Index |Subscribe mailing list | Help | E-mail us

அன்பில் திளைக்கச் செய்யுங்கள்

கதீஜா மணாளன்

 

<< பாகம் -3

(குழந்தை நலம்: தொடர்-4)

 

ஷமீம், வயது 6, சென்னையில் ஒரு பிரபலமான பள்ளியில் படிக்கின்றான் பெற்றோர்கள் பணம் படைத்தவர்கள். ஷமீம் ஒல்லியான உருவம். பள்ளியில் யாருடனும் பேசுவதில்லை. எல்லா மாணவர்களும் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ஷமீம் மட்டும் 'உம்' என்று சோகத்தில் அமர்ந்திருப்பான். தினமும் மாணவர்கள் இவனை கேலி செய்ய கண்கணில் கண்ணீரோடு அழுத வண்ணம் வீடு திரும்புவான் ஷமீம். ஏன் 'ஷமீம்' இப்படி? என்ற பெற்றோரின் கேள்விகளுக்கு விடையை சென்னையைச் சார்ந்த மனநல ஆலோசகர் 'அனந்த வள்ளி சீனிவாசன்' இப்படிக் கூறுகிறார்.


ஷமீமின் இந்நிலைக்கு முழுக்க முழுக்கக் காரணம், பெற்றோர்கள்தான். தந்தை வியாபாரத்தில் படு பிஸியான ஆள். தாய் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை, ஷமீமை கவனித்துக் கொள்வதெல்லாம் வேலைக்காரப் பெண் அஸ்மாதான். ஷமீமிடம் அன்பினைப் பொழிய, கொஞ்சிப் பேச, கண்டிக்க, கண்காணிக்க யாருமில்லாத ஏக்கம்தான். ஷமீமின் இந்த நிலைக்குக் காரணம். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 'ஷமீம்' ஒரு கற்பனைப் பாத்திரம் அல்ல என்பதுதான். பெரும்பாலும் முஸ்லிம் குடும்பங்களில் இத்தகைய சூழல் குறைவுதான் என்றாலும், மாறிவரும் கலாச்சாரச் சூழல், பணம் தேடும் ஆசை போன்றவற்றால் நம் சமுதாயப் பெற்றோர்களும் எங்கோ தவறிழைக்கின்றனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.


ஒரு முஸ்லிம் தன்னுடைய குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்னுதாரணத்தைப் பாருங்கள்.


நபி(ஸல்) அவர்கள் தம் பேரக் குழந்தை ஹஸன்(ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அஃரஃ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்கள் எனக்கு பத்து குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவரையும் நான் முத்தமிட்டதில்லை என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'கருணை காட்டாதவன், கருணை காட்டப்பட மாட்டான்'. எனப் பகர்ந்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்


அன்பின் வெளிப்பாடுதான் முத்தமிடுதல் என்பது. நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளை தினமும் முத்தமிடுகிறோம். கைக் குழந்தையாக இருக்கும் போது கொஞ்சி மகிழ்ந்தவர்கள், அந்த மழலையர்கள் பேசும் பருவத்தில் அவர்களுடன் கொஞ்சிப் பேசுவதால் தன் கௌரவத்திற்கு பெரும் இழுக்கு என்று நினைத்து விடுகின்றனர்.


இதே போன்று நபி(ஸல்) அவர்கள் தன் பேரக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த இன்னொரு சம்பவத்தைப் பாருங்கள்.

 

நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரலி) அல்லது ஹுஸைன்(ரலி) அவர்களின் கரங்களைப் பிடித்து அவர்களின் பாதங்களை தன் பாதங்களின் மீது வைத்து பிறகு நீ மேலே ஏறு என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி),
ஆதாரம் : அல்-அதபுல் முஃப்தத், முஃஜம் அத் தப்ராணி


நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களின் பிள்ளைகளான, அப்துல்லாஹ்(ரலி), உபைதுல்லாஹ்(ரலி), குஸைய்யில்(ரலி) ஆகிய மூவரையும் அணிவகுத்து நிற்கச் செய்து 'எவர் என்னிடம் முதலில் ஓடி வந்து தொடுகின்றாரோ அவருக்கு நான் இன்னென்ன தருவேன்' என்று கூறுவார்கள். சிறுவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஓடோடி வந்து அவர்களின் முதுகிலும், நெஞ்சிலும் விழுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுவர்களை முத்தமிடுவார்கள்.
ஆதாரம் : முஸ்னத் அஹ்மது,


போதனையாளரான நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளிடம் தோழமை கொண்டு, விளையாடி மகிழ்ந்து, முத்தமிட்டு பாசத்தை பொழிவதிலும், நேசத்துடன் நடந்து கொள்வதிலும் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார்கள்.


ஷமீம் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், பெற்றோர்கள் இருவருமே வேலையில், ஷமீமுடன் அன்புகாட்ட, விளையாட யாருமில்லை. தனிமையில் வாடியதால், ஷமீம் மனநிலையில் சிறிய பாதிப்பு, இதுதான் ஷமீமை இப்படி மாற்றிவிட்டது. இப்படி கலந்துரையாடாமல், அன்பினை வெளிப்படையாய் காட்டாமல் இருக்கும் பெற்றோர்களால் சிறு குழந்தைகளுக்கு இருதயம் கூட பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.


'குழந்தைகளின் உடல் நலம் மற்றும் மனோநலம் போன்றவற்றில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம். வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் இத்தகைய அன்பு, பாசம் எல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்காத ஒன்றாகவே ஆகிவிடுகிறது. பாசம் மற்றும் அன்பு காட்டப்படாத குழந்தைகள் பிற்காலத்தில் இருதய பாதிப்பிற்குள்ளாகலாம்' (நன்றி : தினகரன்)


ஆகவே சிறந்த இல்லம், நற்பண்புள்ள ஒரு தாயின் மடியைப் போன்றதாகும். அதில்தான் பிள்ளைகள் வளரத் துவங்குகின்றார்கள். அதுதான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதின் முதல் கட்டமாகும். பெற்றோர்களின் அன்பினாலும், பாசத்தினாலும் குழந்தைகளின் தனிமை தகர்க்கப்பட்டு அவர்களது ஆசைகளும், ஆர்வங்களும், குறைகளும், குற்றச்சாட்டுகளும் வெளிக்கொணரச் செய்து அப்பிஞ்சு இதயங்களை பண்படுத்துவதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாததாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல், அறிவு, ஆன்மா ஆகிய அனைத்தும் பூரணத்துவம் பெற்ற குழந்தைகளாக திகழச் செய்வது பெற்றோர்களின் கடமையும், பண்புமாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.

 

(முற்றும்)