Featured Posts
Home » பொதுவானவை » சூப்பர் முஸ்லிமிற்கு மறுப்பு » ஷைத்தானின் கொம்பு உதயமாகும் நஜ்து எங்கே?

ஷைத்தானின் கொம்பு உதயமாகும் நஜ்து எங்கே?

?சூப்பர் முஸ்லிம் வழிகேடர்களுக்கான மறுப்பு?

✍️ அஷ்ஷைய்க் M. பஷீர் ஃபிர்தவ்ஸி

நிச்சயமாக எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே உதவி தேடுகிறோம்; அவனிடமே மன்னிப்புக் கேட்கிறோம்; நம்முடைய நஃப்ஸின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்களை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டே பாதுகாப்புத் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ, அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை; யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ, அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை; அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை என்று சாட்சி சொல்கிறேன். நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடிமையும் தூதருமாவார் என நான் சாட்சி சொல்கிறேன். அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் அவனுடைய தூதரின் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், நஜ்தில் குழப்பங்கள் தோன்றும், பூகம்பங்கள் நிகழும் இன்னும் அங்கேதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறியுள்ளார்கள். இந்த நபிமொழியை வைத்து அறியாமையின் காரணமாகவும் அநியாயமாகவும் சில மூடர்கள் குர்ஆனையும் சுன்னாஹ்வையும் கடைபிடித்து வாழும் தவ்ஹீத்வாதிகளை பழிப்பதைக் காண்கிறோம்.நபிமொழிகளில் கூறப்பட்ட நஜ்து என்ற பகுதி சவுதியில் உள்ள ரியாளு(ரியாத்)தான் என்றும் அவர்கள் பொய்யாக வாதிட்டு வருகிறார்கள். அவர்களின் இந்தப் பொய்யை நிலைநிறுத்துவதற்காக அல்லாஹ்வின் தூதரின் ஹதீஸை மறுக்கிறார்கள்; வரலாற்றையும் திரிக்கிறார்கள். இத்தகையவர்கள் எந்தளவிற்கு மார்க்கத்தின் பெயரால் துணிந்து பொய்யைப் பரப்பக்கூடியவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பொய்யர்கள் ஆதாரங்களாகக் காட்டும் ஹதீஸ்களையும், அதன் உண்மையான விளக்கங்களையும் பார்ப்போம்.

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «هُنَاكَ الزَّلاَزِلُ وَالفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ» صَحيح البخاري ,

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

‘அல்லாஹ்வே! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!’ என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் ‘எங்கள் நஜ்து நாட்டிற்காகவும் (பிரார்த்தியுங்கள்)’ என்றனர். அதற்கு நபி ﷺ அவர்கள் ‘அங்குதான் குழப்பங்களும், பூகம்பங்களும் ஏற்படும். மேலும் அங்குதான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்’ என்று கூறினார்கள்.
?: ஸஹீஹுல் புஹாரி 1037

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

நபி ﷺ அவர்கள், ‘அல்லாஹ்வே! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!’ என்றார்கள். மக்கள், ‘எங்கள் ‘நஜ்த்’ பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்கள்)’ என்று கேட்க, (மீண்டும்) நபி ﷺ அவர்கள், ‘அல்லாஹ்வே! எங்கள் ஷாம் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக! எங்கள் யமன் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக!’ என்றே பிரார்த்தித்தார்கள். மக்கள், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எங்கள் ‘நஜ்த்’ பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்களேன்)’ என்று (மீண்டும்) கேட்டனர். அப்போது நபி ﷺ அவர்கள், மூன்றாவது முறையில் என்று நினைக்கிறேன் – “அங்குதான் நில நடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள்.
? : ஸஹீஹுல் புஹாரி 7094

♦️ இந்த ஹதீஸிற்கு வழிகேடர் களான ஷியாக்கள் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்!

சில ஷியாக்கள் உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள்தான் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள குழப்பம் என்பதாக வாதிடுகிறார்கள்.
(பார்க்க: ஷியாப் பிரிவைச்சார்ந்த அப்துல் ஹுஸைன் என்பவரின் அல்முராஜஆத் 237)

இது வடிகட்டியப் பொய் என்பதையும் மிகப்பெரிய அவதூறு என்பதையும் நாம் அறிவோம்.ஷியாக்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்களின் மீதுள்ள வெறுப்பின் காரணமாகத்தான் அவர்கள் இப்படிக் கூறியுள்ளார்கள்.

இந்த அவதூறுக்கு விரிவான மறுப்பை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது ஸில்ஸிலத்து ஆஹாதீஸுஸ் ஸஹீஹாவில் வழங்கியுள்ளார்கள். அதன் இறுதியில் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
‘மனோ இச்சையைத் தவிர்ந்து நடுநிலையாக சிந்திக்கக்கூடியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்டது மிகப்பெரிய பொய்யான அவதூறு இது என்பதை விளங்கலாம்’
? ஸில்ஸிலத்து ஆஹாதீஸுஸ் ஸஹீஹா 5/657

வேறு சில ஷியாக்களும், பித்அத்வாதிகளும், கப்ருவணங்கிகளும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள்தான் இந்த ஹதீஸ்களில் கூறப்பட்ட ஷைத்தானின் கொம்பு மற்றும் குழப்பம் என்பதாக வாதிடுகிறார்கள். அதாவது அவர்களின் ஏகத்துவ எழுச்சியும், ஷிர்க் மற்றும் பித்அத்திற்கெதிராக அவர்கள் செய்த பிரச்சாரங்களும்தான் அந்தக் குழப்பம் என்றும் வாதிடுகிறார்கள்.

இந்த வழிகேடர்கள் தங்கள் வாதத்தை நிலைநாட்ட அவர்கள் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட நஜ்து என்ற வார்த்தையை மட்டுமே ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அதாவது சவூதியில் உள்ள முன்னர் நஜ்து என்று அழைக்கப்பட்ட “ரியாத்”தான் அந்த நஜ்து என்றும், சவூதியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தவ்ஹீத் எழுச்சிதான் ஹதீஸில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட அந்த குழப்பம் என்றும் வாதிடுகிறார்கள். உண்மையில் இந்த ஹதீஸ்களில் சொல்லப்பட்ட அந்த நஜ்து எது? என்பதை இந்த வழிகேடர்கள் இருட்டடிப்பு செய்யும் மற்றைய ஹதீஸ்கள், மற்றும் முற்கால இமாம்களின் விளக்கங்களிலிருந்தும், வரலாறு மற்றும் பூகோள அமைப்பு ரீதியிலும் பார்ப்போம்.

நஜ்து என்பதன் பொருள் என்ன?

النَّجْدُ: ما أشْرَفَ من الأرضِ،

நஜ்து என்பதன் பொருள் ‘உயர்வான பகுதி’ என்பதாகும். பூமியில் உயர்வான பகுதிக்கு நஜ்த் என்று சொல்லப்படும் என்று அரபி மொழி அகராதியில் கூறப்பட்டுள்ளது.
? பார்க்க காமூஸுல் முஹீத்:1:340, லிஸானுல் அரபு:3:413, இமாம் இப்னு அஸீர் அவர்களில் அந்நிஹாயா ஃபி கரீபில் ஹதீஸ் 5:19, தாஜுல் அரூஸ் 2:509

நஜ்து குறித்து விரிவுரை நூல்களில் சொல்லப்பட்ட விளக்கங்கள்:

وَقَالَ الْخَطَّابِيُّ نَجْدٌ مِنْ جِهَةِ الْمَشْرِقِ وَمَنْ كَانَ بِالْمَدِينَةِ كَانَ نَجْدُهُ بَادِيَةَ الْعِرَاقِ وَنَوَاحِيهَا وَهِيَ مَشْرِقُ أَهْلِ الْمَدِينَةِ وَأَصْلُ النَّجْدِ مَا ارْتَفَعَ مِنَ الْأَرْضِ وَهُوَ خِلَافُ الْغَوْرِ فَإِنَّهُ مَا انْخَفَضَ مِنْهَا وَتِهَامَةُ كُلُّهَا مِنَ الْغَوْرِ وَمَكَّةُ مِنْ تِهَامَةَ انْتَهَى فتح الباري

பெரும் கொள்கைக் குழப்பங்கள் தோன்றக்கூடிய இடமாக அல்லாஹ்வின் தூதர் ﷺ முன்னறிவிப்பு செய்த பகுதிதான் நஜ்து என்ற பகுதி.

அப்பகுதி எங்கே உள்ளது என்பது பற்றி இமாம் கத்தாபி (ரஹ்) (மரணம்: ஹிஜ்ரி 388 ) அவர்கள் கூறுகிறார்கள்:
‘மதீனாவில் உள்ளவர்களுக்கு கிழக்கில் இருக்கக்கூடிய பகுதிதான் நஜ்தாகும். நஜ்து என்றால் ‘மேடான இடம்’ என்று அர்த்தம்.

இராக்கில் உள்ள கிராமமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்தான் நஜ்து என்ற மதீனாவின் கிழக்குப் பகுதியாகும். தாழ்வான பகுதிகள் அனைத்தும் திஹாமாவாகும். மக்கா என்பது திஹாமாவின் ஒரு பகுதியாகும்.
?: ஃபத்ஹுல் பாரி 13/47

இமாம் ஐனி (ரஹ்) அவர்கள் (மரணம்: ஹிஜ்ரி 855 ) ஸஹீஹுல் புஹாரியின் விளக்கவுரையில் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்:

نجد من بِلَاد الْعَرَب، خلاف الْغَوْر، والغور هُوَ تهَامَة، وكل مَا ارْتَفع من تهَامَة إِلَى أَرض الْعرَاق فَهُوَ نجد، وَهُوَ فِي الأَصْل مَا ارْتَفع من الأَرْض،

நஜ்து என்பது அரபு தேசத்தில் உள்ளது. இச்சொல் ‘தாழ்வான’ என்பதற்கு எதிர்ச்சொல்லாகும். தாழ்வான பகுதி என்பது திஹாமாவாகும். திஹாமாவிலிருந்து இராக் வரை உயர்ந்திருக்கக்கூடிய பகுதிதான் நஜ்தாகும். அசலில் நஜ்த் என்றால் உயர்வான பகுதியாகும்.
? உம்தத்துல் காரி 1/266

அல்லாமா அல்கிர்மானி (ரஹ்) அவர்கள் (மரணம் : ஹிஜ்ரி 786 ) ஸஹீஹுல் புஹாரியின் விளக்கவுரையில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

وأصل النجد ما ارتفع من الأرض وهو خلاف الغور

அசலில் நஜ்து என்றால் உயர்வான பகுதியாகும்.தாழ்வான என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லாகும்.
?: ஷரஹுல் கிர்மானி கிதாபுல் ஃபிதன் பாபுல் ஃபித்னத் கிபலல் மஷ்ரிகி 24/168

وَأَصْلُ النَّجْدِ مَا ارْتَفَعَ مِنَ الْأَرْضِ وَهُوَ خِلَافُ الْغَوْرِ

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் (மரணம்: ஹிஜ்ரி 852) கூறுகிறார்கள்:

அசலில் நஜ்த் என்றால் உயர்வான பகுதியாகும். தாழ்வான என்பதற்கு எதிர்ச்சொல்லாகும்.
? ஃபத்ஹுல் பாரி 13/47

மேற்கூறிய அனைத்து ஹதீஸ் விரிவுரையாளர்களும் மொழியியல் வல்லுநர்களும் இன்னும் அரபிய பூகோள அறிஞர்களும் நஜ்து என்பது ஒரு குறிப்பிட்ட ஊருக்கான பெயர் அல்ல.மாறாக ‘பூமியில் உயர்வாக உள்ள பகுதிதான் நஜ்து’ என்பதில் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

அரபுலகில் ஏராளமான நஜ்துகள் (மேட்டு நிலங்கள்) உள்ளன. அதன் பெயர்கள் முஃஜமுல் புல்தான் (நாடுகளைப் பற்றிய அகராதியில்) கூறப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் யாகூத்துல் ஹமவி (ரஹ்) என்பவர் பாக்தாதில் பிறந்தவர் (மரணம்: ஹிஜ்ரி 626).

  1. யமாமாவில் உள்ள நஜ்துல் பர்கு
  2. நஜ்துல் ஹால்
  3. நஜ்துல் இஜாஉ
  4. திமஷ்கில் உள்ள நஜ்துல் உகாப்
  5. நஜ்துல் வுத்தி
  6. நஜ்துல் அஸ்ரி
  7. நஜ்துல் இஃப்ரி
  8. நஜ்துல் குப்கிப்
  9. நஜ்து முரீஃ
  10. நஜ்துல் யமான்
  11. நஜ்துல் ஹிஜாஸ்
  12. நஜ்துல் இராக்

?: பார்க்க முஃஜமுல் புல்தான் 5:265, தாஜுல் அரூஸ் 2:509.

இமாம் அஸ்மஹீ (ரஹ்) அவர்கள் (மரணம்: ஹிஜ்ரி 215 ) கூறுகிறார்கள்:

மேற்கூறிய நஜ்துகளில் நஜ்துல் பர்கு, நஜ்துல் ஹால் ஆகியவை யமாமாவில் உள்ளது. பூகோளரீதியாகவும், வரைபடத்திலும் உள்ள அரபு நஜ்துகளை கவனித்துப் பார்த்தால் மதீனாவிற்கு கிழக்கில் இராக்கின் நஜ்து இருப்பதைக் காணலாம்.
? முஃஜமுல் புல்தான் 5:262

ஷைத்தானின் கொம்பு உதயமாகும், குழப்பங்கள் தோன்றும் அந்த நஜ்துப் பகுதி இராக்தான் என்பதை ஹதீஸ்களும் உறுதிப்படுத்துகின்றன.

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُشِيرُ بِيَدِهِ يَؤُمُّ الْعِرَاقَ: ” هَا، إِنَّ الْفِتْنَةَ هَاهُنَا، هَا، إِنَّ الْفِتْنَةَ هَاهُنَا، – ثَلَاثَ مَرَّاتٍ مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ “

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ﷺ தனது கையை இராக்கை நோக்கி சுட்டிக்காட்டி அங்கேதான் குழப்பங்கள் தோன்றும்.அங்கேதான் குழப்பங்கள் தோன்றும் என்று மூன்று முறை கூறி, அங்கேதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்றும் கூறினார்கள்.
?: முஸ்னத் அஹ்மத் 6302.

இந்த ஹதீஸை இமாம் ஷுஐப் அர்னாவூத் (ரஹ்), இமாம் அல்பானி (ரஹ்) ஆகியோர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

பலதரப்பட்ட நஜ்துப் பகுதிகளில் ஹதீஸில் கூறப்பட்ட ஷைத்தானின் கொம்பு என வர்ணிக்கப்பட்ட நஜ்துப்பகுதி என்பது இராக்தான் என்பதை அல்லாஹ்வின் தூதரே தெளிவுபடுத்திவிட்டார்கள். ஆனால் பொய்யர்கள் அவர்களின் அசத்தியக் கொள்கையை நிறுவுவதற்காக தங்களின் வழிகேட்டிற்கு எதிராக இருக்கக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னாவினர்களையும், ஷிர்க்கிற்கெதிராக போராடிய இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களையும் எதிர்ப்பதற்காக நஜ்து என்பது ஹிஜாஸில் இருக்கக்கூடிய ரியாளு(ரியாத்) பகுதிதான் என்று அல்லாஹ்வை அஞ்சாமல் துணிந்து பொய்யைப் பரப்புகிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மீதும் பொய்யை இட்டுக்கட்டுகிறார்கள்.பொய்யர்கள் அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சிக்கொள்ளட்டும்!

இராக்கில் தோன்றிய குழப்பங்கள்:
நபியவர்கள் முன்னறிவிப்பு செய்தபடியே இராக்கில்தான் இஸ்லாத்திற்கெதிரான அதிகமான குழப்பங்கள் தோன்றி இந்த மார்க்கத்திலும், முஸ்லிம் சமுதாயத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1)அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜிம் அல் முராதி என்பவனால் அலீ (ரலி) அவர்கள் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டு இராக்கின் கூஃபாவில் வைத்து கொல்லப்பட்டார்கள்.

இது குறித்து இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றிய அனைத்து குழப்பங்களும் இராக்கில்தான் தோன்றியது.அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுஸைன் (ரலி) அவர்கள் அங்கே வைத்துதான் கொல்லப்பட்டார்கள்.
?: இஸாபா ஃபீ தமீஸி ஸஹாபா 1/332

2) இராக்கில் நிகழ்ந்த குழப்பங்களில் மிகக் கொடியது நபியவர்களின் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்களின் கொலையாகும். இந்த சமுதாயத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ஃபித்னாவும் அதுதான்.

2) ஸஹாபாக்களை காஃபிர்கள் என விமர்சிக்கக்கூடிய, வரலாறு நெடுகிலும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய குழப்பவாதிகளான ஷியாக்கள் இராக்கில்தான் தோன்றினார்கள்.

2) ஈமானுக்கு எதிரான கொள்கையை உருவாக்கிய கராமித்தாக்கள் இராக்கில்தான் தோன்றினார்கள்.இவர்கள்தான் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை ஹிஜிரி 317 ல் மக்காவிலிருந்து இராக்கிற்கு கொண்டு சென்றார்கள்.
?: அல்பிதாயா வந்நிஹாயா 11/160

3) முதன்முதலில் விதியை மறுத்த கத்ரியாக்கள் இராக்கின் பஸராவில் தோன்றினார்கள். இது குறித்து இமாம் யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறும் செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் முதலாவது செய்தியாக பதியப்பட்டுள்ளது. மஅபத் அல் ஜுஹ்னி என்பவன்தான் இக்கருத்தை முதலில் கூறினான் என்பதையும் அவர் தெரிவித்தார் .

4) இந்த சமுதாயத்தில் முதன்முதலில் தோன்றிய, உஸ்மான் (ரலி) அவர்களை கொலை செய்த வழிகெட்டக் கூட்டமான ஹவாரிஜ்களும் இராக்கில்தான் தோன்றினார்கள். இதை நபியவர்களும் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

யுசைர் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்:

நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், ‘காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி ﷺ அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி ﷺ அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள்:’ இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்’ என்றார்கள்.
?: ஸஹீஹுல் புஹாரி 6934.

5) இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
கிழக்கில் இருக்கக்கூடியவர்கள் (இராக்வாசிகள்)அன்றைய தினம் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள். அந்தப் பகுதியில்தான் குழப்பங்கள் தோன்றும் என்பதை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அறிவித்தார்கள். நபி ﷺ அவர்கள் முன்னறிவிப்பு செய்ததைப் போன்றே நடக்கவும் செய்தது.முதல் குழப்பம் கிழக்கில்தான் தோன்றியது. முஸ்லிம்களின் பிரிவினைக்கு அதுவே காரணமாக மாறியது.இதைத்தான் ஷைத்தான் விரும்புகிறான்.அதே போன்றுதான் மார்க்கத்திற்கு முரணான பித்அத்துகளும் இராக்கில்தான் உருவானது.
?: ஃபத்ஹுல் பாரி 13/47

عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، قَالَ: كُنْتُ شَاهِدًا لِابْنِ عُمَرَ، وَسَأَلَهُ رَجُلٌ عَنْ دَمِ البَعُوضِ، فَقَالَ: مِمَّنْ أَنْتَ؟ فَقَالَ: مِنْ أَهْلِ العِرَاقِ، قَالَ: انْظُرُوا إِلَى هَذَا، يَسْأَلُنِي عَنْ دَمِ البَعُوضِ، وَقَدْ قَتَلُوا ابْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا»صَحيح البخاري,

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம் (ரஹ்) அறிவித்தார்:

நான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒருவர் அவர்களிடம், ‘(இஹ்ராம் கட்டியவர்) கொசுக்களைக் கொன்றுவிட்டால் பரிகாரம் என்ன?’ என்று கேட்டார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ‘நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?’ என்று கேட்டார்கள். அவர், ‘நான் இராக்வாசி’ என்று பதிலளித்தார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்மிடம் இருந்தவர்களிடம் ‘இவரைப் பாருங்கள்! கொசுக்களைக் கொன்றால் பரிகாரம் என்ன? என்று இவர் என்னிடம் கேட்கிறார். ஆனால், இராக்வாசிகளான இவர்களோ நபி ﷺ அவர்களின் (புதல்வி ஃபாத்திமா அவர்களின்) புதல்வரைக் கொன்று விட்டார்கள். (ஆனால்) நபி ﷺ அவர்கள், (ஹஸன் (ரலி) ஹுசைன் (ரலி) ஆகிய) இருவரும் உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்’ என்று (பாராட்டிக்) கூறக்கேட்டேன்’ என்று கூறினார்கள்.
?: ஸஹீஹுல் புஹாரி 5994, 3753

இராக்வாசிகள்தான் ஹுஸைன் (ரலி) அவர்களைக் கொலை செய்தார்கள் என்பதற்கு இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றும் ஆதாரமாக உள்ளது. இதையும் சிலர் மறுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

குழப்பங்கள் தோன்றக்கூடிய நஜ்து இராக்தான் என்பதை மேலும் சில ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஹதீஸ்களை வழிகேடர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.

سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْفَجْرِ، ثُمَّ انْفَتَلَ، فَأَقْبَلَ عَلَى الْقَوْمِ، فَقَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا وَصَاعِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا ويَمَنِنَا» فَقَالَ رَجُلٌ: وَالْعِرَاقُ يَا رَسُولَ اللَّهِ، فَسَكَتَ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا وَصَاعِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي حَرَمِنَا، وَبَارِكْ لَنَا فِي شَامِنَا ويَمَنِنَا» فَقَالَ رَجُلٌ: وَالْعِرَاقُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «مِنْ ثَمَّ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ، وَتَهِيجُ الْفِتَنُ»المعجم الأوسط

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

நபி ﷺ அவர்கள், ‘அல்லாஹ்வே! எங்களது மதீனாவிற்கு அபிவிருத்தியை வழங்குவாயாக! அல்லாஹ்வே! எங்கள் ‘முத்’திலும், ஸாவிலும் எங்களுக்கு அபிவிருத்தியை வழங்குவாயாக!’ அல்லாஹ்வே எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக! என்றார்கள். அப்போது ஒரு மனிதர் , எங்கள் இராக் பகுதியிலும் அபிவிருத்தியை வழங்கும்படி பிரார்த்தியுங்கள் என்று கேட்டார்.அதற்கு நபி ﷺ அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.பின்னர் ‘அல்லாஹ்வே! எங்களது மதீனாவிற்கு அபிவிருத்தியை வழங்குவாயாக! அல்லாஹ்வே! எங்கள் முத்திலும், ஸாவிலும் எங்களுக்கு அபிவிருத்தியை வழங்குவாயாக!’ அல்லாஹ்வே! எங்கள் ஹரமிற்கும்,எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!’ என்றார்கள். அப்போது ஒரு மனிதர் , எங்கள் இராக் பகுதியிலும் அபிவிருத்தியை வழங்கும்படி பிரார்த்தியுங்கள் என்று மீண்டும் கேட்டார். அப்போது நபி ﷺ அவர்கள், ‘அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்; குழப்பங்களும் தோன்றும் ‘ என்று கூறினார்கள்.
?: இமாம் தப்ரானி (ரஹ்) அவர்களின் அல் முஃஜமுல் அவ்ஸத் 4098

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، اللهُمَّ بَارِكْ فِي يَمَنِنَا» فَقَالَهَا مِرَارًا فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، قَالُوا: يَا رَسُولَ اللهِ وَفِي عِرَاقِنَا قَالَ: «إِنَّ بِهَا الزَّلَازِلَ، وَالْفِتَنَ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ»المعجم الكبير للطبراني

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

நபி ﷺ அவர்கள் ‘அல்லாஹ்வே! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். இவ்வாறு பலமுறை கூறினார்கள். மூன்றாவது அல்லது நான்காவது முறை கூறும்போது மக்கள் எங்கள் இராக் பகுதியிலும் அபிவிருத்தியை வழங்கும்படி பிரார்த்தியுங்கள் என்று கேட்டார்கள்.அப்போது நபி ﷺ அவர்கள்,’ அங்குதான் நில நடுக்கங்கள் ஏற்படும்; அங்குதான் குழப்பங்களும் தோன்றும்; இன்னும் அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்’ என்று கூறினார்கள்.
?: இமாம் தப்ரானி அவர்களின் அல்முஃஜமுல் கபீர் 13422, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 7301, முஃஜம் அபீயஃலா 78 முஸ்னத் அல்பஸ்ஸார் 5881

سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، يَقُولُ: يَا أَهْلَ الْعِرَاقِ مَا أَسْأَلَكُمْ عَنِ الصَّغِيرَةِ، وَأَرْكَبَكُمْ لِلْكَبِيرَةِ سَمِعْتُ أَبِي عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْفِتْنَةَ تَجِيءُ مِنْ هَاهُنَا» وَأَوْمَأَ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ «مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ» صحيح مسلم

ஃபுளைல் பின் ஃகஸ்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இராக்வாசிகளே! நீங்கள் பெரும்பாவத்தைச் செய்துகொண்டு, சிறு பாவத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருப்பது வியப்பையே அளிக்கிறது. என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “கிழக்குத் திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தவாறு, குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து” என்று கூறியதை நான் கேட்டேன்.
?: ஸஹீஹ் முஸ்லிம் 2095 தமிழ் மொழிபெயர்ப்பில் 5569.

குழப்பங்கள் தோன்றும் நஜ்து என்பது சவூதியில் உள்ள ரியாத் தான் என்ற ஹதீஸிற்கு மாற்றமான பொய்யான கருத்து பிற்காலத்தில் துருக்கியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

ஆதாரங்களின் ஒளியிலும், அறிஞர்களின் விளக்கத்தின் அடிப்படையிலும்,புவியியல் அமைப்பிலும் குழப்பங்கள் தோன்றும் என்று நபிமொழியில் கூறப்பட்ட அந்த நஜ்து என்பது இராக்தான் என்பது நிரூபணமாகிவிட்டது. இதன் பின்னரும் பொய்யர்கள் அது சவுதியைத்தான் குறிக்கும் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபைத்தான் (ரஹ்) குறிக்கும் என்று கூறுவார்களேயானால் அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன்வைக்கிறோம். இதற்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!.

1)இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் வருவதற்கு முன் இந்த ஹதீஸில் கூறப்படும் நஜ்து என்பது ரியாதைதான் குறிக்கும் என்று கூறிய அறிஞர்களின் பட்டியலைக் காட்டுங்கள் ?

2) இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் செய்த குழப்பங்களை அவர்களின் நூல்களிலிருந்து உங்களால் எடுத்துக் காட்ட முடியுமா?

சமகால தவ்ஹீதின் கண்ணியமிக்க எழுச்சி நாயகனை விமர்சிக்கக்கூடியவர்கள் உண்மையில் அவரின் எந்த ஒரு நூலையும் வாசிக்காதவர்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்களின் விமர்சனமானது குருடன் யானையை வர்ணிப்பது போல்தான். இந்த வழிகேடர்கள் யூகத்தின் அடிப்படையிலும் கற்பனையின் அடிப்படையிலும் மட்டுமே பொய்களை அள்ளிவீசிக் கொண்டிருப்பவர்கள் என்பதை நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. இத்தகையவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:8)

மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லாவிட்டால் நீங்களும் சங்கிகளும் ஒரே நிலையில் உள்ளவர்களைப் போன்றுதான்.பொய்யை மட்டுமே பேசி, எந்த நியாயமும் இல்லாமல் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களை எதிர்க்கக்கூடிய இவர்கள் அவரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தவ்ஹீதை எதிர்த்து இணைவைப்பிற்கு துணைபோகக் கூடியவர்களே! இன்னும் ஷியாக்களை ஆதரிக்கக்கூடியவர்களே! என்பதும் நிரூபணமாகிறது.

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் வரலாறு தமிழில் நூல் வடிவில் உள்ளது. அவர்களது சில நூல்களும், இணைய தள இணைப்புகளும் தமிழில் உள்ளன.அதன் பட்டியலை கீழே தருகிறோம்.உண்மையை அறிய விரும்புவோர் அதைப் பார்வையிடுங்கள்.

1. கிதாபுத் தவ்ஹீத் (தமிழில் அஷ்ஷைய்க்- ஜலீல் மதனி)

2. தவ்ஹீதின் எதிர்ப்பிற்கு தக்க பதில்கள் (தமிழில் அஷ்ஷைய்க் – கமாலுத்தீன் மதனி حفظه الله)

3.மூன்று அடிப்படைகள்(தாருல் ஹுதா வெளியீடு)

4.இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் வரலாறு (தமிழில் அஷ்ஷைய்க் கமாலுத்தீன் மதனி حفظه الله)

http://www.islamkalvi.com/?p=123769

http://www.islamkalvi.com/?p=123797

http://www.islamkalvi.com/?p=123825

https://youtu.be/_UqSOuTuvCg ——–1
http://www.islamkalvi.com/?p=122364

https://youtu.be/mo83am8733s ——–2
http://www.islamkalvi.com/?p=122402

https://m.facebook.com/1505176869714142/posts/1566877223544106/?_rdr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *