Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » சுன்னா » ளுஹருக்கு முன் சுன்னத் நான்கா? இரண்டா?

ளுஹருக்கு முன் சுன்னத் நான்கா? இரண்டா?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.

ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ளுஹருடைய பர்ளுக்கு முன்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் ளுஹருடைய பர்ளுக்கு முன் சுன்னத் சில சந்தர்ப்பங்களில் நான்கும் தொழுதுள்ளார்கள். சில சந்தர்ப்பங்களில் இரண்டும் தொழுதுள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் காணலாம்.

ளுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகள்
“ ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டதில்லை. (புகாரி 1182)

ளுஹருக்கு முன் இரண்டு ரக்அத்துகள்
.“இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி(ஸல்) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும். (புகாரி 1180)

இந்த இரண்டு ஹதீஸ்கள் மூலம் நபியவர்கள் ளுஹருடைய பர்ளுக்கு முன் சில சந்தர்ப்பங்களில் நான்கும் தொழுதுள்ளார்கள். சில சந்தர்பபங்களில் இரண்டும் தொழுதுள்ளார்கள். எனவே நாமும் நமது வசதிக்கு ஏற்ப மாறி, மாறி தொழுது கொள்ளலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ளுஹருக்கு பாங்கு சொல்லும் போது பள்ளியிலிருந்தால் பர்ளுக்கு முன் நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழுது கொள்ள முடியும். பாங்கு சொன்னதிற்கு பிறகு பள்ளிக்கு போகிறார், இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கு தான் நேரம் இருக்கிறது என்றால் இரண்டு ரக்அத்துகளை தொழுது கொள்ளலாம். மாறி, மாறி இரண்டு சுன்னாக்களையும் சந்தர்பங்களுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த முடியும்.

ஆனால் அதிகமானவர்கள் மத்ஹபை காரணம் காட்டி விரும்பியோ, விரும்பாமலோ குறிப்பிட்ட சில ஹதீஸ்களை மாறி, மாறி மறுத்து வருகிறார்கள்? உதாரணமாக ஷாபி மத்ஹபினர் ளுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழ மாட்டார்கள். ஏன் என்றால் நாங்கள் ஷாபி மத்ஹபினர், எங்கள் மத்ஹபில் ளுஹருக்கு முன் இரண்டு ரக்அத்துகள் தான் தொழ வேண்டும் என்பார்கள். இந்த இடத்தில் நபியவர்கள் நான்கு ரக்அத்துகளும் தொழுதுள்ளார்கள் என்ற ஹதீஸை எடுத்துக் காட்டினாலும் அதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என்று ஹதீஸை புறக்கணிப்பதை காணலாம்?

அதே போல ஹனபி மத்ஹபினர் ளுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழுவார்கள். அவர்களிடம் நீங்கள் இரண்டு ரக்அத்துகளும் தொழலாம் தானே என்று கூறும் போது, நாங்கள் ஹனபி மத்ஹபினர் எங்கள் மத்ஹபில் நான்கு தான் தொழ வேண்டும். என்று இரண்டு ரக்அத் சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுப்பார்கள்?

இங்கு இவர்கள் மத்ஹபை காரணம் காட்டி நபியவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுத ஹதீஸை புறக்கணிப்பதை காணலாம்.

எனவே மத்ஹபை காரணம் காட்டி இப்படி நடைமுறைப்படுத்த வேண்டிய நிறைய ஹதீஸ்களை மறுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்?

அதுமட்டுமல்ல மத்ஹபை காரணம் காட்டி ஷாபி மத்ஹபினர் ஹனபி மத்ஹபை மறுக்குகிறார்கள். ஹனபி மத்ஹபினர் ஷாபி மத்ஹபை மறுக்குகிறார்கள். ஆனால் குர்ஆன் சுன்னாவாதிகளைப் பார்த்து நீங்கள் தான் மத்ஹபை மறுக்குகிறீர்கள் என்று மழுப்புகிறார்கள்? உண்மையில் மத்ஹபை மறுக்க கூடியவர்கள் இவர்கள் தான் என்பதை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.

நாம் மத்ஹபுகளிலுள்ள குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் முரண்பபட்ட சட்டங்களை மாத்திரம் தான் எடுத்துக் காட்டி மறுப்போம். ஆனால் இவர்கள் மாறி, மாறி அனைத்து சட்டங்களையும், மத்ஹபுகளையும், மறுப்பார்கள்?

ஹனபி மத்ஹபினருக்கு வேறு நபி, ஷாபி மத்ஹபினருக்கு வேறு நபி என்பது கிடையாது? இந்த உலகில் நாம் அனைவரும் நபி (ஸல்) அவர்களை தான் ஒரே நபியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அவர் அனைவருக்கம் சொந்தமான நபியாவார். நபியவர்கள் சொன்னதில் உங்களுக்கு பாதி எங்களுக்கு பாதி என்று சட்டங்களை (ஹதீஸ்களை) பிரிப்பதற்கு இந்த உலகில் எவருக்கும் அதிகாரம் கிடையாது.

அதனால் எங்கள் சட்டங்கள், தீர்ப்புகள் ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தால் ஹதீஸ் தான் எங்கள் வழியாகும் என்று அனைத்து கண்ணியத்திற்குறிய இமாம்களும் மிகத் தெளிவாக கூறிவிட்டார்கள். ஆனால் இப்படி இமாம்கள் கூறிய செய்திகள் ஏன் இந்த மௌலவிமார்களுக்கு விளங்கவில்லை? அல்லது விளங்கியும் மக்களிடம் உண்மையை சொன்னால் இது காலவரை சரியான சட்டத்தை சொல்லாமல் மக்களை ஏமாற்றியதற்கு மக்கள் எங்களை மதிக்கமாட்டார்கள் என்ற பயமா?

கண்ணியத்திற்குரிய மௌலவிமார்களே ! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். அல்லாஹ் மறுமையில் என்னை விசாரிக்கும் போது தெரிந்து கொண்டும் நான் உண்மையை மறைத்ததை அவன் மக்களுக்கு மத்தியில் வெளிபடுத்தி என்னை கேவலப்படுத்துவானே என்று சற்று நிதானமாக சிந்தியுங்கள்.

பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று அமைதியாக சிந்தித்து நீங்கள் உங்கள் மறுமை வாழ்வை முடிவு செய்து கொள்ளுங்கள்.

“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (2- 42)

எனவே மௌலவிமார்கள் இதில் கூடுதலான கவனம் செலுத்தி குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்த சட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முன் வர வேண்டும். அதே போல சில மௌலவிமார்கள் உண்மையை எடுத்துச் சொல்ல முன் வராவிட்டாலும் யார் சத்தியத்தை எடுத்துச் சொல்கிறார்களோ அவர்களிடம் பொது மக்கள் மார்க்த்தை தேடி படிக்க கூடிய நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இப்படியான சட்டங்களை உங்கள் சிந்தனைக்கு தொடர்ந்தும் எடுத்துக் காட்டுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *