Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பகிடிவதையின் (ராக்கிங்) மறுபக்கம்

பகிடிவதையின் (ராக்கிங்) மறுபக்கம்

படாத பாடுபட்டு படித்து முடித்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு முன்னால் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் அடுத்த பிரச்சினைதான் பகிடிவதை. இந்தப் பகிடி வதையினால் படிப்பை விட்டவர்கள் உண்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. ஏன், உயிரைக் கூட விட்டவர்கள் உண்டு! கடும் தியாகத்துடன் படித்து, குடும்பத்துக்கும் நாட்டிற்கும் நல்லது செய்ய நினைத்த ஒரு உயிர் நமது நடத்தையால் பறிபோய்விட்டதே, என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இந்தப் பகிடிவதை அரக்கர்களுக்கு மருந்துக்கும் இல்லாமல் போய்விட்டது.

பொதுவாக பகிடிவதை பல்கலைக்கழகங்களில் மட்டும் அல்லாது சாதாரண பாடசாலைகளிலும் இடம்பெறுவதுண்டு. இது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டது. என்றாலும், பெரும்பாலும் நிர்வாகங்கள் இதில் கூடிய கரிசனை காட்டுவதில்லை. கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னர் முதலாம் ஆண்டு மாணவியர்களை ஓடவிட்டு மாணவர்கள் கழிவு நீரை அவர்கள் மீது அடிக்கும் காணொலி பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்தக் காணொலி மூலம் குற்றவாளிகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சட்டங்கள் கடுமையாக்கப்படாவிட்டால் குற்றங்கள் குறையாது. சட்டங்கள் இருந்தாலும் அவை நடைமுறைப் படுத்தப்படாவிட்டால் அந்த சட்டத்தினால் எந்தப் பயனையும் அடைய முடியாது. எனவே, சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும்.

பொதுவாக பகிடிவதைக்குள்ளாக்கப்பட்ட மாணவர்கள் தம்மைப் பகிடிவதை செய்த சீனியர்களைக் காட்டிக் கொடுக்க முன்வர மாட்டார்கள். அப்படிக் காட்டிக் கொடுத்தால் தாம் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும். ஆனால், பகிரங்கமாக வெளிவந்த காணொளிகளை வைத்தாவது சட்டம் தன் கடமையைச் செய்யாதது நிர்வாகத் துறையின் அசமந்தப் போக்கையே எடுத்துக் காட்டுகின்றது.

பகிடிவதை ஒழிய வேண்டும் என்றால் சட்டங்களை விட மனமாற்றமே முக்கியமானதாகும். பகிடி வதையை எதிர்க்கும் இந்த வருட மாணவர்கள் தாம் மனம் வைத்தால் அடுத்த வருடம் அவர்கள் பகிடிவதையை நிறுத்தி விடலாம். முதலாம் வருடத்தில் பகிடிவதையை எதிர்ப்பவர்கள் இரண்டாம் வருடத்தில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களாக மாறி விடுகின்றனர்.

அதிகமான மாணவர்கள் அடுத்த வருடம் தாம் பகிடிவதையில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியெடுத்தால் அடுத்தடுத்த வருடங்களில் அது ஒழிந்துவிடும். ஆனால், இந்த மனமாற்றம் யாருக்கும் வருவதில்லை. மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் வருவதில்லை.

முதலாம் வருட மாணவர்களின் பெற்றோர் பகிடிவதையை எதிர்க்கின்றனர். தனது மகனோ, மகளோ இரண்டாம் வருடத்தில் இருக்கும் போது அவன் முதலாம் வருட மாணவ மாணவியருக்கு பகிடிவதை செய்யக் கூடாது என எத்தனை பெற்றோர்கள் போதிக்கின்றனர்?எனவே, இந்தத் தீமையை ஒழிப்பதற்குத் தேவை மன மாற்றமே! தனக்கு வந்தால் இரத்தம்’ அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி! என்ற மன நிலை மாற வேண்டும்.

பகிடிவதையில் பகிடி மட்டும் இருப்பதில்லை. மாறாக, பழிவாங்கல்கள், பாலியல் வக்கிரம் போன்ற பல கொடிய அம்சங்களும் அதற்குள் மறைந்துள்ளன. இந்த வருடம் அதிகமாக பகிடிவதைக்கு உள்ளானவன் புதிய மாணவர்களை அதிகம் பகிடிவதைக்குட்படுத்துகின்றான். சில போது இதில் ஊர் பகைமை பார்க்கப்படுவதுண்டு. உதாரணமாக, மட்டக்களப்பு மாணவனால் பகிடிவதைக்குள்ளாக்கப்பட்ட மாணவன் அடுத்த வருடம் வரும் மட்டக்களப்பு மாணவர்களை அதிகமதிகம் பகிடிவதைக்கு உள்ளாக்குவான். அப்படி உள்ளாக்குபவர் மாவனல்லையைச் சேர்ந்தவராக இருந்தால் அந்த மட்டக்களப்பு மாணவர் அடுத்த வருடம் வரும் மாவனல்லை மாணவ மாணவியரை அதிகம் ரெகிங் பண்ணுவார். இது வாழையடி வாழையாகத் தொடரும். இது அறிவுக்குப் பொருந்தாத அர்த்தமற்ற பழிவாங்கல் என்பது இந்தப் படித்த முட்டாள்களுக்குப் புரிவதே இல்லை!

அடுத்து, இதில் பாலியல் சுரண்டலும் உள்ளது. ரெகிங் மூலம் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் நல்ல உறவு ஏற்படுகின்றது என்ற ஒரு நியாயம் கற்பிக்கப்படுவதுண்டு! அப்படியிருந்தால் மாணவியர்களை மாணவியர்களே அதிகம் ரெகின் பண்ண வேண்டும். ஆனால், நாம் ஏற்கனவே கூறிய காணொலியில் மாணவியர்களுக்கு மாணவர்கள் கழிவு நீரை ஊற்றுகின்றனர். இவ்வாறே ரெகினை சாட்டாக வைத்து மாணவியரிடம் மோசமாகப் பேசும் காடையர்களும் உள்ளனர். எனவே, பகிடிவதையில் பகிடி மட்டும் பங்கு வகிப்பதில்லை.

பகிடிவதையில் பல விதம் உண்டு! கஷ்டத்தை ஏற்படுத்தும் (பிசிகல் ரெகிங்) உடலியல் வதையும்’ அதே வேளை, மனதை காயப்படுத்தும், அவமானப்படுத்தும் உளவியல் வதையும் உண்டு. இது மாணவியரை அதிகம் பாதிக்கச் செய்யும். அடுத்து, சில நகைச்சுவை அமைப்புக்களும் உண்டு. பாடச் சொல்வது, செருப்பை மாற்றி அணிந்து நடக்கச் சொல்வது, எரிகின்ற மின்குமிழை வாயால் ஊதி அணைக்கச் சொல்வது, டீயடட இல்லாமல் டீயடட விளையாடச் சொல்வது,… போன்ற சில வேலைகளைச் சொல்வர். இது சொல்பவருக்கும் செய்பவருக்கும் வெறும் நகைச்சுவையாகவே இருக்கும். இவற்றை புதிய மாணவர்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும் கேவலப்படுத்தும் செயற்பாடுகளை பகிடியாக ஏற்க மாட்டார்கள். புதிய மாணவர்களைத் தாக்குவது என்பது பல்கலைக்கழக பகிடிவதையின் மரபுக்கே எதிரானது. யாரும் யார் மீதும் டச் பண்ணாமல் வாயால் சொல்லி செய்விக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது. காடையர்களாக வளர்ந்தவர்கள்தான் புதிய மாணவர்களைத் தாக்குகின்றனர்.

சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவரைத் தாக்கியதும் அல்லாமல் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வந்த அம்புலன்ஸையும் வர விடாமல் தடுத்துள்ளனர். மனிதாபிமானமும், மனித நேயமும் இல்லாத இத்தகைய படித்த காடையர்கள் கட்டாயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

இதே வேளை, முஸ்லிம் மாணவிகள் தொடர்பில் ஒரு பகிடிவதைச் செய்தி சமூக வலைத்தளங்களில் அண்மையில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. புதிய மாணவியர்கள் கருப்பு அபாயா அணிந்து வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் இச்செயற்பாடு ஸஹ்ரானிய தீவிரவாதமாகவும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

பொதுவாக பல்கலைக்கழகத்திற்கு வரும் புதிய மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு ஒன்றை பழைய மாணவர்கள் விதிப்பார்கள். இதை நியாயப்படுத்துவதற்காக இங்கு நான் இது பற்றிக் குறிப்பிடவில்லை. சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே குறிப்பிடுகின்றேன்.

பொதுவாக தமிழ் மாணவியர்களுக்கு ஒயில் சாரி அணிந்து வருமாறும், சிங்களப் பெண்களுக்கு விலை குறைந்த துணியால் தைக்கப்பட்ட கட்டை கவுன் அணிந்து வருமாறும் முஸ்லிம் மாணவியர்களுக்கு அலங்காரமற்ற அபாயா அணிந்து வருமாறும் கூறுவர். எல்லோரும் உயர் ரக பாதணி இல்லாமல் பாட்டா சிலிப்பர் அணியுமாறும் ஆண்கள்’ கட்டைக் கை சேட், செருப்பு அணிவதுடன் கட்டையாக தலை முடி வெட்டி வருமாறும் பணிக்கப்படுவர்.

முதலாம் ஆண்டு மாணவர்களை அடையாளம் காணவும், பணக்காரப் பிள்ளைகள் மற்றும் ஏழை மாணவர்கள் அனைவரும் ஒன்று போல் ஆடையணிந்து ஏற்றத் தாழ்வு இல்லாமல் இருக்கவும் இப்படிச் செய்வர். ஓரிரு மாதங்களின் பின்னர் சோஷியல் என்ற பெயரில் ஒரு நிகழ்வு இரண்டாம் வருட மாணவர்களால் நடத்தப்படும். அதன் பின்னர் எல்லாம் முடிந்துவிடும். இந்த அடிப்படையில்தான் முதலாம் ஆண்டு மாணவியருக்கு கருப்பு அபாயா அணியுமாறு அவர்கள் கூறியுள்ளர். இதை நான் நியாயப் படுத்தவில்லை. உண்மையைப் புரிந்து கொள்வதற்காகக் கூறுகின்றேன்.

புதிய மாணவியரிடம் கருப்பு அபாயா இல்லையென்றதும் இதை அப்படியே விட்டிருக்க வேண்டும். அல்லது, பெற்றோர் பேசும் போதாவது மூத்த மாணவியர் விட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தப் பிரச்சினையை அடிப்படை வாதமாகவும் ஸஹ்ரானின் சிந்தனையாகவும் சித்தரிப்பது தவறானதாகும். இது பல்கலைக்கழகத்தில் கருப்பு அபாயா அணிபவர்கள் எல்லோரும் அடிப்படைவாதிகள் என்ற ஆபத்தான கருத்தை உருவாக்கும்.

அத்துடன் ஸஹ்ரான் சிந்தனையுடைய அடிப்படைவாதப் போக்குடையவர்கள் கருப்பு அபாயா அணியச் சொன்னார்கள் என்று கூறுபவரே, அப்படி ஏவியவர்கள் கலர் கலராக அபாயா அணிந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து கருப்புதான் அணிய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இதை அவர்கள் கூறவில்லை என்பது புரிகின்றது. எனவே, பிரச்சினையைப் பூதாகரமாக்குவதற்காக பயங்கரவாதத்துடனும் தீவிரவாதத்துடனும் இதை முடிச்சுப் போட முனைவது முட்டாள் தனமானதும், தவிர்க்கப்பட வேண்டியதுமாகும்.

அடுத்து, கருப்பு என்பது கட்டாயமானதும் அன்று, தீவிரவாதத்தின் அல்லது ஸஹ்ரானின் கலரும் அன்று என்பதை முதலில் நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். பகிடிவதை என்பது பல உயிரிழப்புக்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி வருவதால் சட்ட ரீதியாக கடினமான சட்டங்கள் மூலமும் முறையான மனமாற்றங்கள் மூலமும் அதனை முழுமையாக ஒழிக்க முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இது எமது எதிர்கால மாணவச் செல்வங்களின் தடையில்லா உயர் கல்விக்கு உந்து சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நிர்வாகங்களும் நீதித் துறையும் பல்கலைக்கழக பழைய மாணவர்களும் இது குறித்து நியாய உணர்வுடன் சிந்தித்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *