Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » எங்களுக்கு வெற்றியே!

எங்களுக்கு வெற்றியே!

காரியாலயத்தில் கடமையாற்றும் (பெரும்பான்மை)மாற்றுமத உத்தியோகத்தர்கள் வழமைபோன்று அன்றும் முகமனுடன் என்னைக் கடந்து சென்றார்கள். அதற்கு முதல்நாள் நடைபெற்றிருந்த பேரினவாதக் கலவரத்தினால் ஏற்பட்ட பதற்றமும் கவலையும் சேர்ந்து செயற்கையானதொரு புன்னகையுடன் எனது பதில் வெளிப்பட்டது. எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும்தான்.

பதற்ற நிலைமை என்பதால் மாற்றுமத ஊர்களிலுள்ள காரியாலயங்களுக்குப் போக வேண்டிய முஸ்லிம் உத்தியோகத்தர்கள் அங்கே போகத் தயங்கிய அதேவேளை, முஸ்லிம்கள் செறிந்த எமது ஊர்க் காரியாலயத்திற்குச் சமுகமளித்த மாற்றுமத உத்தியோகத்தர்கள் பற்றி ஆச்சரியப்பட்டோம்.

இஸ்லாமியர்கள்மீது அவர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையையும் கௌரவத்தினையும் வெளிப்படுத்துவதையே அதிலிருந்து உணர முடிந்தது. அந்தக் கௌரவத்தினைப் பேணுவதில் நாம் வெற்றி கண்டுள்ளோம் என்பதே மாபெரும் வெற்றி.

“அவர்களுடைய வணக்கஸ்தலங்களை நாங்களும் உடைப்போம்…”
என்று பழிவாங்கத் துடித்த நம் இளைஞர்களைப் பார்த்து,

“பிறமதக் கடவுள்களை ஏசாதீர்கள் என்னும் மார்க்கத்தையுடவர்கள் நாம்…
உடைப்பது பற்றி நினைத்தும் பாராதே மகனே…”
என உபதேசிக்கும் தாய்மார்கள் இன்னும் இருக்கிறார்கள்.

“அவர்களை இப்படி தாக்குவேன்…
அப்படி தாக்குவேன்… ”
என்று சினிமாச் சண்டைக் காட்சிகளை நினைவுபடுத்தும் சிறுவர்களைப் பார்த்து,

“தாக்க வருபவர்களை எதிர்த்துப் போராடு…
ஆனால், அவர்கள் சார்ந்த அனைவரையுமே எதிரியாக பார்க்காதே மகனே…”
என்று சொல்லி நேர்வழிப்படுத்தும் தாய்மார்கள் இன்னும் இருக்கிறார்கள்.

அதனால்தான் பழிக்குப்பழி என்ற பெயரில் மத ஸ்தலங்களை தாக்க நம்மவர்கள் முன்வரவில்லை.

“என்மீது சுமத்திய பழியை உன்மீதும் சுமத்துவேன்…”
என்று யாரும் புறப்படவில்லை.

“எனது வர்த்தகம் சிதைத்தாய்… அதனால், நான் சிதைப்பதற்கு உனது வர்த்தகம் எங்கே…”
எனத் தேடவில்லை

இவைதான் இஸ்லாம் கூறும் பண்பாடுகள்.
“இறைவன் மனித வர்க்கத்திற்கு அருளிய பொக்கிசத்தின் பண்பாட்டியலை போராடியேனும் காப்பாற்று மகனே!”
என்று வீரப்பால் ஊட்டும் தாய்மார்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்தத் தாய்மார்களின் வரிசையில் நாமும் இருக்கின்றோமா என்று மீளாய்வு செய்ய வேண்டியும் உள்ளது.

உரிமையைக் காக்கவும், உடமையை மீட்கவும் போராடுவதை யார் எப்படி எடுத்துக்கொண்டாலும் இஸ்லாம் அதை நோக்கும் விதம் வித்தியாசமானது. ஆபத்து வரும்போது எதிர்த்து போராடுவது அடியானின் கடமை என்றும், ஒருவேளை, அதில் உயிர் நீத்தாலும் அவனுக்காக உறுதியளிக்கப்பட்ட சுவனம் பற்றியும் தெளிவாய்க் கூறுகிறது.

அப்படிப்பட்ட மறுமைக்கான வெற்றியை நோக்கி நகரும் நம் இலட்சியத்தினை அறியாதவர்கள் அவர்கள்,

வேதனைகளை பொறுக்கச் செய்யும் “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்” என்ற தாரக மந்திரத்தின் இரகசியத்தினை அறியாதவர்கள் அவர்கள்,

துன்பங்களை இறைவனிடம் இறக்கி அதற்கு பகரமாய் மறுமை இன்பங்களைப் பிரார்த்திப்பதிலுள்ள சந்தோசத்தினை அறியாதவர்கள் அவர்கள்,

“அவனொளியை அணைத்துவிட அவர்கள் முயற்சித்த போதிலும் தன் ஒளியை பூர்த்தியாக்காது இருக்கமாட்டான்”
என்ற இறை வாக்கைப் பற்றி அறியாதவர்கள் அவர்கள்,

இத்தனையும் அறியாத அவர்கள் தன்னையறியாமலேயே எமது வெற்றிக்கு உரம் போடுகிறார்கள். ஆழம் அறியாமல் காலை விட்டவர்கள் அவர்கள்.

அவர்கள் முறைக்கிறார்கள் என்பதற்காக நம் சம்பாத்தியங்களை முடக்கமாட்டோம். அவர்கள் சலித்துக்கொள்கிறார்கள் என்பதற்காக நம் ஐங்காலங்களை நிறுத்தமாட்டோம். முற்றுப்பெற்ற இஸ்லாத்தை அவர்களின் ரசனைக்காக நவீனப்படுத்த மாட்டோம்

ஆனால், இவற்றைத்தான் அந்தக் குழப்பவாதிகள் எதிர்பார்க்கக்கூடும். பிரச்சினைகள் எந்த வடிவில் வந்தாலும் எமது பிள்ளைகள் இஸ்லாத்தின் வரையறைக்குள் இருந்து அதை எதிர்கொள்வதற்கான பயிற்சியை தாய்மாராகிய நாமே வீட்டிலிருந்து வழங்க வேண்டும்.

அந்த வகையில் புன்னகை, இங்கிதம், புரிந்துணர்வு, மென்மை, விட்டுக்கொடுப்பு போன்றவைதான் எமது ஆரம்ப ஆயுதங்களாகும். அதற்கடுத்ததாகவே தற்காப்பு கலை அவசியப்படுகின்றது.

மேலும், பலராலும் அலட்சியப்படுத்தப்படும் இரண்டு விடயங்களை எமது பிள்ளைகளுக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. ஒன்று பாவமன்னிப்பு, மற்றையது துஆ. ஒருமித்த மனதுடன் நம்பிக்கை வைத்து இறைவனிடம் விடுக்கப்படும் விண்ணப்பங்கள் ஒருபோதும் நிராகரிக்கப்படுவதில்லை. நிலைமையைப் புரட்டிப் போடக்கூடிய “துஆ” என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தும்படி பிள்ளைகளைத் தூண்டிவிடுவது மாத்திரமே எமது வேலை.

பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுதலிலுள்ள பாதுகாப்பு வேறெதிலும் எமக்கு கிடைக்கப்போவதில்லை. அதிலும் முழுச் சமுதாயத்திற்காகவும் பாவமன்னிப்பு கோருவது எம் பாதுகாப்பை இறைவனிடத்தில் மேலும் வலுப்படுத்தும் என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

மேலும், பொறுமை எனும் ஆயுதத்தை கடைப்பிடிப்பற்கான ஆறுதல் வசனங்களை இறைமறையும் ஹதீஸ்களும் கொண்டுள்ளதோடு, தன்னால் இறக்கப்பட்ட மார்க்கத்தை தானே காத்திடுவதாக இறைவன் எமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றான். நன்மைகளை அறுவடைசெய்ய விரிக்கப்பட்ட பூமி இது. இங்கே எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

இன்னும், அவர்கள் மூட்டிவிட்ட தீப்பொறிகளுக்குச் சாட்சியமே இல்லாதிருக்கலாம்

அந்தச் சுவாலையின் உயரத்திற்கு அவர்களின் சேமிப்புகளும் உயர்ந்திருக்கலாம்

அவர்களின் கல்லெறிகள் எம் குருதி ருசித்திருக்கலாம்

அவைதாம் அவர்களின் கைகள் கொண்டு அவர்கள் சம்பாதித்தவை

ஆனால், எது நடந்தாலும் எம் பிள்ளைகள் சாமர்த்தியமாக எதிர்கொள்ளும் தைரியத்தினை பெற்றிருக்கிறார்களா? என்பதை இஸ்லாத்தின் வரையறைக்குள் மீள்பரிசீலனை செய்து வந்தாலே போதுமானது ஈருலகிலும் எமக்கு வெற்றியே!

– பர்சானா றியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *