Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » சுதந்திர இலங்கையும் முஸ்லிம் சமூகமும்

சுதந்திர இலங்கையும் முஸ்லிம் சமூகமும்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)-

பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுயாட்சியைப் பெற்று 71 வருடங்களாகிறது. இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். தமது அதிகாரத்துக்குள் வைத்திருந்த சில நாடுகளுக்கு முதற்கட்டமாக மேலாட்சி என அறியப்படும் அந்தஸ்த்துடனான சுதந்திரத்தை வழங்கியது பிரித்தானியா. இதன் மூலம் பெயரளவிலாவது பிரித்தானியாவின் முடியாட்சி தனது ஆளுமையைத் தக்க வைத்துக்கொண்டது.

இரண்டாம் உலகயுத்தத்தினை வெற்றி கொள்ளும் நோக்கில் பிரித்தானியர்கள் ஒரு வியூகத்தை வகுத்தார்கள். அவர்களது காலணித்துவத்தின் கீழிருந்த நாடுகள் யுத்தத்தில் பிரித்தானியர்களுக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அந்நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள். அதே போல் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்தை வழங்குவதற்கான ஒரு தகுதியாக சிறுபான்மையினர் பாதிக்கப்படாதிருக்க 3/4 இற்கு அதிகமான பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை விடுத்தனர்.

ஆனால் இலங்கையின் பெரும்பான்மையான பௌத்த சிங்களவர்களால் தனித்து இந்த பெரும்பாண்மையை காண்பிக்க முடியாதிருந்தது. அந்த காலகட்டத்தில் ஜிஜி பொன்னம்பலம் அவர்கள் சட்டசபையில் 50:50 என்ற நிபந்தனையோடு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க நிபந்தனைவிடுத்தார்.

அவ்வாறு நாடு பிரிந்து செல்லக் கூடியவாறான ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
அப்போது சட்டசபையில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இருந்த டாக்டர் எம்.சி.எம் கலீல், சேர் றாசிக் பரீத், டீ.பீ ஜாயா போன்றோர் பெரும்பான்மையோடு சேர்ந்து போவதன் மூலமே பிரிபடாத சுதந்திர இலங்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்று எவ்வித நிபந்தனையுமற்ற ஆதரவை வழங்கி உலக அரங்கில் இலங்கையை ஒரு தனித்த நாடாக ஆக்கித் தந்தார்கள்.

சுதந்திர இலங்கை என்ற மசோதா முன்வைக்கப்பட்டபோது முஸ்லிம்கள் அதற்கு கூடுதல் ஆதரவு வழங்கியிருப்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. இம்மசோதாவின் அறிமுக உரையில் D.S.சேனானாயகா கூறிய கருத்தை இங்கு ஞாபகிப்பது சாலச்சிறந்தது என நினைக்கின்றேன்.

“தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் லன்டனிலிருந்து ஆட்சி செய்யப்பட விரும்புகிறீர்களா? அல்லது இலங்கை இலங்கையராலேயே ஆளப்படுவதற்கு உதவுவீர்களா? முஸ்லிம் சகோதரர்களைப் பற்றிக்கூறுவதாயின் அவர்களது நிதானமான போக்கைக் கண்டு நாம் அனைவரும் பாராட்டுகின்றோம்.சிங்கள அடக்குமுறை என்ற ஒரு கட்டுக்கதையை அவர்கள் கூறவில்லை. அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய நாம் முனைகின்றோம்.” என்று முஸ்லிம்களை வழித்துப் பேசினார்.

இதுபற்றி D.P.ஜாயா அவர்கள் ஆற்றிய உரை முஸ்லிம்கள் எந்தளவு இந்நாட்டின் சுதந்திரத்திற்கு பங்காற்றி உள்ளார்கள் என்பதைப் படம்போட்டுக் காட்டுகின்றது. அவர் தனது உரையில் “நான் இங்கு சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அல்லது பெரும்பான்மை இனத்தின் வெற்றி பற்றியோ கூற முன்வரவில்லை. இச்சபையிலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்கள் மசோதாவை ஆதரிப்பதற்கான ஒரே காரணத்தைக்கூற விரும்புகின்றேன். இந்த நாடு சுதந்திரமடைய எமது சமூகத்திற்குக் கிடைக்கவிருக்கும் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் நாம் தியாகம் செய்யத் தயாராயுள்ளோம். நான் இதனை முழு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் அவர்கள் சார்பாக நின்று கூறுகின்றேன்.” என்றார். பின்பு இதனையே ஆதரித்து Sir ராசிக் பரீதும் உரையாற்றினார்.

முஸ்லிம்களின் மகத்தான இந்த அர்ப்பணிப்பை பிற்காலத்தில் காலம் சென்ற
எஸ்.டபிளியூ.ஆர்.டீ பண்டாரநாயக்க அவர்கள் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரிபடா சுதந்திர இலங்கையின் மறைக்கப்பட்ட வரலாற்று நாயகர்களை நினைவு கூரும் நாளாகவும் இந்நாட்டின் சுதந்திர தினம் திகழ்கிறது.

இந்­நி­லையில், இலங்கை மண்ணின் பல்­லின சமூகத் தலை­வர்­களின் பெரும் தியாகங்களினாலும், அர்ப்பணிப்புக்களினாலும் பெறப்பட்ட இச்சுதந்திரத்தின் உரி­மை­களை அனைத்து இன மக்­களும் அனு­ப­விக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யாது. இருப்­பினும், பௌத்த சிங்­கள மக்கள் மத்தியில் வாழும் பேரி­ன­வாத கடும்போக்காளர்கள் இச்­சு­தந்­தி­ரத்தின் வரலாற்றுப் பின்­னணி தெரி­யாமல் இந்­நாடு பௌத்த சிங்­கள மக்­க­ளுக்கு மாத்­திரம் உரித்தா­னது, ஏனைய இனத்­தி­னர்கள் இந்நாட்டின் வந்­தேறு குடிகள் என சந்தர்ப்பத்­திற்கு சந்தர்ப்பம் கூறி­வ­ரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

கடும்­போக்­கா­ளர்கள் கூறு­வது போன்று இந்நாடு பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தா­ன­தல்ல. இந்­நாட்டில் யாரெல்லாம் குடி­யு­ரிமை பெற்று வாழ்கிறார்களோ அவர்கள் அனை­வ­ருக்கும் இந்­நாடு சொந்தம் என்­பதை குறிப்­பிட்ட வர்க்கத்தினருக்கு தக்க ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்க வேண்­டிய கடப்­பாடு இந்­நாட்டில் வாழும் ஒவ்வொரு சிறு­பான்மை இனத்தினரதும் பொறுப்பா­க­வுள்­ளது. அதற்கான நாள் இந்­நாடு சுதந்திரம் பெற்ற தின­மாகும் என்பதும் சுட்டிக்காட்­டத்­தக்­கது. அந்­த­வகையில், இந்நாட்டில் சிறு­பான்மை இன­மாக வாழும் முஸ்லிம்­களின் வர­லாற்றுப் பின்­னணி பற்­றியும் அவர்கள் இந்­நாடு சுதந்திரம் பெறு­வதற்கும், சுதந்­தி­ரத்­திற்கு முன்­னரும் புரிந்த பங்களிப்புக்கள், தியாகங்கள் பற்றி நாட்டுப்பற்றுடன் வெளிப்படுத்தப்படுவதும் அவ­சி­ய­மாகும்.

இலங்­கையின் வர­லாற்றில் முஸ்­லிம்கள்
இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் தாய்­நாடு இலங்கை. இந்­நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது இந்­நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்­ப­டு­கின்­ற­போது, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்­கவோ அல்லது இந்­நாட்­டுக்கு எதிராக அந்நிய சக்திகளுக்கு துணை போய் துரோகம் இழைக்கவோ முடி­யாது. ஏனெ­னில் இந்நாட்டில் வாழ்ந்து மறைந்து, வாழ்ந்து கொண்­டி­ருக்கும் முஸ்­லிம்­களின் வரலாறானது, வர­லாறு தெரி­யாத கடும்போக்கா­ளர்கள் கூறு­வ­து­போன்­ற­தல்ல. இந்­நாட்டில் மிக்க தொன்­மை­வாய்ந்த வரலாற்றை கொண்ட ஒரு தனித்­துவ இன­மாக முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இலங்கையின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்களும் பூர்வீகக் குடிகளாவார்கள். இலங்கையில் கோல்புறூக் ஆணைக் குழு சட்ட நிருபண சபைக்கு பிரதிநிதிகளை நியமித்த போது முஸ்லிம்களின் சார்பில் யாரையும் நியமிக்கவில்லை. தங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டுமென்று முஸ்லிம்கள் காலணித்துவ ஆட்சியாளர்களைக் கோரிய போது, முஸ்லிம்கள் தமிழைப் பேசுவதனால் அவர்கள் இஸ்லாமியத் தமிழர்கள் என்று சேர் பொன். இராமநாதன் கருத்துக்களை முன் வைத்தார். இதனை வன்மையாக அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் எதிர்த்தார்கள். இதன் காரணமாக 1889ஆம் ஆண்டு சட்ட நிருபண சபைக்கு எம்.சீ.அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டார். இதன் மூலமாக முஸ்லிம்கள் இலங்கை நாட்டின் தேசிய இனம் என்பதனை காலணித்துவ ஆட்சியாளர்கள் எற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதனை காட்டுகின்றது.

முஸ்லிம்களை ஒரு தேசிய இனம் என்று ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழர்களிலும், சிங்களவர்களிலும் இன்று இருப்பதனைப் போன்று அன்றும் இருந்துள்ளார்கள். முஸ்லிம்கள் இஸ்லாமியத் தமிழர்கள் என்று சேர் பொன்.இராமநாதன் தெரிவித்த போது சேர். றாசிக் பரீட் நாங்கள் இஸ்லாமியத் தமிழர்களில்லை. எங்களது பூர்வீகம் அரேபியா என்றும், அவர்களின் சந்ததியினரே நாங்கள் என்ற கருத்தையும் அவர் முன் வைத்து முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான இனம் என்று வாதிட்டார்.

ஆனால், சேர். றாசிக் பரீட் அன்று முன் வைத்த கருத்துக்களில் ஒன்றாகிய எங்களது பூர்வீகம் அரேபியா என்பதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், வர்த்தக நோக்கத்திற்காக அரேபியர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அவர்களில் சிலர் இங்கேயே நிரந்தரமாக குடியமர்ந்து விட்டார்கள் என்பது உண்மை. ஆனால், அரேபியர்கள் இங்கு வருகை தருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு. இந்த வரலாற்றைக் கருத்திற் கொள்ளாது கருத்துக்களை முன் வைக்க முடியாது. ஆதலால் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் முழுக்க முழுக்க அரேபியர்களின் பரம்பரையினர் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பண்டைக் காலம் முதல் இன்றைய முஸ்லிம்களின் சந்ததியினர் இலங்கையில் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள் என்றுதான் வரலாறுகள் கூறுகின்றன.

இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்கள் ஆரியர்களின் பரம்பரையினர். இலங்கைக்கு ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னரே அரேபியர்கள் வந்து விட்டதாக ‘வில்லியம் கைகர்’ என்பவர் குறிப்பிடுகின்றார். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வருகின்றமையால் வேடர்கள் ஏனைய பழங்குடிகள் போன்று அவர்களும் இந்நாட்டு குடிகளே என்று வரலாற்று ஆய்வாளர் கலாநிதி பாலேந்திரா குறிப்பிட்டுள்ளார்.

ஆதலால், விஜயன் தனது 700 தோழர்களுடன் இலங்கைக்கு வருகை தந்தமையானது அரேபியாகளின் வருகைக்குப் பின்னரே இடம் பெற்றுள்ளன. இந்தக் கருத்தின் படி பார்க்கின்ற போது இயக்கர். நாகர்கள் போன்று அரேபியர்களும் பூர்வீகக் குடிகளாவர்கள். அரேபிய முஸ்லிம்களின் பரம்பரையினர்தான் இலங்கை முஸ்லிம்கள். ஆகவே அவர்கள் இலங்கையை தமது தாயகமாகக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்களது தாயகமான சவூதி அரேபியாவுக்குச் செல்ல வேண்டுமென்று குரல் கொடுக்கும் பௌத்த சிங்கள இனவாதிகள் வரலாற்றை திரிபுபடுத்தி கருத்துக்களை முன் வைப்பதனை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு இடையே ஒற்றுமையின்மையை வளர்ப்பதோடு, பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

இலங்கை முஸ்லிம்களின் தாயகம் சவூதி அரேபியா என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்த நாட்டின் மீது பௌத்த சிங்களவர்களை விடவும் குறையாத உரிமை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்பதனை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில், அரேபியர்களின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து வந்த விஜயனதும், 700 தோழர்களினதும் பரம்பரையினர் இலங்கையை தனது தாயகம் என்று கூறும் போது, விஜயனின் வருகைக்கு முதல் இலங்கைக்கு வருகை தந்த அரேபியர்களின் பரம்பரையினர் என்று கூறப்படும் முஸ்லிம்கள் இலங்கைதான் எங்களின் தாயகம் என்று ஏன் உரிமை பாராட்ட முடியாது.

மேலும், உலகில் உள்ள பெருவாரியான வரலாற்று ஆசிரியர்களினால் குறிப்பிடப்படுகின்ற மலையில்தான் உலகின் முதல் மனிதனான ஆதம் (அலை) சுவர்க்கத்தில் இருந்து இறங்கியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இந்தக் கருத்தின் படி பார்க்கின்ற போது, ஆதிமனிதன் ஆதம் (அலை) ஒரு முஸ்லிமாகும். ஆதலால், முஸ்லிம்கள்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று வாதிடவும் முடியும்.

மற்றொரு வகையில் பார்க்கின்ற போது, முக்குவத் தலைவனான வேதியரசனுக்கும், கரையோரத் தலைவனான மாணிக்கத்திற்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் கரையோரத் தலைவனின் படையை எதிர் கொள்வதற்கு வேதியரசன் அச்சம் கொண்டான். இதன் காரணமாக குதிரை மலையடிவாரத்தில் வசித்து வந்த அரேபிய முஸ்லிம்களின் உதவியை முக்குவத் தலைவன் வேண்டி நின்றான். அரேபிய முஸ்லிம்களும் அவனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு போருக்கு உதவியதாகவும், அப்போரில் முக்குவர்கள் வெற்றி பெற்றதாகவும். அந்த வெற்றியை தொடர்ந்து முக்குவர்கள் இஸ்லாத்தை தழுவியதாகவும் வரலாறுகள் உள்ளன. இதன்படி பார்க்கின்ற போது இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் அரேபிய பரம்பரையில் வந்தவர்களல்லர். தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாகத்தான் சேர். பொன்.இராமநாதன் இஸ்லாமியத் தமிழர்கள் என்று அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வரலாற்றை எடுத்துப் பார்க்கின்ற போது இலங்கை முஸ்லிம்களை இரு வகைப்படுத்தலாம். ஓன்று பண்டுதொட்டு வாழ்ந்த முஸ்லிம்கள். இரண்டாவது அரேபியாவில் இருந்து வர்த்தகத்திற்காக வருகை தந்த அரேபியர்களின் பரம்பரையினர். அரேபியர்கள் வர்த்தகத்திற்காக வருகை தந்து இங்கு தங்கிக் கொண்டாலும், அவர்கள் இங்குள்ள பெண்களைத்தான் திருமணம் செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இவ்வாறு தெளிவாக இருக்கின்ற நிலையில் பௌத்தர்கள் மட்டும் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்றும், முஸ்லிம்கள் தமது கலாச்சாரங்களை சிங்கள பௌத்தர்களுக்கு ஏற்றவாறு பாதிப்பில்லாதவகையில் மேற்கொள்ள வேண்டுமென்றும் கருத்துக்களை முன் வைப்பது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை திரிபுபடுத்துவதற்கு எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சியாகும். ஒரு இனம் தமக்கான தனித்துவத்திற்கும், கலைகளுக்கும், கலாசாரத்திற்கும், விழுமியங்களுக்கும் ஆபத்து ஏற்படுகின்ற போது அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த இனக் குழுமம் போராடும். இதனை உலக வரலாற்றில் காணக் கூடியதாக இருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்களின் தேசிய மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள்
இலங்கைக்கு முஸ்லிம்கள் தமது பொருளாதார நலனில் மாத்திரமே அக்கறை செலுத்தினரேயன்றி இந்த நாட்டுக்குத் தேசிய ரீதியில் குறிப்பிடத்தக்க எத்தகைய பங்களிப்பையும் செய்ய்வில்லை எனும் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான ஒரு கருத்தியல் பெளத்த கடும்போக்காளர்களால் பொதுவாக முன்வைக்கப்பட்டுவருவதை அவதானிக்கமுடிகிறது. அந்தவகையில் எமது முன்னோர்களின் தேசிய மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் குறித்து நாம் அறிந்து கொள்வது அவசியமானதும் காலத்தின் தேவையுமாகும்.

இந்த நாட்டு முஸ்லிம்களின் வரலாறு பற்றிப் பேசும் எவரும் இலங்கை முஸ்லிம்களின் தேசிய பொருளாதார பங்களிப்புக்கள் பற்றி இருட்டடிப்புச் செய்த நிலையில் அவர்களின் வரலாறு பற்றிப் பேச முடியாது என்று கருதுமளவுக்கு, இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையில் வாழ்ந்த ஆரம்ப கால முஸ்லிம்கள் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் பல்வேறு துறைகளில் பல்வேறு தளங்களில் நின்று இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமாக உழைத்துள்ளார்கள் என்பதை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை காய்தல் உவத்தலின்றி அறிய விரும்பும் எவரும் வரலாறு நெடுகிலும் கண்டுகொள்வர்.

இந்தவகையில் முஸ்லிம்கள் இலங்கையின் வெளி நாட்டு வர்த்தகத்தைப் பேணுவதிலும் அதனூடாக உள்நாட்டின் விவசாயம் முதலான பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவுவதிலும் சிங்கள மன்னர்களின் காலத்திலும் பின்னரும் உள்நாட்டு அரசியலிலும் காத்திரமான பல்வேறு பணிகளை ஆற்றி வந்துள்ளனர் என்ற உண்மையை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இலங்கையின் வெளி நாட்டு வர்த்தகத்தில் ஆரம்பகால முஸ்லிம்கள் பெருமளவு பங்களிப்புச் செய்துள்ளனர். அநுராதபுரக் காலத்தில் மேலோங்கி நின்றிருந்த விவசாயப் பொருளாதாரமும் அதனோடு தொடர்பான நீர்ப்பாசனக் கட்டமைப்புகளும் முஸ்லிம்களின் கைகளில் தங்கியிருந்த வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் கிடைத்த மேலதிக வருவாய்களைக் கொண்டே விருத்தி செய்யப்பட்டன.

இக்கருத்தை, “இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் வளர்ச்சி அடைந்திருந்த காலப்பகுதியிலேயே மிகப் பாரிய அளவிலான நீர்ப்பாசன வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.” என்ற பேராசிரியர் குணவர்தனாவின் கூற்று உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்தானது, வெளி நாட்டு வர்த்தகம் இந்த நீர்ப்பாசனப் பணிகளுக்கான வருமானத்தை அளித்து வந்துள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது.

இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் அறிமுகப்படுத்திய தாவளப் போக்குவரத்து முறை அவர்கள் இந்த நாட்டுக்குச் செய்த பிறிதொரு பங்களிப்பாகும். அரபுப் பிராந்தியங்களில் ஒட்டகைகளிலும் குதிரைகளிலும் கழுதைகளிலும் பொதிகளை ஏற்றிச் சென்ற அரபு வர்த்தகர்கள், இலங்கையில் காளை மாடுகளின் துணைகொண்டு வர்த்தகப் பண்டங்களை கரை நாட்டிலிருந்து உள்-நாட்டுப் பகுதிகளுக்குப் பரிமாற்றம் செய்தனர். இதுவே தாவளப் போக்குவரத்து முறை என்றழைக்கப்பட்டு வருகின்றது.

மலை நாட்டு வர்த்தகப் பொருட்களான பாக்கு, யானைத் தந்தம் முதலானவற்றைக் கரையோரத் துறைமுகங்களான கொட்டியாரம், கற்பிட்டி, புத்தளம் போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்ற அவர்கள், உப்பு, கறுவா, துணிமணி என்பவற்றை கரையோரத் துறைமுகங்களில் இருந்து மலை நாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

கண்டிய மன்னன் இராஜசிங்கனை 1762ல் சந்திக்கச் சென்ற ஆங்கிலேயத் தூதுவர் ஜோன் பைபஸ், தான் திருகோணமலையில் இருந்து கண்டிக்குச் செல்லும் வழியில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 20 முதல் 30 வரையான பொதி சுமக்கும் மாடுகளையும் அவற்றை வழி நடாத்திச் செல்லும் வர்த்தகக் கூட்டம் ஒன்றைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்.

நெசவுத்தொழிலை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இலங்கையில் வாழ்ந்த ஆரம்பகால முஸ்லிம்களையே சாரும். பர்பரீனில் வாழ்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் 12ம் இறுதியில் அல்லது 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெசவுத் தொழில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதென அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் குறிப்பிடுகிறார்.

இலங்கைவாழ் முஸ்லிகள் இந்த நாட்டின் மருத்துவத் துறைக்கு வழங்கியுள்ள பங்களிப்புக்களும் குறிப்பிடத்தக்கனவாகும். இந்தவகையில் யூனானி வைத்தியம் இலங்கை முஸ்லிம்களின் முக்கியமானதொரு தேசியப் பங்களிப்பெனலாம். 9ம்,10ம் நூற்றாண்டுகளில் கரையோரத் துறைமுக நகர்களில் வாழ்ந்த அரபுமக்கள் ஊடாக இந்த யூனானி மருத்துவப் பாரம்பரியம் அறிமுகமானது. ஆரம்பத்தில் கரையோரப் பிரதேசங்களில் மட்டுமே வழக்கிலிருந்த இந்த வைத்திய முறை பின்னர் படிப்படியாக உள் நாட்டுப் பகுதிகளிலும் பரவியது.

இலங்கையை ஆண்ட செனரத்தும் அவரது புதல்வன் 2ம் இராஜசிங்கனும், காலியில் யூனானி மருத்துவராகக் கடமை புரிந்த சுல்தான் என்பவருக்கு இரண்டு காணித் துண்டுகளை இலவசமாக வழங்கியதுடன் கண்டியில் குடியிருப்பதற்கான அனுமதியையும் வழங்கினான். இந்த சுல்தான் கண்டிய மன்னனின் அரசவையிலும் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்கள மன்னர்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டதால் முஸ்லிம் வைத்தியர்கள் அவர்களின் நன்மதிப்பைப் பெற்று வாழ்ந்தனர். இவ்வாறான நன்மதிப்பைப் பெற்ற ஒருவருக்கு “பெஹேத்கே முகாந்திரம் (அரச மருத்துவ இலாகாவின் தலைவர்) எனும் பொறுப்பை மன்னன் வழங்கினான். அத்துடன் தும்பறை, மாத்தறை, யடிநுவர போன்ற பகுதிகளில் காணிகளை வழங்கி, “வைத்திய திலக ராஜ கருண கோபால முதலியார்” எனும் பட்டத்தையும் வழங்கி கௌரவித்தான்.

சிங்கள மன்னர்களின் தூதுவர்களாகவும் முஸ்லிம்கள் செயல்பட்டுத் தமது பங்களிப்பை இந்த நாட்டுக்கு வழங்கியுள்ளனர். அப்போதைய எகிப்து நாட்டுடன் வர்த்தக ரீதியான உறவை வளர்த்துக்கொள்ள விரும்பிய மன்னன் 1ம் புவனேகபாகு, அல்ஹாஜ் அபூ உஸ்மான் என்பவரை எகிப்துக்குத் தூதுவராக அனுப்பி வைத்தார்.

ஜோன் பைபஸ் கண்டி மன்னனைச் சந்திக்க இலங்கை வந்தபோது கண்டிய மன்னனின் தூதுவராக திருகோண்மலை சென்று அவரைக் கண்டிக்கு அழைத்து வந்தவர் “உஸ்மான் லெப்பை” என்ற முஸ்லிமாவார்.
மன்னன் புவனேகபாகு போர்த்துக்கேயரோடு சேர்ந்து மன்னன் மாயாதுன்னையை எதிர்த்தபோது போர்த்துக்கேயரை விரட்டியடிப்பதற்காக கள்ளிக்கோட்டை மன்னன் சாமோரினின் உதவி மாயாதுன்னைக்கு அவசியமான வேளையில், இவ்வுதவியைப் பெறுவதற்காக முஸ்லிம்களையே கள்ளிக்கோட்டைக்கு மாயாதுன்னை அனுப்பிவைத்தான்.

சிங்கள மன்னர்களிடத்தில் நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் பணியாற்றினரென புவியியல் அறிஞர் அல்-இத்ரீஸி குறிப்பிடுகின்றார். இவர்கள் நால்வரும் அமைச்சர்களாகவன்றி அந்நிய சமூகத்தாரிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைப்போராகவும் வெளிநாட்டு வணிகத்தில் அரசுக்கு ஆலோசனை வழங்குவோராகவுமே இருந்தனர் என்கிறார் பீ.ஜே. பெரேரா.

கண்டிய மன்னன் சார்பாக முஸ்லிம்கள் ஒல்லாந்தரின் உதவியை நாடினர் என்ற ஒரே காரணத்துக்காகவே போர்த்துக்கேயர் கி.பி. 1642ல் 200 முதல் 300 வரையான ஆண்களை மாத்தறையில் கொலைசெய்ததோடு பெண்களையும் சிறார்களையும் சிறைப்படுத்தினர்.
போர்த்துக்கேயரைத் துரத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு னன்றிக் கடனாகவே மன்னன் ராஜசிங்கன் அக்குறணையில் முஸ்லிம்களுக்கு காணி வழங்கி அவர்களை அங்கு குடியிருக்கச்செய்தான்.

இவ்வாறு இலங்கை முஸ்லிம்கள் அன்று தொட்டு இன்றுவரை சமயத்தால் முஸ்லிம்களாக இருக்கின்ற அதே நேரம் தேசத்தால் இலங்கையர் என்று செயற்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் ஈண்டு குறிப்பிடலாம்.

முடிவாக!

எமது நாடு உலக வரைபடத்தில் மிகச்சிறியதாகத் தென்பட்ட போதிலும் சுமார் 2500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப்பின்னணியைக் கொண்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எமது நாடு ஆரம்ப காலந்தொட்டே முற்று முழுதாக மேற்கத்தேயவாதிகளின் ஆதிக்கத்துக்குள்ளேயே அகப்பட்டிருந்தது. 1505 ஆம் ஆண்டு தொடக்கம்,சுதந்திரம் அடைந்த வருடமான 1948 வரைக்குமுள்ள காலப்பகுதியை போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என மேலை நாட்டவர்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு பெயர் போன ஒரு தீவாகவே இலங்கைத் தீவு திகழ்ந்துள்ளது. இதற்கு மிகவும் பிரதான காரணியாக அமைந்தது எமது நட்டின் புவியியல் அமைப்பும் எமது தாய்நாட்டில் காணப்படுகின்ற இயற்கை வளங்களாகும்.

இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் தேதி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டபோது எமது நாட்டின் முதல் பிரதம மந்திரியாக டி.எஸ். சேனநாயக்க ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.
டி. எஸ். சேனநாயக்கா, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்த்தன ,சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், ரி. பி. ஜாயா, சேர் ராசிக் பரீட் ஆகியோர் ஒன்றாக இணைந்து சமாதானமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உண்மை நிலையை விளக்கி சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஒருவகையில் சாதனை படைத்தார்கள்.

ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை மீட்பதற்காக இலங்கையர் அனைவரும் இன மத மொழி பேதமின்றி முயற்சி செய்துள்ளனர். சிங்களவர்கள், தமிழர்கள். முஸ்லிம்கள் ஆகியோர் இணைந்து பெற்ற சுதந்திரத்தை, தலைமுறை தலைமுறையாக நாம் காத்து வந்த ஒற்றுமையை கடந்த சிலகாலமாக பேணிப்பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இது கவலைக்குரிய விடயமாகும். எமது தாய்த்திருநாடான இலங்கை அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்து கடந்த பெப்ரவரி நான்காம் தேதி 71 ஆவது ஆண்டு நிறைவடைந்துள்ளது.

ஒரு நாட்டின் சுதந்திரமானது இன, மொழி, மத வேறுபாடுகள் இன்றி உணவிலும், கல்வியிலும், அரசியலிலும், வேலைவாய்ப்பிலும், பெண் விடுதலையிலும் கருத்துவேறுபாடுகள் அற்று ஆண், பெண் என்ற இரு சாராருக்கும் சமஅளவில் கிடைக்கவேண்டிய சமத்துவ உரிமை எப்பொழுது ஒரு நாட்டில் சீராக, நிலையாக நிலவுமோ அதுவே ஒரு நாட்டின் சுதந்திரமாகும்.

ஒரு நாட்டின் சகல இன மக்களும் ஒரே மாதிரியான அந்தஸ்து, உரிமை, சலுகை சமமாக அனுபவிக்க கிடைக்கிறதோ அதுவே ஒரு பரிபூரண சுதந்திரமாகும். எமது நாட்டில் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் அந்தஸ்து, உரிமை, சலுகை, வேலைவாய்ப்பு சிறுபான்மையினரான தமிழர், முஸ்லிம் சமூகங்களுக்கு சமமாக கிடைப்பதில்லை எனபது துரதிஷ்டவசமாகும். எப்பொழுது எமது நாட்டில் சகல இன மக்களுக்கும் ஒரே மாதிரியான சமமான பிரஜாவுரிமை கிடைக்கிறதோ அதுவே பரிபூரண சுதந்திரமாகும். புதிய அரசியல் அமைப்பின் மூலம் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *