Featured Posts
Home » பொதுவானவை » Coronavirus disease (COVID-19) » கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 1

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 1

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey)

முன்னுரை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. தூதர்களில் இறுதியானவராகிய மனித குல வழிகாட்டி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வழி நடக்கும் நல்லுங்கள், உலக சமாதான விரும்பிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

இஸ்லாம் இறை மார்க்கமாகும். அதனால் அதில் காணப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களும் தெய்வீகம் சார்ந்ததாகவும் மனித இனத்தின் நலனைக் கருத்தில் கொண்டதாகவுமே காணப்படுகின்றது.

மலசலம் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற சுத்தம் தொடர்பான சாதாரண விடயங்களைக் கூட இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தராமல் இந்த உலகை விட்டும் மரணமாகவில்லை என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.

இஸ்லாம் பேசிய பகுதியில் மிகவும் விரிவான அத்தியாயங்களில் ஒன்றாக சுத்தம் தொடர்பான பகுதியும் ஒன்றாகும். அதிலே, தண்ணீரும் வகைகளும், அசுத்தமான நீர், சூரிய வெளிச்சம் பட்ட நீர், மாதவிலக்கு, பிரசவத் தீட்டின் சட்டங்கள், கடமையான மற்றும் விரும்பத்தக்க குறிப்புகள், மலசலகூட கழிவறை ஒழுங்கு முறைகள் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாக சுத்தம் தொடர்பான அதன் ஆய்வுப் பகுதி இருப்பதைப் பற்றி ஆய்வு செய்கின்ற போது இஸ்லாம் சுகாதாரத்துறையின் முன்னோடி மார்க்கம் என சான்று பகரமுடியும்.

கொடிய நோய்கள், தொற்றுக்கள் பற்றி :

கொடிய தொற்று நோய்கள், மற்றும் அது தொடர்பான அறிவுரைகள், வழிகாட்டல்கள், அவர்களோடு கலந்து வாழ்தல் , உண்ணுதல், பருகுதல், அவர்கள் தொழுகைப் பொறுப்பேற்று நடத்தலாமா? போன்ற பல நூறு விடயங்களை பக்கம் பக்கமாக இஸ்லாமிய அறிஞர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர் பெருமக்களால் நோய், மருத்துவம் மற்றும் நிவாரணம் தொடர்பாக மிகவும் தெளிவாக விளக்கப்பட்டிருப்பது இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தன்மையை மேலும் உறுதி செய்கின்றது.

இறைத் தூதரின் போதனைத் துறையில் பிரசித்தி பெற்றவர்களாக விளங்கிய நபித்தோழர்கள் மூலம் உயர் கல்வியாளர்களான இமாம்கள் மற்றும் பல நூறு அறிஞர்கள் மருத்துவம், சிகிச்சை அளித்தல், கொடிய நோயின் போது நோயாளிகளைத் தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்தல் தொடர்பான இறைத் தூதரின் பல்வேறு பட்ட வழிகாட்டல்களை, தமது கிரந்தங்கள் ஊடாக உலகுக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர்.

உதாரணமாக இமாம் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் தாவூன் என்ற கொடிய நோய் பற்றி பின் வரும் தலைப்புகளில் எடுத்தெழுதியுள்ளதைச் சுட்டிக் காட்ட முடியும்.

புகாரியில்
صحيح البخاري: كتاب الطب: باب ما يذكر في الطاعون.
தாவூன் பற்றி கூறப்படுவது என்றும்,
முஸ்லிம் கிரந்தத்தில்
صحيح مسلم: كتاب السلام: باب الطاعون والطيرة والكهانة ونحوها، رقم (٩٢ – ٩٧)
ஸலாம் உரைத்தல் என்ற அத்தியாயத்தின் கீழ் தாவூன் (கொள்ளை நோய்) மற்றும் பறவை சகுணம், ஜோதிடம் பற்றிய பாடம் என முஸ்லிம் கிரந்த விரிவுரையாளர் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தலைப்பிடப்பட்டிருப்பதையும் மற்றும் பல ஹதீஸ் துறை அறிஞர்கள் كتاب الطب மருத்துவம் எனத் தலைப்பிட்டு எழுதிய செய்திகளையும் உதாரணமாகக் கூற முடியும்.

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய் பற்றிய இறைத் தூதரின் முன்னறிவிப்பும் அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளும் :

இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரணத்தின் பின்னால் மறுமை நாளின் அடையாளங்களாக நடை பெறுகின்ற பல நூறு நிகழ்வுகள் பற்றி அறிவித்ததில் பல்லாயிரம் உயிர்களைக் காவு கொள்ள விருந்த தாஊன் என்ற உயிர் கொல்லி நோயைப் பற்றியும் தனது தோழர்கள் மத்தியில் எடுத்துரைத்திருந்தார்கள்.

ஆச்சரியமாக இருக்கின்றதா. இதோ வாசியுங்கள்.

عن عوف بن مالك رضي الله عنه قال: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، فَقَالَ: «اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَيِ السَّاعَةِ: مَوْتِي، ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ، ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِئَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا، ثُمَّ فِتْنَةٌ لَا يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلَّا دَخَلَتْهُ، ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الْأَصْفَرِ فَيَغْدِرُونَ، فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا 》{رواه البخاري في صحيحه}

அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள். தபூக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறுதி நாள் வருவதற்கு முன்பு நிகழவிருக்கும் ஆறு அடையாளங்களை நீ எண்ணிக் கொள் எனக் கூறி விட்டு :

  1. என்னுடைய மரணம்,
  2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.
  3. ஆடுகளுக்கு (மூக்கில்) வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று நிகழும் கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போவது)
  4. பிறகு செல்வம் பெரும் வழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார் (தங்க நாணயங்) கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடன் இருப்பார்.
  5. பிறகு அரபுகளின் எந்த ஒரு வீட்டிலும் நுழையாமல் இல்லை எனக் கூறும் அளவு குழப்பமானதொரு நிலை தோன்றும்.
  6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களுக்கு) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் (ஒன்பது லெட்சத்தி அறுபதாயிரம்) போர் வீரர்கள் இருப்பார்கள் எனக் கூறினார்கள். (புகாரி- 3176)

இந்த முன்னறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணம் நிகழ்ந்த பின்னால் தாவூன் நோய் பரவுதல், பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல் ஆகிய இரண்டு முன்னறிவிப்புக்களும் இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் நடை பெற்ற நிகழ்வுகளாகும்.

உமர் (ரழி) அவர்களின் காலத்தில் தாவூன் அம்வாஸ்

சுன்னத் ஜமாத் வழி நடக்கும் முஸ்லிம்களின் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் முதலாவது கலீஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் மரணத்தின் பின்னர் ஹிஜ்ரி 13 பிற்காலப் பகுதியில் ஆட்சியில் இரண்டாவது கலீஃபாவாக அமர்த்தப்பட்டார்கள்.

அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 18 (கி.பி.639) ல் இறை அருள் பெற்ற பிரதேசமான ஷாம் தேச நகரங்கள் மற்றும் ஈராக்கிய நகரங்களிலும் தாவூன் என்ற கொடிய நோய் மக்களை மிகக் கொடூரமாகப் பாதிப்பிற்குள்ளாகி இறந்தார்கள்.

இந்த நோய் பாலஸ்தீன நகரமான அம்வாஸ் நகரில் ஆரம்பித்ததன் காரணமாக இஸ்லாமிய வரலாற்றில் தாவூன் அம்வாஸ் என இந்நோய் அழைக்கப்படுகின்றது.

இந்த நோய் பாலஸ்தீன அம்வாஸ் மண்ணில் தொடங்கி எகிப்து, சிரியா, கூஃபா, பஸரா எனப் பல பகுதிகளிலூம் அசுர வேகத்தில் பரவி, சுமார் 27 ஆயிரம் முஸ்லிம்களின் உயிர் போகக் காரணமாக இருந்தது.

ஒரு சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின் படி மூன்று தினங்களில் மாத்திரம் எழுபதாயிரம் பேர் மரணித்தனர் என்றும்; அவர்களில் முஸ்லிம்கள்தாம் 27ஏழாயிரம் பேர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுகின்றது.

இதில் சிறந்த நபித்தோழர்கள் எனப் போற்றப்பட்ட அபூஉபைதா, பிலால் பின் ரபாஹ், மூஆத் பின் ஜபல், யஸீத் பின் அபீ சுஃப்யான் (ரழி), மற்றும் பல முக்கிய நபித்தோழர்கள், தாபியீன்கள் பலர் ஷஹீத்களாக மரணித்தார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரழி) அவர்களின் மக்கள் நாற்பது பேரும், அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் பிள்ளைகள் என்பது பேரும் இந்த தாஊனில் மரணமானார்கள் என இஸ்லாமிய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

தற்போதைய கொரோனா வை விடப் பன்மடங்கு ஆபத்தான நோயே தாஊன் என்ற அந்தக்கொடிய நோய். தற்பொழுதுவரை கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் உயிர்களைக் காவு கொண்ட இந்த நோய்; முஸ்லிம் மக்களைப் பிடிக்காதாமே என்ற வாதம் பிழையான வாதமாகும்.

அது பொதுவாக ஒரு பிரதேசத்தில் வாழ்கின்ற ஆண்டி, அரசர், படித்தவர், பாமரர் என அனைத்து மக்களையும் பிடிக்கும் என்பதே இந்நோயின் இயல்பான தன்மையாகும். அதனால் கொரோனா (Corona) போன்ற வைரஸ் ஒரு முஸ்லிமைப் பீடித்தால் அல்லாஹ்வின் நாட்டத்தினால் அதன் மூலம் அவர் மரணமடையலாம் அல்லது 100% குணமடையலாம்.

ஹிஜ்ரி 87 ல் ஏற்பட்ட இந்நோய் இளம் யுவதிகள் அதிகமாக மரணித்ததன் காரணமாக طاعون الفتيات யுவதிகள் தாஊன் என்றும் பெரும் தலைவர்கள் மரணித்ததைக் காரணமாகக் கொண்டு அதனை طاعون الأشراف கண்ணியமிக்கவர்களின் தாஊன் என்றும் இஸ்லாமிய வரலாற்றில் அறியப்படுகின்றது.

இமாம் இப்னு குதைபா (ரஹி) அவர்கள் தாஊன் ஒரு முறை அல்ல. ஐந்து முறைகள் ஏற்பட்டதாக அதன் வருடங்களோடு விளக்கும் அதேவேளை, சில போது தினமும் ஆயிரம் ஜனாஸாக்கள் வரை தொழுகை நடத்தப்பட்டதாவும் குறிப்பிடுவதை அவதானிக்கின்ற போது தாவூன் என்பது கொரோனாவை 《Corona》 விட பாரதூரமாகப் பரவும் அபாயம் கொண்ட ஒரு கொடிய தொற்று நோய் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

மேலதிக வாசிப்பிற்காக

الموسوعة التاريخية – الدرر السنية
موسوعة التراث
المعارف لابن قتيبة

அவசரகால அறிவித்தல் மூலம் வீடுகளுக்குள் முடங்கி இருத்தல். இதனை அரபியில் الحجر الصحي என அழைப்பார்கள்.

இது தற்காப்பு நடவடிக்கை தானே தவிர முழுமையான பாதுகாப்பு கிடையாது. ஏனெனில் அல்லாஹ் நாடினால் பலமான கோட்டைக்குள்ளும் அது நம்மை நெருங்கும் ஆற்றல் மிக்கது.

உமர் (ரழி) அவர்கள் ஷாம் தேசம் நோக்கிப் பயணித்து “ஸர்க்” என்ற இடத்தை அடைந்ததும் அங்குள்ள அறிஞர்கள், பெரிய மனிதர்கள், அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என அனைவரோடும் கலந்தாலோசனை செய்தார்கள். அவர்கள் மாறுபட்ட கருத்தைக் கூறினர். இருந்தும் கலீஃபா அவர்கள் மதீனா நகரம் திரும்ப முடிவெடுத்து வரும் வழியில் நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அஃப் (ரழி) அவர்கள் :

فَأخْبَرَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ: أنَّ رَسُولَ اللَّهِ ﷺ قالَ: «إذا سَمِعْتُمْ بِهِ بِأرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وإذا وقَعَ بِأرْضٍ وأنْتُمْ بِها، فَلاَ تَخْرُجُوا فِرارًا مِنهُ» صحيح البخاري: كتاب الطب: باب ما يذكر في الطاعون.

நீங்கள் ஒரு பிரதேசத்தில் தாஊன் கொடிய நோய் பரவியதைக் கேள்விப்பட்டால் அங்கு செல்ல வேண்டாம். அவ்வாறே நீங்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் அது நிகழ்ந்து விட்டால் அங்கிருந்து நீங்கள் வெளியேறிச் செல்லவும் வேண்டாம் என இறைத் தூதர் கூற தான் செவிமடுத்ததாகக் கூறியதும் அதற்காக அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்பதை நினைத்து) அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். (புகாரி- பாடம்: மருத்துவம்) .

«لاَ يُورِدَنَّ مُمْرِضٌ عَلى مُصِحٍّ»

தொழு நோய் ஏற்பட்ட ஒட்டகத்தினைத் ஆரோக்கியமான ஒட்டகத்தோடு சேர்க்கக் கூடாது (புகாரி) என்ற இறைத் தூதரின் கட்டளைக்கு அமைவாக வைரஸ் நோய்பட்ட ஒட்டகத்தைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறையை அரபு மக்கள் கையாண்டது போன்றதொரு நடை முறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைரஸ் பரவலின் போது மனிதர்கள் கடைபிடிடக்குமாறு கட்டளை இட்டிருப்பதை அவதானிக்கின்ற போது இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளி அல்லது புறச் சான்றுகளில் காணப்படுகின்ற உடன்பாடுகள் ஷரீஆவின் தீர்வுப் பொதிகளில் அல்லது பொறிமுறைகளில் ஒன்றாக அங்கீகாரம் பெறும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த அடிப்படையில் தான் அகில இலங்கை ஜம்யிய்யத்துல் உலமா சபை பாங்கின் இறுதியில் கொட்டும் மழை காலங்களில் பாங்கில் இணைத்து கூறப்படுகின்ற

صلوا في رحالك

உங்கள் வீடுகளில், நீங்கள் தங்கி இருக்கும் இடங்களில் தொழுது கொள்ளுங்கள் என்ற ஃபத்வாவை அணுக வேண்டும்.

இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட பன்றியின் தோலை ஹலாலாக்கப்பட்ட செத்த ஆட்டின் தோலுக்கு ஒப்பிட்டு பீ.ஜே. தலைகீழாக ஆதாரம் எடுத்ததை விட உலமா சபையின் விளக்கம் சவூதி மற்றும் குவைத் நாடுகளின் அறிஞர்கள் சபையின் விளக்கத்தைச் சரி கண்டும் அறிவித்திருக்கலாம். எப்படியோ இந்த விஷயத்தில் உலமா சபையின் விளக்கம் சத்தியத்திற்கு மிகவும் நெருக்காமனதாகவே தெரிகின்றது (والله أعلم)

தொடரும் இன்ஷா அல்லாஹ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *