Featured Posts
Home » பொதுவானவை » பிற கட்டுரைகள் » இளைஞர்களும் சமூகவலைத்தளங்களும்

இளைஞர்களும் சமூகவலைத்தளங்களும்

மௌலவியா R. பாத்திமா சிபானா (ஸஹ்ரவிய்யா) – ஓட்டமாவடி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் – ஒலுவில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடம்

கட்டிடத்திற்கு அஸ்திவாரம் அவசியம் என்பது போல, மனிதன் வாழ்வதற்கு உயிர் முக்கியம் என்பது போல ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இளைஞர், யுவதிகளின் பங்களிப்பு அளப்பெரியதாகும். இளைஞர் சமூகத்தின் பலத்தை புரிந்து கொண்ட இஸ்லாத்துக்கு விரோதமான தீய சக்திகள் நவீன கலாச்சாரங்களை அழகு படுத்திக்காட்டி உணவு, உடை, நடத்தை போன்ற எல்லா அம்சங்களிலும் இளைஞர் சமூகத்தை தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. வாலிப சமூகத்தை தன் நாச வலையில் சிக்க வைப்பதன் மூலம் முழு உலகையும் தன் வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற அவாவோடு யூத, சியோனிச சக்திகள் அரங்கேற்றுகின்ற நாச காரியங்களில் இளைஞர், யுவதிகளை சிக்க வைத்து தன் இலக்கை நோக்கி வெற்றி நடை போடுகிறது.

இளமைப்பருவம் ஒரு துடித்துடிப்பான, எதையும் தைரியத்தோடு, உணர்வுகளுக்கு அடிமைபட்டு தன் உள்ளம் சொல்லுவதை கேட்டு அதன்பால் காலடி எடுத்து வைக்க உணர்வூட்டும் பருவமாகும். இளமைப் பருவம் அல்லாஹ்வின் அளவற்ற அருளாகவும், தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில் மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், பக்குவப்படுத்தப்படல் அவசியமாகும். உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான இஸ்லாமிய நெறிமுறையில் வளப்படுத்தப்படல் வேண்டும். இதில் நாம் பொறுப்பேற்று, கையாளாகாத நிலையில் இருந்துவிட்டால், இளைஞர்கள் தவறான, இஸ்லாத்திற்கு முரணான திசைகளில் வழிநடாத்தப்பட்டு, அவர்களது ஆற்றல்களும், திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்பட்டு, மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமூகத்திற்கும் ஏனையவர்களுக்கும் தலையிடியாகப் போவது தவிர்க்க முடியாது; முழு மனித இனத்திற்கும் அது அழிவையும், நாசத்தையும் விளைவித்து விடும்.

ஒரு நாட்டின் சக்தியும் உறுதியும் அந்நாட்டின் எழுச்சிமிக்க இளைய தலைமுறையாகும். அநீதிகளுக்கெதிராய்த் துடித்தெழும் இரத்தத்தின் மறு பெயர்தான் இளமை.இனிமையும் கனவுகளும் கொண்ட இளமைப்பருவம் வாழ்க்கைப் புத்தகத்தின் வித்தியாசமான ஒரு பக்கம். இளமை சகலரும் விரும்பும் ஒரு பருவம் இளமையை அடைந்தோர் காணும் மகிழ்ச்சி போலவே இளமையை மீளப் பெற்றுக் கொள்ள விரும்பும் வயோதிபரும் இருக்கவே செய்கின்றனர். ஏன்! இழந்த இளமையை மீளப் பெறவென மருந்துகள் கூட சந்தைப் படுத்தப் படுகின்றன. அந்தளவு பெறுமதியும் எல்லோராலும் விரும்பப் படுவதுமான இளமை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதாகும். காலம் தவறிக் கவலைப் படுவதில் எப்பயனுமில்லை அத்தகையோர் பின்வருமாறு ஆசை கொள்வர் என அறபுப் புலவர் ஒருவர் கூறிச் சென்றார்.

“என்றேனும் ஒரு நாள் இளமை எனக்கு மீண்டு வரலாகாதா அப்படி வருமாயின் நரை தந்த படிப்பினைகளை நான் அதற்கு அறிவித்துக் கொடுப்பேனே”. இந்த வாசகங்கள் வெறும் மேலெண்ணமேயன்றி நடக்கப் போகும் ஒன்றல்ல எனவே பருவத்தே பயிர் செய்வதே சகலரதும் கடமையாகும்.

சமூகத்தின் முதுகெலும்புகளான இளைஞர்களின் பாதுகாப்பும் மேலாண்மையுமே சமூகத்தைக் காக்கும் அரண்களாகும். அது எந்தத் துறையிலென்றாலும் சரியே அவர்களது சறுக்கல் சமூகத்துக்கு ஏன் உலகிற்கே பெரும் சுமையாக அமைந்து விடுகின்றது. எனவேதான் உலகமெல்லாம் இது விடயமாக கவனம் செலுத்தப் படுகிறது. இதில் மாபெரிய பெறுபேறு சன்மார்க்க ரீதியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கே என்பதில் ஐயமில்லை.

நவீன சவால்கள் அவர்களைத் திசை திருப்பிவிட்டன. சமய சமூக கலாச்சார விழுமியங்கள் மறக்கடிக்கப்பட்ட நிலையில் பிறந்தோம் வாழ்கிறோம். பொழுதைக் கழிக்கிறோம் நேரத்தை வீணடித்து மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறோம் என்ற உணர்வோடே வாலிபர்கள் வளர்த்து விடப்படுகின்றனர்.

கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் பாவனை முதலிய யாவற்றிலும் சிக்குண்டுள்ளவர்கள் பற்றிய மதிப்பீடுகள் மூலம் வாலிபர்களே அதிகமாக இருப்பதாகக் காண முடிகிறது. எனவே வாலிபர்கள் விடயமாகக் கவனம் செலுத்தப்படுவதும் ஆரோக்கியமாக நல்ல முயற்சிகளில் இறங்குவதுமே இன்று அவசரமும் அவசியமுமாகும்.

இளைஞர் உலகம் எவ்வழியிலும் பயன் படுத்தப்படலாம். ஆர்ப்பாட்டங்கள் புரட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள் சகலதிலும் இப்பருவத்தை அடைந்த ஒருவரே ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எத்திசையிலென்றாலும் அவர்கள் செல்ல பாதை அமைந்து விடுகின்றது. அதனால்தான் இன்று இளைஞர் உலகம் பல்வேறு விதமான சவால்களை எதிர்நோக்கி நிற்கின்றது. எனவே வாலிபர்கள் நெறிப்படுத்தப்படாத போது மனித சமுதாயம் பெரும் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி வருகின்றது.

மனிதனை மனிதனாக வாழ விடாமல் அவனை மிருகத்தை விட கேவலமான நடத்தையுடையவனாக மாற்றுவதில் பெரு அவா கொண்ட யூத, சியோனிச சக்திகள் இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள் என்பதை அறிந்து கொண்டு சமூகத்தை சீர்திருத்த மாற்றங்களை கொண்டு வர வேண்டிய இளைஞர், யுவதிகளை சமூகத்தில் சீர்கெடுகளையும், நாசகார செயல்களையும் செய்ய வைப்பதில் வழி காட்டிக்கொண்டிருக்கிறது. அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் இவைகளில் இருந்து விதிவிலக்கு.

இளைஞர் சமூகத்தை படுகுழியில் விழவைத்து, அவர்களுடைய மூளையை சலவை செய்து கடவுள் கோட்பாடு, இறைநம்பிக்கை என்பவற்றில் இருந்து விடுபட வைப்பதற்கு பல முயற்சிகளை யூத சக்திகள் மேற்கொண்டன. குறிப்பாக முஸ்லிம் இளைஞர், யுவதிகளை தன் குறிக்கோளாக முன்னிறுத்தி தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் தமது ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியையே பெருபேராக பெற்றுக்கொண்டது. இறுதியில் சமூக வளைத்தளங்களில் உள்ள மோகத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் திசைதிருப்பலாம் என்ற முயற்சியில் வெற்றி கண்டது, வெற்றி கண்டும் வருகிறது.

இளைஞர்கள் இன்று எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தொடர்பூடகங்களாகும் குறிப்பாக சமூக வலைத்தளங்களாகும் . உலகத்தையே உள்ளங்கைக்குள் சுருட்டி வைக்கும் ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சி சிலபோது ஆக்கத்தை விட அழிவுக்கே துணைபோகும் அவலநிலையை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடியும்.

மனித மனதிலுள்ள உணர்கவுளைத் தூண்டி அதில் குளிர்காயும் சமகால ஊடகக்கலாச்சாரம் இளைஞர்களின் இரத்தத்தில் ஊறிப்போயுள்ளது. அறிவையும் அன்பையும் மனிதப் பண்பாடுகளையும் வளர்க்க வேண்டிய ஊடகம் பொருளாதாரம் கலாசார சீரழிவு போன்றவற்றை பிரதான நோக்கங்களாகக் கொண்டு தீமைகளின் அடிவேராகத் திகழ்கின்றது.

தொலைக்காட்சி சினிமா வானொலி மாத-வாராந்த-நாள் இதழ்கள் இணையம் இவையனைத்தும் இளைய சமுதாயத்தின் உள்ளத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இணைய வலைப்பின்னலின் கோடானகோடி நன்மைகளை மறுதலித்துவிட்டு அதன் தீமைகளை அரவணைத்துக் கொள்வதிலேயே இளைய சமூகம் ஆர்வம் காட்டுகிறது.

பொதுவாக ஊடகம் தகவல் தொடர்பு சாதனம், மீடியா, வெகுஜன தொடர்பு சாதனம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

‘தனித்திருக்கும் தன்மையை மாற்றி ஐக்கியப்படுத்துதல்’ மீடியா எனலாம்.

‘தகவலை அனுப்புபவருக்கும் பெறுபவருக்குமிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவது, இருவர் அல்லது இரு அமைப்புக்களுக்கிடையே நடைபெறுகின்ற செய்திப்பரிமாற்றமும் அதனால் ஏற்படும் தெளிவும் தகவல் தொடர்பு (மீடியா)’ என்பர்.

தொடர்பு என்பது மனிதர்கள் செய்திகளை அனுப்புவதும் அதனை பெற்றுக் கொள்ளுவதுமாகும்.

தகவல் தொடர்பை ‘கொமியுனிக் கேஷன்’ என்பர். இது கம்மியுனிசி எனும் இலத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதன் பொருள் பகிர்ந்து கொள், செயல் விளைவு, செய்தியைப் பரப்பு என்பதாகும். தொடர்பு என்பது செயல் முறையாகும். அது கருத்துள்ள செய்தியை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரப்புவதைக் குறிக்கும்.
தொடர்பியல் என்னும் சொல்லிற்குப் ‘பொதுமையாக்குதல்’ எனப் பொருள் கொள்ள லாம். அதாவது, பெறுபவருடைய மனதில் அனுப்புவரின் கருத்து அல்லது கருத்துப் படிவத்தை உருவாக்குவது பொதுமையாக்குதல் எனப்படும். அதாவது, ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில் செய்தி அனுப்புபவருக்கும் பெறுபவருக்குமிடையே நிகழும் செய்திப் பரிமாற்றச் செயல் முறையே தொடர்பியல் எனப்படும்.

செய்திகள், எண்ணங்கள், உணர்ச்சி கள், திறமைகள் போன்றவற்றைக் குறியீடு, பேச்சு, எழுத்து, படம், வரைபடம் போன்றவற்றின் வழியாகப் பரப்புவதும் தொடர்பியல் என அழைக்கப்படும். இது இன்றைய உலகம் தகவல் தொடர்பு சாதனத்திற்கு வழங்கும் பல வரைவிலக்கணங்களில் ஒன்றாகும்.

இத்தகவல் தொடர்பு முறையை மனிதன் தோன்றிய காலம் முதல் இறைவன் இவ்வுலகத்திற்கு காகத்தைக் கொண்டு மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான் என்பதை முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றை கற்பதன் மூலம் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன்மார்கள் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தின் உச்ச கட்டமாக தன் சகோதரனை அடுத்த சகோதரன் கொன்று விடுகின்றான் (இதுதான் மனிதன் உலகிற்கு படைக்கப்பட்டதும் நடந்த முதல் கொலையாகும்.) தன் சகோதரனின் உடலை என்ன செய்யலாம் என்று அடுத்த சகோதரன் யோசித்து கொண்டிருக்கும் போது அல்லாஹ் இரண்டு காகங்களை அனுப்பி வைக்கின்றான். அவை இரண்டும் சண்டை பிடித்து ஒரு காகம் அடுத்த காகத்தை கொன்று விடுகின்றது. கொல்லப்பட்ட அந்த காகத்தை கொன்ற காகம் தன் சொண்டால் பூமியில் ஒரு குழியை தோண்டி அதற்குள் புதைத்து மூடி விடுகிறது. இதை அல்லாஹ் தனது திருமறையில் 05 வது அத்தியாயமான சூரதுல் மாயிதாவின் 31 ம் வசனத்தில் அழகாக குறிப்பிட்டு காட்டுகிறான்.

“பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவர்க்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்;. அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். “

மேலுள்ள வரலாற்று சம்பவத்தின் மூலம் அல்லாஹ் காகத்தை ஊடகமாக (தகவல் அனுப்பும் சாதனமாக) பயன்படுத்தியுள்ளான். இதன்மூலம் உலகில் முதன் முதலாக ஊடகமாக பயன்படுத்தப்பட்டது காகம் என்பதும், இஸ்லாம் மார்க்கமே ஊடகத்தின் வரலாற்றுக்குச் சொந்தமானது என்பதும் எமக்கு புலனாகின்றது. ஊடகம் பற்றி முதன் முதலாக பேசிய சமூகம் முஸ்லிம் சமூகம் தான் என்ற பெருமையை தட்டிக்கழிப்பதற்கு இல்லை. ஊடகத்தின் வரலாற்றையும் கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம் தான் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. இந்த சம்பவத்தோடே ஊடகத்தின் வளர்ச்சியும் ஆரம்பமாகின்றது.

ஒரு சமுதாயம் வளர அடிப்படைத் தேவையாக கருதப்படுவது தகவல்தொடர்பு ஆகும்.ஊடகத்தின் அடுத்த பரிணாமம் தகவல் தொடர்பு சாதனம். தகவலை அனுப்புபவருக்கும், பெறுபவருக்குமிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதே தகவல் தொடர்பு சாதனம்.

தகவல் தொடர்பு சாதனமாக அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப்பெற்று அதனை நபிமார்களுக்கு எத்திவைக்கும் “வஹீ” எனும் பணியை ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்தார்கள். வஹீயின் வருகை இந்த தொடர்பாடல் மூலம் புலப்படுவதால் தகவல் தொடர்பு சாதனம் என்பது ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பணியான வஹீயின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது என்பது எமக்கு புலனாகிறது. ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு சாதனம் போன்றவற்றிற்கு வரைவிலக்கணத்தை இன்றைய உலகம் வடிவமைப்பதற்கு முன்னரே அல்குர்ஆன் வடிவமைத்துவிட்டது.

புகையிரதம் செல்வதற்கு தண்டவாளம் ஊடகமாக இருப்பது போன்று வஹீயை எத்திவைப்பதற்கு ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஊடகமாக இருந்தார்கள்.

ஊடகத்தின் அடுத்த பரிணாமம் தான் மக்கள் மன்றம்/பஞ்சாயத்து முறை/ விவாத மன்றம்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றில் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிலை வணக்கத்தை வெறுப்பவர்களாக சிலைகளை வணங்கி, அதற்கு சிரம் பணிந்து கொண்டிருந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தன் தந்தை ஆஸர் கூட சிலைகளை செய்து விற்கும் வியாபாரியாக இருந்தார். பல முறை தன் தந்தையிடமும், தன் சமுதாய மக்களிடமும் சிலைகளை வணங்காதீர்கள் என்று கூறியும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் ஒரு திருவிழாவுக்காக மக்கள் அனைவரும் வெளி ஊருக்குச் சென்றார்கள். இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மாத்திரம் செல்லவில்லை. மக்கள் அனைவரும் சென்றதுக்கு பின்னால் சிலைகள் இருக்கும் இடத்துக்குச் சென்று கோடாரியால் எல்லா சிலைகளையும் உடைத்து விட்டு பெரிய சிலையின் கழுத்தில் கோடாரியை கொழுவி வைத்து விட்டு வந்து விட்டார். மக்கள் திருவிழா முடிந்து ஊருக்கு வந்ததும் சிலைகள் இருக்கும் இடத்துக்குச் சென்றார்கள். அங்கே சிலைகள் அனைத்தும் உடைந்து பெரிய சிலையின் கழுத்தில் கோடரி காணப்பட்டது. எல்லோரும் இதை யார் செய்து இருப்பார் என்று பேசிக் கொண்டிருக்கும் போது இப்ராஹிம் என்பவர் சிலை வணக்கத்தை எதிர்த்து கொண்டிருந்தார், இன்று அவர் மட்டும் தான் ஊரில் தனிமையில் இருந்தார். அவர் தான் இந்த காரியத்தை செய்து இருக்க வேண்டும் என்று பதில் வருகிறது. உடனே இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைக்கப்படுகிறார். மக்கள் கேள்வி எழுப்ப இப்ராஹிம் நபி அவர்கள் பெரிய சிலையின் கழுத்தில் தான் கோடரி உள்ளது. அதனிடம் கேளுங்கள் என்று சொல்கிறார்.

அந்த சமுதாய மக்கள் அனைவரும் ஆத்திரமுற்று அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் பார்வைக்காக அவரை மக்களின் கண் முன்னே கொண்டு வாருங்கள் என்று முடிவு எடுக்கிறார்கள். அதன்பிறகு இப்ராஹிம் நபி நெருப்பு குண்டத்துக்குள் போடப்படுகிறார். இப்படியாக வரலாறு நீண்டு செல்கிறது. (முழுமையான வரலாற்றை பார்க்க அல்குர்ஆன் : சூரதுல் அன்பியா: 51-70)

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றிலும் ஊடகம் பஞ்சாயத்து முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
(பார்க்க, அல்குர்ஆன் – அல் அஃராப்:105-110, 116, 118-119, அஷ்ஷுஅரா:36-42, 44, தாஹா : 69, 70)

இந்த அல்குர்ஆன் வனங்களின் மூலம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சாயத்து முறை அடிப்படையில் முடிவு எடுத்ததையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஆக ஊடகத்தின் மூன்றாவது கட்ட வளர்ச்சியாக மக்கள் மன்றம்/பஞ்சாயத்து முறை /விவாத மன்றம் உருவெடுத்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

ஊடகத்தின் நான்காவது பரிணாமம் பறவையைக் கொண்டு தூது அனுப்புதல்.

இதற்கு உதாரணமாக நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவத்தில் வரும் ஹூத் ஹூத் பறவையைக் கூறலாம். இந்த வளர்ச்சி படிமுறையின் அடிப்படையில் ஊடகம் வளர்ந்துள்ளது என்பதை இஸ்லாம் எமக்கு கற்றுத்தருகிறது.

பிற்பட்ட காலங்களில் மனிதனின் தகவல் தொடர்பு பண்டைய காலங்களில் குகை ஓவியங்கள், வரையப்பட்ட வரைபடங்கள், மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. இதன் பின்னர் தொழிநுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய நவீன கைப்பேசிகளின் மூலம் சமூக வலைத்தளங்கள் வரை ஊடகங்கள் மக்களுடன் இரண்டறக் கலந்துள்ளன.

ஊடகங்களில் மிக முக்கிய இடத்தை சமூக வளைத்தளங்கள் வகிக்கின்றது. Social Media (சமூக ஊடகம்) என்றால் என்ன என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்ல வேண்டும் என்றால்: “உங்கள் கருத்துக்களை படைக்கவும், பகிரவும் Internet மூலம் இணைக்கப்பட்ட ஒரு தளம், அல்லது ‘மேடை’ என்று கூட சொல்லலாம்.”

சமுக ஊடகம் மனிதன் ஆக்கத்திறனுக்கு ஒரு சாதனமாக இருந்து வருகிறது…

இன்று உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய ஆயுதம் சமுக ஊடகம் .பாரம்பரிய ஆயுதத்தை விட மிஞ்சிய ஆயுதம் தான் சமுக ஊடகம் .இந்த சமுக ஊடகம் பாதகமாக மற்றும் சாதகமாகவும் பயன்படுத்தலாம் … இன்று நடக்கும் நிகழ்வுகள் இதற்கு சாட்சி .

சமுக ஊடகங்களில் நாம் நமது கருத்து சுதந்திரத்தை துணிச்சலோடு பதியலாம். நமக்கு தேவையான தகவல்கள் பெறமுடிவும் மற்றும் தற்போது பல தகவல்கள் உடனுக்குடன் பெறவும் முடிவும் .

நல்ல பல கருத்துகள் – நல்ல பல செய்திகள் – நல்ல பல தகவல்கள் – நம் கொள்கை சார்ந்த விசயம் அதை உலக மையபடுத்துவதற்க்கும் – சமுகமையபடுத்துவதற்க்கும் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதற்கும் மிகப்பெரிய கருவி சமுக ஊடகம் .அதிகமான அனுகூலங்கள் உள்ளன .

மற்ற மீடியா துறை (எழுத்து மீடியாவாக இருந்தால் – அதன் சார்ந்த துறை நபர்கள் தேவை படுத்தல் – எலெக்ட்ரானிக் மீடியா என்றால் அதன் சார்ந்த துறை நபர்களை தேர்ந்து எடுத்தல் என்று இருக்கும்) அதன் சார்ந்த நபர்களை தேர்ந்து எடுப்பார்கள் . இங்கு சமுக மீடியா ஊடகம் அப்படி இல்லை நாம் நம் கருத்துகளை கட்டுப்பாடு இல்லாமல் நமக்குள் இருப்பதை தெரிவிக்கலாம் .

சாதரணமாக ஒருவர் ஊடகம் நடத்த வேண்டும் என்றாலோ இல்லை அதை பயன்படுத்த வேண்டும் என்றாலோ அது ஒரு குழு அல்லது அதன் சார்ந்த நபர்களிடம் இருக்கும் . இன்று சமுக ஊடகம் அதை வென்று உள்ளது .

ஒரு நாட்டின் ஆட்சியை கூட மாற்ற முடியும் என்பதை நிருபித்த ஊடகம் சமுக ஊடகம்.

மற்றும் நம் தொழில் சார்ந்த விசயங்கள் நமக்கு தேவையான பொருள்கள் வாங்க விற்க என்று கூட இங்கு நாம் பயன்படுத்தி இந்த ஊடகத்தின் வாயிலாக நமது முன்னேற்றம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவில் பெறலாம்

இன்று மாணவர்கள், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் முதல் பயன்படுத்தும் Facebook, whatcepp xgmail, yahoo, hotmail, tweeter, skype போன்ற அனைத்தும் நமக்குக் கிடைத்த இலவச ஊடகமே என்பதை கவனத்தில் கொண்டு அவைகளை பயன்படுத்தி எமது சமூகத்திற்குக் தேவையான செய்திகளை வழங்க முன்வர வேண்டும்.

நாம் உலகில் தலை நிமிர்ந்து வாழும் சிறந்த சமூகமாக உருவெடுக்க இந்த சமுக ஊடகத்தை வலுபடுத்துவோம் அதை நமது ஆக்குவோம் . ஒவ்வொருவரும் இதை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.அதை போல் இந்த சமுக ஊடகம் மூலம் ஆக்கத்தின் பெயரில் அழிவு அதிகம் உள்ளது.

நன்மை விட தீமை அதிகம் உள்ளது. அதிகமான இளைஞர்கள் / மாணவர்கள் / மாணவிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நமது ஆரோக்கியத்திற்கும் இது கேடக உள்ளது. கண் – மூளை வளர்ச்சி – போன்றவை பாதிக்கபடுகிறது. மன அழுத்தம் வருகின்றது.

முகம் தெரியாத நட்பு அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று முழுவதம் அறியாமல் இருப்பது அவர்கள் தூய்மையானவர்களா என்று தெரியாமல் இருந்து ஏமாறுவது .

இஸ்லாம் தடுக்கப்பட்டுள்ள உறவுகள். அந்நிய பெண்களுடன் நட்பு. புதிய தம்பதியனர் விவாகரத்துக்கும் காரணம் இதுவாகவே உள்ளது.

வதந்திகள் – பொய்கள் -இரு சமுகம் இடையே ஏற்படும் ஒற்றுமை உடைக்க சமுகங்கள் எதிராக பதிவுகள் சமுக நல்லுணர்வு கெடுதல் என்று பல உள்ளன .விரும்பியவர்கள் விரும்பிய கருத்தை பதியலாம் என்று அவர்கள் பதிவும் பதிவு மூலம் ஏற்படும் குழப்பம் கணணியில் இருக்கும் வைரசை விட கொடிய வைரஸ் இது.

வருகின்ற தகவலை எப்படி நம்புவது என்றே தெரியவில்லை அப்படி ஒரு குழப்பம்.

இதுபோல் பல கேடான விசயங்களில் நாம் எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளுதல்.

Social Media சாதகமா / பாதகமா என்று பார்த்தல் அது நாம் பயன்படுத்துவதில் தான் உள்ளது.

சமூக ஊடகங்கள் தனிமனித ஊடகமாக மாறிக்கொண்டிருக்கின்ற வேளையில், அதை பயன்படுத்தி பயனடைவது என்பது மிக அத்தியாவசிய தேவையாக மாறிக்கொண்டு இருக்கிறது. உங்களிடம் பிறருக்கு பயன்ப்படும்படிக்கு உபயோகமான ஒரு தகவலோ செய்தியோ இருக்கிறது என்றால் அதை உலகிற்கு சொல்ல சமூக ஊடகங்களை விட சிறந்த வழி இருக்க முடியாது .
Facebook எனப்படும் முகநூளில் மட்டும் நூற்று தொண்ணூற்று நான்கு கோடி பேர் பயனாளிகளாக இருப்பதாக இந்த முகநூல் நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பிற சமூக ஊடக நிறுவனங்களான Twitter, Instagram, LinkedIn, Google Plus எனும் பிற நிறுவனங்கள் வழியாகவும் கோடான கோடி பேர் அன்றாடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மிக எளிமையாகவும், செலவில்லாமலும் கிடைக்கும் ஒரு மேடையை ஏன் பயன்படுத்தக்கூடாது?

உங்களோடு, ஒத்த கருத்துடையவர்களோடு உரையாடுவதற்கும், உங்கள் கருத்துக்களை கூர்மைபடுத்திக் கொள்வதற்கும், உலகளாவிய அளவில் உங்கள் கருத்துக்களை கொண்டு செல்வதற்குமான மிகச் சிறந்த ஊடகம், இன்றைய நவீன சமூக ஊடகங்கள் தாம்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது இப்போது அதிகரித்திருக்கிறது. அதிலும் இளம் பருவத்தினர் பலர் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்கள் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாவதாக ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் பங்கேற்பது எந்த அளவுக்கு நன்மையைத் தரும்? எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?

19 மே மாதம் 2017 BBC வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்

”சமூக ஊடகங்கள் இளைஞர்களிடையே மனநல பிரச்சினையை தூண்டுவதாக இருக்கலாம்” என்று எச்சரிக்கின்றது.

மேலும்.,சமூக ஊடகங்களை நன்மைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அதே சமயத்தில் அந்த அறிக்கை ,உதாரணத்துக்கு, இன்ஸ்டாக்ராம், சுய வெளிப்பாடு மற்றும் சுய அடையாளம் ஆகிவற்றின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறு.

வேறு எந்த வயதினரை காட்டிலும், இளைஞர்களில் சுமார் 90% பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் . இதன் காரணமாக, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் விளைவுகளால் பாதிக்கப்படும் ஆபத்தில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளனர்.

யூடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தளங்கள் தங்களுடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்ற தலைப்பில் பல கேள்விகளை இணையக் கருத்து கணிப்பு ஒன்று BBC இனால் நடத்தப்பட்டது.

கருத்துகணிப்பில் பங்கேற்றவர்களிடம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பிரச்சனைகள் 14ஐ மையமாக வைத்து ஒவ்வொரு சமூக ஊடகங்களையும் வரிசைப்படுத்துமாறு கூறப்பட்டது.

இந்த தரவரிசைகளின் அடிப்படையில், மனநலத்தில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக ஊடகம், யூடியூப் என்றும் அதற்கு அடுத்தபடியில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவை இருந்தன என்று தெரியவந்துள்ளது.

மன அழுத்தம் அதிகரிக்கிறது:
13 வயதான சிறுவர்கள், சிறுமிகளின் சமூக ஊடக பழக்கவழக்கம் குறித்தும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்மூலம், முகநூல் அல்லது பிற சமூக ஊடகங்களை நாளொன்றுக்கு 50 மற்றும் 100 முறைக்கு மேல் பார்வையிடுவோர், அந்த ஊடகங்களை சில முறை மட்டும் பார்ப்போரை விட 37 சதவீதத்துக்கும் அதிகமாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவது தெரிய வந்திருக்கிறது. நாளொன்றுக்கு 100 முறைக்கும் மேல் சமூக ஊடகங்களைப் பார்வையிடுவோர், 47 சதவீதத்துக்கும் மேல் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சமூக ஊடகத்தில் அதிக நேரத்தை செலவிடுவது என்பது நல்லதல்ல.

அதிகம் பயன்படுத்தினால்… அடிமை!
சமூக ஊடகத்தில் ஏதேனும் ஒரு பதிவையோ, காட்சியையோ வெளியிட்டு, அதற்கு பிறர் விருப்பம் (லைக்) தெரிவித்து பாராட்டினால், பின்னர் அதே பாராட்டுக்காகவும், லைக்குகளுக்காகவும் தொடர்ந்து பதிவிடும் பழக்கம் – போதை – ஏற்பட்டுவிடுகிறது. சமூக ஊடகத்துக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

செயல்படும் திறன் பாதிப்பு
சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால், துரிதமாக முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். முக்கிய விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்காமல், அந்நேரத்தில் சமூக ஊடகத்தில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருப்போம். பணிபுரியும் இடத்தில் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சமூக ஊடகத்தில் உரையாடிக் கொண்டும், பதிவுகளை வெளியிட்டுக் கொண்டும் இருப்போம். இதனால் பணிபுரியும் இடத்தில் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதுடன், அங்கு எந்த முன்னேற்றமும் நமக்கு கிடைக்காது. இதனால் வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
நிஜ வாழ்க்கையிலிருந்து விலக வழிவகுக்கும்

சமூக ஊடகத்தில் நேரத்தைச் செலவிடுவோர், தங்களது நிஜ வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கும். சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு பதில் அளித்துக் கொண்டும், முகம் தெரியாத நபர்களுடன் பேசிக் கொண்டும் நேரத்தை வீணடிப்பதால், தங்களைச் சுற்றி நடப்பதையே அவர்கள் மறந்துவிடுவர். தேர்வு சமயங்களில் கூட படிப்பில் கவனம் செலுத்தாமல், சமூக ஊடகத்தில் நேரத்தைச் செலவிடுவதால் தேர்வில் தோல்வியடைபவர்களும் உண்டு. அதாவது, சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் கற்பனையான கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நிஜ வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார்கள்.

சமூக ஊடகத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதைத் தடுக்கவும், சமூக ஊடகத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அவர்கள் செய்யவும் பெற்றோர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.

இளைஞர்கள் , சமூக ஊடகத்தில் வெளியிடும் பதிவுகளைக் கண்காணிப்பதுடன், தேவை ஏற்பட்டால் அதை படித்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது எதிர்மறையான எண்ணங்கள் இளைஞர்களிடையே தோன்றியிருப்பது தெரிந்தால், அவர்களுடன் பழகி அதைக் களைய முயற்சிக்க வேண்டும்.

ஊடகங்களில் நமது வாழ்வுக்கு தேவையான அம்சங்கள் அதிகமாக காணப்பட்டாலும், வீணான விடயங்களை பார்ப்பதிலும், தேடுவதிலுமே இளம் சமுதாயம் ஆர்வத்தை காண்பிக்கிறது.

பொருளாதார வறுமை போன்றே ஆன்மீக வறுமையில் சிக்குண்ட இளைஞர்கள் நல் வழிப்படுத்தப் பட வேண்டும்.
பட்டியலிட்டுச் சொல்ல முடியாத அளவவு இளைஞர் உலகம் சவால்களை எதிர் கொண்டு கொண்டே இருக்கின்றது. அதிலும் முஸ்லிம் இளைஞர்கள் கடும் பாதிப்பக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் நல்வழிப்படுத்தப் பட வேண்டும்.

எனவே நவீன இளைஞர் சமூகம் பிழையான வழிகளை அறிந்து எச்சரிக்கையோடு இருக்கக் கடமைப்படுவதோடு இறுதி இலக்கான சுவனத்தின் இனிய வசந்தத்தையும் அல்லாஹ்வின் திருப்தியையும் ஆசிக்கும் உள்ளங்களாக நம் இளைய சமூகம் வளர்க்கப்பட வேண்டும்.

3 comments

  1. MN. NIHMATH NIJAD

    👍🏻

    👍🏻

    👍🏻

  2. குட் 👌

  3. Yas I like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *