Featured Posts
Home » சட்டங்கள் » ரஜப் » ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும்

ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும்

ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும்
(شهر رجب وما قيل فيه)

அரபியில் : அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் காதிர் அஸ்-ஸக்காப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அத்துரர் அஸ்ஸனிய்யாவின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டது.
(من إعداد القسم العلمي بمؤسسة الدرر السنية وتحت إشراف الشيخ علوي بن عبدالقادر السقاف)

தமிழில் : ரஸீன் அக்பர் மதனீ (அழைப்பாளர், தபூக் அழைப்பு நிலையம் – சவூதி அரபியா)
ترجمة: محمد رَزِين محمد أكْبر (خريج كلية الحديث الشريف والدراسات الإسلامية والدبلوم العالي في التوجيه والإرشاد بالمدينة المنورة)

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும்அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அன்னாரின் குடும்பத்தினர்அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.

“ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும்” என்ற இந்த கையேட்டுப்பிறதியின் அரபியின் மூலவடிவம் அஷ்ஷெய்க் அலவி பின் அப்துல் காதிர் அஸ்-ஸக்காப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அத்துரர் அஸ்ஸனிய்யாவின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டு அவர்களின் உத்தியோகபூர்வமான இணையதளமான “அத்துரர் அஸ்ஸனிய்யா” என்ற வலைதளத்தில் காணக்கிடைத்தது.

இது 05 பக்கங்களை கொண்ட சிறிய நூலாக இருந்தாலும் அதில் பலவிடயங்கள் காலத்திற்கு தேவையான அமைப்பில் தொகுக்கப்பட்டிருந்தன. எனவே இவைகளை தமிழ் பேசும் சசோதரர்களும் இதன் பயனை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் 18-03-2018 (ஹிஜ்ரி 1439 ரஜப் 01) ஆம் திகதி தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இதில் உள்ள விடயங்கள் எனது சக்திக்குற்பட்ட விதத்தில் அல்லாஹ்வின் உதவியால் “மொழிபெயர்ப்பு” என்பதை விட “மொழியாக்கம்” செய்துள்ளேன். ஏனெனில் இரண்டுக்கும் மத்தியில் வேறுபாடுகள் இருக்கின்றன. “மொழிபெயர்ப்பு” என்றால் ஒன்றில் கூறப்பட்ட விடயத்தை ஒவ்வொரு சொல்லாக (Word to Word) மொழிபெயர்ப்பு செய்யவேண்டும். இப்படி சொல்லுக்கு சொல் (Word To Word) மொழிபெயர்க்கின்றபோது சிலபோது அதன் ஆசிரியர் கூறவந்த விடயங்களை பெரும்பாலும் தெளிவாக எடுத்துக்காட்ட முடியாமல், “தொக்கிநிற்கும் வசனங்களாக” பெரும்பாலும் நின்றுவிடும். எனவேமொழியாக்கம் செய்கின்ற போது அதாவது நூலாசிரியர் அல்லது அதன் தொகுப்பாளர் கூறக்கூடிய விடயங்களை அப்படியாக எங்களின் தாய் மொழியில் வெளிக்கொணர்கின்றபோது வாசிப்பவர்களுக்கு இலகுவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. -இன்ஷா அல்லாஹ்-

எனவேஇந்த சிறிய கையேட்டுப்பிரதியின் மூலம் “ரஜப் மாதம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாடு எப்படிப்பட்டது?” மற்றும் அதிலே “இஸ்லாத்தின் பெயரால் நிகழக்கூடிய பித்அத் (நூதண) செயற்பாடுகள் எவைகள்?” என்பதை விளங்கி நபியவர்களின் வழிகாட்டுதலில் அடிப்படையில் எம் வாழ்வை அமைத்துக்கொள்ள வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!

முன்னுரை:
அல்லாஹுத்தஆலா சில நாட்களையும் இரவுகளையும் மாதங்களையும் சிலதை விட இன்னும் சிலதை சிறப்பித்து வைத்துள்ளான். இவைகள் அவனின் பாரிய ஞானத்தின் அடிப்படையிலாகும். அந்த அடிப்படையில் மாதங்களுக்கு மத்தியில் சிறப்பு மிக்க மாதங்களாக 04 மாதங்களை அல்லாஹுத்தஆலா தெரிவு செய்துள்ளான். இதனை அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான் :

“வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்கு) 12 மாதங்களாகும். அவற்றில் 04 மாதங்கள் புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுதவற்குரிய) அதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவேஅவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.” (அத்தவ்பா : 36)

எனவே துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய 04 மாதங்களும் புனிதமிக்க மாதங்களாகும். அவைகளில் நான்காவது புனிதமிக்க மாதமாக ரஜப் மாதம் இருக்கின்றது. அந்த மாதம் இஸ்லாமிய வருட அடிப்படையில் 07 ஆவது மாதமாக கருதப்படுகிறது.

அபீ பக்ரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின்போது பிரசங்கம் நிகழ்த்தினார்கள்அவர்களின் பிரசங்கத்தில் கூறினார்கள், அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை துல்கஃதா,துல்ஹஜ்,முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள முழர் குலத்து “ரஜப்” மாதமாகும். (புஹாரி : 4662)

இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
“புனிதமிக்க மாதங்களாக 04 மாதங்கள் உள்ளன. அவைகளில் 03 மாதங்கள் தொடர்ந்து வரக்கூடிய அடுத்த அடுத்த மாதங்களாகும். அவைகளில் ஒன்று மாத்திரம் தனித்துவரக்கூடிய மாதமாக உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை நிறைவேற்றுவதற்காக ஹஜ்ஜுடைய மாதத்திற்கு முன்னரான துல்கஃதா மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் துல்கஃதா மாதத்தில் போராடுவதை விட்டும் தவிர்ந்துகொள்வார்கள். இன்னும் துல்ஹஜ் மாதத்தில் ஹஜ்ஜுடைய கிரியைகளில் ஈடுபடுவார்கள். மேலும்அதன்பிறகு வரக்கூடிய மாதமான முஹர்ரம் மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில்அந்த மாதத்தில் ஹஜ்ஜிற்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்த மனிதர்கள் தங்களுடைய நாடுகளுக்கு பாதுகாப்பாக திரும்பவேண்டும் என்ற அடிப்படையிலாகும். இன்னும் வருடத்தின் நடுப்பகுதியல் வரக்கூடிய ரஜப் மாதத்தில் கஃபாவை தரிசிப்பதற்கும் அங்கே உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும் அரபியதீப கற்பத்தின் தூரபகுதியிலிருந்து வரக்கூடியவர்கள் வந்து தரிசித்துவிட்டுபாதுகாப்பாக தங்களுடைய நாடுகளுக்கு திரும்பவேண்டும் என்ற அடிப்படையிலும் ரஜப் மாதம் புனிதமாக்கப்பட்டுள்ளது. (தப்ஸீர் இப்னு கஸீர் 4-148)

இன்னும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள், ரஜப் மாதத்தில் நிகழக்கூடிய பாவங்கள் பாரிய விடயமாக கருதப்படும். ஏனெனில்அது புனிதமிக்க மாதங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோன்று இந்த மாதத்தில் மனிதனால் நிகழக்கூடிய அநியாயங்கழும் பாரிய விடயமாகவே கருதப்படும். அதனை மனிதன் தனக்குத்தானே செய்துகொண்ட அநியாயமாகவும் இருக்கலாம் அல்லது பிறருக்கு செய்த அநியாயமாகவும் இருக்கலாம். இதனை அல்லாஹுத்தஆலா இப்படியாக குறிப்பிடுகின்றான்:

“வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்கு) 12 மாதங்களாகும். அவற்றில் 04 மாதங்கள் புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுதவற்குரிய) அதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவேஅவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.” (அத்தவ்பா : 36)

இதில் நாடவருவது புனிதமிக்க 04 மாதங்களில்ல மாறாக 12 மாதங்களாவும் இருக்கலாம்.

அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மானம் அஸ்ஸஃதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது தப்ஸீரிலே “அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.” என்ற வசனத்தை குறிப்பிடுகின்றபோது : இதில் வரக்கூடிய கூட்டுப்பெயர் 12 மாதங்களை சுட்டிக்காட்டக்கூடியதாக இருக்க வாய்ப்பு உள்ளது ஏனெனில்அவனை கட்டுப்படுவதின் மூலம் வாழ்க்கையை கொண்டு செல்லவும் அவைகளை (12 மாதங்களை)க் கொண்டு அவனுக்கு வழங்கிய அருளுக்கு நன்றிசெலுத்தும் பொருட்டும் இன்னும் அதிலே அடியார்களின் நலன்களுக்கு தீர்வுகொடுப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட காலமாக அந்த 12 மாதங்களையும் தனது அடியார்களுக்கு ஆக்கியதாக அல்லாஹுத்தஆலா தெளிவுபடுத்துகின்றான். எனவே அதிலே நீங்கள் உங்களுக்கு அநீதமிழைத்துக் கொள்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

இன்னும் இதில் வரக்கூடிய சுட்டுப்பெயர் புனிதமிக்க 04 மாதங்களையும் சுட்டிக்காட்டக்கூடியதாகவும் இருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஏனெனில் பொதுவாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் அநீதி இழைப்பது என்பது தடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கின்றது. அதிலும் இந்த 04 மாதங்களில் அநீதி இழைப்பது என்பது குறிப்பாக தடுக்கப்பட்டதாக உள்ளதுடன் அனுமதிக்கப்படாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. எனவேஇந்த 04 மாதங்களில் அநீதி இழைப்பது என்பது மற்ற மாதங்களில் அநீதி இழைப்பதை விட மிகவும் பாரதூரமான விடயமாகும்.

“ரஜப்” என்று பெயர் சூட்டப்படுவதற்கான காரணம்:
ரஜப் என்றால் “கண்ணியப்படுத்தப்பட்டது” என்ற கருத்தைத்தரும். ஏனெனில் ஜாஹிலிய்யா காலத்தில கூட இந்த மாதத்தை கண்ணியப்படுத்தினார்கள். இதிலே போரிடுவதை ஆகுமாக்கிக்கொள்ளவில்லை.

ரஜப் மாதத்தை “முழர் கோத்திரத்து” ரஜப் என்றும் “காதுகேலாத ரஜப்” என்றும் கூறக் காரணம்:
முழர் கோத்திரத்துடன் இணைக்கப்பட்டதற்கான காரணம்: ஏனெனில் அந்த கோத்திரம் இந்த மாதத்ததை அதிகமாக கண்ணியப்படுத்துவதுடன் புனிதப்படுத்தியது. ஆதலால்தான் இந்த ரஜப் மாதம் அந்த முழர் கோத்திரத்துடன் ஒன்றினைத்து கூறப்பட்டது.

இப்னு கஸீர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: ஜுமாதஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள முழர் குலத்து “ரஜப் மாதம்” என்ற வார்த்தையை விளக்குகின்றபோது, “அது முழர் கோத்திரத்துடன் இணைக்கப்பட்டது ஏனென்றால் அது தான் ஜுமாதுஸ்ஸானிக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் உள்ள மாதம் என்பதை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும். மாறாக ரபீஆ கோத்திரம் நினைப்பதைப்போன்று புனிதமிக்க ரஜப் என்பது ஷஃபானுக்கும் ஷவ்வாலுக்கும் மத்தியில் வரக்கூடியதல்ல. அவைகளுக்கு மத்தியில் வரக்கூடியது இன்றைய ரமழான் மாதமாகும். எனவே அதனை தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே “அது ரபீஆ கோத்திரத்து ரஜபில்லை மாறாக அது முழர் கோத்திரத்து ரஜபாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர் 03-148)

காதுகேலாத ரஜப் என்று கூறப்பட்டதற்கான காரணம் : ஏனெனில்இந்த மாதத்தில் ஆயுதங்களின் சப்தங்கள் கேட்கப்படாது என்ற காரணத்தினாலாகும்.

ரஜப் மாதத்தில் ஏதேனும் சிறப்பான வணக்கவழிபாடுகள் உள்ளனவா?
ரஜப் மாதத்தில் மாத்திரம் குறிப்பான பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் என்ற ஒன்று குறிப்பிடப்பட்டதாக வரவில்லை. அதிலே சில ஸலவாத்துக்கள் என்றும் பிரார்த்தனைகள் என்றும் வரக்கூடிய அறிவிப்புக்கள் அனைத்துமே ஆதாரபூர்வமற்றது. அவைகளைப் பற்றி கீழே விளக்கமாகப் பார்ப்போம்.

அல்ஹாபில் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மாதத்தின் சிறப்பு சம்பந்தமாகவோ அல்லது அதிலே நோன்பு நோற்பது சம்பந்தமாகவோ அல்லது அவைகளில் குறிப்பிட்ட சில நோன்புகள் நோற்பது பற்றியோ அல்லது அதிலே குறிப்பிட்ட இரவில் நின்று வணங்குவது சம்பந்தமாகவோ எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களோ வரவில்லை. மேலும் “அல்ஹாபில் அபூ இஸ்மாஈல் அல்ஹரவி” அவர்களும் எனக்கு முன்னர் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.” (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)

இன்னும் கூறினார்கள்: ரஜப் மாத சிறப்பைப் பற்றியோ அல்லது அதில் நோன்பு நோற்பது பற்றியோ அல்லது அதில் சில நாட்கள் தெளிவாக நோன்பு நோற்பது பற்றி வரக்கூடிய ஹதீஸ்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று பலவீனமானது மற்றையது இட்டுக்கட்டப்பட்டது. (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)

ரஜப் மாதத்தில் செய்யக்கூடிய பித்அத்தான செயற்பாடுகள் :
மக்கள் மத்தியிலும்அதிகமான இஸ்லாமிய நாடுகளிலும் இந்த மாதத்துடன் தொடர்பான சில பித்அத்கள் மக்கள் மத்தியில் பரவியுள்ளன. அவைகளில் சில பித்அத்கள்

முதலாவது : அர்-ரஆஇப் தொழுகை (صلاة الرَّغائب)

இது வெறுக்கத்தக்க ஒரு பித்அத்தான தொழுகையாகும். இமாம் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “வெறுக்கத்தக்க விடயங்கள் நிரம்பிய அருவருப்பான மிகவும் வெறுக்கத்தக்க பித்அத்தான தொழுகையாகும். எனவேஅதனை விடுவதும் அதனை புறக்கணிப்பதும் அவசியமாவதுபோல் அதனை செய்பவர்களையும் வெறுக்கவேண்டும்.” (பதாவா அல்இமாம் அந்நவவி – பக்கம் 63)

இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : (அர்-ரஆஇப் தொழுகையைப் பொருத்தவதை அது எந்தவித அடிப்படையும் கிடையாது. அதுமாத்திரமின்றி அது ஒரு பித்அத் ஆகும். அத்தொழுகையை தனியாகவோகூட்டாகவோ தொழுவதற்கு விரும்பத்தக்கதல்ல) (மஜ்மூஉல் பதாவா 23-132)

இரண்டாவது : ரஜப் மாதத்தை நோன்பைக்கொண்டோ அல்லது இஃதிகாப் இருப்பதைக் கொண்டோ சிறப்பிப்பது.

சில மனிதர்கள் ரஜப் மாதத்தை நோன்பைக் கொண்டும் அல்லது இஃதிகாபைக் கொண்டும் சிறப்பிப்பது சில பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையிலேயாகும்.

இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் நோன்பைப் பொருத்தவரை நபியவர்கள் மூலமகவோ அல்லது ஸஹாபாக்கள் மூலமாகவோ ரஜப் நோன்பின் சிறப்பு என்று குறிப்பிட்டு வரக்கூடிய எவைகளும் ஆதாரபூர்வமற்றதாகும்.” ( லதாஇபுல் மஆரிப் – பக்கம்118)

இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களைநோன்பைக் கொண்டோ அல்லது இஃதிகாபைக்கொண்டோ சிறப்பிப்பது சம்பந்தமாக நபியவர்களைத்தொட்டோ அல்லது ஸஹாபாக்களைத்தொட்டோ அல்லது இமாம்களைத் தொட்டோ ஒருவிடயமும் வரவில்லை.” (மஜ்மூஉல் பதாவா : 25-290)

எச்சரிக்கை: குறிப்பாக ரஜப் நோன்பு சிறப்பு பற்றி வரவில்லை என்பதின் கருத்து என்னவென்றால் அம்மாதத்தில் மேலதிக சுன்னத்தான நோன்புகள் கிடையாது என்பதல்ல மாறாக ஆதாரங்களின் அடிப்படையில் வேறு மாதங்களில் நோற்கக்கூடிய சுன்னத்தான உபரியான நோன்புகள் இம்மாதத்திலும் நோற்கப்படும். அந்த உபரியான நோன்புகள் ரஜப் மாதம் மற்றும் ஏனைய மாதங்களில் நோற்கப்படக்கூடிய பொதுவான நோன்புகளாகும்.

மேலும் இம்மாதத்தில் நோன்பு நோற்பது தடுக்கப்படுவதை 03 அடிப்படைகளில் பார்க்கலாம் :

1- முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் இம்மாதத்தில் நோன்பு நோற்பதை பிரத்தியேகமானதாக ஆக்கியிருந்தால்.

2- உபரியான சுன்னத்தான நோன்புகளைப்போன்று இம்மாதத்திலும் பிரத்தியேகமான சுன்னத்தான நோன்புகள் நபியவர்களின் ஆதாரபூர்வமான வழிகாட்டலின் அடிப்படையில் வந்துள்ளன என்று உள்ளத்தால் ஏற்றுக்கொண்டு செயற்படுதல்.

3- இம்மாதத்தில் நோற்கப்படக்கூடிய நோன்புகளுக்கு மற்ற மாதங்களைவிட பிரத்தியேகமான சிறப்பான கூலிகள் உள்ளன என்று உறுதிகொள்ளல்.

மூன்றாவது : அல்-இஸ்ராஃ வல்-மிஃராஜ் தினத்தை அடிப்படையாகக்கொண்டு விழா கொண்டாடுதல்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவிலிருந்து அக்ஸா பள்ளிவாயல் வரை இரவோடிரவாக இஸ்ராஃ பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து ஏழு வானங்களுக்கு மேல் உயர்த்தப்பட்டது அவர்களுக்கு அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட பாரிய அற்புதங்களில் ஒன்றாகும். இத்தினத்தை (இஸ்ராஃ – மிஃராஜ்) ஞாபகப்படுத்தும் நோக்கில் சில நாடுகளில் ரஜப் மாதம் 27 ஆம் இரவன்று விழாகொண்டாடுவது பரவிக்காணப்படுகின்றது.

இப்னு தஹிய்யாவைத் தொட்டும் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “இஸ்ராஃ பயணம் ரஜப் மாதத்தில் நடைபெற்றது என்று சில கதை கூறுபவர்கள் கூறுகின்றார்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள் : அது பொய்யாகும் என்றார்கள்.” (தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் – இப்னு ஹஜ்ர் – பக்கம் 23)

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “(இஸ்ராஃ – மிஃராஜ் நிகழ்வு) ரஜப் மாதத்திலோ அல்லது அதன் பத்திலோ அல்லது அதிலே குறிப்பிட்ட ஒரு தினத்திலோ நடைபெற்றது என்பதற்கான எந்தவித அறியப்பட்ட ஆதாரங்களும் இல்லை. மாறாக அது சம்பந்தமாக வரக்கூடியவைகள் வித்தியாசமாக அறிவிப்பாளர்கள் துண்டிக்கப்பட்டதாக இருக்கின்றது. இவைகளைக்கொண்டு தீர்க்கமான முடிவை எடுக்கமுடியாது. இன்னும் இஸ்ராஃ இரவு என்று எண்ணிக்கொண்டிருக்கும் இரவில் நின்று வணங்குவதைக்கொண்டோ அல்லது வேறு விடயங்களைக்கொண்டோ அவ்விரவை பிரத்தியேகமாக சிறப்பிப்பது முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்படவில்லை.” (ஸாதுல் மஆத் இப்னுல் கையிம் 1-58)

நான்காவது : ரஜபில் அறுத்துப்பலியிடுவது (அல்அதீரா) அல்லது (அர்ரஜபிய்யா)

அல்அதீரா : அல்அதீரா என்றால் ரஜப் மாதத்தின் முதல் 10 இல் சிலைகளுக்காக அறுக்கப்படும் பிராணியைக் குறிப்பிடப்படும். இன்னும் அதன் இரத்தத்தினை தலையில் ஊற்றிக்கொள்ளப்படும். இந்த செயற்பாடுகள் ஜாஹிலிய்யா கால செயற்பாடுகளாகும். அவர்களில் சிலர் ஒரு விடயத்தை வேண்டினால் அந்த வேண்டுதல் நிறைவேற்றப்பட்டால் தனது செம்மறி ஆடுகளில் இப்படி இப்படியாக ரஜபில் அறுப்பேன் என்று நேர்ச்சை வைப்பார்கள்.

நிச்சயமாக இஸ்லாம் இந்த அதீராவை நீக்கிவிட்டது அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள் : “(இனி)தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.” (ஆதாரம்: புஹாரி – 5473)

அல்ஹஸன் அவர்கள் கூறினார்கள் : “இஸ்லாத்தில் அதீரா இல்லை நிச்சயமாக அதீரா என்பது ஜாஹிலிய்யா காலத்தில் இருந்தது. அவர்களில் ஒருவர் ரஜபில் நோன்பு நோற்று அதன் முதல் பத்தில் அறுத்துப்பலியிடுவார்கள்.” (லதாஇபுல் மஆரிப்இப்னு ரஜப் – பக்கம் : 118)

இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “ஒரு விஷேட தினத்திலோ அல்லது பெருநாள் தினத்திலோ இணிப்புப்பண்டங்களை சாப்பிடுவதைப் போன்று அருப்புப் பிராணியை ரஜபில் காட்சிப்படுத்துவார்கள் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டது ரஜபை பெருநாள் தினமாக எடுத்துக்கொள்வதை அவர்கள் வெறுத்தார்கள்.” (லதாஇபுல் மஆரிப்இப்னு ரஜப் – பக்கம் : 118)

என்றாலும் மற்ற மாதங்களில் அறுப்பதைப்போன்று இம்மாதத்திலும் பொதுவாக அறுப்பது என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகாது.

ஐந்தாவது : ரஜபில் உம்ரா

சில மனிதர்கள் ரஜபில் உம்ரா கடமையை நிறைவேற்றுவதில் மிகவும் கரிசணை செலுத்துகின்றார்கள். ஏனெனில்அந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் உம்ராவிற்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்ற காரணத்தினாலாகும். இந்த நிலைபாட்டிற்கு எந்தவித அடிப்படையும் கிடையாது. ஏனெனில்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தொட்டும் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “-நபியவர்கள்- ஒருபோதும் ரஜபில் உம்ரா செய்தது கிடையாது.” (ஆதாரம் : புஹாரி -1775)

இப்னுல் அத்தார் அவர்கள் கூறினார்கள் : “மக்காவாசிகளின் செயற்பாடுகளில் ஒன்றாக அவர்கள் ரஜபில் அதிகமாக உம்ரா செய்யும் வழமையுடையவர்கள் என்ற செய்தி என்னை வந்தடைந்தது. அதனைப் பொருத்தவரை அதற்கு எந்தவித அடிப்படையும் இருப்பதாக நாம் அறியமாட்டேன்.” (முஸாஜலா இல்மிய்யா பைனல் இமாமைனில் ஜெலீலைனி அல்-இஸ்ஸ{த்தீன் பின் அப்துஸ் ஸலாம் வ இப்னுஸ் ஸலாஹ் பக்கம் : 56)

ஆறாவது : இந்த மாதத்தில் நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வுகள் உள்ளனவா?

இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் : “ரஜப் மாதத்தில் பாரிய நிகழ்வுகள் நிகழ்ந்தன என்று அறிவிக்கப்படுகின்றன. என்றாலும் அவைகளில் எவையுமே ஆதாரபூர்வமானதல்ல. இன்னும்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மாதத்தின் முதல் தினத்தில் பிறந்தார்கள் என்றும் இதன் 27 ஆவது தினத்திலே அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்தது என்றும் கூறப்படுகின்றது(சில இடங்களில்) 25 ஆவது தினம் என்றும் கூறப்படுகின்றது. இவைகளில் எவையும் ஆதாரபூர்வமானதல்ல.” (லதாஇபுல் மஆரிப் – இப்னு ரஜப் பக்கம் : 121)

அல்லாஹ் எமது பணியை பொருந்திக்கொள்வனாக…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *