Featured Posts
Home » பொதுவானவை » பிற கட்டுரைகள் » மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

மன நிம்மதி,மகிழ்ச்சிகரமான வாழ்க்கை பற்றி ஆயிரமல்ல பல இலட்சம் நூல்கள் எழுதினாலும் அவை அனைத்தினது சுருக்கமும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்ற இந்த ஒரே ஒரு வரியிலே சுருங்கி விடுகின்றது.

“அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டே உள்ளங்கள் அமைதி பெறுகின்றன” – சூரா அர்ரஃது 13:28.

அல்குர்ஆன் என்பது உலக மக்களுக்கான பொது வழிகாட்டி என்பதனையும் தாண்டி இறைவாசிகளுக்கு அருளாகவும் தமது இதயங்களின் சுமைகளை இறக்கி வைக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் பெற்றுத்தரும் அரும் மருந்தாகவும் இறக்கியருளப்பட்டுள்ளது.

“முஃமின்களுக்கு அருளாகவும் பரிகாரமாகவும் உள்ளவைகளையே இந்த திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம்” – சூரா அல் இஸ்ராஃ 17 : 82

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள்அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையாளனின் நிலைகுறித்து நான் வியப்படைகின்றேன். அவனுடைய அனைத்துக்காரியங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைகின்றது. இந்த நிலை ஓர் இறை நம்பிக்கையாளனைத் தவிர வேறெவருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை! அவனுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருகிற நிலைவந்தால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது! அவனுக்கு துக்கமும், கஷ்டமும் தருகிற நிலை வந்தால்பொறுமையை மேற் கொள்கின்றான். அதுவும் அவனுக்குநன்மையாகவே அமைந்து விடுகின்றது. என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்.

ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் இவ்விரு நிலைகளுமே மாறி மாறி வருகின்றன இவ்விரு நிலைகளையும் நாம் எதிர் கொள்கின்ற விதத்தைப் பொறுத்தே எமது வாழ்வின் உண்மையான நிலையை தீர்மானிக்க முடிகிறது.

உண்மையான இறை விசுவாசி தனது வாழ்வின் இவ்விரு நிலைகளையும் அல்லாஹ்வைப் புகழுவதன் மூலமும் அல்லாஹ்வுக்காக பொறுமை செய்வதினூடாகவும் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கி அவனது வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்து கொள்கிறான்.

பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட வாழ்க்கையும் ஒவ்வொரு விதமானது. எதுவித ஒற்றுமைகளும் அற்றது. ஆனால் இறைவனது பார்வையில் எல்லாமே ஏதோ ஒரு குறிக்கோளுக்குட்பட்டது.மறுமை என்ற நித்திய வாழ்க்கைக்குரிய தயார்படுத்தல்களுக்காககவே இந்த வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது.

அவசரக்காரனான மனிதனோ மகிழ்ச்சி என்பதை தேடிக் கொண்டிருப்பவனாக இருக்கிறான்.நிம்மதியை தேடி நிம்மதியற்றிருக்கிறான். மனமகிழ்ச்சி,சந்தோஷம்,நிம்மதி எங்கிருக்கிறது என அங்கலாய்க்கிறான், இறுதியில் படைப்பினங்களில் தேடும் மகிழ்ச்சியை படைப்பாளனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள மறந்துவிடுகிறான்.

வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியைத் தேடுபவர்கள் மேலுள்ள நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட இரு அடிப்படைப் பண்புகளையும் தமது வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும், அப்போதுதான் அவர்களால் உண்மையான மகிழ்ச்சியின் சுவையை உணர்ந்து கொள்ள முடியும்.

மகிழ்ச்சிகரமான வாழ்க்கையின் அடிப்படைகள் பற்றி நவீன இஸ்லாமிய உளவியலாளர்கள் குறித்துக் காட்டுகின்ற பல அடிப்படைகளில் பின்வரும் ஏழு அம்சங்களை மாத்திரம் மிகச்சுருக்கமாக இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

1- ஈமானும் இறை விசுவாசமும்.

ஈமானென்பது ஏகத்துவவாதிகளுக்கு பிரத்தியேகமான ஒரு கண்குளிர்ச்சியாகும்.கண்ணால் கண்டுணர முடியாத அந்த மனதின் குளிர்ச்சியும்,புத்துணர்வும் இறைவனைப் பற்றிய நம்பிக்கைகளே.இறைவனது ஆற்றல்கள் அருள்களை தெளிவாக புரிந்தவனிடம் எதிர்கால கனவுகளோ,கடந்தகால நிகழ்கால கைசேதங்களோ இருப்பதில்லை.அவனது ரப்பின் மீதான அளவு கடந்த அன்பும்,அந்த அன்பின் விளைவால் வந்த நம்பிக்கையுமே அவனின் மனதில் ஊற்றெடுக்கம் மகிழ்ச்சிக்கு உத்தரவாதமாய் இருக்கும்.
அந்த இறைவனை சந்திக்கும் அந்த வணக்கங்கள் வாயிலாக தன் மனக்கவலைகளை நீக்கி நிம்மதியடையக்கூடியவனிடம் மனமகிழ்ச்சி நிரந்தரமாய் தங்கிவிடுகின்றது.

02- கடந்தவை பற்றி கவலையற்றிருத்தல்.

தன் வாழ்வில் இது வரை நடந்த எதுவும் இனி மாறாது,மாற்றப்படவும் முடியாது என்பதை உணர்ந்து விட்டால் இப்படி செய்திருக்கலாமே,இப்படி நடந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமே என்ற கைசேதங்கள் அறவே அற்றுப் போய்விடும்.திரும்ப மாற்றவே முடியாத எதையோ திட்டமிடுவதனால் வாழ்வை தொலைப்பவர்கள் அநேகம் பேர்,நடந்தவை அத்தனையும் இறைவனின் திட்டமிடலின் எதிரொலிகள்,அதில் நிச்சயம் கண்ணுக்கு புலப்படாத நன்மைகள் இருக்கும் என்பதை ஏற்று நடப்பவனிடம் மனமகிழ்ச்சி நிரந்தரமாய் குடிகொள்கிறது.

03- கழா கத்ரின் மீதான நம்பிக்கை.

நமக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது நமக்கு சிறப்பானது என பொருந்திக் கொள்வதன் மூலம் வீணான கவலைகளை விட்டும் தப்பிக் கொள்ளலாம்.கிடைத்ததெல்லாம் நன்மை பயக்கும் கிடைக்காதவை நிச்சயம் கேடானவை என்ற நம்பிக்கையிருந்தால் மனதின் தாகங்கள் தீர்ந்துவிடுகின்றன.
மற்றவரின் பொறாமை,வஞ்சகம் ,சூழ்ச்சிகள் என எதுவுமே அவனது நாட்டமின்றி எதையும் மாற்றிவிடாதென்ற நம்பிக்கை வாழ்வது பற்றிய கவலை,பயங்களை போக்கிவிடுகின்றது. எல்லாமே படைத்தவன் ஏற்பாடு என்பதில் அணுவளவும் சந்தேகம் கொள்ளாதவனது மனதில் மனமகிழ்ச்சி உரிமையோடு உறவாடுகிறது.

04- திக்ர் எனும் இறை நினைவு .

என்னை நினைவு கூர்வதன் மூலமாக மாத்திரமே உள்ளங்கள் அமைதியடைகின்றன. என குர்ஆன் அல்லாஹ்வின் குரலை பிரதிபலிக்கின்றது. மனம் நிம்மதியடைய அல்லாஹ்வையும் அவன் படைப்பின் அற்புதங்களும் போதுமானவை.அதன் சூட்சுமங்களை உணர்பவனால் அல்லாஹ்வை நெருங்க முடியும்.வீணான செயற்பாடுகளை தவிர்த்து அல்லாஹ்வை,அவன் பண்புகளை உணர முயல்வான்.அல்லாஹ்வின் பேச்சாகிய குர்ஆனை செவிமடுத்து உணர தலைப்படுவான்.அதற்கு கட்டுப்பட நினைப்பான்.இதன் மூலம் பாவக்கறைகள் போக்கி புத்துணர்வு பெறுகிறான். அல்லாஹ்வை நேசிப்பவனை அல்லாஹ்வும் நேசிக்கத் தொடங்கும் போது இறையருள் பூரணமாக கிடைக்கப் பெற்றவனாகிறான். இறை நினைவால் தன் உள்ளங்களை ஈரப்படுத்துபவர்களிடம் மன மகிழ்ச்சியும் ஒட்டிக் கொள்கிறது.

05- பிறரிடம் எதிர்ப்பார்ப்பதை தவிர்த்தல்.

எமக்குரியதை தர அந்த ரப்பே போதுமானவன்.எந்த மனிதராலும் நமக்கானதை நிச்சயம் தர முடியாது என்ற சிந்தனை மற்றவர் மீதான எதிர்ப்பார்ப்புகளை விட்டும் நம்மை தூரமாக்கிவிடும்.இதன் மூலம் வீணான ஏமாற்றங்களும்,மனக் கசப்புகளும் இல்லாமல் போய்விடுகின்றது.எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எங்கிருந்து விலக்கப்படுகிறதோ அங்கு மனமகிழ்ச்சி தஞ்சமடைகிறது.

06- எதிர்காலம் பற்றிய திட்டமிடல்களை தவிர்த்தல்.

நாளை என்பது வரும் வரை விட்டு வைப்பதால் வந்து விட்ட இன்றைய நாள் சீராகிவிடுகிறது. வீணான கனவுகள், கற்பனைகள், திட்டமிடல்களை விட்டு பிரார்த்தனைகள் மூலம் நாளையை அடைய முயற்சிப்பவனே புத்திசாலி. இன்றைய நாள்தான் எனக்கு வாழ அனுமதிக்கப்பட்டது. நாளையில் வாழும் வல்லமை எனக்கில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய நாள் சீரானால் நாளை மகிழ்ச்சியாய் அமையும். எதிர்கால கனவுகளைத் தவிர்ந்து நிகழ்காலம் நிம்மதியாய் உறங்குபனிடம் மனமகிழ்ச்சி வாழ ஆசைப்படுகிறது.

07- பிறரது வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்த்தல்.

எமக்குரிய வாழ்வு தான் எமக்கானது.மற்றவர் கால்களில் நம்மால் நடக்க முடியாது.அவரவர்க்கு அருளப்பட்டது அவர்களுக்கானது.அதை இல்லாமல் செய்வதால் எம்மால் அதை அடைய முடியாதென உணர்ந்து விட்டால் பொறாமை, குரோதம், வஞ்சகம் போன்ற உள நோய்களை விட்டும் நிவாரணமடையலாம். ஆரோக்கியமான உள்ளங்களிலேயே மனமகிழ்ச்சியும் குடிகொள்கிறது.

இறை விசுவாசம் என்ற அடிப்படையுடன் பொறுமை, நன்றிசெலுத்துதல் என்ற இறைவிசுவாசத்தைப் பிரதிபலிக்கும் இரண்டு குணாதிசியங்களையும் வாழ்வில் கடைப்பிடித்து மேலுள்ள ஏழு அம்சங்களின் மூலமாக வாழ்க்கைக்கு வர்ணம் பூசி அலங்கரித்து இதயங்களில் மகிழ்ச்சியை குடி வாழச்செய்வோமாக!

— அஷ்ஷெய்க். TM முபாரிஸ் ரஷாதி
விரிவுரையாளர், அல் மனார் இஸ்லாமிய நிலையம், துபாய். (UAE)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *