Featured Posts
Home » நூல்கள் » இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (4)

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (4)

முதல் இஸ்லாமிய அரசு.

முதலாவது இஸ்லாமிய அரசு மிகச் சிறிய நகர அரசாக உருவாகியது. சில சதுர மைல் பரப்புடையதாகவும், சில ஆயிரம் மக்களைக் கொண்டதாகவும் அது அமைந்தது. எனினும் இச்சிறு அரசு சில ஆண்டுகளிலேயே முழு அரேபியாவையும் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்து விட்டது.

இவ்வெற்றிக்குக் காரணம், இஸ்லாமிய சன்மார்க்கக் கொள்கையின் ஒவ்வொரு முக்கிய அம்சத்தையும் அது தன்னகத்தே கொண்டிருந்ததாகும். அதில் இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அதன் உண்மைத் தோற்றத்தில் செயல் படுவதைத் தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது. குறுகிய காலமான எட்டாண்டுகளில், காலமெல்லாம் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருந்த, அடி பணியாத முரட்டுக் குணம் படைத்த அராபியர்கள் சாந்தப் படுத்தப் பட்டு ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரப் பட்டனர்.

அது வெறுமனே ஓர் அரசியல் வெற்றியல்ல. ஒரு பெரும் சிந்தனை, ஒழுக்க, சமய, சமூகப் புரட்சியாகும் அராபியரின் சிந்தனைப் போக்கு முற்றாக மாற்றமடைந்தது. அதன் பின்னர் அவர்களின் பார்வையானது, பழைய தீய எண்ணங்களும், மிருகத்தனமான மூடநம்பிக்கைகளும் நீங்கித் தெளிவு பெற்றது. சமூக ஒழுக்கப் பண்புகளைப் போற்றிப் பாதுகாக்க அவர்களுக்கு கற்றுத் தரப்பட்டது. இஸ்லாம் அரேபியாவில் மட்டுமன்றி முழு உலகிலும் மனித வரலாற்றினை ஒரு புதியத் திசையில் இட்டுச் சென்றது. எனினும் அதன் முதல் தாக்கம் அரேபிய மக்களிடையே ஏற்பட்டது என்பது உண்மை.

அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள் தூயதாக்கப்பட்டு பண்படுத்தப்பட்டன. நிறைவானதும், வளமிக்கதுமான வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்துக்கு புத்தூக்கம் அளிக்கப்பட்டது.

தொட்டுப் பார்க்க முடியாத, ஆனால் அளப்பரிய அருட்கொடைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறும் ஆர்வத்தினாலேயே மக்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். அன்றி பொதுவாகக் கருதப்படுவது போல பாரசீக, சிரிய நகரங்களை கொள்ளையிடுவதற்கான வாய்ப்புகளினாலல்ல. பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த அரசியல் சமூக சீர்கேட்டை ஒழித்து ஒரே ஆட்சியின் கீழ் மக்களை ஒன்றுபடுத்தியமையே ஒரு பெரும் சாதனையாகும்.

ஆனால் ஒரு சமூக, அரசியல், ஒழுக்க, கலாச்சாரப் புரட்சியையே தோற்றுவித்தமை ஓர் அற்புதமாகும் என்பதில் ஐயமில்லை. இஸ்லாம் பல நாடுகளைக் கைப்பற்றியமைக்கு தேவையில்லாத முக்கியம் கொடுத்து, வரலாற்றாசிரியர்கள் இப்புரட்சியின் முக்கியதுவத்தையே குறைத்து விட்டனர். சரியான பின்னணியில் வைத்து இஸ்லாத்தின் இராணுவ சாதனைகளை, அது மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆன்மாவின் மீதும் கொண்ட வெற்றியோடு ஒப்பு நோக்கும் பொழுது இராணுவ சாதனைகள் அத்தனை முக்கியமானவை அல்ல என்பது புலனாகிறது.

இஸ்லாத்தின் வெற்றிக்கு வாள் மிக முக்கியமான பங்கினை அளித்ததாக இஸ்லாத்தின் விரோதிகள் பறைசாற்றுகின்றனர். ஆனால் இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த யுத்தங்களில் இரு பக்கத்திலும் ஏறக்குறைய ஆயிரத்து நானூறு பேர் தான் உயிரிழந்தனர் என்ற உண்மையை அவர்கள் மறந்தோ அல்லது மறைத்தோ விடுகின்றனர்.

படைபலம் பிரயோகிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது மிகச் சிறிய அளவிலேயே பயன்படுத்தப்பட்டது. உண்மையில் இஸ்லாத்தின் ஒழுக்க வலிமை தான் முஸ்லிம்களை விட அதிக இராணுவ பலம் படைத்த மக்கள் மீது முஸ்லிம்களின் உயர்வினை நிலை நாட்டியது.

வளரும் – இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *