Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » வளம் கொழித்தபோதும் பலம் இழந்தவர்கள் – தொடர் 1

வளம் கொழித்தபோதும் பலம் இழந்தவர்கள் – தொடர் 1

அல்லாஹ் என்பவன் யார்? அவனை ஏன் வணங்கவேண்டும்? அவனது தூதரை ஏன் பின்பற்றவேண்டும்? சுவர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? சுவர்க்க வாதிகள் யார்? நரகவாதிகள் யார்? என்பனவற்றைத் திருமறை குர்ஆன் கூறுவதோடு இந்த சமுதாயம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக முன் சென்ற சமுதாயத்தவரின் வரலாறுகளையும் அல்குர்ஆன் விவரிக்கின்றது.

அறிவுரைகளும் போதனைகளும் புறக்கணிக்கப்பட்டு, தீமைகளும் பாவங்களும் தலைவிரித்தாடும்போது அல்லாஹுவின் தண்டனையும், சோதனையும் அந்த சமூகத்தை வந்து சூழ்ந்துகொள்கின்றது.

وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ‏

(நபியே!) உமக்கு முன்னர் வாழ்ந்த சமூகத்தாருக்கும் நாம் தூதர்களை அனுப்பினோம். அந்த மக்கள் பணிவதற்காக அவர்களை நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் தண்டித்தோம்.

فَلَوْلَاۤ اِذْ جَآءَهُمْ بَاْسُنَا تَضَرَّعُوْا وَلٰـكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

நமது தண்டனை அவர்களிடம் வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? ஆனால் அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டினான்.

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ ؕ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ

அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட போதனைகளை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – இறுதியில், அவர்களுக்கு வழங்கப்பட்டதை கொண்டு அவர்கள் பூரிப்படைந்தபோது, அவர்களை திடீரென நாம் பிடித்துக்கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகிவிட்டனர்.

فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْا‌ ؕ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ

எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரோடு சாய்க்கப்பட்டனர். “எல்லாப் புகழும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே ஆகும். (அல்குர்ஆன்: 06: 42,43,44,45).

அல்லாஹுவின் கட்டளைகளும் அவனது தூதர்களின் போதனைகளும் புறக்கணிக்கப்பட்டு செல்வச்செழிப்போடும், நிம்மதியோடும் வாழ்ந்த சமுதாயத்தினருக்கு ஏற்பட்ட இழி நிலையை இந்த நான்கு வசனங்களும் விவரிக்கின்றது.

உணவுக்கோ உடுத்துவதற்கோ அவர்களுக்குப் பஞ்சமில்லை, அவர்கள் விரும்பிய எல்லாவகையான வாழ்வாதாரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நோய் நொடிகள் ஏற்படவில்லை, அவர்களுக்குக் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது (فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ) இவ்வாறாக அல்லாஹுவின் புறத்திலிருந்து எல்லாவகையான அருள் வளங்களும் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டிருந்தது.

ஆனாலும் அல்லாஹுவின் போதனைகளுக்கு அவர்கள் பணியவில்லை. இதனால் அவர்களுக்கு வறுமையையும் (بِالْبَاْسَآءِ) அதாவது வாழ்க்கையில் நெருக்கடியையும், (الضَّرَّآءِ) பலவிதமான நோய்களையும், பலவிதமான வலிகளையும் அல்லாஹ் அவர்களுக்கு இறக்கிவிட்டான்.

நமது தண்டனை அவர்களிடம் வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? என்றால் அவர்கள் பாவங்களையும் தீமைகளையும் விட்டுவிட்டு முற்றிலும் அல்லாஹுவுக்கு வழிபட்டிருக்கவேண்டும் என்பது பொருளாகும். மாறாக அவர்களது உள்ளங்கள் இளகவுமில்லை, அவர்கள் பணியவுமில்லை. அவர்கள் வரம்பு மீறி எந்தக் காரியங்களை செய்துகொண்டிருந்தார்களோ அதையே அவர்களுக்கு ஷைய்த்தான் (வழிகெடுப்பவன்) அழகிய செயலாகக் காட்டினான்.

செல்வங்கள், பொருட்கள் குழந்தைகள் இன்னும் பிற வாழ்க்கை வளங்களால் அவர்கள் பூரிப்படைந்து அல்லாஹுவின் எச்சரிக்கைகளை புறந்தள்ளியபோது அவர்களை அல்லாஹ் ஒரே பிடியாகப்பிடித்தான்! ஆனால் அப்போது அவர்கள் நிராசையாகி நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன.

அதாவது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதைக் குறிப்பதற்கு (مبلسون) முப்லிசூன் என்ற வார்த்தையை அல்லாஹ் இங்குப் பயன்படுத்துகின்றான். இதற்கு நிராசை அடைந்துவிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள். (இப்னு கதீர்)

ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த சமூகத்திற்கு நல்ல வசதி வாய்ப்பை வழங்கினானோ அவர்கள் அதன்மூலம் தாங்கள் சோதிக்கப்படலாம் என்பதை உணராவிட்டால் அவர்கள் அறிவில்லாத சமூகமாவார்கள். அல்லாஹ் யாருக்குக் குறைவான செல்வத்தை வழங்கியுள்ளானோ அவர்கள் தமக்குப் பின்னால் வாய்ப்பு வழங்கப்படலாம் (அல்லாஹ் தருவான்) என்பதை உணராவிட்டால் அவர்களும் அறிவில்லாதவர்களாவார்கள் என்று பொருள். பின்னர் இந்த வசனத்தை (06:44) ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். மேலும் “கஃபாவின் அதிபதியின் மீது ஆணையாக! அந்த மக்கள் சோதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வாழ்வாதாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. பின்னர் அவர்கள் தண்டிக்கப்பட்டனர் என்றார்கள். (தஃப்ஸீர் இப்னு அபீ ஹாதிம், இப்னு கதீர்)

கதாதா (ரஹ்) அவர்கள் கூறியது: அந்த மக்கள் அல்லாஹுவின் கட்டளைக்கு மாறு செய்தனர், (எனவேதான் தண்டிக்கப்பட்டனர்) அல்லாஹுவின் கட்டளையை மறந்து உலக இன்பங்களில் மூழ்கி மயங்கிக் கிடக்கும் சமூகத்தையே அல்லாஹ் (நோய் மற்றும் வறுமையால்) தண்டிப்பான். எனவே அல்லாஹுவை மறக்கும் வகையில் உலக இன்பங்களில் சிக்கி ஏமாந்துவிடாதீர்கள். பாவிகள்தான் அல்லாஹுவை மறந்து ஏமாந்துபோவார்கள்.

இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (فتحنا عليهم ابواب كل شئ) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் அவர்களுக்கு நாம் திறந்துவிட்டோம் என்ற வசனத்திற்கு இம்மையின் வசதிகளையும், செழிப்பான அவர்களின் வாழ்க்கையையுமே இது குறிக்கின்றது என்று விளக்கமளித்தார்கள்.

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் ஒரு சமுதாயத்தினருக்கு நிலையான, வளமான நன்மையை நாடினால் அவர்களுக்கு நடுநிலையான தன்னிறைவு அளிக்கின்ற செல்வத்தை வழங்குகின்றான். ஒரு சமுதாயத்தாருக்கு நன்மையையும், அருள் வளத்தையும் துண்டிக்க விரும்பினால் மோசடியின் வாயிலை அவர்ளுக்குத் திறந்துவிடுகின்றான். என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு பிறகு இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு அபீஹாதிம், இப்னு கதீர்)

நல்லுபதேசங்களை செவியேற்காமலும், வரம்பு மீறி பாவங்கள் செய்துகொண்டு, தீமைகளில் மூழ்கிக்கிடக்கும் சமூகத்தினர் எவ்வளவு வளம் கொழித்திருந்தாலும் அவர்கள் எதற்குமே உதவாத பலம் குன்றியவர்களாக ஆக்கப்பட்டார். அல்லாஹ் அவர்களை நோய்களை கொண்டும், அவர்களின் பொருளாதாரத்தை அழித்தும் சோதித்தான். சில சமூகத்தினர் அவர்கள் செய்த தீய செயல்களின் காரணமாக வேரோடும், இரவோடு இரவாகவும் அல்லாஹ் அவர்களை அழித்தான். இந்த ஊரிலும் மனித சமூகம் வாழ்ந்ததா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு எவ்வித அடையாளங்களும் இல்லாமல் அவர்கள் அழிக்கப்பட்டனர்.

தீமைகளிலும் பாவங்களிலும் மிகக் கொடுமையானது படைத்த இறைவனுக்கு இணைகற்பிப்பதாகும். சிலை வணக்கத்திலும், இணைவைப்பிலும் மூழ்கிக்கிடக்கும் சமூகம் படைத்த இறைவனை நோக்கித் திரும்பி வரவேண்டும்.

____________
S.A.Sulthan
#Jeddah
14/07/1441

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *