Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » மாணவர்களிடம் போதை பொருள் பாவனை அதிகரிப்பது ஏன்?

மாணவர்களிடம் போதை பொருள் பாவனை அதிகரிப்பது ஏன்?

– இம்தியாஸ் யூசுப் ஸலஃபி –
இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது.

பாடசாலைக்குச் சென்று பல்கலைக்கழகம் முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபகரமாக காட்சித் தருகிறார்கள்.

மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. இதன் விளைவாகவே போதைக்கு ஆளாகுகின்றார்கள். திடகாத்திரமாக, ஆரோக்கியமாக, ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கு போதை மற்றும் தீய நடத்தைகள் தடையாக இருக்கின்றன என்பதை உணராமல் இருக்கிறார்கள்.

எந்தவொன்றையும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் சில நேரம் அவர்களது அழிவுக்கே காரணமாகி விடுகின்றது. நண்பர்களுடன் பழகும்போது சிகரட் புகைத்தல், பியர் குடித்தல் என்ற பழக்கத்துடன் பீடா, பாபுல், பான்பராக், மாவா, ஸாதா என்ற பாவனைக்கு ஆளாகி, இறுதியில் எல்லா போதைக்கும் அடிமைகளாகி விடுகின்றார்கள். தற்போது சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளையும் போதைக்குப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் மூக்குத் தூளையும் பயன்படுத்துகிறார்கள்.

போதை என்றால் என்ன?
போதை என்றால் என்ன? அதன் விபரீதம் எப்படிப்பட்டது என்பதை அறியாமலே போதை பாவனையில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். போதை என்பது தன்னிலை மறக்கச் செய்தல், உடல்-உள பாதிப்புகளை ஏற்படுத்தல் என்பதாகும்.

போதையை பயன்படுத்தியதும் தனது அறிவை இழக்கிறான். மயங்குகின்றான். உடல் பலவீனமடைகிறது. உளம் கெட்டு விடுகின்றது. தன்னால் உறுதியாக நிற்க முடியாமல் ஆடி அசைந்து விழுகின்றான். அதன் பின் அவனுக்கு ஏற்படும் எந்தவொரு விடயத்தைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றான்.

பாவனைக்கான காரணங்கள்:
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை பாவனைக்கு ஆளாகுவதற்குப் பிரதான காரணம்:

1. வீட்டுச் சூழல்
2. சமூக சூழல்
3. குடும்பப் பிரச்சினை
4. போட்டி சூழலுக்கு முகம்கொடுக்க முடியாமை
5. மீடியா

வீட்டுச் சூழல்

வீட்டுச் சூழலிலிருந்து பல பிள்ளைகள் போதை பாவனைக்கு ஆளாகுகின்றார்கள். தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். அந்தப் பிள்ளை தந்தையுடைய புகைத்தல் “ஸ்டைலை” பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.

வீட்டில் வருந்துபசாரத்தின்போது பியர் மற்றும் மது பாவிக்கப்படும்போது பிள்ளை அவைகளை சக நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்த ஆரம்பிக்கின்றது. இவை நல்லவை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்ற நிலை காணப்படுவதால் பிள்ளைகள் விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். அதுபோல் வீட்டுச் சூழலில் ஆன்மீகம் இல்லையாயின் நிலமை மோசமாகி விடும்.

சமூக சூழல்
வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் பழகிக் கொள்ள முனைகின்றது. சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை விற்பனைக்கு இருக்குமாயின், அவை பயன்படுத்தக் கூடிய பிள்ளைகள் இருப்பார்களாயின் அப்பிள்ளைகளுடன் பழகக் கூடியவர்களும் போதைக்கு ஆளாகிவிடுவார்கள்.

பாடசாலை மாணவர்கள் போதைக்கு ஆளான பல சம்பவங்களில் ஒன்று தான் Big Match (பிக் மெச்) என்ற விளையாட்டுப் போட்டியின்போது நடைபெறுகின்றது. இதன்போது மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டு பொலிஸ் வரை சென்ற சம்பவங்களும் உண்டு.

குடும்பப் பிரச்சினை
குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர் சரி சமமான அன்பு பாசம் காட்டி அரவணைக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை வளர விடாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோரிடம் உரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்பட்ட கவலையை போக்க போதையை பயன்படுத்தி தீர்வு காண முனைகின்றனர்.

அதுபோல் பெற்றோரிடையே (தாய் தந்தையிடையே) பிரச்சினை தகராறு, ஏற்படுமாயின் அல்லது பெற்றோர் பிரிந்து வாழ்வார்களாயின் அதனால் பாதிப்படைபவர்கள் பிள்ளைகள். அப்பிள்ளை விரக்தி காரணமாக போதைக்கு அடிமையாகுவர்.

சில போது தாயுக்கும் தகப்பனுக்கும் பிரச்சனை தோன்றும் போது தந்தை சிகரட் புகைத்தல் மது அருந்துதல் போன்ற காட்சியை பிள்ளை கண்டால் தனக்கு ஏற்படும் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என பிள்ளையும் பாவனைக்கு ஆளாகும்.

போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை
பாடசாலை வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் ஏற்படும் சவால்களுக்கும் போட்டிகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகும்போது போதையை நாடுகின்றனர். பரீட்சையில் தோல்வி, பொதுவான போட்டி நிகழ்ச்சிகளில் தோல்வி, படிக்க முடியா பிரச்சினை எனும்போது போதையினை பயன்படுத்துகின்றனர்.

மீடியாவின் தாக்கம்
மேலே கூறப்பட்ட காரணிகளுக்கு உடந்தையாக இருப்பதே மீடியாவாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் அதற்கு முகம் கொடுக்க முடியாதபோது போதையை பயன்படுத்துவதையே மீடியா முக்கியமான செய்தியாக காட்சிப்படுத்துகின்றது.

காதல் தோல்வி, குடும்பத் தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு சிகரட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது. அது போல் கதாநாயகன் பல்வேறு ஸ்டைல்களில் புகைத்து காட்டுவதும் இதற்கான மற்றொரு காரணமாகும்.

போதையினால் ஏற்படும் விளைவுகள்
பிள்ளைகள் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் போதைக்கு அடிமையாகும்போது குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. குடும்பத்திற்குள் ஒற்றுமை குலைந்து விடுகின்றது. அவநம்பிக்கை ஏற்படுகின்றது. முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றது. (வீணான செலவு களால்) வறுமை ஏற்படுகிறது.

குடும்பத்திற்கென்று இருந்த மானம்-மரியாதை, கௌரவம் இழக்கப்படுகின்றது. இதனால் மனச்சோர்வு (Depression) ஏற்பட்டு விரக்திக்கு செல்கின்றனர்.

பிள்ளைகளுடைய எதிர்கால கனவுகள், இலட்சியங்கள் நாசமாகின்றன. இலக்கில்லாமல் வாழ்வு அழிந்து விடுகின்றது. புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டியவர்கள் பல்வேறுபட்ட நோய்களை சுமந்தவர்களாக நடமாட ஆரம்பிக்கின்றனர். பதினாறு மற்றும் பதினெட்டு வயதை அடையும் போதே வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

போதைக்கு அடிமையானவர்களை அடையாளம் காணும் வழி
பிள்ளைகள் பழகக் கூடிய புதிய, பழைய நண்பர்களை அடையாளம் காண வேண்டும். ஆரம்பத்தில் பிள்ளை பழகிய நண்பர்கள் யார்? புதிதாக பழகிய நண்பர்கள் யார்? அவர்களுடன் மேற்கொள்ளும் நட்பு எத்தகையது? ஏற்பட்டு வரும் மாற்றம் எத்தகையது? என்பதை பெற்றோர் அறிய வேண்டும். அவர்களது செல்போன் பாவனை எத்தகையது? அதிகமாக பேசுபவர்கள் யார்? என்பதையும் அறிய வேண்டும்.

சிலவேளை பிள்ளை அல்லது மாணவன் பழைய நண்பர்களின் நட்பு மோசமானது எனக் கருதி புதிய நண்பர் களை தேடிக் கொள்ளலாம். அல்லது பழைய நண்பர்களின் தொடர்பை விட புதிய நண்பர்களின் தொடர்பால் திசை மாறியும் போகலாம். இதில் பெற்றோர் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

பாடசாலைக்கு போய்விடும் நேரம் மேலதிக வகுப்புக்கு போய் வரும் நேரம், இதில் ஏற்படும் மாற்றங்கள் பொழுது போக்குகளில் ஈடுபட்டவர்கள் ஒதுங்கிக் கொள்வது நல்ல பழக்க வழங்கங்களை குறைத்துக் கொள்வது, விருப்பமான ஆகுமான நல்ல விடயங்களில் ஆர்வம் குறைந்து வருவது, விளையாட்டில் நாட்டமில்லாமல் இருப்பது அணியும் ஆடைகளில் கவனமில்லாமல், சுத்தம் பேணாமல் இருப்பது, வாயில் துர்வாடை வீசுவது போன்ற விடயங்களை காணப்படுமாயின், பெற்றோர் உடனே கவனம் செலுத்த வேண்டும்.

அதுபோல் வீட்டில் சின்னச் சின்ன பொருட்கள் காணாமல் போவது அல்லது பணம் காணாமல் போவது, படிப்பில் ஆர்வம் குறைவது, அடிக்கடி மறதி ஏற்படுவது, பதற்றமாகவும் ஆக்ரோக்ஷமாகவும் நடந்து கொள்வதும் காணப்படுமானால் பெற்றோர் கண்டிப்பாக பிள்ளைகள் விடயத்தில் மிக அவதானம் செலுத்த வேண்டும்.

பிள்ளையின் மீது அதிக அன்பு காட்டி ஏமாந்து போகாமலும் அதிக கோபத்தையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்கி விடாமலும் நடுநிலைமையுடன் நடந்து, பிள்ளையின் வாழ்வை சீர் செய்ய முனைய வேண்டும். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. அதனை சரியாக தேடிக் கொள்ளவே வழிகாண வேண்டும்.

One comment

  1. True lines

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *