Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – சூறா அந்நிஸா(4) தொடர்- 30

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – சூறா அந்நிஸா(4) தொடர்- 30

– S.H.M. Ismail Salafi

ஈமானின் அடிப்படைகள்

‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை யும் அவனது தூதரையும், அவன் தனது தூதருக்கு இறக்கிவைத்த இவ்வேதத்தையும், இதற்கு முன் அவன் இறக்கிவைத்த வேதத்தையும், நம்பிக்கை கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வை யும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவன் வெகு தூரமான வழி கேட்டில் சென்று விட்டான்.’ (4:136)

இந்த வசனத்தில் ஈமானின் ஆறு அடிப்படைகளில் ஐந்து குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் ஆறு அடிப்படைகளை அவசியம் ஈமான் கொண்டிருக்க வேண்டும்.

1. அல்லாஹ்வை நம்புதல்.
2. அவனது மலக்குகளை நம்புதல்.
3. அவனது தூதர்களை நம்புதல்.
4. அவனது வேதங்களை நம்புதல்.
5. மறுமை நாளை நம்புதல்.
6. நன்மை, தீமை யாவும் அல்லாஹ்வின் கத்ரின் அடிப்படையில்தான் நடக்கின்றது என நம்புதல்.

இந்த ஆறு அம்சங்களில் ஆறாவது அம்சம் தவிர்ந்த ஏனைய ஐந்தும் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கழாகத்ர் குறித்து இந்த இடத்தில் பேசப்படாவிட்டாலும் தனியாகப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ‘ஹதீது ஜிப்ரீல்’ என்ற நீண்ட ஹதீஸில் ஜிப்ரீல் (ர) அவர்கள் மனித ரூபத்தில் வந்து நபி(ச) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன என்று கேட்ட போது மேலே குறிப்பிட்ட ஆறு அம்சங்களையும் நம்புவதுதான் ஈமான் என்று குறிப்பிட்டார்கள். இந்த ஆறில் ஒன்றை மறுத்தாலும் அவர் முஃமினாக முடியாது. அவர் மிகத் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார் என்பதைத்தான் இந்த வசனம் கூறுகின்றது.

1. அல்லாஹ்வையும் ரஸூலையும் பிரிப்பது:
‘நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கு மிடையில் பாரபட்சம் காட்ட விரும்பி, ‘(தூதர்களில்) சிலரை நாம் நம்பிக்கை கொள்வோம். மற்றும் சிலரை நிராகரிப்போம்’ என்று கூறி (நிராகரிப்பு, நம்பிக்கை ஆகிய) இவற்றுக்கு மத்தியில் ஒரு பாதையை எடுத்துக்கொள்ள நாடுகின்றார்களோ அவர்கள்தாம் உண்மையான நிராகரிப் பாளர்களாவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையையே நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.

எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களில் எவருக்கும் இடையில் பாரபட்சமும் காட்ட வில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலிகளை அவன் வழங்குவான். அல்லாஹ் மிக்க மன்னிப்ப வனாகவும் நிகரற்ற அன்புடைய வனாகவும் இருக்கின்றான்.’ (4:151-152)

அல்லாஹ்வையும் அவனது தூதர்களை யும் நம்ப வேண்டும். அவர்களை நிராகரிப்பது குப்ராகும். இந்த வசனம் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் பிரிக்கக் கூடாது என்கின் றது. அல்லாஹ் ரப்பு, அவனது தூதர்கள் அடிமை கள். பிரிக்கக் கூடாது என்றால் என்ன என்பதை அடுத்து அல்லாஹ் கூறுகின்றான். சிலதை ஏற்போம், சிலதை மறுப்போம் என்று கூறுவதுதான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையில் பிரித்துப் பார்ப்பதாகும். அல்லாஹ்வும் அவனது தூதர்களும் வேறு வேறானவர்கள்தான். ஆனால், அல்லாஹ் சொன்னதையும் நம்ப வேண்டும்| அவனது தூதர்கள் சொன்னதையும் நம்ப வேண்டும். அல்லாஹ் சொன்னால் நம்புவோம், அவனது தூதர்கள் சொன்னால் நம்பமாட்டோம் என்று கூறுவது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துவ தாகும். அல்லாஹ்வும் அவனது தூதர்களும் சொல்வதைக் கேட்டு செயற்படுவது தான் உண்மை யான மார்க்கம். நான் அல்லாஹ் சொன்னதை ஏற்று நடப்பேன், அவனது தூதர்கள் சொன்னதை ஏற்று நடக்கமாட்டேன் என புது வழியில் பயணிப்பது குப்ராகும் என்கின்றது இந்த வசனம்.

இந்த வகையில் குர்ஆனை ஏற்போம், சுன்னாவை ஏற்க மாட்டோம் என சுன்னாவை மறுப்பது குப்ராகும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ‘யார் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பி அவர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தாது வாழ்ந்தார்களோ அவர்களே மறுமை யின் வெற்றிக்குச் சொந்தக்காரர்களாவார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.

மர்யம்(ர) அவர்களின் கற்பில் களங்கம்:
‘மேலும் அவர்கள் நிராகரித்ததினாலும் மர்யமின் மீது மாபெரும் அவதூற்றை அவர்கள் கூறியதினாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்.)’ (4:156)

மர்யம் (ர) அவர்கள் ஆண் தொடர்பு இன்றியே ஈஸா(ர) அவர்களைப் பெற்றெடுத்தார் கள். திருமணம் முடிக்காத, கன்னிப் பெண்ணான மர்யம் (ர) அவர்கள் குழந்தை பெற்றதால் அவர் விபச்சாரம் செய்ததாக யூதர்கள் கூறினர். அல்குர்ஆன் மர்யம்(ர) அவர்களைக் ‘கற்பைப் பேணிய பெண்’ எனக் குறிப்பிடுகின்றது. யூதர்களின் இந்த அவதூற்றினால் அவர்கள் சபிக்கப்பட்டதாக இந்த வசனம் கூறுகின்றது.

சிலுவையில் அறையப்படவுமில்லை| கொல்லப் படவுமில்லை:
‘மேலும் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹை நாமே கொலை செய்தோம் என்று அவர்கள் கூறிய தினாலும் (சபிக்கப்பட்டனர்.) அவர்கள் அவரைக் கொலை செய்யவும் இல்லை| அவரைச் சிலுவையில் அறையவும் இல்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டோர் அவர் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை.’ (4:157)

ஈஸா(ர) அவர்கள் தந்தை இல்லாமல் பிறந்தவர்கள். அவர் இன்னும் மரணிக்கவில்லை. அவர் வானத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார். மறுமை நாள் நெருங்கும் போது மீண்டும் பூமிக்கு இறங்கிதனது சத்திய வழியில் மக்களை வழி நடத்துவார். அவரை யூதர்கள் சிலுவையில் அறையவோ, கொல்லவோ இல்லை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.

இந்த வசனத்தில் இயேசுவைக் கொன்று விட்டோம் என்று யூதர்கள் கூறுவதால் அவர்கள் சபிக்கப் பட்டனர் என்று கூறுவதுடன் அவரைச் சிலுவையில் அறையவும் இல்லை, அவரைக் கொல்லவும் இல்லை, ‘இயேசுவின் மரண விடயத்தில் கருத்து வேறுபாடு கொள்வோர் குழப்பத்தில் உள்ளனர், வெறும் யூகத்தில்தான் உள்ளனர். ஈஸா நபி போல் வேறொருவர் உரு மாற்றப்பட்டார். நிச்சயமாக அவர்கள் இயேசுவைக் கொல்லவே இல்லை’ என உறுதியாக இந்த வசனம் கூறுகின்றது.

ஈஸா உயர்த்தப்பட்டார்:
‘மாறாக அவரை அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான். ‘ (4:158)

இந்த வசனம் ஈஸா நபியை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகக் கூறுகின்றது. ஈஸா நபி இறந்ததற்குப் பின்னர் அவரது உயிர் உயர்த்தப்பட்டதை இந்த வசனம் கூறவில்லை. ‘அல்லாஹ் அவரை உயர்த்தினான்’ என்று மட்டும் கூறியிருந்தால் அவர்கள் அவரது கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்தியதை இது குறிக்கும் என்று கருத முடிந்திருக்கும். ஆனால், இங்கு தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று கூறப்படுகின்றது. ஈஸா நபியின் கண்ணியம் அல்லாஹ் அளவுக்கு உயர்த்தப்பட்டது என்றால் கிறிஸ்தவர்கள் அவரை வணங்குவது சரி என்றாகிவிடும். ஏனெனில், இயேசுவின் கண்ணியம் அல்லாஹ்வின் கண்ணியத்தின் அளவுக்கு உயர்த்தப்பட்டு விட்டதல்லவா! எனவே, இயேசுவின் கண்ணியம் உயர்த்தப்பட்டது குறித்து இந்த வசனம் பேசவில்லை. இயேசுவோ உயிருடன் உயர்த்தப்பட்டார் என்பதையே இந்த வசனம் கூறுகின்றது.

மரணத்திற்கு முன்:
‘வேதத்தையுடையோரில் எவரும் (அவர் மீண்டும் பூமிக்கு வந்து) அவர் மரணிப்பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய) அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.’ (4:159)

இந்த வசனத்திற்கு அரபு இலக்கண அடிப்படையில் இரண்டு விதமாக அர்த்தம் செய்யலாம்.

1. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் மரணத்திற்கு முன்னரே ஈஸா(ர) அவர்களை விசுவாசம் கொள்வார்கள்.

2. ஈஸா நபியின் மரணத்திற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அவரை உரிய முறையில் விசுவாசிப்பார்கள்.

இந்த இரு அர்த்தங்களில் இரண்டாவது அர்த்தமே சரியானதாகும். வேதம் கொடுக்கப்பட்ட வர்கள் அவரவர் மரணத்திற்கு முன்னர் ஈஸா நபியை உரிய முறையில் விசுவாசிப்பார்கள் என்றால் யூத-கிறிஸ்தவர்கள் அனைவரும் ஈற்றில் சரியான ஈமானுடன் மரணிப்பார்கள் என்றாகி விடும். அப்படியென்றால் முஸ்லிமாக இருப்பதை விட யூத-கிறிஸ்தவர்களாக இருப்பது பாதுகாப்பானது என்றாகிவிடும்.
அடுத்து, ஈமான் பயனளிக்காத நேரம் தவ்பாவின் வாசல் மூடப்படும் நேரம் தொண்டைக் குழியில் ரூஹ் ஊசலாடும் நேரமாகும். அந்த நேரத்தில் என்று இந்த வசனம் கூறவில்லை. ‘கபல மவ்திஹி’ மரணத்திற்கு முன்னர் என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, முதல் அர்த்தம் செய்ய முடியாது.

இரண்டாவது அர்த்தப்படி, ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை. அவர் மரணிப்பதற்கு முன்னர் யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவரை விசுவாசிப்பார்கள். மறுமை நெருங்கும் போது அவர் வானிலிருந்து பூமிக்கு இறங்குவார்| நீதியான ஒரு ஆட்சியை நடாத்துவர்| அவரே வந்து அவர் பற்றிச் சொல்லும் போது அப்போது இருக்கும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவரை நம்புவார்கள். இதையே இந்த வசனம் கூறுகின்றது.

இதன் அடிப்படையில் அவரது மரணத்திற்கு முன்னர் நம்புவார்கள் என்ற வார்த்தையின் அடிப்படையில் ஈஸா நபி இன்னும் மரணிக்க வில்லை என்பது உறுதியாகின்றது.

தொடரும்…
இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *