Featured Posts
Home » வரலாறு » பிற வரலாறு » முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 1

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 1

எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.)

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான ஓர் நல்லறிஞர். அவர், அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் முஸ்லிம் சமூகப் புனர் நிர்மாணத்தை மிகப் பெரும் தியாகத்துடன் மேற்கொண்டார். முஹம்மத் என்பது அவரது இயற் பெயர். அப்துல் வஹ்ஹாப் என்பது அவரது தந்தையின் பெயர். எனினும், அல்குர்ஆன் – சுன்னாவின் பரம எதிரிகள், தந்தையின் பெயரில் அவரை அப்துல் வஹ்ஹாப் என்று அழைத்ததோடு, வஹ்ஹாபிஸம் என்று அவர் ஒரு கொள்கையைப் பிரசாரம் செய்ததாக எழுதியும் பேசியும் தமது அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். உலகில் வஹ்ஹாபிஸம் என்ற ஒரு கொள்கை எங்கும் யாராலும் உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. அவரது போதனை இஸ்லாத்திற்கு எதிரான அனைத்தையும் தவறு என்று அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் ஆதாரங்களுடன் நிறுவி, தூய இஸ்லாத்தை மக்களுக்கு சாத்வீக வழியில் போதனை செய்தார். அவர் எழுதிய நூல்களை ஆய்வு செய்யும் யாரும் இந்த உண்மையை அவதானிக்கலாம். அகிம்சை வழியில் பிரசாரம் செய்த ஒருவரை அந்த சமூகத்திலிருந்த தீமையின் காவலாளிகள் வன்மையாகத் தாக்கினார்கள். நாட்டை விட்டு விரட்டினார்கள். அத்தனை கொடுமைகளையும் செய்த தீமையின் நண்பர்கள் அவர் மீதே பழியையும் சுமத்தினார்கள். எனவே, அவரது வரலாற்றையும் அவர் தஃவாப் பணியில் எதிர் கொண்ட சவால்களையும் சுருக்கமாக இங்கு முன்வைக்கின்றோம்.

அகில உலகிற்கும் ஒரு மைய இடமாக அமையும் விதத்தில், அதன் இதயம் போன்ற பகுதியில் – புவியின் வட அரைப்பகுதியில் அரபுத் தீபகற்பம் அமைந்துள்ளது. இது, இன்றைய உலகில் காணப்படும் பல நாகரிகங்களின் உறைவிடமாகவும் பல இறை வேதங்கள் இறக்கப்பட்ட தாயகமாகவும் பல நபிமார்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. நபிமார்களின் மறைவின் பின்னர், இஸ்லாத்தைப் புத்தாக்கம் செய்கின்ற மகத்தான பணியை முன்னெடுத்துச் செல்கின்ற சீர்திருத்தவாதிகள் பலரின் தோற்றத்திற்கும் உருவாக்கத்திற்கும் காரணமாக அரபுத் தீபகற்பம் விளங்குகின்றது.

முஸ்லிம் அனைவரும் ஒன்றித்து முன்னோக்கும் முதல் இறை இல்லமும் நபியவர்களின் சொந்த செலவில் கட்டப்பட்ட மஸ்ஜிதுன் நபவியும் சவுதி அரேபியாவிலேயே உள்ளன. இன்றைய பொருளாதார வல்லரசாகத் திகழும் வரலாற்றுப் பெருமைமிக்க அரபுத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கி அமைந்துள்ள ஒரு நாடே ஸவூதி அரேபியாவாகும்.

இத்தகைய ஒரு சிறப்பிற்குரிய பிரதேசம், அதன் புகழ்மிக்க பாரம்பரியத்தை இழந்து, இஸ்லாமியத்தைத் தொலைத்த துருக்கிக்கு அடிமைப்பட்டு, இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையிலிருந்து தூரமாகி, சிற்றரசுகளாகப் பிரிந்து, சிதறி கி.பி 18ம் நூற்றாண்டுகளில் காணப்பட்டது.

இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியங்கள் மறக்கப்பட்டு, அதற்கு மாற்றமான, இஸ்லாம் அங்கீகரிக்காது, வன்மையாகத் தடுக்கும் நடவடிக்கைகள் மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. சமூக ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டு, ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலையில் அனைத்து தீமைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில் அறிஞர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் கொலை அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் ஆட்படுத்தப்பட்டு, முஸ்லிம் சமூகம் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.

பாமர மக்களின் அறியாமையை, ஆதிக்க சக்திகள் நன்கு பயன்படுத்தி, அதிகார வெறியாட்டங்களை மிகத் தந்திரமாக மேற்கொள்ளத் தொடங்கியிருந்தன.

அரசியல், ஆன்மீக தகிடுதத்தங்கள் புரியப்பட்ட ஒரு காலகட்டமாகவே 18ம் நூற்றாண்டு காணப்பட்டது. இத்தகைய ஒரு காலத்தில் தான் முஹம்மது (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் இஸ்லாமியப் பாரம்பரியம் பின்பற்றப்படும் ஒரு குடும்பத்தில் அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்கு மகனாக ஜனனிக்கின்றார்கள்.

அரேபியா மட்டுமல்லாது, இஸ்லாமிய உலகு முழுவதும் அப்போது, ‘ஜாஹிலிய்யத் கோர இருள் சூழ்ந்திருந்தது. அந்தப் பயங்கர இருளை விரட்டியடிக்கும் ஒளி 18ம் நூற்றாண்டில், ஹிஜாஸிலிருந்து தோன்றியது. நவீன இஸ்லாமிய எழுச்சியின் முதல் ஒளிக்கீற்று எங்கிருந்து தோன்றியதோ, அந்த இருள் சூழ்ந்த காலத்தைப் புரிந்து கொண்டால்தான், அன்னாரின் சீர்திருத்தப் பணியையும் அதன் வலுவையும் வலிமையையும் புரிந்து கொள்ளலாம்.

சமய, சமூக நிலைகள்
சத்திய மார்க்கம் அசத்திய இருளால் சூழப்பட்டிருந்தது. இறுதித்தூதர் புனர்நிர்மாணம் செய்த தூய ஏகத்துவக்கொள்ளை சில மவ்ட்டீகக் கருத்துக்களாகவும் சூபிகளின் ஆழமற்ற கதைகளாகவும் மாறிவிட்டிருந்தது. உயிரோட்டமான சமூகப்பணியாற்றும் பள்ளிகள், உண்மையான தொழுகையாளிகள் இன்றி பள்ளிகள் வெறிச்சோடிப் போயிருந்தன. மார்க்க அறிவற்ற பித்அத் மோகிகள் பள்ளியை ஆக்கிரமித்திருந்தனர்.

அறிஞர்கள் என்ற போர்வையில், போலிகளை உலவவிடும் போலிகள் நிறைந்தனர். ஒரு கூட்டம் கைகளில் தாயத்துகளோடு அடக்கஸ்தளங்களை வணக்கஸ்தளங்களாக எண்ணிக்கொண்டு, அவற்றை சுற்றி வலம் வந்தனர்.

மக்களுக்கு மத்தியில் அவர்கள் பொய்களையும் அசத்தியங்களையும் பரப்பியதோடு, அவ்லியாக்கள் என்று அவர்கள் கருதிய சில அடக்கஸ்தளங்களைத் தரிசிப்பதைத் தூண்டினர். அடக்கஸ்தளங்களில் அடக்கப்பட்டிருப்பவர்களிடம் ‘பரகத்’ பெறுவதை வலியுறுத்தினர்.

அல்குர்ஆனின் போதனைகளும் சிறப்புக்களும் மக்கள் மனதை விட்டு மறக்கடிக்கப்பட்டு, மார்க்கத்தின் பெயரால் அசத்தியங்களும் கற்பனைக் கதைகளும் துருக்கிலிருந்தும் இன்னும் சில பகுதிகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுப் பரப்பப்பட்டன. மதுவும் அபினும் இழிகுணங்களும் எங்கும் பரவியிருந்தன. எத்தகைய பாவமும் மானக்கேடான பாவச்செயல்களும் வெட்கமுமின்றி அரங்கேற்றப்பட்டன.

அரபுத் தீபகற்பங்களிலுள்ள நகரங்களுக்கு ஏற்பட்ட அவல நிலை மக்கா, மதீனா நகர்களுக்கும் ஏற்பட்டது. புனித ‘ஹஜ்’கடைமை கூட கேலிக்குரியதொரு விடயமாக முழு இஸ்லாமிய நாடுகளிலும் மாறிப்போயிருந்தது. இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடியது.

ஜூமைலியா என்ற இடத்தில் ஸைத் (ரழி) அவர்களின் அடக்கஸ்தலம் காணப்பட்டது. அதனை மக்கள் வணங்கி வந்தனர். திரஇய்யாவில் ஸஹாபாக்களினது எனக் கருதப்படும் சில அடக்கஸ்தலங்கள் காணப்படன. அவை, ஷிர்க் வழிபாடுகளுக்கு மத்தியதலமாக அமைந்துகாணப்பட்டன.

‘கபீரா என்ற ஊரில் ளிரார் இப்னு அஸ்வர் அவர்களுடைய அடக்கஸ்தலம் காணப்பட்டது. அப்பகுதி பித்அத்துக்கள், ஷிர்க்குகளின் சந்தையாகக் காணப்பட்டது’ புதா என்றதொரு ஊரில் காணப்பட்ட மரத்தைப் புனிதமரமாகக் கருதி, இளைஞர்களும் பெண்களும் அங்கு நடந்துகொண்ட வெட்கக்கேடான நிலைகளை எழுதமுடியாது என மஸ்ஊத் நத்வி அவர்கள் குறிப்பிடுகிறார். குழந்தை வேண்டி பெண்கள் அம்மரத்தையே தம் கணவனாக்கிக்கொள்ள முயன்றனர். திரஇய்யா என்ற நகருக்கு அருகாமையில் காணப்பட்ட ஒரு குகையில் மிகப்பெரும் பாவச்செயல்கள் மார்க்கத்தின் பெயரால் நடந்து வந்தன.

அஹ்மத் அப்துல் கபூர் அத்தார் அவர்கள் தனது ‘முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்’ என்ற நூலில் குறிப்பிடும் கீழ்வரும் நிகழ்ச்சி,அப்போதைய சவுதி அரேபியாவின் நிலையைப் படம் பிடித்துக் காட்டப்போதுமானது.

‘கசீம்’ என்ற பகுதியின் தலைவர்கள் தமது பகுதியின் அறிஞர்கள் குறித்து, குறிப்பாகச் சீர்திருத்தம் பேசுவார் குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனத்தீர்மானித்தனர். இதற்காக ஒவ்வொரு கிராமத்தவரும் தமது பிரதிநிதியாக ஒருவரை அனுப்ப வேண்டும் என அறிவித்தனர். இது அன்று மக்காக் காஃபிர்கள் நபியவர்களுக்கு எதிராக எடுத்த முடிவைப் பிரதிபலிக்கிறது.

ஒரு வெள்ளிக்கிழமையன்று அப்பிரதிநிதிகள் அனைவரும் கூடி, தம் பிரதேசத்தில் வாழும், தமது நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்கும் அறிஞர்களை என்ன செய்வது எனத் தீர்மானித்தனர். நாடுகடத்த வேண்டும், சிறை செய்ய வேண்டும், சித்திரவதை செய்ய வேண்டும் எனப் பல கருத்துக்கள் அங்கு தெரிவிக்கப்பட்டன.

இறுதியாக, ஒவ்வொரு கிராமத்திற்கும் தம் ஊரிலுள்ள அறிஞர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இம்முடிவை மிகப்பயங்கரமாக ஒவ்வொரு ஊரும் நிறைவேற்றலாயிற்று. ‘கப்ரா’ என்ற நகரத்தினர் தமது அறிஞர் மன்சூர் அபுல்கைலை அவர் ஜூம்ஆவுக்குப் போகும் வழியில் கொலை செய்தார்கள்.

ஜனாவர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள அறிஞர்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். கண் பார்வையற்ற ஓர் அறிஞரைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாது, அவரை தலைகீழாகக் கட்டித்தொங்கவும் விட்டனர். இவ்வாறு, ஒவ்வொரு ஊரும் நகரமும் தன் அறிஞர்களைக் கொன்று குவித்தது. கொடியவர்கள் இவ்வளவு தைரியமாக முடிவெடுத்து, எந்த எதிர்ப்புமின்றி, தம் கொடிய செயலை அமுல்படுத்தினார்கள்.

கி.பி.18ம் நூற்றாண்டுகளில் ஸஊதி அரேபியாவின் நிலை எவ்வளவு மோசமாகி விட்டிருந்தது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

அரேபியாவின் அரசியல் நிலை:-
அன்று ஹிஜாஸ் பகுதியின் அரசியல் நிலையும் மிக மோசமாகவே காணப்பட்டது. உட்பூசல்களும் போராட்டங்களும் நிறைந்திருந்தன. மார்க்க உணர்வு மங்கி, ஷிர்க்கும் பித்அத்தும் சம்பிரதாயங்களும் பரவி, ஆட்சியும் அதிகாரமும் கோத்திர உணர்வும் மிகுந்ததாக இருந்தது. மிகச் சிறிய பகுதிகளுக்கும் ஓர் ஆட்சி என ஹிஜாஸ் முழுமையிலும் பல குறுநில ஆட்சியாளர்கள் காணப்பட்டனர்.

நஜ்த் என்ற சிறிய பிரதேசம் பல சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து, பல சிற்றரசர்களின் கீழ் இருந்தது. அடிக்கடி குறுநில மன்னர்களுக்கு மத்தியில் யுத்தங்கள் நடைபெற்றன. அப்போது கொள்ளையும் பெண்கள் மீது பாலியல் பலாத்காரமும் சிறுபிள்ளைகள் கொல்லப்படலும் பெண்கள் சிறைபிடிக்கப்படலும் அதிகாரமுள்ளவன் பலவீனர்கள் மீது ஆதிக்க வெறியாட்டம் நடத்துவதும் சாதாரணமாகவே நிகழ்ந்தன. இவற்றால், மீண்டும் ஜாஹிலிய்யாக் காலம் பிறந்துவிட்டதோ என்று நன்மக்கள் அச்சப்பட்ட காலம் அது.

இவ்வாறு, கொலையும் கொள்ளையும் விபச்சாரமும் அதிகார துஷ்பிரயோகங்களும் பகிரங்கமாகவே நடக்கத்துவங்கியிருந்தன. அங்கு அரசியல் நிலை ஒரு பெரும் கேலிக் கூத்தாகவே ஆகியிருந்தது.

அன்று, ‘நஜ்த் மாநிலம் துருக்கிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டிருந்தது. கலாச்சார அபிவிருத்திக்குரிய பிரதான பாகங்களுடன் அதற்கு அதிக தொடர்புகள் இருக்கவில்லை. கரவன் வர்த்தகத்தை மட்டுமே அது நம்பியிருந்தது. இஸ்லாமிய கிலாபத் மாற்றம் (661) நிகழ்ந்ததிலிருந்து, கரவன் வர்த்தகத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அதனால், அம்மாநிலப் பழங்குடிகள் பெரும் பொருளாதார நெருக்கடியிலும் வறுமையிலும் வாழ்ந்தனர். வழிப்பறியும் கொள்ளையும் பல்வேறு சமூக, ஒழுக்கச் சீரழிவுகளும் நஜ்த் வாசிகளின் நிரந்தரப் பகையாளிகளாயிருந்தன. கிராமத்திற்கிடையிலும் பழங்குடிகளுக்கிடையிலும் அங்கு ஐக்கியத்திற்கிடமிருக்கவில்லை. இவ்வாறு, அம்மக்களது பொது வாழ்க்கை பல நூற்றாண்டுகளாகச் சீர்குலைந்து காணப்பட்டது.

‘மொத்தமாகச் சொன்னால் முஸ்லிம்கள் என்பவர்கள் அப்போது, முஸ்லிம்களாகத் தோன்றவில்லை, மிகக்கீழ்நிலைக்கு அவர்கள் வீழ்ந்திருந்தனர். அக்காலப்பிரிவில் இஸ்லாமியர்களின் நிலையைக் கண்டால் யாரும் கோபமுற்று முஸ்லிம்களைச் சபித்திருப்பர். இவ்வாறு, அரசியல் ஆன்மீகத்துறைகள் அனைத்தும் கெட்டுக்கிடந்தன.

(இன்னமும் வளரும் – இன்ஷா அல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *