Featured Posts
Home » சட்டங்கள் » பெருநாள் » பெருநாளும்… பிறையும்…

பெருநாளும்… பிறையும்…

வருடம் தோறும் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் வீசும் ரமளான் வருகிறபோது அதன் வசந்தத்தை குலைக்கும் விதமாக பிறை தொடர்பான விவாதமும் அறங்கேறிவிடுகிறது பிறை பார்ப்பது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது இமாம்கள் இதனை ஃபிக்ஹு ரீதியான கருத்துவேறுபாடாகத்தான் பார்த்து வந்தார்கள். இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும் சரிதான் என்ற நிலைபாட்டில் இருந்தார்கள் ஏனெனில் இது இஜ்திஹாதின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடிய விஷயமாக உள்ளது. அதில் உறுதியான கருத்தைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இரண்டு கூலியும் உறுதிபடுத்தப்பட்ட கருத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஒரு கூலியும் நிச்சயம் உண்டு. எனவே பிறை என்பது நேர்வழியையும், வழிகேட்டையும் தீர்மானிப்பதற்குரிய விஷயமல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனாலும் சமீப காலமாக மக்களுக்கு மத்தியில் பிறை ஒரு பிரச்சனையாக இருந்து வருவதைக் காணமுடிகிறது. இதற்குக் காரணம் ஃபிக்ஹ் சம்பந்தப்பட்ட விஷயத்தை அகீதாவாகப் பார்த்தது தான் பிறையை வைத்துக்கொண்டு சமுதாயம் பலகூறாக பிரிந்துள்ளது. சர்வதேசப்பிறை, உள்ளூர்ப் பிறை, விஞ்ஞானப் பிறை இதில் சமகாலத்தில் புதிதாகத் தோன்றிய கருத்து தான் விஞ்ஞானப் பிறை என்பது இக்கருத்திற்கு குர் ஆன் சுன்னாவில் நேரடியான எந்த ஒரு ஆதாரத்தையும் காணமுடியாது மாறாக பொதுவான பிறை சம்பந்தமான ஆதாரத்தை வளைத்தொடித்து அவர்களின் கருத்தை நிறுவ முயல்கிறார்கள். எனவே அது குறித்து இக்கட்டுரையில் நாம் விவாதிக்கவில்லை காலம் காலமாக இருந்து வரும் இரு கருத்துக்களைக் குறித்து மட்டும் இதில் பார்க்கவுள்ளோம்.

அதில் முதல் கருத்து ஒரு ஊரில் பிறை பார்க்கப்பட்டால் ஏணைய ஊரில் இருப்பவர்களும் அந்த பிறையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும் இதற்குறிய ஆதாரம்

  1. “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” 2:185

    ரமளான் நோன்பை அல்லாஹ் பிறையுடன் தொடர்பு படுத்திக் கூறுகிறான் அதில் ஒவ்வொரு ஊராரும் அவர்களுடைய பகுதியில் பார்க்க வேண்டுமென்று குறப்பாக்கவில்லை.

  2. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    ‘பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    நூல்: ஸஹீஹுல் புஹாரி 1909


    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    ‘ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.’
    என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    நூல்: ஸஹீஹுல் புஹாரி 1906


    இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திர்க்கு பொதுவாக சொல்லப்பட்டுள்ளது குறிப்பிட்ட சிலருக்கானதல்ல.

  3. இப்னு உமர் அவர்கள் கூறினார்கள் மக்கள் பிறையைத்தேடினார்கள் அப்போது நான் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நான் பிறையைப் பார்த்தேன் என்று சாட்சிக் கூறினேன் அப்போது நபி அவர்கள் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
    நூல்: சுனன் அபீதாவூத் 2342


  4. நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
    நூல்:சுனனுத் திர்மிதீ697


    இந்த நபிமொழிக்கு விளக்கமாக இமாம் திர்மிதி அவர்கள் கூறினார்கள் நோன்பும், பெருநாளும் ஜமாஅத்தாகவும், பெரும்பான்மை மக்களுடனும் நோற்கவேண்டுமென்பது தான் இதன் பொருள் என்பதாக அறிஞர்கள் கூறியுள்ளார்கள் என்றார்கள்.

    ஓர் ஊரில் இருப்பவர்கள் பிறரின் அறிவிப்பை ஏற்று செயல்படலாம் மார்க்கத்தின் அனைத்து சட்டங்களிலும் சாட்சி சொல்லுதல் உள்ளது அவ்வாறு தான் பிறையும் பார்க்காதவர்களுக்கு பார்த்தவர்கள் சாட்சி சொன்னால் போதுமானது இதில் தூரமாக இருப்பவர் அருகாமையில் இருப்பவர்கள் என்கிற வேறுபாடில்லை அவ்வாறு வேறுபடுத்திப்பார்ப்பதற்கு எவ்வித நேரடியான ஆதாரமுமில்லை இன்னும் சொல்லப்போனால் இது முஸ்லிம்களை ஒன்றிணைக்கக்கூடிய அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்துகின்ற கருத்தாகவும், இபாதத்தில் பேணுதலை கடைபிடிக்க பொருத்தமானதும் கூட மேற்கூறிய ஆதாரங்கள் அனைத்தும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது எல்லாவற்றிக்கும் மேலாக பிறை என்பது காலம் காட்டியாக உள்ளது சந்திரனை அல்லாஹ் காலம் காட்டியாகத் தான் ஆக்கியுள்ளான்.

  5. அவன்தான் சூரியனை பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். 10:5

    இவ்வசனத்தில் சந்திரனைப் படைத்ததின் நோக்கத்தை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். அது மக்களுக்கு மாதத்தையும் ஆண்டுகளையும் அறிவிப்பதாக உள்ளது. சூரியனைப் பொருத்தவரை அது நாட்காட்டியாகும்.
    (பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர்)

    ஒரு நாள் என்பது இருபத்தி நான்கு மணி நேரங்களைக் கொண்டதாகும் இந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் உலகில் அனைத்து பகுதியும் அடங்கிவிடும் ஆக உலகின் எந்த பகுதியில் பிறை உதயமானாலும் அது உலகின் அனைத்து பகுதிகளுக்கும் உரியதாகும்.

    இரண்டாவது கருத்து…
    ஒவ்வொரு பகுதியினரும் அவரது பகுதியில் தெரியும் பிறையை அடிப்படையாகக்கொண்டு நோன்பு நோற்க வேண்டும் இக்கருத்தை கூறுபவர்களின் ஆதாரமும் முதல் தரப்பினர் கூறிய ஆதாரம் தான் “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” 2:185


    இவ்வசனத்தின் அடிப்படையில் யார் பிறையைப் பார்க்கவில்லையோ அவர் அம்மாதத்திர்க்கு சாட்சியாகவில்லை என்று கூறுகிறார்கள்.  அதே போன்று “பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள், “பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள், என்பது போன்ற பிறைப் தொடர்பான அறிவிப்புகளை இதற்கு ஆதாரமாகக்கொள்கிறார்கள் இன்னும் இவர்கள் பிறையை யார் பார்க்கவில்லையோ அவர் நோன்பு நோற்கத் தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்.

    (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்)பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன். பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது “நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்” என்று பதிலளித்தேன். அவர்கள், “நீயே அதைக் கண்டாயா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்” என்று சொன்னார்கள்.
    அதற்கு நான், “முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள்.
    நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 1983


    ஒரு ஊரில் இருப்பவர்கள் வேறு ஊரில் பார்க்கும் பிறையை ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை என்பதற்கு இப்னு அப்பாஸ் அவர்களின் செய்தியை ஆதாரமாகக்கொள்கிறார்கள் ஆனால் இந்த சம்பவத்தைக்குறித்து உலமாக்கள் கருத்துவேறுபாடு
    கொண்டுள்ளார்கள் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரியில் இது தொடர்பாக உள்ள கருத்துவேறுபாடுகளை குறிப்பிட்டுள்ளார்கள் அதில் இமாம் இப்னுல் முந்திர் இமாம் இக்ரிமா, இமாம் காஸிம் பின் முஹம்மத்,இமாம் ஸாலிம்,இமாம் இஸ்ஹாக் ஆகியோர்களின் கருத்தாக ஒரு ஊரில் இருப்பவர்கள் வேறு ஊரில் பார்க்கும் பிறையை ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை என்று கூறுகிறார்கள்.

    இரண்டாவது கருத்து…
    ஒரு ஊரில் தென்பட்டால் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகும் இது தான் மாலிக் மத்ஹபினரிடம் பிரபலமாகும் ஆனால் இதற்கு மாற்றமான கருத்தில் இஜ்மா இருப்பதகவும் இன்னும் ஊருகள் தூரமாக இருந்தால் ஒரு ஊரில் பார்த்த பிறையை வேறு ஊரில் எடுத்துக்கொள்ளத்தேவையில்லை என்று இமாம் இப்னு அதில்பர் அவர்கள் கூறியுள்ளார்கள். இமாம் குர்துபி அவர்கள் கூறினார்கள் ஒரு பகுதியில் உறுதியாக பிறை பார்க்கப்பட்டு அச்செய்தி இரண்டு சாட்சிகள் மூலம் வேறு பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டால் அவர்களுக்கும் நோன்பு கடமையாகும்.

  6. மிகப்பெரிய இமாமிடம் (தலைவர்) இத்தகவல் உறுதிசெய்யப்படும் வரை ஒரு ஊரில் இருப்பவர்கள் வேறு ஊரில் பார்க்கும் பிறையை ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை அவர் உறுதிபடுத்தினால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரைப் பொறுத்தவரை அவரது ஆளுகையின் கீழ் இருக்கும் அனைத்து நாடும் ஒரே நாடாகும் இக்கருத்தை இமாம் இப்னுல் மாஜிஷூன் அவர்கள் கூறினார்கள்.நாடுகள் பக்கத்தில் இருந்தால் பிறை அறிவிப்பை எடுத்துக்கொள்ளலாம் நாடுகள் தூரமாக இருந்தால் எடுத்துக்கொள்ளத்தேவையில்லை என சில ஷாஃபி அறிஞர்கள் கூறினார்கள் இமாம் அபூ தய்யிப் இன்னும் சில ஷாஃபி அறிஞர்கள் நாடுகள் தூரமாக இருந்தாலும் நோன்பு கடமையாகுமென்று கூறியுள்ளார்கள்.
    ஃபத்ஹுல் பாரி 4/123

    மேற்குறிய கருத்துக் களைக்குறித்து இமாம் ஷவ்கானி அவர்கள் பின் வருமாறு கூறினார்கள் இந்த கருத்துக்களுக்கான ஆதாரம் குரைபின் அறிவிப்பாகும் அதில் சிரியாவில் பார்த்த பிறையை அடிப்படையாகக் கொண்டு இப்னு அப்பாஸ் அவர்கள் செயல்படவில்லை அது மட்டுமல்லாமல் அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்றும் கூறினார்கள் என்பதாகும். அறிந்து கொள்ளுங்கள் ஆதாரம் என்பது நபி அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதில் தான் உள்ளதே தவிர இப்னு அப்பாஸ் அவர்களின் இஜ்திஹாதிலிருந்து மக்கள் புரிந்து கொண்டதல்ல. ஏனெனில் இது தொடர்பான நபி அவர்களின் கூற்று இமாம் புஹாரி,முஸ்லிம் மற்றவர்களும் அறிவித்தது இவ்வாறு தான்…

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    ‘ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹுல் புஹாரி 1906


    இந்த செய்தி குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் உரியதல்ல மாறாக இந்தக் கூற்று அனைத்து முஸ்லிம்களுக்குமானதாகும். எனவே ஒரு ஊரில் பிறை பார்த்தார்கள் என்பதால் அவ்வூர் வாசிகளுக்கு நோன்பு கடமையாகும் என்று ஆதாரம் பிடிப்பது வேறு ஊர்மக்களுக்கு பிடிக்கத் தேவையில்லை என்று ஆதாரமெடுப்பதைவிட வெளிப்படையான ஆதாரமாகும். ஏனெனில் ஒரு ஊரில் உள்ளவர்கள் பிறையைப் பார்த்தார்களேயானால் நிச்சயமாக முஸ்லிம்கள் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என்பதாகும்.எனவே அவர்களுக்கு கடமையான நோன்பு இவர்களுக்கும் கடமையாகும்.

    இப்னுஅப்பாஸ் அவர்கள் சுட்டிக் காட்டுவதிலிருந்து ஒரு ஊரில் இருப்பவர்கள் பார்க்கும் பிறை வேறு ஊரில் இருப்பவர்களுக்கு கடமையாகாது என்பதை அறிவு ரீதியான ஆதாரத்தின் மூலம் வரையருக்கிறார் அதாவது இரண்டு ஊருகளும் தூரமாக இருந்து அவைகளுக்கு மத்தியில் பிறையின் உதயம் வேறுபடக்கூடியதாக இருந்தால் இது சாத்தியமாகும். பிறையின் உதயம் வேறுபடக்கூடிய தூரமில்லாமல் சிரியாவாசிகள் பார்த்த பிறையை அடிப்படையாகக் கொண்டு இப்னுஅப்பாஸ் அவர்கள் அமல் செய்யவில்லை என்பது அவரது இஜ்திஹாத் ஆகும் அதை ஆதாரமாகக் கொள்ளத்தேவையில்லை.
    நைலுல் அவ்தார் 4/230,231

    இக்கருத்தை ஏற்றுக் கொண்டால் அதன் மூலம் எல்லா ஊரிலும் கருத்துவேறுபாடும், பிரிவினையும் களைந்து சமுதாய ஒற்றுமையேற்பட இது காரணமாக அமையலாம்.
    இன்ஷா அல்லாஹ்…

பிறைப் பார்ப்பது தொடர்பான ஃபுகஹாக்களின் நிலைபாடு:
ஹனஃபி,மாலிகி,ஹன்பலி மத்ஹபின் ஃபுகஹாக்களிடத்தில் எங்கு பிறை தென்பட்டாலும் அப்பிறை முஸ்லிம்கள் அனைவருக்குமான பிறைதான் எனவே ஒரு நாட்டில் பிறை தென்பட்டால் ஏனைய நாடுகளில் இருப்பவர்கள் அதை அடிப்படையாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமென்று கூறியுள்ளார்கள்.

ஹனஃபி மத்ஹபில்…
இமாம் இப்னு ஹும்மாம் அவர்கள் கூறினார்கள் ஒரு ஊரில் பிறை பார்க்கப்பட்டது உறுதியானால் ஏனைய ஊரில் இருப்பவர்கள் மீதும் நோன்பு கடமையாகும். மத்ஹபின் வெளிப்படையான கருத்து மேற்கில் இருப்பவர்கள் பிறையைப் பார்த்தால் கிழக்கில் இருப்பவர்களுக்கும் நோன்பு கடமையாகும் என்பதாகும்.
ஃபத்ஹுல் கதீர் லி இப்னி ஹும்மாம் 2/313

மத்ஹபு ஹன்பலி
இமாம் மார்தாவி அவர்கள் கூறினார்கள்:
ஒரு ஊர் மக்கள் பிறையைப் பார்த்தார்களேயானால் மக்கள் அனைவரின் மீதும் நோன்பு கடமையாகும்.பிறையின் உதயம் வேறுபடாமல் இருந்தால் இதில் அதைப் பார்த்தவர்கள் பார்க்காதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் நோன்பு கடமையாகும். பிறையின் உதயம் வேறுபட்டாலும் கூட மத்ஹபின் சரியானக் கருத்தின் அடிப்படையில் நோன்பு கடமையாகும்.
அல் இன்ஸாஃப் ஃபீ மஃரிஃபத்திர் ராஜிஃ மினல் கிலாஃப் 3/273

இமாம் லைஸ் அவர்கள் கூறினார்கள்:
ஒரு ஊர் மக்கள் பிறையைப் பார்த்தார்களேயானால் மக்கள் அனைத்து ஊரில் இருப்பவர்கள் மீதும் நோன்பு கடமையாகும்.
பார்க்க இமாம் இப்னு குதாமா அவர்களின் அல்முக்னீ 3/107

இதே கருத்து சில மாலிகி மத்ஹபின் அறிஞர்களோடும், ஷாஃபி மத்ஹபின் அறிஞர்களோடும் இணைத்து சொல்லப்படுகிறது.

இமாம் மாலிக் அவர்கள் கூறியதாக இமாம் இப்னுல் காஸிம் மற்றும் இமாம் இப்னு வஹப் ஆகியோர்கள் கூறினார்கள் பஸராவாசிகள் ரமளான் பிறைப் பார்த்து அச்செய்தி கூஃபா, மதீனா, யமன் போன்ற பிரதேசத்தின் மக்களை அடைந்தால் அவர்களுக்கும் நோன்பு கடமையாகும். நோன்பு நிறைவேற்றுவது அவர்களுக்குத் தவறிப்போனால் அவர்கள் களா செய்ய வேண்டும்.
அல்முன்தகா ஷரஹுல் முவத்தா: 2/37

இறுதியாக பிறை தொடர்பான இருகருத்துக்களும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டதாகும் இரண்டுவிதமாகவும் புரிந்துக்கொள்ள வாய்ப்புள்ள காரணத்தில் தான் ஃபுகஹாக்கள் முரண்பட்டார்கள் எனவே இதை ஒரு (இஜ்திஹாதி மஸ்அலா) ஆய்வு ரீதீயான கருத்தாகத்தான் பார்க்கவேண்டும். இதை வைத்து சமுதாயத்தை பிரிப்பதோ, சண்டையிட்டுக் கொள்வதோ, நாங்கள் தான் நேர்வழியில் இருக்கிறோம் ஏனையவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று தீர்ப்பளிப்பதோ கூடாது.

அல்லாஹ் நம் அனைவருக்கும் சரியான கல்வியையும் நேரான பாதையையும் காட்டுவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *