Featured Posts

நபிவழியில் நம் ஹஜ்

Article“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முன்னுரை

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் விருந்தினர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

எல்லாப்புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

”ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்ஷா அல்லாஹ் அத்தகைய பாக்கியவான்களாக நீங்களும் ஆகப்போகின்றவர்கள், ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகளை பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்விற்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாததினால் இன்று பல ஹாஜிகள் ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜை சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் சிலநேரம், இந்த வருடத்திற்கு பின் நான் உங்களை பார்க்காமல் இருக்கலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் குப்ரா லில்பைஹகி) ஆகவே, இதைப்படித்து நபி(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று ”அன்று பிறந்த பாலகனை” போன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் நம் தாயகம் திரும்ப வாய்ப்பளிப்பானாக!

குறிப்பு: ஹாஜிகளுக்கு நிகழும் தவறுகளும் குர்ஆன் ஹதீதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகளும் இத்தொடரில் இணைக்கப்பட்டிருக்கின்றது.

K.L.M. இப்றாஹீம் மதனி
ஜித்தா 1.11.1430 ஹி (20.10.2009)

உம்ராச் செய்யும் முறை

உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் ”லப்பைக்க அல்லாஹும்ம உம்ரத்தன்” என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம்) இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் உடை அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்திக்கொண்டு மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வதாகும். ஆண்களின் இஹ்ராம் துணி வெள்ளை நிறமாக இருப்பது சிறந்ததாகும். பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவிற்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.

لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ

தமிழில்: லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக்.

ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ اَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمِتِكَ

தமிழில்: பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.

ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். தவாஃப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாஃபுக்கு ஒழு அவசியமாகும். தவாஃபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புயத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் ஓரத்தை இடது தோள் மீது போடுவதாகும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாஃபை நிறைவேற்றுகின்றேன் என்ற நிய்யத்தோடு ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். தவாஃபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்கலாம்.

1. முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.

2. அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது.

3. அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது.

4. அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை மட்டும் அதன்பக்கம் உயர்த்திக்காட்டி ‘அல்லாஹுஅக்பர்’ என்று சொல்வது. இம்முறையில் கையை முத்தமிடக்கூடாது. இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராமான செயலைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது அதையும் சேர்த்து தவாஃப் செய்ய வேண்டும். காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ளலாம். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லாஹு அக்பர் என்று கூறுவதோ நபிவழியல்ல. முந்திய மூன்று சுற்றுக்களிலும் ”ரம்ல்” செய்வது சுன்னத்தாகும். ”ரம்ல்” என்பது தனது இரு தோள் புஜங்களையும் அசைத்துக் கொண்டு, கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையும் சாதாரண நடையில் நடக்க வேண்டும். ”ரம்ல்” செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.

ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல், துஆ செய்தல் போன்றவைகளை செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல்பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

தமிழில்: ‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்’ என்ற துஆவை (அபூ தாவூத், ஹாகிம்) ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லாஹுஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாஃப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புயத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமு இப்றாஹிமுக்குப் பின் சென்று தவாஃபுடைய சுன்னத் இரு ரக்ஆத்துகளை தொழ வேண்டும். முதல் ரக்ஆத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல் யா அய்யுஹல் காஃபிரூன்), இரண்டாவது ரக்ஆத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹு அஹது) ஓதுவது சுன்னத்தாகும். மகாமு இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் ஹரத்தினுள் எங்கும் தொழுதுகொள்ளலாம்.

ஸஃயி

ஸஃயி என்பது ஸஃபா, மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாஃப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலைக்கு செல்லும் போது (ஸஃபா மலை மீது அல்ல)

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

(2:158)

என்னும் ஆயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவிற்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி, பெருமைப்படுத்தி அவனைப் புகழ்ந்து

لاَاِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ، لَهُ اْلمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ. لاَاِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ.

தமிழில்: லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.

என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)

இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். ஆனால் இன்று சிலர் ஸஃபா மலையடியில் நின்று தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவிற்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும். மர்வா செல்லும் போது இரு பச்சை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை. விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருகி அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாஃப் மற்றும் ஸஃயை கீழ்மாடியில் செய்ய முடியாவிட்டால் மேல்மாடியில் செய்து கொள்ளலாம். ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல. மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவிற்காவது கத்தரிக்கப்பட வேண்டும். இதுவே நபி வழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவிற்கு வெட்டிக் கொள்ள வேண்டும். இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும். இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக!

குறிப்பு: தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை. இடைவெளி நீளமில்லாமலும், ஹரத்தைவிட்டும் வெளியாகாமலும் இருக்க வேண்டும்.

ஹஜ் செய்யும் முறை

ஹஜ்ஜின் வகைகள் மூன்று

1. ஹஜ்ஜுத் தமத்துஃ

2. ஹஜ்ஜுல் கிரான்

3. ஹஜ்ஜுல் இஃப்ராத்

ஹஜ்ஜுத் தமத்துஃ

ஹஜ்ஜுடைய மாதத்தில் (ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்) ஹஜ்ஜிற்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜிற்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை தன்னுடன் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜு தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால், ஹஜ்ஜிற்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும். துல்ஹஜ் 8ம் நாள் காலையில் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜிற்கு நிய்யத் (லப்பைக்க அல்லாஹும்ம ஹஜ்ஜன் என்று) வைத்துக் கொண்டு மினாவிற்குச் செல்ல வேண்டும்.

ஹஜ்ஜுல் கிரான்

ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜிற்கும் உம்ராவிற்கும் சேர்த்து ஒரே நிய்யத்து (லப்பைக்க அல்லாஹும்ம ஹஜ்ஜன் வஉம்றதன் என்று) வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை கொண்டு செல்கின்றார்களோ, அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்தார்கள்.

ஹஜ்ஜுல் இஃப்ராத்

ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜிற்கு மட்டும் நிய்யத்து (லப்பைக்க அல்லாஹும்ம ஹஜ்ஜன் என்று) வைப்பது, யார் ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் முறையில் ஹஜ் செய்கின்றார்களோ, அவர்கள் மக்கா வந்ததும் தவாஃப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். இவ்விரு வகையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்தால் 10ம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் 10ம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும். இவர்கள் துல் ஹஜ் மாதத்தின் 8ம் நாள் வரை மக்காவிலே தங்கியிருப்பார்கள். துல் ஹஜ் பிறை 8ம் நாள் காலை மினாவிற்குச் செல்ல வேண்டும். இவ்விரு வகையிலும் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள், துல் ஹஜ் மாதம் 10ம் நாள் ஜம்ரத்துல் அகபாவிற்கு கல்லெறிந்து, முடி எடுக்கும் வரை, இஹ்ராம் ஆடையை கழற்றாமல், இஹ்ராத்தில் தவிர்க்கப்பட வேண்டியவைகளை, பேணி நடக்க வேண்டும்.

துல்ஹஜ் பிறை 8ம் நாள்

மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை 8ம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் மட்டும் குளித்து, நறுமணம் பூசி, இஹ்ராம் உடை அணிந்து தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே ”லப்பைக்க அல்லாஹும்ம ஹஜ்ஜன்” என்று நிய்யத்து வைத்துக் கொண்டு மினா செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்ஆத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். நபி(ஸல்) அவர்களும் நான்கு ரக்ஆத்துத் தொழுகைகளை இரண்டு ரக்ஆத்துக்களாக சுருக்கித்தான் தொழுதார்கள். தொழுகையல்லாத மற்ற நேரங்களை வீணாக்காமல் வணக்கங்களில் ஈடுபட வேண்டும்.

துல்ஹஜ் பிறை 9ம் நாள்

துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே தங்கி இருப்பது அவசியமாகும். லுஹருடைய நேரம் வந்ததும் பாங்கும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்ஆத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர் தொழுகையையும் இரண்டு ரக்ஆத்தாக சுருக்கி லுஹருடன் சேர்த்து, (முற்படுத்தித்) தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. தொழுகை முடிந்ததும் ஓர் இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். அரஃபாவுடைய தினம், மிக சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஹாகிம்). ஹாஜிகளின் இத்தியாகத்தைப் பார்த்து மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப்படும் நாளாகும். ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் உருக்கமான முறையில் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்நாளில் செய்யும் வணக்கங்களில் மிக மேலானது துஆச் செய்வதாகும். துஆவில் சிறந்தது அரஃபா நாளில் கேட்கும் துஆவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து விட்டு) அரஃபா மலையடிவாரத்தில் நின்றவர்களாக, கிப்லாவை முன்னோக்கி சூரியன் மறையும் வரை துஆச்செய்தார்கள். (முஸ்லிம்) அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும். நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

لا اِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

தமிழில்: லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கி இருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்குப் சென்று அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து, பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே வீணாக்கிவிடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நபி(ஸல்) அவர்கள் ஜபலுர்ரஹ்மா மலைமீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ”நான் இந்த இடத்தில்தான் தங்கினேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தங்கலாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)

அரஃபாவின் எல்லைக்குள் எங்கு தங்கினாலும் ஒரே நன்மைதான் என்று நபி(ஸல்) அவர்களே கூறியிருக்கும் போது எதற்காக ஜபலுர்ரஹ்மாவிற்குச் செல்ல வேண்டும்? ஹாஜிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

குறிப்பு: யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ, அவருடைய ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படாது. இன்னும் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்கக்கூடாது.

முஸ்தலிஃபாவில் இரவில் தங்குவது

ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்ததும் தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் முஸ்தலிஃபா செல்ல வேண்டும். முஸ்தலிஃபா சென்றதும் ஓர் பாங்கு இரண்டு இகாமத்தில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்து இஷாவை இரண்டு ரகஆத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. சுப்ஹுவரை அங்கு தங்குவது அவசியமாகும்.

முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம்

நான் இங்குதான் தங்கினேன், முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நோயாளிகள் நடு இரவிற்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம். நபி(ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.

சுப்ஹுடைய நேரம் வந்ததும் சுப்ஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை, போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும் கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.

நபி(ஸல்) அவர்கள் மஷ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி, கிப்லாவை முன்னோக்கி சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள். (அபூதாவூத்)

இன்னும் ஓர் அறிவிப்பில்: அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தி, ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.

துல் ஹஜ் பிறை 10ம் நாள்

சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு தல்பியா கூறியவர்களாக மினா வர வேண்டும். 10ம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள்.

1. ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது.

2. குர்பானி கொடுப்பது.

3. முடி எடுப்பது.

4. தவாஃபுல் இஃபாலா செய்வது.

மேலே கூறப்பட்டதை வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். ஒன்றைவிட மற்றொன்றை முற்படுத்தியோ, பிற்படுத்தியோ செய்தாலும் தவறில்லை.

மக்களின் பிரயோஜனத்திற்காக 10ம் நாள் நபி(ஸல்) அவர்கள் மினாவில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! குர்பானி கொடுப்பதற்கு முன் நான் மொட்டையடித்துவிட்டேன் என்றார், பரவாயில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னுமொருவர் வந்து கல் எறிவதற்கு முன் நான் குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார், பரவாயில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்நாளில் ஒன்றை மற்றொன்றுக்கு முன் செய்யப்பட்டுவிட்டது என்று கேட்கப்படும் போதெல்லாம் பரவாயில்லை என்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

கல் எறிவது

பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்திற்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.

பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

எறியும் கல்லின் அளவு சுண்டு விரலால் வீசும் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு கற்களாக ”அல்லாஹு அக்பர்” என்று கூறிக் கொண்டு எறிய வேண்டும். ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறியக்கூடாது.

”சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி(ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களை வீசும் போதும் தக்பீர் கூறினார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், பைஹகி)

கல் எறிவதற்கு முடியாத நோயாளி மற்றும் பலவீனர்களின் கல்லை மற்றொருவர் அவருக்குப் பகரமாக எறியலாம். எறியக்கூடியவர் அவ்வருடம் ஹஜ்ஜு செய்பவராக இருக்க வேண்டும். அவர் தன்னுடைய கல்லை எறிந்த பின்புதான் மற்றவரின் கல்லை எறிய வேண்டும். தனக்கு கல் எறிய சக்தி இருக்கும் போது பிறரை எறியச் சொல்லக்கூடாது.

குர்பானி கொடுப்பது

தமத்துஃ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்விற்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இஃப்ராத் முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானியை மினாவிலும், மக்காவின் எல்லைக்குள் (ஹரம் எல்லைக்குள்) எங்கும் அறுக்கலாம். ஹரம் எல்லைக்கு வெளியில் அறுக்கக்கூடாது.

”நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் இடமுமாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

குர்பானி இறைச்சியிலிருந்து அதைக் கொடுத்தவரும் உண்ணலாம்

குர்பானி கொடுக்கும் இறைச்சியிலிருந்து மினாவுடைய மூன்று நாட்களை (பிறை 11,12,13) தவிர (வேறு நாட்களில்) நாங்கள் உண்ணாமலிருந்தோம். நீங்களும் (அந்த இறைச்சியைச்) சாப்பிட்டு, சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதித்த போது நாங்களும் சாப்பிட்டோம், சேமித்தும் வைத்தோம். மதீனாவிற்கும் அவ்விறைச்சியை கொண்டு செல்லும் அளவு எங்களிடம் இருந்தது என ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)

குர்பானி கொடுப்பதற்கு வசதியற்றவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும், ஊர் திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும்.

தலை முடி எடுப்பது

குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன், மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப்பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இஃபாலாவைச் (ஹஜ்ஜுடைய தவாஃபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.

தவாபுல் இஃபாலா செய்வது

தலைமுடி எடுத்த பின் குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இஃபாலாவை முடித்துவிட்டு ஹஜ்ஜிற்கான சஃயும் செய்ய வேண்டும். கிரான் மற்றும் இஃப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்திருந்தால் இப்போது தவாபுல் இஃபாலா மாத்திரம் செய்தால் போதுமாகும். ஸஃயி செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்யவில்லையென்றால் இப்போது (தவாபுல் இஃபாலாவுக்குப் பின்) ஸஃயி செய்தே ஆக வேண்டும். தவாஃப் மற்றும் சஃயை முடித்ததும் மினா சென்று 11ம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்..

துல் ஹஜ் பிறை 11ம் நாள்

11ம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சிறந்ததாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின்னும் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சிறந்ததாகும். மூன்றாவது ஜம்ராவிற்க்குப்பின் துஆச் செய்வதற்காக நிற்கக்கூடாது.

துல் ஹஜ் பிறை 12ம் நாள்

12ம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12ம் நாளும் 11ம் நாளைப் போன்றே மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்குப் பின் கல் எறிய வேண்டும். 12ம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும். 13ம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13ம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13ம் நாள் ளுஹர் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல் எறிந்துவிட்டு மக்கா செல்ல வேண்டும். 8, 10, 11, 12, 13ம் நாட்களில் மினாவில் ஒவ்வொரு தொழுகைகளையும் உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாக, சுருக்கித் தொழ வேண்டும். மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் தவாஃப் மற்றும் தொழுகையைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லா அமல்களையும் செய்யலாம். சுத்தமானதும் விடுபட்ட தவாஃபை நிறைவேற்ற வேண்டும்.

தவாபுல் வதா

ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன் வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் வதாவாகும். தவாபுல் வதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். தவாபுல் இஃபாலாவை முடித்த ஒரு பெண் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத்தின் காரணமாக தவாபுல் வதாவைச் செய்ய முடியாவிட்டால் அப்பெண்ணிற்கு மாத்திரம் தவாபுல் வதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. மற்ற எல்லா ஹாஜிகளும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் வதாவைச் செய்ய வேண்டும். தவாபுல் வதா முடிந்ததும் பயணத்தைத் தொடங்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. சிலர் தவாபுல் வதாவை செய்து விட்டு ஜம்ராவிற்கு கல் எறிகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். அவர் மீண்டும் தவாபுல் வதா செய்ய வேண்டும். இன்னும் சிலர் தவாபுல் வதாவை முடித்துவிட்டுச் செல்லும் போது கஃபாவை பார்த்துக் கொண்டே பின்னோக்கி செல்கின்றார்கள், இதுவும் தவறாகும். அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளையும் ஏற்று அன்று பிறந்த பாலகனைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக!

————-

இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்

1. உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது கூடாது.

2. உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது கூடாது.

3. பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளைக் கொல்வது அல்லது வேட்டையாடுவது, கூடாது.

4. இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுவது கூடாது.

5. தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது கூடாது. ஆனால் உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் எடுக்கலாம்.

6. இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, அல்லது முடித்து கொடுக்கவோ, தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசவோ கூடாது. இன்னும் உடலுறவு கொள்வதும், காம உணர்வோடு கலந்துரையாடுவதும் கூடாது.

ஹஜ்ஜுடைய நேரத்தில் உடலுறவு கொண்டால் அந்த ஹஜ்ஜு சேராது. அதற்கு குற்றப் பரிகாரமாக ஓர் ஒட்டகத்தை அறுத்து மக்காவிலுள்ள ஏழைகளுக்கு கொடுப்பதுடன் அடுத்த வருடம் மீண்டும் ஹஜ்ஜு செய்ய வேண்டும்.

ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்

தலையை, துணி போன்றவைகளால் மறைப்பது, சட்டையையோ அல்லது தைக்கப்பட்ட எந்தவித உடைகளையோ உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது கூடாது.

பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்

இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிவது, முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

ஹஜ்ஜுடைய அர்கானுகள் (கடமைகள்)

(இவைகளைச் செய்யாமல் ஹஜ் நிறைவேறாது)

1. நிய்யத் வைப்பதோடு இஹ்ராம் உடை அணிதல்.

2. அரஃபாவில் தங்குதல்.

3. தவாபுல் இஃபாலா செய்தல்.

4. ஸஃபா மர்வா மலைக்கு மத்தியில் ஹஜ்ஜுடைய ஸஃயி செய்தல்.

ஹஜ்ஜுடைய வாஜிபுகள்

(அவசியமானவைகள்)

1. நபி(ஸல்) அவர்கள் கூறிய எல்லையிலிருந்து இஹ்ராம் அணிதல்.

2. சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கி இருத்தல்.

3. 10ம் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல்.

4. 10ம் நாள் காலையில் பெரிய ஜம்ராவிற்கு ஏழு கற்களும், 11, 12ம் நாட்கள் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழேழு கற்கள் வீதம் எறிதல். 13ம் நாள் மினாவில் தங்குபவர்கள் 13ம் நாளும் கல்லெறிய வேண்டும்.

5. ஆண்கள் முடியை மழிப்பது அல்லது கத்தரிப்பது. பெண்கள் முடியின் நுனியில் விரலின் நுனியளவு கத்தரிப்பது.

6. 11-12ம் நாள் இரவில் மினாவில் தங்குவது. (13ம் நாள் விரும்பியவர்கள் மினாவில் தங்கலாம். இந்த இரவு தங்குவது அவசியமில்லை. ஆனால் சிறந்தது.)

——————–

الأخطاء التى تقع للحجاج

ஹாஜிகளுக்கு நிகழும் தவறுகள்

1. இஹ்ராமில் நிகழும் தவறுகள்

1. ஹஜ் செய்பவர் தனக்கு கூறப்பட்ட எல்லையை கடந்து ஹஜ்ஜிற்காக அல்லது உம்ராவிற்காக நிய்யத்து வைப்பது தவறாகும். நிய்யத்து வைக்காமல் தனக்குரிய எல்லையை தாண்டி சென்றவர் செய்ய வேண்டியவைகள்

• தனக்குரிய எல்லையிலிருந்து இஹ்ராமிற்காக நிய்யத்து வைக்காதவர் திரும்பவும் எல்லைக்குச் சென்று நிய்யத்து வைத்துக் கொண்டு வரவேண்டும். எல்லைக்கு செல்ல முடியாதவர் அவர் செய்த குற்றத்திற்குப் பரிகாரமாக ஒரு ஆட்டை மக்காவில் அறுத்து அங்குள்ள ஏழைகளுக்கு பங்கிட வேண்டும். தரை மார்க்கமாக அல்லது கடல் மார்க்கமாக அல்லது ஆகாய மார்க்கமாக வந்தாலும் மேற்கூறப்பட்டதையே கடைப்பிடிக்க வேண்டும்.

• இஹ்ராமிற்கு நிய்யத்து வைப்பதற்காக குறிப்பிடப்பட்ட ஐந்து எல்லைகள் (துல்ஹுலைஃபா, ஜுஹ்ஃபா, கர்னுல் மனாசில், யலம்லம், தாது இர்க்) வழியாக செல்ல முடியாதவர் தான் மக்காவிற்கு செல்லும் வழியில் முதலாவது எல்லைக்கு நேராகவுள்ள இடத்திலிருந்து நிய்யத்து வைக்க வேண்டும்.

2. தவாஃப் செய்யும் போது நிகழும் தவறுகள்

1. ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்ட இடத்தைத் தாண்டி தவாஃபை ஆரம்பித்தல் தவறாகும். ஹஜருல் அஸ்வத் கல்லிருந்தே தவாஃபை ஆரம்பிக்க வேண்டும்.

2. மக்காவிற்கு வந்தவுடன் செய்யும் முதல் தவாஃபின் முதல் மூன்று சுற்றுக்களில் மாத்திரம் (ஆண்கள் மட்டும்) ரம்ல் செய்வது (தனது இரு தோள் புஜங்களையும் அசைத்துக் கொண்டு கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பது) சுன்னத்தாகும். எல்லா சுற்றுக்களிலும் ரம்ல் செய்வது சுன்னத்தல்ல. சிலர் எல்லா சுற்றுக்களிலும் ரம்ல் செய்கின்றார்கள் இது தவறாகும்.

3. ரம்ல் செய்வதில் சில பெண்களும் ஈடுபடுகின்றார்கள், இது தவறான முறையாகும்.

