Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » ழுஹா தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-17)

ழுஹா தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-17)

பிக்ஹுல் இஸ்லாம்-17 ழுஹா தொழுகை

சுன்னத்தான தொழுகைகளில் ழுஹா தொழுகையும் ஒன்றாகும் ழுஹா என்பது சூரியன் உதித்து உச்சிக்கு வந்து சாயும் நேரத்தைக் குறிக்கும். இந்த நேரத்திற்குள் தொழப்படும் தொழுகை என்பதால் இந்தத் தொழுகை ழுஹாத் தொழுகை என அழைக்கப்படுகின்றது.

சூரியன் உதித்து சுமார் இருபது நிமிடங்கள் வரையுள்ள நேரமும், சூரியன் உச்சிக்கு வரும் நேரமும் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாகும். இந்த இரு நேரங்களுக்கும் மத்தியில் ழுஹா தொழுவது சுன்னாவாகும்.

ழுஹா தொழுகையின் சிறப்பு:

மனித உடலில் உள்ள எல்லா மூட்டுக்களுக்கும் மனிதன் தர்மம் செய்தாக வேண்டும். தான் சந்திப்பவர்களுக்கு ஸலாம் சொல்வதும் தர்மமாகும். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் ஸதகாவாகும். பாதையில் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதும் தர்மமாகும்.

மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதும் தர்மமாகும். ழுஹாவுடைய நேரத்தில் தொழப்படும் இரண்டு ரக்அத்துக்கள் இவை அத்தனையையும் ஈடு செய்யும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: அபூதர் (வ)
நூல்: முஸ்லிம் 720-84, அபூதாவூத்: 1285

முஸ்லிமுடைய அறிவிப்பில், ‘சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் எனக் கூறுவதும் தர்மமாகும்’ என்று இடம்பெற்றுள்ளது. ழுஹா தொழுகை மனித உடம்புக்காகச் செய்யப்பட வேண்டிய ஸதகாவை ஈடு செய்கின்றது என இந்த நபிமொழி கூறுகின்றது.

‘மனிதனின் உடலில் 360 மூட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு மூட்டுக்காவும் அவர் தர்மம் செய்தாக வேண்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யாரால் இதைச் செய்ய முடியும் எனக் கேட்கப்பட்ட போது, ‘பள்ளியில் துப்பப்பட்ட எச்சிலை புதைத்துவிடுவது, பாதையில் தொல்லை தருவதை அகற்றிவிடுவது,.. போன்ற செயல்களால் அந்த தர்மத்தை செய்ய முடியும். அதற்கு சக்தி பெறாவிட்டால் ழுஹாவுடைய இரண்டு ரக்அத்துக்கள் உனக்கு அதை ஈடு செய்யும் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
நூல்: இப்னு குஸைமா 1226, அபூதாவூத் 5242
(இது ஹஸனான அறிவிப்பு என ஷுஐப் அல் அர்னாஊத் கூறுகின்றார்.)

இந்த நபிமொழிகள் மூலம் ஸலாதுல் ழுஹா எனப்படும் ழுஹா தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட ஒன்று என்பதையும் அதன் சிறப்பையும் அறியலாம்.

ழுஹா தொழுகையின் சட்டம்:

ழுஹா தொழுகையின் சட்டம் என்ன என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

01. ழுஹா தொழுகை பொதுவாகவே முஸ்தஹப்பானதாகும். அதைத் தொடராக ஒவ்வொரு நாளும் தொழுவதும் விரும்பத் தக்கதாகும் என்பது அதிகமான அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இதற்குப் பின்வரும் ஆதாரங்களை அவர்கள் முன்வைப்பர்.

  • நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸ்கள். அந்த ஹதீஸ்கள் ஒவ்வொரு நாளும் ழுஹா தொழுவதை ஊக்குவிப்பதைக் காணலாம்.
  • நபி(ச) அவர்கள் ழுஹா தொழுபவர்களாக இருந்தார்களா? என ஆயிஷா(ரலி) அவர்கள் வினவப்பட்ட போது, ‘ஆம் நான்கு தொழுவார்கள். அல்லாஹ் நாடும் அளவு அதிகரித்துக் கொள்வார்கள்’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆததுல் அதலிய்யா(வ)
நூல்: இப்னுமாஜா- 1381, முஸ்லிம்- 79-719, புஹாரி- 1178

இது போன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு தொடராக ழுஹா தொழுவது சுன்னா என்ற கருத்தை அதிகமான அறிஞர்கள் கொண்டுள்ளனர்.

02. சில நேரங்களில் தொழுவதும் சில நேரங்களில் விடுவதும் தொடராக ஒவ்வொரு நாளும் தொழுவதைத் தவிர்த்தல் வேண்டும் என்ற கருத்தில் ஹன்பலி மத்ஹபுடைய அறிஞர்கள் உள்ளனர். அவர்கள் தமது கூற்றுக்குப் பின்வரும் ஆதாரங்களை முன்வைப்பர்.

‘அனஸ் இப்னு மாலிக்(வ) அறிவித்தார். உடல் பருமனாக இருந்த ஓர் அன்ஸாரித் தோழர் நபி(ச) அவர்களிடம் வந்து ‘உங்களுடன் நின்று என்னால் தொழ முடிவதில்லை’ என்று கூறினார். மேலும் அவர்களுக்காக உணவு சமைத்துத் தம் இல்லத்திற்கு அழைத்தார். அவர்கள் தொழுவதற்காக ஓர் ஓரத்தில் தண்ணீர் தெளித்து பதப்படுத்தினார். நபி(ச) அவர்கள் அதன் மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். நபி(ச) அவர்கள் லுஹாத் தொழுவார்களா? என்று அனஸ்(வ) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை’ என விடையளித்தார்கள் என்று இப்னுல் ஜாரூத் குறிப்பிட்டார். ‘ (புஹாரி: 1179)

‘நபி(ச) அவர்கள் ழுஹா தொழுபவராக இருந்தார்களா எனக் கேட்கப்பட்ட போது, ‘இல்லை ஏதேனும் பயணம் சென்று வந்தாலே தவிர, என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் ஷகீக்(வ)
நூல்: முஸ்லிம் 717-75, இப்னு குஸைமா 539

இது போன்ற ஹதீஸ்களை இந்தக் கருத்துள்ள அறிஞர்கள் முன்வைத்து வழமையாகத் தொழுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

03. காரணம் இல்லாமல் ழுஹா தொழுகை விதியாக்கப்பட மாட்டாது!

உதாரணமாக, கியாமுல் லைல் தொழத் தவறிவிட்டால் ழுஹா தொழலாம். அப்படி காரணம் இல்லாமல் ழுஹா தொழ வேண்டியதில்லை என்ற கருத்தில் இமாம் இப்னுல் கையூம்(ரஹ்) அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

இந்த மூன்று கருத்துக்களில் முதல் கருத்தே மிகவும் நெருக்கமானதும், வலுவானது மாகும். ழுஹா தொழுகையை விரும்பினால் தொடராகவும் தொழலாம். விட்டு விட்டும் தொழலாம். இதுவே பலமான கருத்தாகும்.

ழுஹா தொழுகையை சூரியன் உதித்து சுமார் 20 நிமிடங்கள் சென்றதில் இருந்து சூரியன் உச்சிக்கு வரும் நேரம் வரை தொழலாம்.

சிறந்த நேரம்:

ழுஹா தொழுகைக்கு மிகவும் சிறந்த நேரம் சூரியன் சூடாகும் நேரமாகும்.

‘அவ்வாபீன் தொழுகையின் நேரம் என்பது சூரியனின் சூட்டின் காரணமாக குட்டி ஒட்டகம் தத்தித் தத்தி நடக்கும் நேரமாகும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: அர்க்கம்(வ)
நூல்: முஸ்லிம் 748-144, தாரமீ 1601, இப்னு குஸைமா 1227

எனவே, சூரியன் உச்சிக்கு வர நெருங்கும் 11 மணி 11.30 களில் தொழுவது ஏற்றமான தாகும். அவ்வாபீன் என்பது மஃரிப் தொழுகைக்குப் பின்னர் தொழப்படும் இருபது ரக்அத்துக்களைக் குறிக்கும் என்பது தவறான கருத்தாகும்.

ரக்அத்துக்களின் எண்ணிக்கை:

ழுஹா தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

ழுஹா தொழுகையின் ரக்அத்துக்களின் குறைந்த எண்ணிக்கை இரண்டாகும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ழுஹா தொழுகையின் சிறப்பு பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.

அதன் கூடிய அளவு எது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. 8, 12 என்று இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

இப்னு அபீ லைலா கூறினார்: ‘நபி(ச) அவர்கள் லுஹாத் தொழுததாக உம்மு ஹானி(ரலி)யைத் தவிர வேறு எவரும் அறிவித்ததில்லை. ‘நபி(ச) அவர்கள் மக்கா வெற்றியின்போது என்னுடைய இல்லத்தில் குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவை யும் ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார் கள்” என்று உம்மு ஹானி(ரலி) குறிப்பிட்டார்கள்.
(புஹாரி: 1103)

12 ரக்அத்துக்கள் தொழுவது குறித்து சில அறிவிப்புக்கள் வந்துள்ளன. அவை பலவீனமாக உள்ளன. எனவே, 8-12 என்ற கருத்தை விட்டு விட்டு இரண்டுக்கு மேல் இரட்டைப்படையாக எத்தனையும் தொழலாம் என்ற மூன்றாவது நிலைப்பாட்டை சிலர் எடுக்கின்றனர். நபி(ச) அவர்கள் நான்கு ரக்அத்துக்கள் ழுஹா தொழுவார்கள். விரும்பிய அளவு அதிகரித்துக் கொள்வார்கள் என நாம் முன்னே குறிப்பிட்ட ஹதீஸை இத்தரப்பார் ஆதாரமாகக் கொள்கின்றனர். பத்ஹு மக்கா தினத்தில் நபியவர்கள் எட்டு தொழுதார்கள் என்பது எட்டுத்தான் அதன் அதிகபட்ச எண்ணிக்கை என்பதாக அமையாது என்பது இத்தரப்பாரின் வாதமாகும். இதுவே பொருத்தமாகவும் படுகின்றது.

எனவே, இரண்டுக்கு மேல் எத்தனை வேண்டுமானாலும் இரட்டைப்படையாகத் தொழுது கொள்ளலாம் என்பதே பொருத்தமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *