Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 2)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 2)

Magic Series – Episode 06 – Part 2:

2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்:

பாகம் 2:
(பாகம் 1 இன் தொடர்ச்சி….)

சூனியம் என்பது ஒரு மூடநம்பிக்கை என்ற தனது பகுத்தறிவு சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக, இந்த ஒரு வசனத்தில் மட்டும் சகோதரர் பீஜே ஏகப்பட்ட பித்தலாட்டங்களை அரங்கேற்றியிருக்கிறார். கருப்பை வெள்ளையாகவும், வெள்ளையைக் கருப்பாகவும் திட்டமிட்டு சித்தரித்திருக்கிறார். இந்த ஒரு வசனத்துக்கு அவர் செய்து வைத்திருக்கும் அநியாயத்தைத் தாங்காமல், அந்த வசனத்துக்கு வாயிருந்தால் “ஏன் என்னை இப்படி வெட்டிக் கொத்தி சித்திரவதை செய்கிறீர்கள்?” என்று அந்த வசனமே அழுது புலம்பியிருக்கும்.

முதலில் அந்த வசனத்தைத் தொகுதி தொகுதியாகப் பிரித்து, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துக் கொள்வோம். அதன் பிறகு பித்தலாட்டத்தைப் பார்ப்போம். சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் இது தான்:

—————-
தொகுதி 1:
وَاتَّبَعوا
மேலும் இவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள்

ما تَتلُو الشَّياطينُ
ஷைத்தான்கள் கூறியதை

عَلىٰ مُلكِ سُلَيمانَ
ஸுலைமானின் ஆட்சியில்

கோர்க்கப்பட்ட முழு வடிவம்:
மேலும், ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள்.

—————-
தொகுதி 2:

وَما كَفَرَ سُلَيمانُ
ஸுலைமான் காஃபிராக இருக்கவில்லை

وَلٰكِنَّ الشَّياطينَ كَفَروا
ஆனால், ஷைத்தான்களே காஃபிர்களானார்கள்

يُعَلِّمونَ النّاسَ السِّحرَ
மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து சூனியத்தையும்,

وَما أُنزِلَ عَلَى المَلَكَينِ
மேலும், அவ்விரு வானவக்கு அருளப்பட்டதையும்

بِبابِلَ هاروتَ وَماروتَ
பாபில் நகரத்தில் ஹாரூத், மற்றும் மாரூத்

கோர்க்கப்பட்ட முழு வடிவம்:
ஸுலைமான் காஃபிராக இருக்கவில்லை; மாறாக, ஷைத்தான்களே காஃபிரானார்கள். அவர்கள் சூனியத்தையும், பாபில் நகரில் ஹாரூத் மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் அருளப்பட்டதையும் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

—————–
தொகுதி 3:

وَما يُعَلِّمانِ مِن أَحَدٍ
மேலும் அவ்விருவரும் எந்த ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை

حَتّىٰ يَقولا
அவர்கள் சொல்லாத வரை

إِنَّما نَحنُ فِتنَةٌ
நாங்கள் சோதனையாக மட்டுமே இருக்கிறோம்

فَلا تَكفُر
எனவே, காஃபிராகி விடாதே

கோர்க்கப்பட்ட முழு வடிவம்:
மேலும், அவ்விருவரும் “நாங்கள் சோதனையாக மட்டுமே இருக்கிறோம். எனவே காஃபிராகி விடாதே” என்று கூறாத வரை எந்த ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.

—————-
தொகுதி 4:

فَيَتَعَلَّمونَ مِنهُما
ஆனாலும் அவ்விருவரிடமும் அவர்கள் கற்றார்கள்

ما يُفَرِّقونَ بِهِ
பிரிவை ஏற்படுத்தக் கூடியதை அதன் மூலம்

ينَ المَرءِ وَزَوجِهِ
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில்

கோர்க்கப்பட்ட முழு வடிவம்:
ஆனாலும், அவர்கள் எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்த முடியுமோ, அதை அவ்விருவரிடமும் கற்றார்கள்.

——————
தொகுதி 5:

وَما هُم بِضارّينَ بِهِ
மேலும் அதன் மூலம் அவர்களால் தீங்கிழைக்க முடியாது

مِن أَحَدٍ إِلّا بِإِذنِ اللَّهِ
எந்த ஒருவருக்கும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல்

கோர்க்கப்பட்ட முழு வடிவம்:
மேலும், அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் அதன் மூலம் எந்த ஒருவருக்கும் அவர்களால் தீங்கிழைக்க முடியாது.

—————–
தொகுதி 6:

وَيَتَعَلَّمونَ ما هُم يَضُرُّ
மேலும் அவர்கள் கற்கிறார்கள் தமக்குத் தீங்கிழைப்பதையும்

وَلا يَنفَعُهُم
மேலும், தமக்குப் பயணளிக்காததையும்

கோர்க்கப்பட்ட முழு வடிவம்:
மேலும் அவர்கள் தமக்குத் தீங்கிழைப்பதையும், தமக்குப் பயணளிக்காததையும் கற்கிறார்கள்.

—————–
தொகுதி 7:

وَلَقَد عَلِموا
மேலும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்

لَمَنِ اشتَراهُ
யார் அதை வாங்குகிறார்களோ,

ما لَهُ فِي لآخِرَةِ مِن خَلاقٍ
அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை

கோர்க்கப்பட்ட முழு வடிவம்:
மேலும் யார் அதை வாங்குகிறார்களோ, அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

—————-
தொகுதி 8:

وَلَبِئسَ ما شَرَوا أَنفُسَهُم بِهِ
மேலும், எதற்காக தம்மை விற்றார்களோ, அது மிகவும் கெட்டது

لَو كانوا يَعلَمونَ
அவர்கள் அறிந்திருக்க வேண்டாமா?

கோர்க்கப்பட்ட முழு வடிவம்:
மேலும், எதற்காகத் தம்மை விற்றார்களோ, அது மிகவும் கெட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டாமா?
———————

இனி எல்லாத் தொகுதிகளையும் அதே ஒழுங்கில் கோர்த்து, இன்னொரு முறை முழுமையாக வாசிக்கலாம்:

மேலும், ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள்.
ஸுலைமான் காஃபிராக இருக்கவில்லை; மாறாக, ஷைத்தான்களே காஃபிரானார்கள். அவர்கள் சூனியத்தையும், பாபில் நகரில் ஹாரூத் மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் அருளப்பட்டதையும் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
மேலும், அவ்விருவரும் “நாங்கள் சோதனையாக மட்டுமே இருக்கிறோம். எனவே காஃபிராகி விடாதே” என்று கூறாத வரை எந்த ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.
ஆனாலும், அவர்கள் எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்த முடியுமோ, அதை அவ்விருவரிடமும் கற்றார்கள்.
மேலும், அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் அதன் மூலம் எந்த ஒருவருக்கும் அவர்களால் தீங்கிழைக்க முடியாது.
மேலும் அவர்கள் தமக்குத் தீங்கிழைப்பதையும், தமக்குப் பயணளிக்காததையும் கற்கிறார்கள்.
மேலும் யார் அதை வாங்குகிறார்களோ, அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
மேலும், எதற்காகத் தம்மை விற்றார்களோ, அது மிகவும் கெட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டாமா?

இந்த வசனத்தின் நேரடி மொழியாக்கம் இது தான். இதை யாருமே மறுக்க மாட்டார்கள்.

குறிப்பு 1:
இதில் நெருடலாக இருக்கக் கூடிய ஒரேயோர் அம்சம், ஹாரூத் மாரூத் என்று சொல்லக் கூடிய இருவரும் வானவர்கள் தானா? என்பது பற்றிய சில கருத்து வேறுபாடுகள் மட்டும் தான். ஆனால், இந்த வசனத்தின் நேரடி மொழியாக்கம் இவ்விருவரையும் வானவர்கள் என்று தான் சொல்கிறது. அது தான் சரியும் கூட. இதை எந்தவிதமான நெருடலும் இல்லாமல் புரிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. அதை இன் ஷா அல்லாஹ் இனி வர இருக்கும் ஒரு தொடரில் விரிவாக நோக்க இருக்கிறோம். இப்போதைக்கு நேரடி மொழியாக்கத்தோடு வாதத்தைத் தொடரலாம்.

குர்ஆனின் 2:102 வசனத்தை யார் பார்த்தாலும், முதல் பார்வையிலேயே ஒன்றைப் புரிந்து கொள்வார்கள். “சூனியம் என்றால் என்ன?” என்பதை சுருக்கமாகக் கூறும் ஒரு வரலாற்றுச் சம்பவம் தான் இந்த வசனத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சிந்திக்கும் ஒவ்வொருவரும் இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

ஒரு பேச்சுக்கு ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதப் படி, குர்ஆனோடு ஹதீஸை ஒப்பிடுவதாக இருந்தால், எந்த விசயம் பற்றி ஹதீஸ் சொல்கிறதோ, அதே விசயம் பற்றி நேரடியாகப் பேசக் கூடிய குர்ஆன் வசனத்தோடு தான் அதை முதலில் ஒப்பிட்டிருக்க வேண்டும். அது தான் முறை. அப்படியெந்த வசனமும் குர்ஆனில் இல்லாதிருக்கும் பட்சத்தில் மட்டுமே, அது சார்ந்த மறைமுகமான கருத்தைத் தரக் கூடிய வேறு வசனங்களோடு ஒப்பிடுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஹதீஸ் மறுப்பாளர்கள் நியாய உணர்வோடு ஆய்வு செய்பவர்களாகக இருந்திருந்தால், இப்படித் தான் ஒப்பிட்டிருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியைச் சொல்லும் ஹதீஸைக் குர்ஆனோடு ஒப்பிடுவதாக இருந்தால், சூனியம் என்றால் என்னவென்பது பற்றி சொல்லக் கூடிய குர்ஆன் வசனங்களோடு தான் இவர்கள் இந்த ஹதீஸை ஒப்பிட்டிருக்க வேண்டும்.

“சூனியம் என்றால் என்ன” என்பது பற்றி குர்ஆன் இரண்டு இடங்களில் கூறுகிறது. ஒன்று, மூஸா (அலை) அவர்களது சம்பவம்; மற்றது இந்த 2:102 வசனம். மூஸா (அலை) அவர்களது சம்பவத்தில் கூட “ஸிஹ்ர்” என்றால் என்னவென்பது ஓரளவு மூடலாகத் தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஒரு வசனத்தில் தான் “ஸிஹ்ர்” பற்றி நேரடியாக சொல்லப் பட்டிருக்கிறது.

வேறு பல வசனங்களிலும் “ஸிஹ்ர்” என்ற சொல் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், அங்கெல்லாம் “ஸிஹ்ர்” என்றால் என்ன? என்ற கருத்தில் அந்த வசனம் உபயோகிக்கப் படவில்லை; மாறாக வேறு விடயங்கள் பற்றிப் பேசும் போது, அவற்றை விளக்குவதற்காக “ஸிஹ்ர்” என்ற வசனம் உபயோகிக்கப் பட்டுள்ளது. அவ்வளவு தான்.

ஆகவே, சூனியம் பற்றிய ஹதீஸை ஒப்பிடுவதாக இருந்தால், இந்த வசனத்தோடு தான் முதலில் ஒப்பிட வேண்டும். இந்த அடிப்படையைக் கருத்திற்கொண்டு, இப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்:

குர்ஆன்: சூனியம் என்ற ஒன்று இருக்கிறது
ஹதீஸ்: சூனியம் என்றால், அது இப்படித் தான் இருக்கும்.

குர்ஆன்: ஸுலைமான் காலத்தில் யூதர்கள் சூனியத்தில் ஈடுபட்டார்கள்.
ஹதீஸ்: நபி (ஸல்) அவர்களுக்கும் ஒரு யூதன் தான் சூனியம் செய்தான்.

குர்ஆன்: சூனியத்தில் ஈடுபடுபவன் காஃபிர்
ஹதீஸ்: லபீத் என்ற யூதன் ஒரு காஃபிர்.

குர்ஆன்: ஸுலைமான் (அலை) அவர்களுக்கு சூனியத்தில் சம்பந்தம் இருக்கவில்லை
ஹதீஸ்: நபி (ஸல்) அவர்களுக்கும் சூனியத்தில் சம்பந்தம் இருக்கவில்லை.

குர்ஆன்: சூனியத்தால், கணவன் மனைவிக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்தலாம்.
ஹதீஸ்: சூனியத்தால், நபி (ஸல்) அவர்களுக்கும் அவரது மனைவிமாருக்கு இடையில் தாம்பத்ய உறவில் தற்காலிக விரிசல் ஏற்பட்டது.

குர்ஆன்: சூனியம் பலிக்க வேண்டுமென்று அல்லாஹ் நாடும் போது, அது பலிக்கும்; பலிக்கக் கூடாதென்று நாடும் போது, அது பலிக்காது.
ஹதீஸ்: நபிக்கு சூனியம் பலிக்க வேண்டுமென்று அல்லாஹ் நாடிய போது அது பலித்தது; பிறகு பலிக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடிய போது அதன் பாதிப்பு நீங்கி விட்டது.

குர்ஆன்: சூனியத்தில் ஈடுபடுபவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள்.
ஹதீஸ்: நபிக்கு சூனியம் செய்ததால், லபீத் தன்னைத் தானே நிரந்தர நரகவாசியாக்கிக் கொண்டான்.

குர்ஆன்: சூனியத்தில் ஈடுபடுபவர்க்கு, அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.
ஹதீஸ்: நபிக்கு சூனியம் செய்ததால் லபீத்துக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை; நரகவாசியானது தான் மிச்சம்.

இப்போது உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்; இந்த இரண்டு ஆதாரங்களுக்கும் இடையில் இருப்பது முரண்பாடா? உடன்பாடா? ஒன்றை இன்னொன்று விளக்கும் விதமாக இந்த இரண்டும் அழகாகப் பொருந்திப் போகிறதா? இல்லையா?

இது முரண்பாடு கிடையாது; ஒன்றை இன்னொன்று அழகாக விளக்கும் அல்லாஹ்வின் ஆதாரங்கள் என்பதை மனசாட்சியுள்ள எவரும் ஒத்துக் கொள்வார்கள்.

ஆனால், இந்த உடன்பாடு சகோதரர் பீஜேக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், இது அவரது நாத்திகக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, உடன்பாட்டை உடைத்து, முரண்பாட்டைக் கற்பிக்கும் விதமாகத் திட்டமிட்டுப் பல தில்லுமுல்லுகளை இந்த 2:102 வசனத்தில் பன்னியிருக்கிறார். அவை என்னவென்பதை அடுத்து பார்க்கலாம்.

இதன் தொடர்ச்சி இன் ஷா அல்லாஹ் பாகம் 3 இல் தொடரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *