Index |Subscribe mailing list | Help | E-mail us

இலக்கற்ற எழுத்துகள்

அபூ உமர்

 

ஒரு புதிய ஊடகம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்குப் போட்டி ஊடகங்கள் வளர்ந்து, பிறகு புதுசுக்கும் போட்டிக்கும் அரசாங்கமும் தனது கட்டுப்பாடுகளை அதிகரித்தபின்புதான் முஸ்லிம்களாகிய நாம், முதல் ஊடகத்தைப் பயன்படுத்துவதைப்பற்றிச் சிந்திக்கிறோம். இயக்கங்களால், இயக்கங்களின் செய்திகளை வெளிக்கொண்டு போக வேண்டும் என்ற நோக்கிலேயே ஆரம்பிக்கப்படும் இதழ்கள் மற்றும் இணையப் பதிப்புகளால் காசு வரவு குறைந்துவிடுமோ என்று பயமும், பதைபதைப்பும் நமது வார -மாத இதழ்களைப் பீடித்துள்ள நோய்களாகும்.

முஸ்லிம்கள் மற்றும் அவர்களிடம் உள்ள ஊடகங்களின் அலட்சியப் போக்கினால், காதுவழி, மின்னஞ்சல் வழிக் கற்பனைச் செய்திகளை, உண்மைச் செய்தியாக மிளிர வைத்து தரம் தாழ்த்திக்கொள்வதை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.

wrong news of nation newspaperகடந்த மாதம் "நபிகள் நாயகம் அவமதிப்பு கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் மர்ம மரணம்" என்ற செய்தி மின்னஞ்சல் வழியே பரபரப்பு செய்தியாகப் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. இச்செய்திக்கு ஆதாரமாக "நேஷன்" என்ற பாகிஸ்தானிய பத்திரிக்கையின் இணைய முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. "முஹம்மது (ஸல்) அவர்களை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரங்களை வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை ஜைலாண்ட்ஸ் போஸ்டனின் கலாச்சார செய்தி ஆசிரியர் எலியட் பேக் தனது படுக்கை அறையில் ஏற்பட்ட மர்மமான தீ விபத்தில் கருகி பலியானதாக" அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. எலியட் பேக் தனது படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது நெருப்பு அவரது அறையை சூழ்ந்ததாகவும் அதில் அவர் உயிரோடு கருகிச் சாம்பலாகிப் போனதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை உறுதிப் படுத்திக் கொள்ளும் எவ்வித முயற்சியும் செய்யாமல், அதே செய்தி தமிழ் முஸ்லிம்களின் வார இதழ் ஒன்றில் இடம்பிடித்துவிட்டது.


ஜைலாண்ட்ஸ் போஸ்டனின் கலாச்சார செய்தி ஆசிரியரின் பெயர் ஃபெலம்மிங் ரோஸ் என்பதாகும். ஆனால், கலாச்சார செய்தி ஆசிரியரின் பெயர் எலியட் பேக் என்று முஸ்லிம்களின் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

ஆனால் உயிருடன் உள்ள எலியட் பேக் இந்தச் செய்தியை தனது பிரத்யேக வலைப்பதிவில் மறுத்திருந்தார். இக் கற்பனைச் செய்தியில் முஸ்லிம்களின் அவசரப் புத்தியும் பக்குவமின்மையும் பிறமதத்து ஊடகங்களிடம் பல்லிளித்து நின்றன.

 

Flemming Rose

 

According to the Nation, a Saudi Arabian newspaper claimed that an "Elliot Back" was the notorious editor of the "Mohammed Cartoons" and perished in a fire in his apartment. Unfortunately, neither is true. The actual culture editor of Jyllands Posten is Fleming Rose.

 


இதுபோன்ற உணர்வுபூர்வமான விஷயங்களை - அது உண்மைதானா என்று உறுதிப் படுத்திக் கொள்ளாமல் - பரப்புவதில் நம்மவர்களுக்கு இருக்கும் ஆர்வமே அலாதியானது. அதற்காகச் சிறிதும் வெட்கப்படுவதில்லை. இஸ்லாத்தை எதிர்த்த எத்தனைபேர் இப்படி அதியசமான முறையில் இறந்தார்கள்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.


அதிசயங்களைக்கொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் நமக்கு இஸ்லாத்தை போதிக்கவில்லை என்பதை ஏனோ மறந்துவிட்டோம்.

ஜைலாண்ட் போஸ்டனில் வந்த கார்ட்டூன்களுக்கு எதிராக உலக முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்த நாட்களில் கோழைகள் உருவாக்கிய இதுபோன்ற மின்னஞ்சல் வந்து முஸ்லிம்களின் எதிர்ப்பு உணர்வுகளைக் கட்டிப்போடாமல் இருந்ததை நினைத்து நிம்மதி அடைய வேண்டியிருக்கிறது !

Hoax Newspaper for April fool 2005இதே போல் கடந்த வருடம் உலகத்தின் முதல் பணக்காரருமான பில்கேட்ஸ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக ஒரு போலியாக தயாரிக்கப்பட்ட நாளிதழ் பக்கம், கடந்த வருடம்
(2005) ஏப்ரல் ஃபூலுக்காக உருவாக்கப்பட்டது. அதனைச் சிலர் உண்மைச் செய்தி என நம்பி, பலருடன் பகிர்ந்துக்கொண்டார்கள். பில் கேட்ஸின் ஒவ்வொரு வினாடியும் பெற்றுக்கொண்டிருக்கும் பணத்தைப்பற்றி பின்வருமாறு சொல்வார்கள் :


"மிஸ்டர் பில் (பில்கேட்ஸ்) தன்னிடம் உள்ள ஏதாவது ஒரு பில் (பண ரஷீது) தொலைந்தால், அதனைத் தேடி எடுக்கும் நேரத்தில் அதனைவிட அதிகமான தொகையைச் சம்பாதிக்க முடியும்" என்பதுதான் அது. சினிமா டைரக்டர் டி. ராஜேந்தர் இஸ்லாத்தில் இணைந்ததாக வந்தத் தவறான செய்தியை ஒட்டி, தமிழ் இதழ் ஒன்று பேட்டி எடுத்து மறுப்பு வெளியிட்டது. ஆனால் உலகப்பணக்காரர் விஷயத்தில் ஊடக தாதாக்கள் அந்த அளவுக்குக் கூட கண்டுக்கொள்ளாததாக நம்பி, ஒரு செயற்கை அரபி நாளிதழை மேற்கோள் காட்டி மற்றொரு தமிழ் முஸ்லிம் வாரஇதழ் எழுதியது.


சில வருடங்களுக்கு முன்பு, விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பொய்யான செய்தியை தலைப்பு செய்தியாக தாங்கிவந்தது ஒரு நாளிதழ். அதே நாளிதழைப் பிரபாகரனே படிப்பதுபோல் உள்ள படத்தை மற்றொரு வாரஇதழ் அட்டைப்படமாக வெளியிட்டது. அதுபோலத்தான் மேற்கண்ட இரண்டு செய்திகளும். இரண்டு செய்திகளில் ஒன்று கடந்த மாதமும் மற்றொன்று கடந்த வருடமும் வெளியானது என்றாலும் கூட, எந்த நோக்கத்தில் அச்செய்தி மக்களுக்கு பரப்பப்பட்டதோ அவ்வழியில் ஒற்றுமை உண்டு.

இதற்குக் காரணமானவர்களைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1) பொய்ச் செய்திகளை உருவாக்குபவர்கள் :

செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட படங்களும், நுணுக்கமான வரைகலை தொழில்நுட்பங்கள் கொண்ட மென்பொருட்கள் (சாஃப்ட்வேர்கள்) உலவும் இக்காலத்தில் அதற்காக நடத்தப்படும் இணைய போட்டிகளில் கலந்துக்கொண்ட படங்களும் இதுபோன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை இஸ்லாமையும் முஸ்லிம்களையும் கிண்டலடிக்கின்றவர்களும் இஸ்லாத்தை இதுபோன்ற விஷயங்களால் வளர்க்க முடியும் என்று நம்புகின்றவர்களும் பயன்படுத்துகிறார்கள்.

2) தவறுக்குத் துணைபோகின்றவர்கள் :

ஒரு செய்தி உண்மையா பொய்யா என்று பிரித்தறியத் தெரியாதவர்கள், தனக்கு வந்திருக்கும் செய்தி என்னவென்றே தெரியாமல் பிறருக்கு அதனை அப்படியே ஃபார்வேட் செய்துவிடும் சகோதரர்கள், இதற்குத் தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்கள்.

3) உண்மை முத்திரை குத்தும் நமது ஊடகங்கள்:

மேற்குறிப்பிட்ட இரண்டு விஷயங்களைப்பற்றி ஆழமான அறிவு இல்லாததாலும் பரபரப்பு செய்திகளைக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் எதிரணி மீடியாவில் மேலுள்ள அளவுக்கதிமான அவநம்பிக்கையாலும் சார்பணி மீடியாவில் மேலுள்ள அளவுக்கதிமான நம்பிக்கையாலும் இதுபோன்ற செய்திகள் உண்மை முத்திரை குத்தப்படுகின்றன. இவை தவிர மாணவச் செய்தியாளர்களிடமிருந்து வரும் செய்திகளைத் தரம்பிரித்து அறியமுடியாத நிலையில் ஊடகப் பொறுப்பாளர்கள் இருப்பதும் ஒரு தலையாயக் குறையாகும்.

பொய்கள் இனம் காணப்பட வேண்டும்:

இணைய தொழில்நுட்பத்தில் அனுபவமற்ற நமது ஊடகங்களின் குறையை மறைப்பதற்காக "இணையம் என்றாலே பொய்" என்று கூறித் தப்பித்துவிட முடியாது. இணையத்தில் தேடு பொறிகளவழியாக, இதுபோன்ற அண்மையில் நடந்த நிகழ்வுகளின் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்ள முடியும். கூகில் தளம் இதில் முதலிடம் வகிக்கிறது. இதை தமிழிலேயே பயன்படுத்த முடியம். இது தவிர நியூஸ் அலெர்ட் என இணையம் தரும் மற்றொரு வசதியை வைத்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், அது தொடர்பாக அடுத்தடுத்து வரவிருக்கும் செய்திகளையும் நாம் உடனுக்குடன் பெற்று உண்மைநிலையை அறிய முடியும்.

எனவே, அசாதரண செய்திகள் வரும்போது அதுபற்றித் தீர்க்கமான இணைய தேடலில் ஈடுபடுவது கட்டாயமாகும். இணையவழிப் பொய் செய்திகளை அதே இணையம் தரும் மற்ற வழிகளைப் பயன்படுத்திப் பிரித்தறிந்து விடலாம். இணையவழித் தேடுதல் பன்மடங்கு தொழில்நுட்பத்துடன் செயல்படும் இக்காலத்தில் உண்மையைப் பிரித்தறிந்து கொள்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகளும் இருக்கின்றன. தவறான செய்திகள் பரவ பல்வேறு வகையில் காரணமானவர்கள், அது தவறு என்று தெரிந்தவுடன் அதே வீரியத்துடன் மக்களுக்கு இனம் காட்டினார்களா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அனைத்துவிதமான பிரபல பத்திரிக்கைகளும் இன்று இணையத்தில் இடம்பிடித்துவிட்டன. பல பிரபலங்களும், துறை சார்ந்த அறிஞர்களும்
Open Diary முறையில் வலைப்பதிவு எழுதுகிறார்கள். இதனை நமக்கு திரட்டிக் கொடுக்கத் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் அரங்கங்கள் வந்துவிட்டன. வலைப்பதிவுகளில் வரும் செய்திகளைத் தேடிக் கொடுக்க வலைப்பதிவுத் தேடல்கள் பல முளைத்துவிட்டன. எனவே, இணையம் என்றாலே இலவச பிளாக், பாலியல் பரிமாற்றங்கள் என மூக்கைப் பொத்திக்கொள்ளும் சகோதரர்கள் தமது கண்களையும் சேர்த்துப் பொத்திக்கொள்ளாமல் அதனை முறையாகப் பயன்படுத்தி, தமது செய்தி ஊடகங்களுக்கு வலு சேர்க்க முடியும் என்பதை உணர வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்தின் எதிரிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றனர் என்பதுகூட நம்மவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? மற்றவருக்கு அனைத்து துறையிலும் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நாம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இணைய வசதியை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டாமல் அலட்சியப் படுத்திச் சென்றோமெனில், நாம் இரு வழிகளில் நஷ்டமடைவோம்.

1. நாம் இணையத்தைப் பயன்படுத்துவதில் பின் தங்கியே கிடப்போம்.
2. நம் எதிரிகள் இணையத்தைப் பயன்படுத்தி எட்டவியலா தொலைவு சென்று விடுவர்.


ஒரு முஸ்லிமுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்த ஊரின் முஸ்லிம் ஜனத்தொகையில் ஒன்று கூடும். அதே ஊரில் ஒரு மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் இணைந்தால் அந்த ஊரின் முஸ்லிம் ஜனத்தொகையில் ஒன்று கூடும்; மாற்று மதத்தில் ஒன்று குறையும்.


சிந்திக்கும் திறனும் விழித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உடையோருக்கு இது போதும்!.

- அபூ உமர்
     15.07.2006

 

 

Related news:

- உண்மையைத் தேடி..

- முஸ்லிம்களும் ஊடகங்களும்

- முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்.. ..

- வீணாகும் நேரம்

 


 

உண்மை அறிந்தவுடன் தயக்கமின்றி மறுப்பு வெளியிட்ட மக்கள் உரிமை (ஜூலை 21-27, 2006) வாரஇதழ் :