Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பெருநாள் தொழுகை தொழும் முறை | பெருநாள் தொழுகை – 3 [பிக்ஹுல் இஸ்லாம்-047]

பெருநாள் தொழுகை தொழும் முறை | பெருநாள் தொழுகை – 3 [பிக்ஹுல் இஸ்லாம்-047]

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டதாகும். ஏனைய தொழுகைகளை விட மேலதிகமாக சொல்லப்படும் 12 தக்பீர்களால் அது வேறுபடுகின்றது.

  1. தக்பீரதுல் இஹ்ராமுடன் ஏனைய தொழுகைகள் போன்று தொழுகை ஆரம்பிக்கப்படும்.
  2. பின்னர் கிராஅத் ஓதுவதற்கு முன்னர் ஏழு (7) தக்பீர்கள் கூறப்படும்.
  3. பின்னர் சூரதுல் பாதிஹாவும் பின்னர் மற்றுமொரு சூறாவும் ஓதப்படும்.
  4. அதன் பின்னர் ஏனைய தொழுகைகள் போன்று ருகூஃ, சுஜூதுகள் செய்யப்படும்.
  5. பின் இரண்டாம் ரக்அத்துக்காக எழும்புவதற்கான தக்பீர் கூறப்படும்.
  6. பின்னர் முதல் ரக்அத்தில் கூறியது போல் மேலதிகமாக ஐந்து (5) தக்பீர்கள் கூறப்படும்.
  7. பின்னர் சூரதுல் பாத்திஹாவும் மற்றுமொரு சூறாவும் ஓதப்படும்.
  8. அதன் பின் ஏனைய தொழுகைகள் போன்று தொழப்படும்.

முதல் ரக்அத்தில் மேலதிகமாகக் கூறப்படும் ஏழு தக்பீர் மற்றும் இரண்டாம் ரக்அத்தில் கூறப்படும் ஐந்து தக்பீர் இரண்டுமாக 12 தக்பீர்கள் மேலதிகமாகக் கூறப்படுவதுதான் ஏனைய தொழுகைக்கும் பெருநாள் தொழுகைக்கும் இடையிலான வித்தியாசமாகும்.

இது குறித்த ஆதாரங்களை நோக்கலாம்.

‘ஈதுல் அழ்ஹா தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். ஈதுல் பித்ர் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். பயணியின் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். ஜும்ஆத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும்.’
அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப்(வ) நூல்: நஸாஈ 1566, அஹ்மத் 257)

‘அபூ ஹுரைரா(வ) அவர்களுடன் ஈதுல் அழ்ஹா, பித்ர் தொழுகைகளில் பங்கு கொண்டுள்ளேன். முதல் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னர் 07 தக்பீர்கள் கூறினார். இரண்டாம் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னர் 05 தக்பீர்கள் கூறினார்கள்’ என இப்னு உமர்(வ) அவர்களின் அடிமை நபிஃ(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்: முஅத்தா- 09)

தக்பீர்களும் கையை உயர்த்துதலும்:

முதல் தக்பீருக்கு கை உயர்த்திக் கட்ட வேண்டும் என்பதில் அனைவரும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலதிகமாகக் கூறப்படும் தக்பீர்களுக்கும் கையை உயர்த்திக் கட்ட வேண்டுமா அல்லது வெறுமனே தக்பீர்களை மட்டும் கூறினால் போதுமா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. மேலதிகமாகக் கூறப்படும் தக்பீர்களில் கையை உயர்த்துவது பற்றியோ உயர்த்தாமல் இருப்பது பற்றியோ எந்த ஆதாரபூர்வமான ஹதீஸும் வராமையே இதற்கான காரணமாகும்.

நபி(ச) அவர்கள் தக்பீர்களின் போது கைகளை உயர்த்திக் கட்டியதாக எந்த ஆதாரபூர்வமான செய்திகளும் வரவில்லை என்பதால் உயர்த்திக் கட்டத் தேவையில்லை. இதை கூடாது எனவும் சிலர் கருதுகின்றனர்.

பெருநாள் தொழுகையில் மட்டுமன்றி ஜனாஸா தொழுகையிலும் இதே சர்ச்சை உள்ளது. எனவே. இது குறித்து அறிஞர்களின் கருத்தை நோக்குவது பொருத்தமாக அமையலாம்.

‘நய்லுல் அவ்தார்’இல் ஜனாஸா தொழுகையின் தக்பீர்கள் பற்றி இறுதி முடிவாகப் பின்வருமாறு கூறப்படுகின்றது.

‘ஆரம்ப தக்பீர், தவிர கையை உயர்த்துவதற்கு நபியவர்களைத் தொட்டும் ஆதாரமாகக் கொள்ளக் கூடிய எந்தச் செய்தியும் இல்லை. நபித்தோழர்களின் செயல்கள், கருத்துக்கள் ஆதாரமாகக் கொள்ளத் தக்கவை அல்ல. எனவே, ஆரம்ப தக்பீருக்கு கைகளை உயர்த்துவதுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஏனைய தொழுகைகளில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும் போதுதான் தக்பீர் விதியாக்கப்பட்டுள்ளது. ஜனாஸா தொழுகையில் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறுதல் என்பதே இல்லை’ என்று குறிப்பிடப்படுகின்றது.
(நய்லுல் அவ்தார் 4{77)

‘ஹனபி மற்றும் மாலிகி மத்ஹபினர் ஆரம்பத் தக்பீரைத் தவிர ஏனைய தக்பீர்களுக்கு கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்றும் ஷாபி மற்றும் ஹன்பலி அறிஞர்கள் ஒவ்வொரு தக்பீருக்கும் கைகளை உயர்த்துவது சுன்னா என்றும் கருதுகின்றனர்.’ (அல் மவ்சூஅதுல் பிக்ஹிய்யா:16{29)

இது குறித்து அறிஞர் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறும் போது,

‘இப்னு உமர்(வ), இப்னு அப்பாஸ்(வ) ஆகிய இருவரும் ஜனாஸா தொழுகையின் அனைத்து தக்பீர்களின் போதும் கைகளை உயர்த்தியுள்ளதாக செய்திகள் உள்ளதால் (தாரகுத்னி) ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவது சுன்னாவாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். (மஜ்மஉல் பதாவா 13{148)

இது குறித்து ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) அவர்களின் கேட்கப்பட்ட போது, ‘இப்னு உமர்(வ) அவர்கள் கைகளை உயர்த்தியுள்ளார்கள். இது போன்ற விடயங்கள் சுயமாக அவரால் செய்யப்பட்டிருக்காது. எனவே, இது சுன்னாதான் என்ற கருத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இதிலிருந்து நாம் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ளலாம்.

முதல் தக்பீரில் கையை உயர்த்துவதில் ஏகோபித்த முடிவு உள்ளது. ஏனைய தக்பீர்களில் கையை உயர்த்துவதில்தான் சர்ச்சை உள்ளது. நபி(ச) அவர்கள் உயர்த்தியதாக உறுதியான செய்திகள் வரவில்லை. எனவே, உயர்த்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களும் சுன்னாவைத்தான் கடைப்பிடிக்கின்றனர்.

இப்னு உமர்(வ), இப்னு அப்பாஸ்(வ), அனஸ்(வ) போன்றவர்கள் கையை உயர்த்தியதாக செய்திகள் வந்துள்ளன. இபாதத் என்பதால் இவர்கள் சுயமாக செய்திருக்க மாட்டார்கள். நபியவர்கள் உயர்த்துவதைப் பார்த்து அல்லது அதற்கான அனுமதி இருப்பதை அறிந்தே இப்படிச் செய்திருப்பார்கள் என்ற அடிப்படையில் உயர்த்துபவர்கள் சுன்னாவில் இடம் இருக்கும் என்கின்ற அடிப்படையிலேயே செய்கின்றனர். இதில் யாரும் யாரையும் குறை காண முடியாது.

குறிப்பாக பெருநாள் தொழுகையைப் பொருத்த வரையில் உயர்த்துவதே சிறந்ததாகும். ஏனெனில், பொதுவான அறிவிப்புக்களில் ருகூஃவுக்கு முன்னர் கூறப்படும் அனைத்துத் தக்பீர்களின் போதும் கைகளை உயர்த்துவார்கள். (இப்னு உமர், நூல்: அபூதாவூத் 722) என்று உள்ளதால் பெருநாள் தக்பீர்களும் ருகூஃவுக்கு முன்னர் கூறப்படுவதால் உயர்த்துவதே சிறந்ததாகும். (வல்லாஹு அஃலம்)

பெருநாள் குத்பா:

பெருநாள் தொழுகையின் குத்பாவுக்கும் வெள்ளிக்கிழமை குத்பாவுக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன.

  1. பெருநாள் தினத்தில் தொழுகையின் பின் குத்பா நடைபெறும். வெள்ளிக்கிழமை குத்பாவின் பின்னர் தொழுகை இடம்பெறும்.
  2. பெருநாள் தொழுகைக்கு ஒரு குத்பாதான் உண்டு. ஜும்ஆ தினத்தில் இரண்டு குத்பாக்கள் உண்டு.
  3. பெருநாள் குத்பாவுக்கு மிம்பர் கிடையாது.

இந்த அடிப்படையில் பெருநாள் குத்பாக்கள் இடம் பெற வேண்டும்.

இப்னு அப்பாஸ்(வ) அறிவித்தார். ‘நான், நபி(ச) அவர்கள், அபூ பக்ர்(வ), உமர்(வ), உஸ்மான் (வ) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.’
(புகாரி: 962)

தற்போது இந்த நடைமுறையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. கலீபா மர்வானின் காலத்தில் அவர்கள் குத்பாவின் பின் தொழுவிக்கும் பழக்கத்தை உருவாக்கினார். பெருநாள் குத்பாவுக்கு மிம்பரும் இவர் காலத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது.

எனவே, மிம்பர் இல்லாமல் குத்பா செய்வதே சுன்னாவாகும். அடுத்து பெருநாள் குத்பாவை தக்பீரைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும் என்பதும் ஆதாரமற்றதாகும். ஏனைய குத்பாக்கள் போன்று அதுவும் ஹம்து ஸலவாத்துடனேயே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

பெருநாள் வாழ்த்துக் கூறுதல்:

பெருநாள் தினத்தில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகின்றது. ‘தகப்பலல்லாஹு மின்னா வமின்கும், ஈத் முபாரக்’ போன்ற வார்த்தைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான விளக்கத்தையும் நாம் பெற்றுக் கொள்ளல் அவசியமாகும்.

முதலில் சந்தோசமான நேரத்தில் வாழ்த்துக் கூறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிய மூன்று நபித்தோழர்களும் மன்னிக்கப்பட்டதாக குர்ஆன் வசனம் இறங்கிய போது நபித்தோழர்கள் அவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். நபி(ச) அவர்கள் அதை அங்கீகரித்துள்ளார்கள். எனவே, வாழ்த்துக் கூறுவது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட விடயமாகும்.

பெருநாள் தினத்தில் வாழ்த்துக் கூறுவது நபித்தோழர்களிடம் நடைமுறையில் இருந்துள்ளது.

‘நபித்தோழர்கள் பெருநாள் தினத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்தால் ‘தகப்பலல்லாஹு மின்னா வமிக்கும்’ என்று கூறிக் கொள்பவர்களாக இருந்தார்கள்.’
அறிவிப்பவர்: ஜுபைர் பின் நுபைல் (ரஹ்)
நூல்: அல் ஜாமிஉஸ் ஸஹீஹ் 3{30-321

இந்த ஹதீஸ் ஸஹீஹானது என இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குறித்த சில நபித்தோழர்களுக்கு இவ்வாறு வாழ்த்துக் கூறப்பட்டதாகவும் அவர்களும் மற்றவர்களுக்கு இதைக் கூறியதாகவும் அல் அஸ்பஹானியின் அத்தர்கீப் வத் தர்ஹீபில் (1{251) குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதிலளிக்கின்றார்.
‘பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின்னர் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது, ‘தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்’ மற்றும் ‘அஹாலஹு அலைக்க’ என்பன போன்ற வார்த்தைகள் மூலம் வாழ்த்துக் தெரிவிப்பதை ஸஹாபாக்களில் சிலர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இமாம் அஹ்மத் மற்றும் பல அறிஞர்களும் இதை அனுமதித்துள்ளார்கள். எனினும் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பெருநாள் வாழ்த்தை நான் யாருக்கும் ஆரம்பிக்க மாட்டேன். எனக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார்கள். ஏனெனில், வாழ்த்துக்குப் பதிலளிப்பது கடமையாகும். வாழ்த்துச் சொல்ல ஆரம்பிப்பதைப் பொறுத்த வரையில் அது ஏவப்பட்ட சுன்னாவும் அல்ல, அது தடுக்கப்பட்ட விடயமும் அன்று. யார் இதைச் செய்கின்றாரோ அவருக்கும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. யார் இதை விடுகின்றாரோ அவருக்கும் முன்னுதாரணம் உள்ளன’ என்று கூறியுள்ளார்கள். (மஜ்மூஉல் பதாவா: 24{253)

இந்த அடிப்படையில் பெருநாள் வாழ்த்துக் கூறுதல் ஆகுமானதாகும். குறிப்பாக இது ‘ஆதத்தான’ عادة பழக்க வழக்கத்துடன் சம்பந்தப்பட்ட அம்சம் என்பதால் தடை இல்லாதபட்சத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதே அடிப்படை விதியாகும். எனினும், குறித்த இந்த வாசகங்களை மட்டும் கூறித்தான் வாழ்த்த வேண்டும் என்பதற்கில்லை. எந்த நல்ல வார்த்தைகளையும் கூறி வாழ்த்தலாம். இந்த வார்த்தைகளைக் கூறி வாழ்த்துவோர் அது சுன்னா என்ற அடிப்படையில் பயன்படுத்தக் கூடாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

தொடரும்… இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *