Featured Posts
Home » பொதுவானவை » Coronavirus disease (COVID-19) » கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 2

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 2

– எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey)

இஸ்லாம் அறிமுகம் செய்துள்ள உணவுப்பழக்க வழக்கங்கள், சுத்தம் தொடர்பான வழிகாட்டல்கள் பற்றி ஆராய்ந்தால் குரோனா போன்ற கொடிய வைரஸ் தொற்றுக்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடும் தெளிவானதாகும் என்பதை நடுநிலையோடு படிப்பவர்கள் முடிவு செய்வர்.

1500 ஆண்டுகளுக்கு முன்னால் இறைவனின் இறுதித் தூதராக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலக மக்களுக்கு ஒரு அருட்கொடை என்ற கருத்தை இந்த வைரஸ் பரவலின் போது உலகம் உணரத் தொடங்கி இருக்க வேண்டும்.

அவ்வாறு தெளிவான வழிகாட்டல்களை அவர்கள் இந்த உலக மக்களுக்கு வழங்கி உள்ளார்கள்.

«تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لا يَزِيغُ بَعْدِي عَنْهَا إِلاَّ هَالِكٌ» (سنن ابن ماجه والحاكم )

பொருள் : “உங்களை நான் வெள்ளை நிறப் பாதையில் விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகல் போன்றது. எனக்குப் பின் வழிதவறிச் செல்பவனைத் தவிர அந்த வழியை விட்டும் விலகி நடக்கமாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தி மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும். (இப்னு மாஜா, அல்ஹாகிம்)

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏

“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்அன்பியா:107)

என்ற அல்குர்ஆனின் போதனைக்கு அமைவாக உலகில் மனித வழிகாட்டிகளாக தம்மை அறிமுகம் செய்து கொண்ட பலர் முஹம்மது நபியைப் போன்று முழு மனித சமூகத்தின் நலன்களையும் கருத்தில் கொண்டு வழிகாட்டவில்லை என்பதை நூறு பேர் என்ற நூலின் ஆசிரியர் மைக்கல் ஹெச். ஹாட் (Michael H. Hart) அவர்கள் கிரிஸ்தவராக இருந்தும் முஹம்மது நபியை முதல் இலக்கமாகத் தெரிவு செய்திருப்பது இதற்கு போதுமான சான்றாகும்.

இறைத் தூதராக, மக்களின் வழிகாட்டிகளாக மாறிய பலரது போதனைகள் முஹம்மது நபியின் போதனைகள் போன்று வாழ்வின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருப்பதில்லை. இருக்கப் போவதுமில்லை . காரணம் முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் இறைவனின் தீர்க்கதரிசிகளில் ஒருவர். அதனால் அவரது போதனையில் சாதாரண எறும்பு போன்ற ஊர்வனங்கள் பற்றிக் கூட இடம் பெற்றிருக்கின்றது. அதனால் மற்றவர்களின் போதனைகளை முஹம்மது நபி ஸல் அவர்கள் போதனையோடு ஒப்பிட்டுக் கூறவே முடியாது.

கழிவறை ஒழுங்குகள் மாத்திரம் அல்ல; சமையல் எரிவாயு பற்றிய வழிகாட்டல்களையும் அந்த இறைத்தூதர் காரண-காரியங்களோடு போதித்திருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம்.

பின் வரும் வழிகாட்டல்கள் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: “غَطُّوا الْإِنَاءَ، وَأَوْكُوا السِّقَاءَ، فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ، لَا يَمُرُّ بِإِنَاءٍ لَيْسَ عَلَيْهِ غِطَاءٌ، أَوْ سِقَاءٍ لَيْسَ عَلَيْهِ وِكَاءٌ، إِلَّا نَزَلَ فِيهِ مِنْ ذَلِكَ الْوَبَاءِ”. (رواه مسلم)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில்,ஆண்டின் ஓர் இரவு உண்டு. அவ்விரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை.”
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
(நூல்: முஸ்லிம் -4102)

قال أبو العباس القرطبي ، رحمه الله ، في “المفهم شرح صحيح مسلم” :  ” قوله : ( غطُّوا الإناء ، وأوكُوا السقاء ) ؛ جميع أوامر هذا الباب من باب الإرشاد إلى المصلحة الدنيوية ،

பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள் என்ற வழிகாட்டல்கள் சமயம் சார்ந்தது அல்ல. மாறாக உலகியல் நலன்களைக் கருத்தில் கொண்டதாகும் (இமாம் குர்துபி)

மேற்படி நபிமொழியை விளக்குகின்ற இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த வழிமுறைகள் மூலம் ஷைத்தானில் இருந்தும் இரவு வேளைகளில் பாத்திரங்களில் இறங்குகின்ற கொடிய வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது.

அத்துடன், அசுத்தம் மற்றும் அசிங்கமான வஸ்துக்கள் எதுவும் அவற்றில் விழுவதில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது.

அத்தோடு ஊர்வனங்கள், விஷக் கிருமிகளைத் தாங்கிய பூச்சிகள் பாத்திரங்களில் விழுவதால் அவற்றில் இருந்தும் பாதுகாப்பு பெற வழியாகவும் இது அமைகின்றது எனக் குறிப்பிடுகின்றார்கள். (இமாம் நவவி -ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்

ஆண்டின் ஓர் இரவு உண்டு. அவ்விரவில் கொள்ளை நோய் வானில் இருந்து இறங்குகிறது என்ற இது போன்ற உயரிய வழிகாட்டல்களை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை செய்திருப்பது தினமும் நாம் அது பற்றி எச்சரிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருப்பதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அதனால் வைரஸ்கள் பரவியதோ இல்லையோ நாம் நமது நபியின் போதனையில் கண்டிப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பதை ஒரு முஸ்லிம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தாஊன் (corona நோய்) இறை நம்பிக்கையிளார்களுக்கு அருளாகும்

உலக நிகழ்வுகள் அனைத்தும் இறைவிதியோடு தொடர்புடையதாகும்.

இது வரை பல வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி பல்லாயிரம் உயிர்கள் அதனால் பறிக்கப்பட்டதாக உலகம் பேசிக் கொண்டாலும் இறைவன் தனது நாட்டத்தில் தோற்பதில்லை என்பதே அதன் ரகசியமாகும்.

{وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ} [يوسف:21]

அல்லாஹ் தனது ஆற்றல், அதிகாரத்தில் மிகைத்தவனாவான். எனினும், மனிதர்கள் பெரும்பாலானோர் (அதை) அறியமாட்டார்கள். (யூசுஃப் : 21)
இதுவே இந்த உலக நிகழ்வுகளின் யதார்த்தமாகும்.

இறைவன் பற்றிய சரியான தெளிவு மனிதர்களிடம் காணப்படாததன் விளைவாகவே உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை இயற்கை சீற்றம், தோஷம், பேய், பிசாசு போன்ற வார்த்தைகள் மூலம் மனிதர்கள் விமர்சிக்கத் தலைப்படுகின்றனர்.

அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் இங்கு நடப்பதில்லை.

அல்லாஹுத்தஆலா தம்தூதருக்கு கற்றுக்கொடுக்கின்றான்

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا [التوبة : ٥١]

(நபியே) நீர் கூறுவீராக ; “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது;
(அத்தௌபா : 51)

இது இஸ்லாத்தின் பலமான அடித்தளங்களில் ஒன்றாகும். இந்த நம்பிக்கை இல்லாத இன்றைய உலகம் கொரோனாவினால் எவ்வளவு அல்லோல கல்லோலமாகி விட்டது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ أبِي لَيلى، عَنْ صُهَيبٍ(الرومي) قال: قال رَسُولُ اللهِ ﷺ: «عَجَبًا لأمْرِ المُؤْمِنِ. إن أمْرَهُ كُلَّهُ خَيرٌ. ولَيسَ ذاكَ لأحَدٍ إلّا لِلْمُؤْمِنِ. إنْ أصابَتْهُ سَرّاءُ شَكَرَ. فَكانَ خَيرًا لَهُ. وإنْ أصابَتْهُ ضَرّاءُ صَبَرَ، فَكانَ خَيرًا لَهُ» (رواهُ مُسْلِمٌ)

“இறைவிசுவாசியின் காரியம் அனைத்தும் ஆச்சரியம் நிறைந்தது. அது இறை விசுவாசியைத் தவிர வேறு யாருக்கும் நடப்பதில்லை. அவனுக்கு மகிழ்ச்சி தரும் ஏதும் நடக்கின்ற போது (அல்லாஹ்வுக்கு) நன்றி கூறுவான், அவனுக்கு அது நன்மையாகி விடுகின்றது. அவனுக்கு துன்பம் நிகழ்ந்தால் அதற்கு அவன் பொறுமை காக்கின்றான், அதுவும் அவனுக்கு நன்மையானதாகி விடுகின்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (முஸ்லிம்)

கொடிய நோயினால் மரணிப்போரின் நிலை

இருந்தும் ஒரு இறை விசுவாசிக்கு நேர்கின்ற இவ்வாறான கொடிய நோய்கள் காரணமாக அவன் மரணிக்கின்ற போது அவனது மரணம் வீரமரணத்திற்கு ஒப்பானதாகும் என இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை அவன் ஒரு நற்செய்தியாகக் கொள்ள வேண்டுமே தவிர அதனை அபசகுணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

عن حَفْصَةُ بِنْتُ سِيرِينَ، قالَتْ: قالَ لِي أنَسُ بْنُ مالِكٍ رضي الله عنه: يَحْيى بِمَ ماتَ؟ قُلْتُ: مِنَ الطّاعُونِ، قالَ: قالَ رَسُولُ اللَّهِ ﷺ: «الطّاعُونُ شَهادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும்.”
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் (புஹாரி – 2830)

عَنْ عائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ، أنَّها أخْبَرَتْنا: أنَّها سَألَتْ رَسُولَ اللَّهِ ﷺ عَنِ الطّاعُونِ، فَأخْبَرَها نَبِيُّ اللَّهِ ﷺ: «أنَّهُ كانَ عَذابًا يَبْعَثُهُ اللَّهُ عَلى مَن يَشاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، فَلَيْسَ مِن عَبْدٍ يَقَعُ الطّاعُونُ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صابِرًا، يَعْلَمُ أنَّهُ لَنْ يُصِيبَهُ إلّا ما كَتَبَ اللَّهُ لَهُ، إلّا كانَ لَهُ مِثْلُ أجْرِ الشَّهِيدِ»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரான அன்னை ஆயிஷா(ரலி) கூறுகின்றார்கள்:
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, அல்லாஹ்
தான் நாடியவர்களின் மீது அனுப்புகிற வேதனையாகும். (மற்றொரு அறிவிப்பில்- பனு இஸ்ரவேலர்கள் மீது அனுப்பிய வேதனை என இடம் பெற்றுள்ளது) அதை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான் கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ளதைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் அவர் இறைவழியில் உயிர் தியாகம் செய்தவர் போன்ற நற்பலனுக்குரியவர் எனக் கூறினார்கள். (புஹாரி – 3474)

நோயால் பாதிக்கப்பட்டவர்;

  • பொறுமையோடும்
  • அல்லாஹ்விடம் அதற்கான கூலியை எதிர்பார்த்தும் இருக்க வேண்டும்.
    என்பதை நபி (ஸல்) அவர்கள் நிபந்தனையாக ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்கின்ற இறைநம்பியாளர்கள் இவ்வாறான நோயால் பீடிக்கப்பட்டாலும் அவர் மனஅழுத்தம் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவது நிச்சயமாகும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *