி(ஸல்) அவர்களின் உளுவைப்போல் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல்அன்ஸாரி (ரலி) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, அப்போது உளு செய்வதற்காக தண்ணீர் பாத்திரத்தை எடுத்து (உளு செய்ய ஆரம்பித்தார்கள்) பின் ஒரு அள்ளு தண்ணீரால் வாயை கொப்பளித்து நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

- நீர் உளு செய்தால் வாயை கொப்பளித்துக் கொள் என்பதாக லகீத் இப்னு ஸப்ரா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத், பைஹகி)

- உங்களில் ஒருவர் உளு செய்தால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி பின் சீறிக் (சிந்திக்) கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

நோன்பு இல்லாத நேரத்தில் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதையும் வாய் கொப்பளிப்பதையும் அதிகப்படுத்தியே செய்ய வேண்டும்.

வலது கையினால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி இடது கையினால் சீறி (சிந்தி) விடுவதே நபி வழியாகும்.

- அலி(ரலி) அவர்கள் உளு செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து (உளு செய்தார்கள்) பின்பு நாசிக்கு தண்ணீர் செலுத்தி இடது கையினால் சீறி (சிந்தி) விட்டு இதுதான் நபி(ஸல்) அவர்கள் செய்த உளு என்றார்கள். (ஆதாரம் - அஹ்மத், நஸாயி)

- அலி (ரலி) அவர்கள் உளு செய்யும் போது நாங்கள் உட்கார்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தோம், வலது கையினால் வாய்க்கும் நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், பின்பு இடது கையினால் நாசியை சீறி (சிந்தி) விட்டார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள், யார் நபி (ஸல்) அவர்கள் செய்த உளுவை பார்க்க விரும்புகின்றார்களோ அது இது போன்றுதான் என்று கூறியதாக அப்து கைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் - தாரமி)

6. முகத்தை கழுவுதல். (முகம் கழுவக்கூடிய அளவு, நீளத்தால் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழிவரைக்கும், அகலத்தால் ஒரு காதிலிருந்து மறு காதுவரைக்கும்)

- விசுவாசங்கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (மஸ்ஹ செய்து)க் கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்) (அல்குர்ஆன் 5:6)

- உத்மான் (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை எடுத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி (ஸல்) அவர்களின் உளு இருந்ததாக கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

7. தாடியை குடைந்து கழுவுவது
- நபி (ஸல்) அவர்கள் தன் தாடியை குடைந்து கழுவுவார்கள் என்பதாக உத்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)
- நபி (ஸல்) அவர்கள் உளு செய்தால் தண்ணீரில் ஒரு அள்ளை எடுத்து நாடிக்கு கீழாலே நுழைத்து தன் தாடியை குடைந்து கழுகுவார்கள், என் இறைவன் எனக்கு இப்படித்தான் ஏவினான் என்பதாகவும் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத், ஹாகிம், பைஹகி)

8. இரு கைகளையும் முழங்கை உட்பட கழுகுவது
முகத்தை கழுகுவதற்கு சொன்ன குர்ஆனுடைய வசனமே இதற்கும் ஆதாரம்.

- உத்மான் (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி (ஸல்) அவர்களின் உளு இருந்ததாக கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

9. விரல்களை குடைந்து கழுகுவது
- நீர் உளு செய்தால் உன் இரு கால் கைகளின் விரல்களை குடைந்து கழுவிக்கொள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள். (ஆதாரம்:- அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா)

- நபி (ஸல்) அவர்கள் உளு செய்தால் தன் இரு கால்களின் விரல்களை தன் (கையின்) சின்னி (சின்ன) விரலைக் கொண்டு குடைந்து கழுவுவார்கள். (ஆதாரம்:- திர்மிதி, இப்னு மாஜா, அபூதாவூத்)

10. மூன்று தடவை உறுப்புக்களை கழுகுவது (தலையையும், காதையும் ஒரு தடவைதான் மஸ்ஹ செய்ய வேண்டும்)
- ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து உளுவைப்பற்றி கேட்டார் அதற்கு நபியவர்கள் மூன்று முறை (கழுவ வேன்டும்) என்றார்கள், அதை விட அதிகமாக யார் செய்கின்றாரோ அவர் எல்லை கடந்து தவறிழைத்த அநியாயக்காரராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத், முஸ்லிம்)

நபியவர்கள் ஒரு தடவை, இரண்டு தடவை கழுவியும் உளு செய்திருக்கின்றார்கள், ஆனால் மூன்று தடவையே பெரும்பாலும் செய்திருக்கின்றார்கள்.

11. வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது
- நீங்கள் ஆடை அணிந்தாலும், உளு செய்தாலும் வலது புறத்திலிருந்தே ஆரம்பியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:- அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)

12. உளு செய்யும் உறுப்புக்களை தேய்த்துக் கழுவுவது
- உறுப்புக்களை தேய்த்து உளு செய்து விட்டு இப்படித்தான் தேய்த்து உளு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அஹ்மத், இப்னு ஹிப்பான், அபூ தாவூதுத்தயாலிஸி)

13. தலையையும், காதையும் மஸ்ஹ செய்வது (தடவுவது)
- தலையை மஸ்ஹ செய்யும் விஷயத்தில் பலர்கள் தவறிழைக்கின்றார்கள், அதாவது தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹ செய்துவிடுவது, இது நபி வழியல்ல, நபியவர்கள் அப்படி செய்யவும் இல்லை, சில தடவை நபியவர்கள் தலைப்பாகை அணிந்திருக்கும் போது முன்நெற்றி முடியில் மஸ்ஹ செய்துவிட்டு தலைப்பாவிலும் மஸ்ஹ செய்தார்கள், தலையின் ஒரு பகுதியை மஸ்ஹ செய்வதற்கு இது ஆதாரமாக முடியாது, காரணம் நபியவர்கள் தலையில் தலைப்பாகை அணிந்திருந்த காரணத்தினால் தலையின் ஒரு பகுதியை மஸ்ஹ செய்து விட்டு பின்பு தலைப்பாவிற்கு மேலால் மஸ்ஹ செய்தார்கள், தலையில் தலைப்பாகை இல்லாமல் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹ செய்வது நபி வழியல்ல.

ஆனால் தலைப்பாகை அணியாத சாதாரண நிலையில் நபி (ஸல்) அவர்கள் தலை முடி அனைத்தையும் மஸ்ஹ செய்திருக்கிறார்கள்.

- நபி (ஸல்) அவர்கள் தன் இரு கையினாலும் தன் தலையை மஸ்ஹ செய்தார்கள், (அதாவது) தலையின் ஆரம்ப பகுதியிலிருந்து ஆரம்பித்து தன் பிடரி வரைக்கும் இரு கையையும் கொன்டு சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே அவ்விரு கையையும் மீட்டினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

14. இரண்டு காதுகளையும் மஸ்ஹ செய்வது. காதை மஸ்ஹ செய்வதும் ஒரு தடவைதான். (ஆழ்காட்டி விரலினால் காதின் உள்பகுதியையும், பெருவிரலினால் வெளிப்பகுதியையும் தடவுவது)

- நபி (ஸல்) அவர்கள் தன் தலையையும், இரு காதுகளின் உள்பகுதியையும், வெளிப்பகுதியையும் மஸ்ஹ செய்தார்கள்.

- இன்னும் ஒரு அறிவிப்பில் - தலையையும், இரு காதைகளையும் ஒரு தடவை மஸ்ஹ செய்தார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)

15. இரண்டு கால்களையும் விரல் நுணியிலிருந்து கரண்டைக்கால் வரை கழுவுவது.

(உளுவின் ஆயத்தே இதற்கும் ஆதாரம்)

- கால்களை கழுவும் போது கரண்டைக்காலை தேய்த்துக்கொள்ள வேண்டும், அதே போன்று கால் விரல்களையும் கை விரல்களால் குடைந்து கொள்ள வேண்டும்.
- ஒரு பிரயாணத்திலே நபி (ஸல்) அவர்கள் எங்களை பிந்தி விட்டார்கள், நாங்கள் அஸர் தொழுகையை பிற்படுத்திய நிலையில் எங்களை நபியவர்கள் வந்தடைந்தார்கள், (பின்பு தொழுகைக்காக) நாங்கள் உளு செய்து எங்களின் கால்களை தண்ணீரால் தடவினோம், அப்போது கணுக்கால்களுக்கு நரக வேதனைதான் என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

16. உளு செய்யும் உறுப்புக்களை இடை நிறுத்தாமல் தொடர்ச்சியாக கழுவுவது.

17. உளு செய்யப்படும் உறுப்புக்களை மேலே கூறப்பட்ட முறைப்படியாக (ஒன்றன் பின் ஒன்றாக) செய்வது.

18. முகம், கை, கால்களை கழுவும் போது அவசியமாக கழுவ வேண்டிய பகுதியை விட அதிகமாக்கி கழுகுவது சிறந்தது.

- உளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம், கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட) அபூ ஹரைரா (ரலி) அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

- அபூஹரைரா (ரலி) அவர்கள் உளு செய்வதற்காக தண்ணீரை எடுத்து தன் இரு கைகளையும் முழங்கையை விடவும் அதிகமாக்கி கழுவினார்கள், இரு கால்களையும் கழுவும் போது கரண்டைக்காலை விடவும் அதிகமாக்கி கெண்டைக்கால் வரையும் கழுவினார்கள், ஏன் இப்படிக் கழுவுகின்றீர்கள்? என நான் கேட்டேன் அதற்கு இது (மறுமையில்) ஆபரணம் அணியப்படும் இடம் என அபூஹரைரா (ரலி) அவர்கள் அறிவித்தாக அபூ ஸர்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம் - அஹ்மத்)

19. தண்ணீரில் வீண் விரயம் செய்யக்கூடாது.
- நபி (ஸல்) அவர்கள் நான்கு அல்லது ஐந்து முறை இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீரின் அளவைக்கொண்டு குளித்திருக்கின்றார்கள், இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீரின் அளவைக்கொண்டு உளு செய்திருக்கின்றார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)

20. ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது சில குறிப்பிட்ட துஆக்கள் ஓதுவதற்கு சரியான ஆதாரமில்லை.

21. உளு செய்த பின் ஓதும் துஆ.
- உங்களில் ஒருவர் பரிபூரணமான முறையில் உளு செய்துவிட்டு பின்பு

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ الله ُوَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

என்ற துஆவை ஓதினால் அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசலால் நுழைய முடியும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்- முஸ்லிம்)

யார் உளு செய்து முடிந்ததும்

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِـحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيِكَ

என்று ஓதுகின்றாரோ அதை ஒரு துண்டில் எழுதப்பட்டு அதில் முத்திரையிடப்படும், மறுமை நாள் வரைக்கும் அது உடைக்கப்படமாட்டாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - தப்ராணி, அமலுல் யஃமி வல்லைலா லிஇப்னிஸ்ஸன்னி)

ஒழுவை முறிக்கும் காரியங்கள்