Featured Posts
Home » சட்டங்கள் » தொழுகை » நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை)

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை)

அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி

மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான்.

அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56).

அல்குர்ஆனில் நுற்றுக்கும் மேற்பட்ட வசனங்களில் தொழுகையைக் குறித்து அல்லாஹ் வலுயுறுத்திக் கூறியுள்ளான். தொழுகையைத் தவிர மற்ற கடமைகளை நிறைவேற்ற இயலாதவர்களுக்கு அக்கடமையில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக வசதியில்லாதவர்கள் மீது ஜகாத் கடமையில்லை, நோயாளியாக இருப்பவர் அதிலிருந்து குணமடையும் வரை அவர் மீது நோன்பு கடமையில்லை. அவ்வாறே வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்கள் மீது ஹஜ் கடமையில்லை. ஆனால் தொழுகை அப்படியல்ல.

ஆரோக்கியமாக இருப்பவர், நோயாளியாக இருப்பவர், வசதியுள்ளவர் மற்றும் இல்லாதவர் என அனைவரும் தொழுகையைப் பேணித் தொழுதாக வேண்டும்.

நோயாளியாக இருப்பவர் நின்று தொழ முடியாவிட்டால் அமர்ந்து தொழவேண்டும். அமர்ந்தும் தொழமுடியாவிட்டால், அவர் படுத்துத் தொழவேண்டும்.

அமர்ந்து தொழக்கூடியவர்கள் வசதிக்காக நாற்காலியைப் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. சமீபகாலமாக நாற்காலியில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகிறது. எந்த ஒரு மஸ்ஜிதைப் பார்த்தாலும் அதில் ஏராளமான நாற்காலிகள் இருப்பதையும் அதில் சாய்ந்து அமர்ந்து தொழக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதையும் காணலாம். இன்னும் சில மஸ்ஜிதுகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட நாற்காலிகளையும் மேசைகளையும் காணமுடிகிறது. அதில் அமர்ந்து தொழுபவர்களில் அதிகமானவர்கள் அதன் சட்டங்கள் குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

எனவே அதன் சட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வு நூல்களை அடிப்படையாகக் கொண்டு இத்தொகுப்பை வெளியிடுகிறோம்.

அஷ்ஷைய்க் முஹம்மத் பின் அஹ்மத் பின் அலீ வாஸில் என்ற அறிஞரால் எழுதப்பட்ட அஹ்காமுஸ் ஸலாத் அலல் கராஸி என்ற நூலையும், அஷ்ஷைய்க் அலீ பின் இப்ராஹீம் பின்  முஹம்மத் அல் கஸ்ஸீர் என்ற அறிஞரால் தொகுக்கப்பட்ட அல் அஹ்காமுல் ஃபிக்ஹிய்யா அல் முதஅல்லிகா பி ஸிஃபத்திஸ் ஸலாதி அலல் குர்ஸி என்ற நூலையும், அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் அவர்களின் இஸ்லாம் சுவால் வ ஜவாப் என்ற இணைய தளத்தையும் இன்னும் சில இணையத் தளங்களின் ஆக்கங்களையும்  பயன்படுத்தி தொகுக்கப்பட்டது தான் இந்த தொகுப்பு.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒவ்வொருவருடைய சூழலையும் ஆரோக்கியத்தையும் இயலாமையையும் கவனத்தில் கொண்டு மார்க்கம் அவர்களுக்குச் சொல்லுகின்ற சட்டங்களில் வேறுபாடுகளையும் சலுகைகளையும் அளிக்கும் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் மார்க்கம் வழங்கிய சலுகைகளை மக்களில் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதன் மூலம் மார்க்கக்கடமைகளை அலட்சியம் செய்யும் போக்கு இன்று அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே அத்தகைய சலுகைகளை யார், எப்போது பயன்படுத்தலாம் எதற்காக பயன்படுத்தலாம் என்பன போன்ற வழிகாட்டுதல்களை இதில் நாம் தெளிவுபடுத்தவுள்ளோம். இன்ஷா அல்லாஹ்…

ஃபர்ளான தொழுகையின் ருகுனுகளில் ஒன்றுதான் நிற்பது (கியாம்) என்பது. நிற்பதற்கு இயலுமானவர்கள் தொழுகையை நின்று நிறைவேற்றுவது கட்டாயம் என்பதும் அப்படியுள்ளவர்கள் அமர்ந்து தொழுதால் அத்தொழுகை வீணாகிவிடும் என்பதும் ஃபுகஹாக்களின் ஏகோபித்த முடிவாகும். 

தொழுகைகளை குறிப்பாக அஸர் தொழுகையாகிய நடுத் தொழுகையையும் (விடாமல் தொழுது) பேணிக் கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து பணிந்தவர்களாக நில்லுங்கள் (2:238).

இம்ரான் இப்னு ஹுஸைன் அறிவித்தார்.

எனக்கு மூலம் என்னும் நோய் இருந்தது. எவ்வாறு தொழுவது என்று நபி ﷺ அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி ﷺ அவர்கள், ‘நீ நின்று தொழு. இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு’ என்று விடையளித்தார்கள். (நூல் ஸஹீஹுல் புஹாரி 1117).

ஒருவர் இயலாதவராக இருந்தால்  அவர் அமர்ந்து தொழலாம் என்பதில் ஃபுகஹாக்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் (64:16).

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சிரமம் கொடுப்பதில்லை (2:286).

நபி ﷺ அவர்கள், ‘நீ நின்று தொழ இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு’ என்று விடையளித்தார்கள். (நூல்: ஸஹீஹுல் புஹாரி 1117)

தொழுகையாளியைப் பொருத்தவரை அவருக்கு எதையெல்லாம் செய்ய இயலுமோ அதனை நிறைவேற்றுவது கட்டாயமாகும். நிறைவேற்ற இயலாத ருகுனுகளைப் பொருத்தவரை அதற்குப் பகரம் செய்தால் போதுமானது.

இதன் அடிப்படையில் ஒருவர் நிற்க இயலாதவராக இருந்தால் அவர் அமர்ந்து தொழலாம். அது நற்காலியில் அமர்ந்து தொழுவதாக இருந்தாலும் சரியே.

ஒருவர் நாற்காலியில் அமர்ந்து தொழுவதாக இருந்தாலும் ருகூவையும் சுஜூதையும் முறையாகப் பேண வேண்டும்.

ஒருவருக்கு நிற்க இயலும் ஆனாலும் அவரால் ருகூவையும் சுஜூதையும் அல்லது இதில் ஏதாவது ஒன்றை நிறைவேற்ற முடியாது எனில் அவர் நின்று தொழ வேண்டும். ருகூவின் போதும் சுஜூதின் போதும் அமர்ந்து கொள்ளலாம். அப்போது ருகூவை விட சுஜூதை தாழ்த்திக் கொள்ள வேண்டும். பார்க்க ‘அல் மஜ்மூஃ ஷரஹுல் முஅத்தப் 4/226, நைலுல் அவ்தார் 3/243’.

இமாம் நவவி அவர்கள் கூறினார்கள்  நிற்க இயலாதவர் ஃபர்ளான தொழுகையை அமர்ந்து தொழலாம் அவ்வாறு தொழுவதால் அவரின் தொழுகை நிறைவேறிவிடும். அல் மஜ்மூஃ ஷரஹுல் முஅத்தப் 4/310.

அமர்ந்து தொழுபவர் தக்பீரத்துல் இஹ்ராமின் போது எவ்வாறு செயல்படுவது?

அமர்ந்து தொழுபவர் இரண்டு நிலைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒன்று தக்பீரத்துல் இஹ்ராமை நின்ற நிலையில் நிறைவேற்றுவதற்கு இயலுவது. இத்தகைய நிலையில் இருப்பவர் தக்பீரத்துல் இஹ்ராமை நின்ற நிலையில் நிறைவேற்றுவது கட்டாயம் என்பதில் உலமாக்கள் ஏகோபித்த கருத்தை கொண்டுள்ளார்கள். அதன் பின்னர் தான் அவர் அமரவேண்டும் நின்றுகொண்டு தக்பீரத்துல் இஹ்ராமை கடைபிடிக்க முடியுமானவர் அமர்ந்து தொழுதால் அவர் தொழுகையை ஆரம்பித்தவராக மாட்டார்.

அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் கூறினார்கள்,

நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! (ஸஹீஹுல் புஹாரி 757).

கியாம் தக்பீரை விட முந்தியிருக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. எனவே தக்பீர் கூறுபவர் கியாமுடைய நிலையில் இருக்கவேண்டும். யார் கியாமிற்கு முன் தக்பீரை கூறுவாரோ அவர் நிற்பதற்கு இயன்றும் அல்லாஹ் கட்டளையிட்டதைப்போன்று தொழுகையை நிறைவேற்றவில்லை.

இரண்டாவதாக,

நிற்பதற்கு அறவே முடியாதவர்

முடம், கடுமையான நோய் போன்ற காரணத்தால் இயலாமல் இருக்கக்கூடியவர் அமர்ந்து தக்பீர் கூறலாம்.

ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (64:16).

நோயாளிகளும் இயலுமானால் நின்று தொழவேண்டும். முடியாதபோது, தங்களுக்கு பின்னர் நாற்காலியை வைத்து அதில் அமர்ந்து கொள்ளலாம். நிர்பந்தம் அதன் அளவிற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதியின் அடிப்படையில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். (ஷரஹ் ஸாதுல் முஸ்தன்கிஃ  அஷ்ஷைக் முஹ்தார் அமீன் ஷன்கீத்தி 4/46).

இயன்ற அளவிற்கு அல்லாஹுவை பயந்துகொள்ள வேண்டுமென்ற வசனத்தையும் அதே கருத்தில் அமைந்துள்ள ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டும்தான் இவ்விதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒருவருக்கு நின்று தொழுவது சிரமமாக இருந்தால் அவர் நின்ற நிலையில் தக்பீரத்துல் இஹ்ராமை கட்டி அதன் பின் அமர்ந்துகொள்ளலாம். அறவே நிற்க இயலாதவராக இருந்தால் அவர் அமர்ந்து தொழலாம். (ஷரஹ் ஸாதுல் முஸ்தன்கிஃ  அஷ்ஷைக் முஹ்தார் அமீன் ஷன்கீத்தி 4/46).

இங்கே ஒரு விஷயத்தைக் கவனமாகப்பார்க்க வேண்டும் மக்களில் சிலர் நன்றாக நடமாடுபவர்கள், அவர்களுக்கான நாற்காலியை சுமந்து வருவார்கள்.  தொழுகையை முடித்து எவ்வித சிரமமும் இல்லாமல் நடந்துசெல்வார்கள். இப்படிப்பட்டவர்கள் அமர்ந்து தொழுவது கூடாது. அப்படி அமர்ந்து தொழுவதால் அவர் தொழுகையின் ருகுனை விட்டவர் ஆவார். (ஷரஹ் ஸாதுல் முஸ்தன்கிஃ  அஷ்ஷைய்க் முஹ்தார் அமீன் ஷன்கீத்தி 4/46)

நிற்க இயலாதவர் அமர்ந்து தொழுவது எப்படி?

நிற்க இயலாதவர் அமருவதில் இரண்டு விதம் உள்ளது.

ஒன்று மார்க்கம் காட்டித்தந்த அமரும் முறை. இரண்டாவது மார்க்கம் காட்டித்தராத அமரும் முறை.

மார்க்கம் காட்டித்தந்த அமரும் முறையைப் பொருத்தவரை  சம்மணமிட்டு அமருவது. கால்களை நட்ட வைத்து அமருவது. அல்லது பிட்டத்தின் மீது அமருவது. இதில் தொழுகையில் தஷஹ்ஹுதில் அமரும் முறை இரண்டு ஸஜ்தாகளுக்கு மத்தியில் இருக்கும் முறை போன்றவை தொழுகையில் கடைபிடிக்கும் வழிமுறையாகும். எனவே அவ்வாறு அமர்ந்து தொழுவதில் தவறில்லை.

மார்க்கம் காட்டித்தராத முறையில் தொழுகையில் அமருவது

அதாவது ஒருவர் கட்டிலிலோ, நாற்காலியிலோ அது போன்ற வேறு ஏதாவது ஒன்றிலோ அமருவதாகும். அப்படி அமருபவர் தஷஹ்ஹுதின் போதும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் அமரும் போதும் தரையில் அமர முடியுமானவராக இருந்தால் தொழுகையில் அமருவதற்கென்று மார்க்கம் காட்டித் தந்த முறையில் அவர் அமராததின் காரணமாக மார்க்கத்தின் நோக்கம் நிறைவேறாது. இந்த இரண்டு அமர்வின் போதும் ஒரு மனிதன் தரையோடு நெருக்கமாக இருக்க வேண்டும். இது தான் நபி ﷺ அவர்கள் காட்டித்தந்த வழிமுறை. எனவே ஒருவர் தஷஹ்ஹுதின் போதும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு மத்தியிலும் தரையில் தான் அமரவேண்டும் . (ஷரஹ் ஸாதுல் முஸ்தன்கிஃ  அஷ்ஷைய்க் முஹ்தார் அமீன் ஷன்கீத்தி 4/46)

மேற்கூறிய இரண்டு நிலைகளிலும் ஒருவருக்கு அமர இயலாமல் போனால், அவர் நாற்காலி போன்றவற்றில் அமர்ந்து தொழலாம். இயாலாமை என்ற காராணத்திற்காக மட்டும் தான் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் தரையில் அமருபவரின் அந்தஸ்த்தில்தான் இருப்பார். (ஷரஹ் ஸாதுல் முஸ்தன்கிஃ  அஷ்ஷைக் முஹ்தார் அமீன் ஷன்கீத்தி 4/46)

இரண்டாவது : தொழுகையில் நிற்க இயலாதவர் நாற்காலியில் அமர்ந்து தொழுதல் மற்றும் கீழே அமர்ந்து தொழும்போது சம்மணமிட்டு அமருவதன் சட்டம்

நோயாளியோ, ஊனமுற்றவரோ தொழும்போது உயரமான இடத்திலோ, நாற்காலி, கட்டில் அல்லது இது போன்றவற்றில் சம்மணமிட்டு தொழுவது தொடர்பாக ஃபுகஹாக்களிடம்  கருத்துவேறுபாடுள்ளது என்றாலும் நாம் கூறும் கருத்து தான் ஆதாரத்தின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட கருத்தாகும்.

நிற்க இயலாதவர் அமர்ந்து தொழும்போது சம்மணமிட்டு தொழுவது விரும்பத்தக்கதாகும்.  அதற்கும் அவர் இயலாதவராக இருந்தால் அவர் எப்படி முடியுமோ அப்படி அமர்ந்து கொள்ளலாம். இக்கருத்தை ஹனஃபியாக்களில் இமாம் அபூ யூஸுஃப் அவர்களும் மாலிகி மத்ஹபின் அறிஞர்களில் பெரும்பான்மையினரும், ஷாஃபி மற்றும் ஹன்பலி மத்ஹபினர்களும் கூறியுள்ளார்கள். இக்கருத்தையே அஷ்ஷைய்க் ஸாலிஹ் அல் உஸைமின் அவர்களும் தேர்ந்தெடுத்தார்கள்.  அவர்கள் கூறினார்கள் சம்மணமிட்டு அமருவது வாஜிபல்ல மாறாக அது சுன்னத் தான் ஒருவர் கால்களை நட்டுவைத்து இஃப்திராஷ் முறையில் அமர்ந்து தொழுதாலும் சரி, அல்லது பிட்டத்தின் மீது  தவருக் முறையில் அமர்ந்து தொழுதாலும் சரி  அதில் தவறேதுமில்லை. நிற்க இயலாவிட்டால் அமர்ந்து தொழுங்கள் என்று நபி ﷺ அவர்கள் பொதுவாகக் கூறியுள்ளார்கள் எப்படி அமரவேண்டுமென்பதை நபி ﷺ அவர்கள் விளக்கவில்லை.

ஆதார நூற்கள்:

1. அல்பினாயா ஷர்ஹுல் பிதாயா 2/687, அல் ஃபிக்ஹு அலா மதாஹிபில் அர்பஆ 1/770

2. அத்தலக்கீன் ஃபில் ஃபிக்ஹில் மாலிகீ 1/51

3. ரவ்ளத்துத் தாலிபீன் 1/234 அல் ஃபிக்ஹு அலா மதாஹிபில் அர்பஆ1/770

4. அல் முக்னி 1/781

5. ஷரஹுல் முமத்திஃ 4/327

6. ஷரஹுல் முமத்திஃ அலா ஸாதில் முஸ்தக்னிஃ 4/327

இக்கருத்துடையவர்களின்  ஆதாரங்கள்:

முதல் ஆதாரம்

நபி ﷺ அவர்கள் சம்மணமிட்டு அமர்ந்து தொழுவதை நான் பார்த்தேன் என்று ஆயிஷா அவர்கள் கூறினார்கள். (நூல்: சுனன் நஸாயி 1661, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா 978).

இரண்டாவது ஆதாரம்

சம்மணமிட்டு அமர்ந்து தொழுவதைக்குறித்து ஸஹாபாக்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது இமாம் அஹ்மத் அவர்கள் கூறினார்கள் அனஸ் அவர்கள்  சம்மணமிட்டு அமர்ந்து தொழுதார்கள் ருகூஃ செய்யும்போது முழங்காலிட்டு அமருவார்கள். (அல் முக்னி 3/344).

மூன்றாவதாக

தொழுகையில் நிற்கும் நிலையில் இருப்பதற்குப் பகரமாக சம்மணமிட்டு அமருவது இருப்பில் இருப்பதையும் நிலையில் இருப்பதையும் பிரித்துக்காட்டும். ஏனெனில் தற்போதைய அமருதல் என்பது நிற்க இயலாததற்கு பகரமாகும். எனவே அதை தொழுகையில் அமருவதுப் போன்று அமைத்துக் கொள்ளக்கூடாது. (அல் உம்மு 7/188 முஹமத் பின் அஹ்மத் பின் ருஷ்த் அல் குர்துபி அவர்களின் அல் பயான் வத் தஹ்ஸீல் 1/271. அஷ்ஷரஹுல் கபீர் 10/346. அல் முக்னி லி இப்னு குதாமா 3/344.)

நான்காவதாக:

தொழுகையில் நிற்பதற்குப் பகரமாக சம்மணமிட்டு அமருவது என்பது  மறதியைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும். தொழுகையில் மறதி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்குரிய காரணிகளைத் தேடுவது கட்டாயமாகும். (அல் முக்னி லி இப்னு குதாமா 3/344, அஷ்ஷரஹுல் கபீர் லி அபில் ஃபர்ஜி அப்திர் ரஹ்மான் இப்னி குதாமா 1/773)

ஐந்தாவதாக:

முழங்காலில் அமருவதை விட சம்மணமிட்டு அமருவது என்பது  அதிகப்படியான மனநிறைவையும் நிம்மதியையும் தரும். ஏனெனில் இரண்டு ஸஜ்தாவிற்கு மத்தியில் அமர்ந்து ரப்பிஃக்ஃபிர்லி என்று சொல்வதை விட அதிகமான நேரம் தொழுகையில் நிலையில் ஓதுவதற்கு தேவைப்படும் எனவே சம்மணமிட்டு அமருவது தான் முழங்காலில் அமருவதை விட மிகவும் பொருத்தமானது. (அஷ்ஷரஹுல் கபீர் லி அபில் ஃபர்ஜி அப்திர் ரஹ்மான் இப்னி குதாமா 1/773, ஷரஹுல் முமத்திஃ அலா ஸாதில் முஸ்தக்னிஃ 4/328).

இரண்டாவது கருத்து

நிற்க இயலாதவர் எப்படி வேண்டுமானாலும் அமரலாம் என்பது தான் இமாம் அபூ ஹனீஃபா அவர்களின் கருத்து. இதற்கான ஆதாரம் இயலாமையில் இருப்பவருக்கு தொழுகையின் ருகுனுகளில் சலுகையிருக்கும் போது அதை விட ஏற்றமானது, அதன் வடிவம் தான். (அல் பஹ்ருல் ராயிக் ஷரஹ் கன்ஸுத் தகாயிக் 1/144 அல் மப்ஸூத் லி ஸர்கஸி 1/68 36)

மூன்றாவது கருத்து

நிற்க இயலாதவர் எல்லா நிலையிலும் முழங்காலில் அமர்ந்து தொழவேண்டும் அவர் உயரமான இடத்தில் நின்று தொழுதாலும் சரி அல்லது தரையில் அமர்ந்து தொழுதாலும் சரியே இக்கருத்தை ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் ஸுஃபர் அவர்கள் கூறினார்கள். (இமாம் ஸர்கஸி அவர்களின் மப்ஸூத் 1/27 அல் ஃபிக்ஹு அலா மதாஹிபில் அர்பஆ 1/770)

இக்கருத்து தான் ஷாஃபி மத்ஹபின் இரண்டு கருத்தில் வெளிப்படையான கருத்தாகும். (ரவ்ளத்துத் தாலிபீன் 1/234, அல் ஃபிக்ஹு அலா மதாஹிபில் அர்பஆ 1/770)

இக்கருத்திற்கு எந்த ஆதாரத்தையும், காரணத்தையும் நாம் பார்க்கவில்லை என்றாலும் சம்மணமிட்டு அமருவதை வாஜிபாக்கக்கூடிய எந்த ஆதரமுமில்லை.

தொழுகையில் நிற்க இயன்றவர் நிற்க இயலாதவர் என்று வேறுபடுத்திப்பார்க்க வேண்டியதில்லை என்பது தான் இதற்கான அடிப்படையாகும்.

நான்காவது கருத்து.

நிற்க இயலாதவர் அத்தஹியாத்தில் அமருவதைப்போன்று அமர்ந்து தொழவேண்டும். மாலிகி மத்ஹபின் பிற்கால இமாம்கள் இந்த கருத்துடையவர்கள் ஆவார்கள். (ரவ்ளத்துத் தாலிபீன் 1/234, அல் ஃபிக்ஹு அலா மதாஹிபில் அர்பஆ 1/770)

இக்கருத்திற்கான ஆதாரம்:

நபி ﷺ அவர்கள், ‘நீ நின்று தொழு. இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு,’ என்று விடையளித்தார்கள். (நூல் ஸஹீஹுல் புஹாரி 1117).

இக்கருத்துக்களில் உறுதியானது முதலாவது கருத்தாகும். அவைகள் தாம் வலுவான ஆதாரங்களாக உள்ளது. இதற்கு முரணாக உள்ள ஆதாரங்கள் எல்லாம் பொதுவான ஆதாரங்களாகவோ அல்லது ஆதாரமற்றதாகவோ தான் இருக்கும்.

உபரியான தொழுகையை நாற்காலியில் அமர்ந்து தொழுவதன் சட்டம்

உபரியான தொழுகையை தொழுபவர் மூன்று விதமாக இருப்பார்.

முதல் வகை உபரியான தொழுகையை நிற்பதற்கு இயலும் போது நின்று தொழுவதாகும். அப்படி தொழுபவருக்கு முழுமையான கூலியுள்ளது. எவ்வித காரணமுமில்லாமல் உபரியான தொழுகையை அமர்ந்து தொழுபவரை விட பொதுவாக சிறப்பான நன்மையைப் பெறுவார்.

இம்ரான் பின் ஹுஸைன் கூறினார்கள். நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி ﷺ அவர்களிடம் அமர்ந்து தொழுவதைக் குறித்து கேட்டேன். அதற்கவர்கள் நின்று தொழுதால் அது சிறந்ததாகும். அமர்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்குள்ளது. படுத்து தொழுதால் உட்க்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்குள்ளது என்று பதிலளித்தார்கள் . நூல்: ஸஹீஹுல் புஹாரி 1116.

இம்ரான் பின் ஹுஸைன் அவர்களின் அறிவிப்பு உபரியான தொழுகையை மட்டும் குறித்து சொல்லப்பட்டதாகும். உலமாக்கள் கூறியதாக இமாம் நவவி அவர்கள் கூறினார்கள், இது உபரியான தொழுகையைத் குறித்ததாகும். நிற்க இயலுமானவர்  ஃபர்ளான தொழுகையை அமர்ந்து தொழக்கூடாது என்பது இஜ்மாவாகும். இயலாதவராக இருந்தால் அவரது கூலி குறையாது. (.ஹுலாஸதுல் அஹ்காமி ஃபி முஹிம்மாத்தி ஸுனனி வ கவாஇதில் இஸ்லாமி லி அபி ஸகரியா யஹ்யா பின் முரீ பின் ஹஸனல் ஹவ்ரானி  அஷ் ஷாஃபிஈ  1/3420

இரண்டாவது வகை

நோயின் காரணமாகவோ, அச்சத்தின் காரணமாகவோ நிற்க இயலாதவர் உபரியான தொழுகையை அமர்ந்து தொழுவதாகும். அப்படித் தொழும்போது முதல் நிலையில் இருப்பவரைப் போன்று அவருக்கும் தொழுகைக்கான முழுமையான கூலி கிடைக்கும். இதற்கு குர்ஆனிலும், சுன்னாவிலும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்த நோய், அச்சம் ஆகிய காரணமில்லாவிட்டால் அவர் நின்று தொழுபவராக இருந்திருப்பார்.

முதலாவதாக:

கடமைகள் குறித்து பேசுகின்ற ஆதாரங்கள் அனைத்தும் மனிதனுடைய சக்திக்குட்பட்டதையும் இன்னும் அவனுக்கு  முடியுமானதையும் தான் செய்யச்சொல்கிறது. 64:14 -2:286 -22:78

இரண்டாவதாக

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்,  ஓர் அடியான் ஆரோக்கியமானவனாக ஊரில் இருக்கும் நிலையில் செய்யும் நற்செயலுக்கு கிடைப்பது போன்ற கூலி அவன் நோயாளியாகவும், பயணத்திலும் இருக்கும் போது அவனுக்கு கிடைக்கும். (அறிவிப்பாளர் அபூ மூஸல் அஷ்அரி. நூல்: ஸஹீஹுல் புஹாரி 2996).

மூன்றாவதாக

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»

நபி ﷺ அவர்கள் கூறினார்கள் நான் எதை செய்யவேண்டுமென்றொ வேண்டாமென்றோ சொல்லாமல் விட்டுவிட்டேனோ அதைப்பற்றி நீங்களும் எதையும் கேட்கவேண்டாம். உங்களுக்கு முன்பிருந்தவர்கள் அழிந்து போனதற்கு காரணம் அவர்கள் தூதர்களிடம் அதிகம் கேள்வி கேட்டதனாலும் கருத்து வேறுபாடு கொண்டதனாலும் தான். எனவே ஒன்றை செய்யவேண்டாம் என தடைவிதித்தால் அதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். நான் ஒன்றை செய்யவேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிட்டால்  இயன்ற அளவிற்கு அதை செய்யுங்கள். (அறிவிப்பாளர் அபூஹுரைரா   நூல்: ஸஹீஹுல் புஹாரி 7288)

மூன்றாவது வகை

உபரியான தொழுகையை நிற்பதற்கு சக்திபெற்றும் நாற்கலியிலோ வேறு இடத்திலோ அமர்ந்து தொழுவதாகும். இவ்வாறு தொழுவது ஆகுமானதாகும்.  இம்ரான் பின் ஹுஸைன் அவர்களின் அறிவிப்பாக வந்துள்ள ஹதீஸில் உபரியான தொழுகையை அமர்ந்து தொழலாம் என்ற செய்தி வெளிப்படையாகவே வந்துள்ளது.  

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلاَةِ الرَّجُلِ وَهُوَ قَاعِدٌ، فَقَالَ: «مَنْ صَلَّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ القَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ القَاعِدِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «نَائِمًا عِنْدِي مُضْطَجِعًا هَا هُنَا»

இம்ரான் பின் ஹுஸைன் கூறினார்கள். நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி ﷺ அவர்களிடம் அமர்ந்து தொழுவதைக் குறித்து கேட்டேன். அதற்கவர்கள் நின்று தொழுதால், அது சிறந்ததாகும். அமர்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்குள்ளது. படுத்து தொழுதால் உட்க்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்குள்ளது என்று பதிலளித்தார்கள். (நூல்: ஸஹீஹுல் புஹாரி 1116).

நாற்காலியில் அமர்ந்து தொழுபவர் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய தொழுகையின் ருகுனுகள் மற்றும் வாஜிபாத்துகளின் வரையறை

முதலாவதாக தொழுகையின் ருகுனுகளிலும், வாஜிபாத்துகளிலும் சொல், செயல்களில் செய்வதற்கு இயலுமானதை கண்டிப்பாகச் செய்யவேண்டும். இயலாததை விட்டுவிட்டு அதற்குப் பகரமாக உள்ளதை செய்வதற்கு முடியுமானால் அதைச் செய்ய வேண்டும்.

இமாம் இப்னு குதாமா அவர்கள் கூறினார்கள் யார் நிற்பதற்கு இயன்றவராக இருந்து அவர் ருகூஃ, சுஜூத் செய்வதற்கு இயலாதவராக இருந்தாலும் அவர் நின்று தான் தொழவேண்டும் ருகூவை சைகையால் நிறைவேற்ற வேண்டும். பிறகு அமர்ந்து சைகையால் சுஜூதையும் செய்யவேண்டும்.

 (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து பணிந்தவர்களாக நில்லுங்கள் (2:238) என்ற வசனத்தையும்  நபிமொழியையும் ஆதாரமாக வைத்து இமாம் ஷாஃபி அவர்கள் இவ்வாறு தான் கூறினார்கள். அல்முக்னி 1/444

யார் ஒருவர் தாங்கிக்கொள்ளக்கூடிய சிரமத்துடன் கியாமையும், ருகூவையும், சுஜூதையும் நிறைவேற்ற சக்திபெற்றிருப்பாரோ அவர் கட்டாயம் நின்று தொழவேண்டும். அப்படியில்லாவிட்டால் அவரது தொழுகை வீணாகிவிடும்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا  أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»

நபி ﷺ அவர்கள் கூறினார்கள் நான் எதை செய்யவேண்டுமென்றொ வேண்டாமென்றோ சொல்லாமல் விட்டுவிட்டேனோ அதைப்பற்றி நீங்களும் எதையும் கேட்க வேண்டாம். உங்களுக்கு முன்பிருந்தவர்கள் அழிந்து போனதற்கு காரணம் அவர்கள் தூதர்களிடம் அதிகம் கேள்வி கேட்டதனாலும் கருத்து வேறுபாடு கொண்டதனாலும் தான். எனவே ஒன்றை செய்யவேண்டாம் என தடைவிதித்தால் அதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். நான் ஒன்றை செய்யவேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிட்டால்  இயன்ற அளவிற்கு அதை செய்யுங்கள். (அறிவிப்பாளர் அபூஹுரைரா   நூல்: ஸஹீஹுல் புஹாரி 7288)

இந்த ஹதீஸ் இயாலாததை விட்டு விடக்கூடியவர் இயலுமானதை செய்ய வேண்டுமென்று தெரிவிக்கிறது. எனவே யார் நிற்க இயலாதவரோ அவர் தரையில் அமர்ந்து தொழலாம். அதற்கும் இயாலாதவராக இருந்தால் அவர் நாற்காலியில் அமர்ந்து தொழலாம். ருகூவையும் சுஜூதையும் அவர் அதன் முறைப்பிரகாரம் தான் நிறைவேற்ற வேண்டும். ஒருவருக்கு நிற்க முடியும் ஆனால் ருகூவையும் சுஜூதையும் செய்ய முடியாது என்றிருந்தால், நிலையில் இருக்கும் போது அவர் நின்று தொழவேண்டும். பிறகு அவர் ருகூஃ மற்றும் சுஜூதின் போது நாற்காலியிலோ அது போனறவற்றிலோ அமர்ந்து தொழலாம். அப்படித் தொழும்போது  ருகூஃவை விட சுஜூதின் போது அதிகமாக் குனிய வேண்டும்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ مَرِيضًا فَرَآهُ يُصَلِّي عَلَى وِسَادَةٍ فَأَخَذَهَا فَرَمَى بِهَا، فَأَخَذَ عُودًا لِيُصَلِّيَ عَلَيْهِ فَأَخَذَهُ فَرَمَى بِهِ وَقَالَ: ” صَلِّ عَلَى الْأَرْضِ إِنِ اسْتَطَعْتَ وَإِلَّا فَأَوْمِ إِيمَاءً وَاجْعَلْ سُجُودَكَ أَخْفَضَ مِنْ رُكُوعِكَ

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க வந்தார். அவர் ஒரு தலையணையின் மீது தொழுவதை கண்டபோது அதனை எடுத்து மாற்றினார். அப்போது அவர் ஒரு மரக்குச்சியை அதன் மீது தொழுவதற்காக எடுத்தக்கொண்டபோது,  நபி அவர்கள் அதையும் அப்புறப்படுத்தி உன்னால் முடியுமானால் தரையில் தொழுதுகொள், அதற்கு உனக்கு இயலாவிட்டால் சைகை செய், ருகூவை விட சுஜூதைத் தாழ்த்திக்கொள், என்று கூறினார்கள். (நூல்: சுனனுல் குப்ரா லில் பைஹகி 3669).

தரையில் சுஜூத் செய்ய முடியாவிட்டால், சைகையால் அந்தரத்திலேயே சுஜூத் செய்யலாம் என்பதற்கு இச்செய்தி ஆதாரமாக உள்ளது. அப்படிச் செய்யும்போது ருகூவை விட சுஜூதைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும். தலையணைப் போன்ற எதையும் சுஜூத் செய்வதற்காக வைத்துக்கொள்ளத் தேவையில்லை. அதே போன்று கைகளை தரையில் வைக்கவேண்டுமென்ற நிபந்தனையுமில்லை. மாறாக  கைகளை (கால்) மூட்டின் மீதே வைத்துக் கொள்ளவேண்டும்.

عَنِ ابْنِ عُمَرَ، رَفَعَهُ قَالَ: «إِنَّ الْيَدَيْنِ تَسْجُدَانِ كَمَا يَسْجُدُ الْوَجْهُ، فَإِذَا وَضَعَ أَحَدُكُمْ وَجْهَهُ فَلْيَضَعْ يَدَيْهِ، وَإِذَا رَفَعَهُ فَلْيَرْفَعْهُمَا»

இப்னு உமர் அவர்கள் அறிவிக்கிறார்கள், முகம் சுஜூத் செய்வது போன்றே இரு கைகளும் சுஜூத் செய்கின்றது. உங்களில் ஒருவர் அவரது முகத்தை தரையில் வைத்தால் கைகளையும் தரையில் வைக்கட்டும் அவரது முகத்தை தரையில் இருந்து உயர்த்தினால் கைகளையும் உயர்த்தட்டும். (நூல் சுனன் அபிதாவூத் 892).

ஸஃபில் (வரிசையில்) நாற்காலியை வைக்க வேண்டிய இடம்

தொழுகையின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நாற்காலியில் அமர்ந்து தொழுபவரைப் பொருத்தவரை, அவர் வரிசையில் நிற்கக்கூடிய தொழுகையாளிகளின் கால்களுக்கு நேராக நாற்காலியில் பின்னங்காலை அமைக்கவேண்டும், என்று ஷைக் இப்னு உஸைமின் அவர்கள் கூறினார்கள். (இஸ்லாம் சுவால் வ ஜவாப் 9209).

இரண்டாவதாக: ருகூஃவின் போதும் சுஜூதின் போதும் மட்டும் நாற்காலியில் அமரக்கூடியவர், நிற்பதைப்போன்று தான் கருதவேண்டும். எனவே ஸஃபில் நேராக  நிற்கவேண்டும் என்பதாக அஷ்ஷைகு அப்துர் ரஹ்மான் அல்பர்ராக் ஹஃபிளஹுல்லாஹ் அவர்கள் தெரிவித்தார்கள். (இஸ்லாம் சுவால் வ ஜவாப் 50684).

இதன்  அடிப்படையில் நாற்காலி ஸஃபிற்கு பின்னால் பிந்திய ஸஃபில் இருப்பவர்களுக்கு இடையூறு அளிக்கும் விதத்தில்  இருக்கக்கூடாது.இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் நாம் பயன்படுத்தும் நாற்காலி ஸஃபில் அதிகமான இடத்தை எடுத்துக்கொள்ளாத சிறிய அளவிலானதாக இருக்கவேண்டும்.

எதிர் வாதங்களுக்கான விளக்கம்

சில அறிஞர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்கள்:

1. குர்ஆனுக்கு மாற்றமானது.

2. ஹதீஸுக்கு மாற்றமானது.

3. உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.

4. தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது.

5. யூதர்கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.

6. இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.

இதில் முதல் இரண்டு ஆதாரத்தையும் நாமும் இங்கே மேற்கோள் காட்டியுள்ளோம்.

3. உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது என்பதைப் பொருத்தவரை  இது ஏற்கத்தக்க வாதமல்ல. இதற்கு மாற்றமான கருத்தை உலமாக்கள் கூறியுள்ளார்கள்.

நிற்க இயலாதவர் அமர்ந்து தொழும்போது சம்மணமிட்டு தொழுவது விரும்பத்தக்கதாகும்.  அதற்கும் அவர் இயலாதவராக இருந்தால் அவர் எப்படி முடியுமோ அப்படி அமர்ந்து கொள்ளலாம். இக்கருத்தை ஹனஃபியாக்களில் இமாம் அபூ யூஸுஃப் அவர்களும் மாலிகி மத்ஹபின் அறிஞர்களில் பெரும்பான்மையினரும். ஷாஃபி மற்றும் ஹன்பலி மத்ஹபினர்களும் கூறியுள்ளார்கள். இக்கருத்தையே அஷ்ஷைய்க் ஸாலிஹ் அல் உஸைமின் அவர்களும் தேர்ந்தெடுத்தார்கள்.  அவர்கள் கூறினார்கள் சம்மணமிட்டு அமருவது வாஜிபல்ல மாறாக அது சுன்னத் தான். ஒருவர் கால்களை நட்டுவைத்து இஃப்திராஷ் முறையில் அமர்ந்து தொழுதாலும் சரி, அல்லது பித்தட்டின் மீது  தவருக் முறையில் அமர்ந்து தொழுதாலும் சரி  அதில் தவறேதுமில்லை. நிற்க இயலாவிட்டால் அமர்ந்து தொழுங்கள் என்று நபி ﷺ அவர்கள் பொதுவாகக் கூறியுள்ளார்கள். எப்படி அமரவேண்டுமென்பதை நபிﷺ அவர்கள் விளக்கவில்லை.

1. அல்பினாயா ஷர்ஹுல் பிதாயா 2/687 ,அல் ஃபிக்ஹு அலா மதாஹிபில் அர்பஆ1/770

2. அத்தலக்கீன் ஃபில் ஃபிக்ஹில் மாலிகீ 1/51

3. ரவ்ளத்துத் தாலிபீன் 1/234 அல் ஃபிக்ஹு அலா மதாஹிபில் அர்பஆ1/770

4. அல் முக்னி 1/781

5. ஷரஹுல் முமத்திஃ 4/327

6. ஷரஹுல் முமத்திஃ அலா ஸாதில் முஸ்தக்னிஃ 4/327

நிற்க இயலாதவர் எப்படி வேண்டுமானாலும் அமரலாம் என்பது தான் இமாம் அபூ ஹனீஃபா அவர்களின் கருத்து. இதற்கான ஆதாரம், இயலாமையில் இருப்பவருக்கு தொழுகையின் ருகுனுகளில் சலுகையிருக்கும் போது அதை விட ஏற்றமானது அதன் வடிவம் தான். (அல் பஹ்ருல் ராயிக் ஷரஹ் கன்ஸுத் தகாயிக் 1/144 அல் மப்ஸூத் லி ஸர்கஸி 1/68 36)

சிலர், காலம் முழுவதும் வீல் சேரில் கழிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களால் தொழுகைக்காகத் தரையில் அமருவது இயலாத காரியம் அப்படியிருக்கும் போது நிற்க இயலாதவர் தரையில் தான் அமரவேண்டும் என்பது எப்படி பொருத்தமாக இருக்கும். இன்னும் சிலர் தரையில் அமரவும் அதன் பின் எழவும் முடியாத விதத்தில் பலவீனர்களாக இருப்பார்கள். அவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவது மட்டும் தான் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் நிற்க இயலாதவர் தரையில் அமர்ந்து தொழுவது வாஜிப் என்று உலமாக்கள் யாரும் கூறவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

4.தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது என்ற வாதத்தைப் பொருத்தவரை இது இயலாதவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகையாகும். அசல் தன்மையில் தான் நிறைவேற்ற வேண்டுமென்றால் அது சலுகையாக இருக்காது.

5. யூதர்கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சியாகும் என்பது ஒரு அர்த்தமற்ற வாதமாகும். தொழுகையைக்குறித்தோ அதன் சட்டங்கள் குறித்தோ ஒரு முஸ்லிம் யூதனிடமோ கிருஸ்தவனிடமோ கேட்டுத் தெரிய அவசியமில்லை. மேலும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எதுவுமில்லை எனும்போது இதற்கு அவர்கள் மீது பழிசுமத்துவது அறிவுப்பூர்வமான கருத்தல்ல என்பதை அறியலாம்.

6. இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும் என்ற கருத்து, மேற்கூறிய கருத்தின் அடிப்படையிலான வாதமாகும். ஒருவர் நாற்காலியைப் பயன்படுத்த அனுமதியில்லாத நிலையில் அப்படித் தொழுதால், உலமாக்கள் அவர்களுக்கு அதன் சட்டத்தை விளக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு இப்படியான கற்பனைகளுக்கு இடமளிக்கக்கூடாது.

மேற்கூறியவற்றின் சுருக்கம்:

1.காரணமில்லாமல் வேண்டுமென்றே ஒருவர் தொழுகையின் கியாமையும் ருகூவையும், சுஜூதையும் விட்டுவிட்டால் அவரது தொழுகை வீணாகிவிடும்.

2. இயலாமையிலிருந்தால் எதை செய்ய முடியாதோ அதை மட்டும் தான் விட்டுவிட முடியும் .

3. அமருவதைப்பொருத்தவரை அது இரண்டுவகையாக உள்ளது.

ஒன்று மார்க்கம் காட்டிய முறை. அதாவது சம்மணமிட்டு அமருவது, அல்லது இஃப்திராஷ் மற்றும் தவருக் முறையில் அமருவது.

இரண்டாவது, மார்க்கம் காட்டித்தராத அமரும் முறை. உயரமான இடத்திலோ நாற்காலியிலோ அமருவது.

4. முதலில் கூறிய அமரும் முறைதான் சிறந்த முறை.

5. நிற்க முடிந்தவர் சுன்னத்தான தொழுகையை நின்று தொழுதால், அவர் அதற்குரிய முழுமையான கூலியைப்பெறுவார்.  நிற்க முடிந்தவர் சுன்னத்தான தொழுகையை அமர்ந்து தொழுதால், பாதி கூலியைப் பெறுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *