Index |Subscribe mailing list | Help | E-mail us

அன்னையரே அமுதூட்டுங்கள்!

கதீஜா மணாளன்

 

<< பாகம் -2

(குழந்தை நலம்: தொடர்-3)

 

ஒரு குழந்தை பிறந்ததும் அதன் குடலினை அடையும் முதல் உணவு தாய்ப்பால் ஆகும். இதனை இறைவன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடை என்றால் அது மிகையாகாது. மேலும் புட்டிப் பாலைவிட தாய்ப்பாலில் கிடைக்கும் அபரிமிதமான பயன்களைக் கருத்தில் கொண்டுதான் அன்றைய வைத்தியர்களிலிருந்து இன்றைய மருத்துவர்கள்வரை அனைவரும் குழந்தைக்கு பரிந்துரைக்கும் உணவு தாய்ப்பால் ஆகும்.


இன்றைய இயந்திர உலகில் அரசு பணியிலும் இன்ன பிற பணியிலும் இருக்கும் பெண்கள் குறுகிய விடுப்பில் தாய்ப்பால் கொடுப்பதை புறக்கணிக்கின்றனர். இன்னும் சில பெண்கள் அழகு கெட்டுவிடும் என்ற அறிவீனத்தில் தாய்ப்பாலை புறக்கணிக்கின்றனர். இவர்கள் அனைவரும் தாய்ப்பாலினால் தாய்க்கும்-சேய்க்கும் கிடைக்கும் நன்மைகளை முழுமையாய் அறியாததுதான் அத்தகைய போக்கிற்கு காரணம். எனவே, தாய்ப்பாலைப் பற்றிய சில பயனுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.


தாய்ப்பால் குழந்தைகளுக்கு நல்ல சத்துணவாக விளங்குவதுடன் சிறந்த நோய் தடுப்பு சக்தியையும் அளிக்கின்றது அதிலும் குழந்தை பிறந்தவுடன் முதலில் சுரக்கும் பாலுக்கு (
Colostrums) கொலஸ்ட்ரம் என்று பெயர் நம் ஊரில் இதனை 'சீம்பால்' என்றும் கூறுவர் இது வெண்மைக்கும், மஞ்சளுக்கும் இடைப்பட்ட நிறத்தில் இருப்பதால் இதனை கெட்டுப்போன பால் என்றும் இது குழந்தைக்கு பேதியை ஏற்படுத்தும் என்றும் நம்பி கிராமப்புறங்களிலும், நகர்ப்பறங்களிலும் இதனை குழந்தைக்கு கொடுப்பதில்லை. இந்த 'கொலஸ்ட்ரம்' என்ற சீம்பாலில் ஏராளமான தாது மற்றும் சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இந்த சீம்பாலில் சுகர், லாக்டோஸ் மற்றும் புரதச் சத்து ஏராளமாக காணப்படுகிறது. மேலும் இது தாயின் நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு சென்றடைவதுடன் குழந்தைகளை ஆரம்ப பருவத்தில் தாக்கும் கிருமிகளின் தாக்குதலிலிருந்து பெரும்பாதுகாப்பு அளிக்கிறது.


புட்டிப்பாலைவிட தாய்ப்பால் எனும் இயற்கை உணவு மிகச்சிறந்த பலன்களை குழந்தைகளுக்கு அளிக்கின்றது மேலும் தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் புட்டிப்பால் குழந்தைகளைவிட ஆரோக்கியமாக விளங்குவதை சமீபத்திய பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த
Dr. Alan Peter அமெரிக்காவில் பிறவியிலேயே ஆஸ்துமா நோயால் பீடித்த பல குழந்தைகளிடம் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டதில் இரண்டு ஆண்டுகள் நிறைவாக தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் புட்டிப்பால் குழந்தைகளைவிட 60% நோய்நிவாரணம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அதாவது 23%-லிருந்து 16.3%ஆக நோய் குறைந்துள்ளது மேலும் மற்றொரு அமெரிக்க ஆய்வாளரான
Dr. Lukas தமது குழுவினருடன் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தாய்ப்பாலில் மேலும் பல வியத்தகு பலன்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளார் அவர் தமது அறிக்கையில் தாய்ப்பாலில் உள்ள ARCHIDONIC ACID (AA) & DOCOSAHEXANC ACID (DHA) போன்ற அமிலங்கள் காணப்படுகின்றன, இது குழந்தைகளின் கண் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பேருதவி செய்கின்றது இந்த அமிலங்கள் செயற்கை பால் பவுடர்களிலோ பசும்பாலிலோ கிடையாது. இறைவன் மனிதகுலத்திற்கு செய்த மிகப்பெரும் கருணை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் உலக சுகாதார அமைப்பு
(WHO) மற்றும் UNICEF போன்றவை வளர்ந்துவரும் நாடுகளில் குழந்தைகளுக்கு சக்திகுறைவால் மரணம் அதிகரிக்கிறது, எனவே குறைந்தபட்சம் தாய்ப்பாலை தவறாது ஊட்டுங்கள் என்று வருடாவருடம் அறிவுரை வழங்கிக்கொண்டே இருக்கின்றன. கடந்த வருடத்தின் ஆகஸ்ட் முதல் வாரம் அதாவது 1-7 ஆகஸ்ட் 2005ஐ உலக தாய்ப்பால் வாரமாக அறிவித்தது இந்திய அரசின் சுகாதார & குடும்ப நல அமைச்சகம். தாய்ப்பாலின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் பெரும் பலன்களையும் மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கையில் தாய்ப்பால் பாதுகாப்பானது ஆரோக்கியமானது என்று கூறி பல்வேறு பலன்களை சுட்டிக்காட்டி இருக்கிறது அவ்வறிக்கையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம்.

 


தாய்ப்பாலூட்டுவதற்கான சரியான வழிமுறைகள்

 

-> குழந்தை பிறந்த உடனே, அதாவது 30 நிமிடத்திற்குள் தாய்ப்பாலூட்டத் தொடங்குவது விரும்பத்தக்கது


-> முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, அதாவது தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலும், உணவும், திரவமும், நீரும் தேவையில்லை.


-> போதுமான சரியான துணை உணவுகளை ஊட்டுதல் 6 மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் ஊட்டுவதுடன் மற்ற துணை உணவுகளையும் வழங்கத் தொடங்கவும்.


-> 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பாலூட்டுவது தொடரட்டும்.

 


தாய்ப்பாலூட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்


-> தாய்ப்பால் குழந்தைகளுக்கான இயற்கை தந்த பரிசு.


-> தாய்ப்பால் 5 புலன்களையும் - பார்த்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல் என உணர்வுகளைத் தூண்டுகிறது.


-> தாய்ப்பால் உணர்வுபூர்வ பாதுகாப்பையும், வாழ்நாள் முழுவதும் மனோ நிலை, சமூக நிலை மேம்பாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


-> தாய்ப்பால் குடித்த குழந்தை அறிவு மிகுந்ததாகவும் தாய்ப்பால் குடிக்காத குழந்தையைவிட 1Q8 புள்ளிகள் வரை அதிகமாகவும் பெறும்.


-> மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. கற்கும் ஆற்றலைக் கூட்டுகிறது.


-> தாய்பாலூட்டுவது குழந்தை பிறந்த பிறகான சீழ்த்தொற்று, வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்றவை தாக்காது காக்கும்


-> தாய்ப்பால் 5 வயதுக்குட்ட குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கையை 13% வரை குறைக்கிறது.

 


தாய்ப்பாலூட்டுவதால் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள்


-> தாய்ப்பாலூட்டுதல், தாய்மார்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப்பின் இரத்தஒழுங்கு, இரத்த சோகை ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது


-> தாய்ப்பாலூட்டுதல், தாய்மார்களுக்கு நோய்த் தடுப்புத்திறனை அதிகரிக்கிறது அடுத்து தாய்மையடைவதைத் தாமதிக்கிறது. நீரிழிவு தாய்மார்களுக்கு இன்சுலின் தேவையைக் குறைக்கிறது.


-> தாய்ப்பாலூட்டுவது தாய்மார்களுக்கு மார்பகப்புற்று, சினைப்பை புற்றுநோய் வலுவற்ற எலும்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.


-> தாய்மார்கள் கர்ப்பத் காலத்தில் பெற்ற அதிக எடையைக் குறைக்க வாய்ப்பளிக்கிறது.


நினைவிருக்கட்டும்


முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டாமல் போனால் தாய்ப்பாலினால் கிடைக்கும் நன்மைகள் குறைந்து போகும். (நன்றி: சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம் - இந்திய அரசு)

 

இத்தனை பலன்கள் இருந்தும்கூட நவீன இளம் தாய்மார்கள் தாய்ப்பாலை புறக்கணிப்பது நிச்சயம் அறியாமைதான் தாய்ப்பாலை புறக்கணித்த தாய்மார்களுக்கு கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் அபாயம் உண்டு என்பதை மும்பையைச் சேர்ந்த முதன்மை புற்றுநோய் ஆராய்ச்சி மைய முதல்வர் டாக்டர் இந்திர நீலமித்ரா இப்படிக் கூறுகின்றார்.


அறியாமையின் காரணமாகவும் அழகு குறையும் என்ற காரணத்தாலும் பல தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க மறுக்கின்றனர் குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 50% குறைவு என்று கூறுகின்றனர்.


எனவே தாய்ப்பால் குழந்தைக்கு மட்டுமல்ல தாய்மார்களுக்கும் ஏற்ற மிகச் சிறந்த உணவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இஸ்லாம் தாய்ப்பாலூட்டுதலை தாய்மார்களுக்கு வற்புறுத்துகின்றது. இறைவன் தனது திருமறையில்


(தங்களுடைய குழந்தைகளுக்கு தம் மனைவியைக்கொண்டே) பால்ஊட்டுவதைப் பூர்த்தியாக்க விரும்புகிறவருக்காக, தாய்மார்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள் வரை பூரணமாகப் பாலூட்டுவார்கள் இன்னும் (பாலூட்டும் இக்காலங்களில்) அவர்களுக்கு உணவும், உடையும் முறைப்படி (வழங்குவது) தகப்பன்மீது கடமையாகும்.

(அல்-குர்ஆன் 2: 233)


மேற்கூறிய வசனத்தில் தலாக் விடப்பட்ட பெண்கள் விஷயத்தில், பாலூட்டும் பெண்களுக்கு உணவு, உடை வழங்குவது ஆண்கள் மீது கடமை என்பதை அறிய முடிகின்றது.


மற்றொரு இடத்தில் இறைவன் கூறுகையில்,


நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசமும் செய்தோம் அவனுடைய தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனம் அடைந்தவளாக அவனைச் சுமந்தான் இன்னும் (அவனுக்குப் பால்குடி மறக்கடித்து) அவன் பிரிவது இரண்டு வருடங்களிலாகும் (ஆகவே மனிதனே!) நீ எனக்கும், உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக (முடிவில்) என்னிடமே (உன்) மீளுதல் இருக்கிறது (அல்-குர்ஆன் 31:14)


மேலும் 46:15ல் கூறும்போது இரண்டரை வருடம் அதாவது 30 மாதங்கள் பாலூட்ட வேண்டும் என்பதை உலக சுகாதார நலம் கருதி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது அருள்மறை.


எனவே கண்ணியமிக்க தாய்மார்களே! பாலூட்டுதல் என்பது வேலைக்குச் செல்லும் தாய்மார்களாகட்டும், தாய்பால் சுரக்கும் தன்மை குறைந்த பெண்களாகட்டும், கண்டிப்பாக நாம் பாலூட்ட ஆர்வம் காட்ட வேண்டும். இது என் மகவு, என் உயிரிலிருந்து பிரிந்து வந்த உயிர், என்னுடைய சொத்து, இக்குழந்தையை போஷித்து பாதுகாத்து வளர்ப்பது என்னுடைய இறைவன் எமக்கிட்ட கட்டளை இதற்காக நான் இறைவன் புறத்திலிருந்து கூலி கொடுக்கப்படுவேன் என்பதை ஒவ்வொரு தாய்மார்களும் உணர்ந்து போலியோ, ஊட்டச்சத்து குறைவு போன்ற நோய்களிலிருந்து விடுபட்டு இனிவரும் நாட்களில் திடகாத்திரமான நோய்களற்ற ஓர் சுகாதாரச் சமுதாயம் உருவாகிட அன்னையரே! அமுதூட்டுங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருள் செய்யப்படுவீர்கள்.

>> பாகம் -4