4. ஹிஜ்ர் இஸ்மாயீல் என்று சொல்லப்படும் கஃபாவுடன் சேர்க்கப்பட்டிருக்கும் அரை வட்டத்திற்குள்ளால் தவாஃப் செய்தல் தவறாகும். அப்படிச் செய்பவரின் அந்த சுற்று ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லையே. அதையும் சேர்த்து சுற்றுவதே சரியான முறையாகும்.

5. ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதற்காக மற்றவர்களை நெருக்குவது அல்லது அவர்களுக்கு ஏசுவது அல்லது ஏதாவது தொந்தரவு கொடுப்பது தவறான செயலாகும். இதில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு கொடுக்கும் கஷ்டமாகும். ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுக்கு கஷ்டம் கொடுப்பது தடுக்கப்பட்டவையாகும்.

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடாமலிருப்பதால் தவாஃபிற்கு எந்தக் குறையும் ஏற்படுவதில்லை. ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வாய்ப்பில்லாதவர் அக்கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை உயர்த்தி தக்பீர் சொல்லிக் கொண்டால் போதும்.

6. நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை பின்பற்றுவதற்காகவே ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதும், தொடுவதும் இருக்க வேண்டும். வேறு எந்த நோக்கமும் அதில் இருக்கக் கூடாது. கஃபாவில் நன்மை கருதி தொடுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடம் ஹஜருத் அஸ்வத் கல்லும் ருக்னுல் யமானியுமாகும். இது தவிரவுள்ள எந்த இடங்களையும் நன்மை கருதி தொடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. அது தவறான செயலாகும். சிலர் கஃபாவின் திரையையும், சுவரையும், மகாமு இப்றாஹிமையும் இன்னும் இது போன்ற கஃபாவிலுள்ள பல இடங்களையும் தொட்டு முத்தமிடுகின்றார்கள். இவைகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டிய செயல்களாகும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லையும் ருக்னுல் யமானியையும் தவிரவுள்ள வேறு எந்த இடத்தையும் கஃபாவில் நன்மை கருதித் தொடவில்லை. உமர்(ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடு முன் ”நீ ஒரு கல், எந்த பிரயோஜனத்தையும் தர முடியாது, எந்த ஆபத்தையும் நிகழ்த்திடவும் முடியாது” நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்க்கவில்லையென்றால் நான் உன்னை முத்தமிடமாட்டேன் எனக் கூறி அதை முத்தமிட்டார்கள். (முஸ்லிம்)

7. தவாஃபுடைய ஒவ்வொரு சுற்றிற்கும் தனிப்பட்ட துஆக்களை ஓதுவது சரியான முறையல்ல. இப்படி நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. ஆனால் ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் மூலை வரை ஒரு குறிப்பிட்ட துஆவை நபி(ஸல்) அவர்கள் ஓதியிருக்கின்றார்கள். அதாவது ”ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்’ இதைத்தவிர வேறு எந்த துஆவையும் ஒவ்வொரு சுற்றிற்கும் குறிப்பிட்டு ஓதுவது தவறாகும்.

8. தவாஃப் செய்பவர்களும் அல்லது தவாஃப் செய்ய வைப்பவர்களும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் அளவிற்கு தங்களின் சத்தங்களை உயர்த்தக் கூடாது.

9. தவாஃபுடைய இரண்டு ரக்அத்தைத் தொழுவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் மகாமு இப்றாஹிமுக்குப் பின் ஒட்டி தொழுவது தவறாகும். இப்படிச் செய்வதால் தவாஃபு செய்யக்கூடிய மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகின்றது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தூரமாகச் சென்று அவ்விரு ரக்அத்துக்களையும் தொழுவதே சரியான முறையாகும்.

3. ஸஃயி செய்யும் போது நிகழும் தவறுகள்

1. சில ஹாஜிகள் ஸஃபா மலையில் நின்று, தொழுகைக்கு தக்பீர் கூறும்போது இரு கைகளையும் உயர்த்துவது போன்று கஃபாவின் பக்கம் தன் இருகைகளையும் உயர்த்திகாட்டி விட்டு செல்கின்றார்கள். இது தவறான முறையாகும். அவ்விடத்தில் நின்று கஃபாவின் பக்கம் தன் முகத்தை திருப்பி, பிரார்த்திக்கும் போதே தன்னுடைய இரு கைகளையும் உயர்த்த வேண்டும்.

2. ஸஃபா, மர்வா மலைக்கிடையில் பச்சை நிற விளக்கினால் அடையாளமிடப்பட்டிருக்கும் இடத்திற்கு மத்தியில்தான் ஆண்கள் மட்டும் சற்று வேகமாக ஓட வேண்டும். மற்ற இடங்களில் சாதாரண நடையில் செல்ல வேண்டும். சிலர் ஸஃயி முழுவதிலும் ஓடியே ஸஃயி செய்கின்றார்கள் இது தவறாகும். பெண்கள் எல்லா இடங்களிலும் சாதாரண நடையில்தான் செல்ல வேண்டும். ஆனால், சில பெண்களும் பச்சை நிற விளக்கினால் அடையாளமிடப்பட்டிருக்கும் இடத்திற்கு மத்தியில் வேகமாக ஓடுகின்றார்கள். இவைகள் தவறான முறையாகும்.

3. ஸஃபாவிலிருந்து ஸஃபா வரை செல்வதை ஒரு சுற்றாக எண்ணுவது தவறு. ஸஃபாவிருந்து மர்வா வரைச் செல்வதே ஒரு சுற்றாகும்.

4. ஸஃயி செய்து முடிந்ததும் மர்வாவிலேயே முடிகளை கத்தரிப்பது தவறான முறையாகும். இது அல்லாஹ்வின் ஆலயத்தை அசிங்கப்படுத்துவதாக கருதப்படும். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முடி திருத்தப்படுத்தும் இடங்களுக்குச் சென்று அதைச் செய்ய வேண்டும்.

5. ஆண்கள் தலையில் மூன்று இடங்களில் மாத்திரம் முடிகளை எடுப்பது நபி வழிக்கு மாற்றமான செயலாகும். ஆண்கள் முடி எடுப்பதில் இரண்டு முறைதான் சுன்னத்தாகும். ஒன்று தலைமுடியை முழுக்க வழிப்பது. இதுவே சிறந்த முறையாகும். அல்லது தலையிலுள்ள எல்லா முடிகளையும் கத்தரிப்பது. பெண்கள் அவர்களின் முடி நுனியில் விரல் நுனியளவு வெட்டுவதே சுன்னத்தாகும்.

4. அரஃபாவில் நிகழும் தவறுகள்

1. அரஃபாவின் எல்லைக்கு வெளியே சூரியன் மறையும் வரை தங்கி இருப்பது மாபெரும் தவறாகும். ஆகவே, அரஃபாவின் எல்லையை உறுதிப்படுத்திய பின்பே அங்கு தங்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ”ஹஜ்ஜு என்றால் அரஃபாவில் தங்குவதுதான்” (திர்மிதி, இப்னு மாஜா) அரஃபாவில் தங்கும் நேரம், துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் லுஹர் நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரையாகும். இதற்குள் அரஃபாவில் தங்கமுடியாதவர் அந்த இரவிற்குள் தங்கியே ஆகவேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் கொஞ்ச நேரமாவது அரஃபாவில் தங்குவது கடமையாகும். அப்படித் தங்காதவரின் ஹஜ்ஜு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. சூரியன் மறைவதற்கு முன் அரஃபாவிலிருந்து புறப்படுவது தவறாகும். நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பின்பே முஸ்தலிபாவுக்குச் சென்றார்கள்.

3. அரஃபா மலையின் உச்சிக்குச் செல்வதற்காக தானும் பல சிரமங்களுக்கு உள்ளாகுவது மட்டுமல்லாமல் பிறருக்கும் பல துன்பங்களைக் கொடுப்பது தவறாகும். நபி(ஸல்) அவர்கள் அந்த மலை மீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் இந்த இடத்தில்தான் நின்றேன், அரஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என்றார்கள். ஆகவே, அரஃபா எல்லைக்குள் எங்கு நின்றாலும் போதுமானதாகும்.

4. துஆ கேட்கும் போது அரஃபா மலையை முன்னோக்கி கேட்பது சரியான முறையல்ல. நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கியே துஆக்கேட்டார்கள்.

5. துஆ கேட்கும் போது கூட்டமாகக் கேட்காமல் தனிமையாகக் கேட்பதே நபி வழியாகும். நபி(ஸல்) அவர்களும் தனிமையில்தான் துஆக்கேட்டார்கள்.

5. முஸ்தலிஃபாவில் நிகழும் தவறுகள்

1. முஸ்தலிஃபா சென்றதும் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பே ஜம்ராக்களுக்கு எறியும் கற்களைப் பொறுக்குவதும். கற்களை முஸ்தலிஃபாவிலிருந்துதான் பொறுக்க வேண்டுமென்று நம்புவதும் தவறாகும். நபி(ஸல்) அவர்கள் அப்படி கட்டளை இடவில்லை. நபி(ஸல்) அவர்கள் மினா செல்லும் வழியில்தான் அவர்களுக்கு கற்கள் பொறுக்கி கொடுக்கப்பட்டது. முஸ்தலிஃபா சென்றதும் மக்ரிபையும் இஷாவையும் தொழுதுவிட்டு ஃபஜ்ர் நேரம் வரை தூங்கிவிட வேண்டும்.

2. எல்லா நாட்களுக்குமுரிய கற்களை ஒரே நாளிலேயே பொறுக்கி வைக்க வேண்டுமென்று நினைப்பது தவறான முறையாகும். ஒவ்வொரு நாளுக்குரிய கற்களை அந்தந்த நாளிலேயே மினாவில் பொறுக்கிக் கொள்வதே சரியான முறையாகும்.

3. எறியும் கற்களை கழுவுவது தவறாகும். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அப்படி நபி(ஸல்) அவர்கள் கூறவுமில்லை, செய்யவுமில்லை.

6. கல்லெறியும் போது நிகழும் தவறுகள்

1. ஜம்ராக்களுக்கு கல் எறியும் போது ஷைய்த்தானுக்கு எறிவதாக நினைத்து மிகக் கோபத்துடனும் தவறான வார்த்தைகளைக் கூறி எறிவது தவறான ஒன்றாகும். கஃபாவை தவாஃப் செய்வதும், ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஸஃயி செய்வதும், ஜம்ராக்ககளுக்கு கல் எறிவதும் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவே ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்) ஆகவே கற்களை எறியும் போது ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறிக் கொண்டு எறிய வேண்டும்.

2. பெரிய கற்களாலும் செருப்புக்களாலும் குடை மற்றும் தடி போன்றவைகளாலும் எறிவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிலக்கடலை அளவாகவே எறியும் கற்களின் அளவு இருக்க வேண்டும்.

3. கல் எறியும் இடத்தில் மற்றவர்களை நெருக்கிக் கொண்டு செல்வது தவறாகும். மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் கற்களை எறிய வேண்டும். இதில் பெண்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

4. எல்லாக் கற்களையும் ஒரே தடவையில் எறிவது தவறாகும். இப்படி எறிந்தால் ஒரு கல் எறிந்ததாகவே கருதப்படும். ஒவ்வொரு கற்களாக எறிவதே நபி வழியாகும்.

5. கல் எறிவதற்கு தனக்கு சக்தி இருந்தும் பிறரிடம் ஒப்படைப்பது தவறான முறையாகும். ஜம்ராக்களுக்கு கல் எறிவது ஹஜ்ஜுடைய வாஜிபுகளில் (அவசியமான செயல்களில்) ஒன்றாகும் என்பதை தெரிந்து கொண்டால் இத்தவறு நடைபெற வாய்ப்பில்லை.

7. தவாஃபுல் வதா (பயணத் தவாஃபு) செய்யும் போது நிகழும் தவறுகள்

1. சிலர் 12 அல்லது 13ம் நாள் தவாஃபுல் வதா செய்து விட்டு மீண்டும் மினா சென்று மூன்று ஜம்ராக்களுக்கும் கற்களை எறிந்துவிட்டு தன் ஊருக்குச் சென்று விடுகின்றார்கள். இது பெரும் தவறாகும். ஹஜ்ஜின் கடைசி அமல், தவாஃபுல் வதாவாக இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் இவர்களின் கடைசி அமல் கல் எறிதலாக இருக்கின்றது, இப்படிச் செய்தவர்கள் மீண்டும் ஒரு முறை மக்கா வந்து தவாஃபுல் வதா செய்து விட்டுத்தான் ஊர் செல்ல வேண்டும்.

2. தவாஃபுல் வதா செய்த பின் மக்காவில் தங்கியிருப்பது தவறாகும். எல்லா வேலைகளையும் முடித்த பின்பே தவாஃபுல் வதாவை செய்ய வேண்டும். தவாஃபுல் வதா முடிந்ததும் பிரயாணத்தை ஆரம்பித்து விட வேண்டும். பிரயாணத்திற்காக வாகனத்தை எதிர்ப் பார்த்திருப்பதில் தவறில்லை.

3. தவாஃபுல் வதாவை முடித்து விட்டு பின் பக்கமாகவே செல்வது தவறான முறையாகும். காரணம் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்யவில்லை. நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றைச் செய்வது பித்அத்தாகும்.

8. மஸ்ஜிதுன் நபவிக்குச் செல்லும் போது நிகழும் தவறுகள்

1. நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதெற்கென்று மதீனா செல்வது தவறாகும். மதீனா செல்லும் போது நபி(ஸல்) அவர்களின் பள்ளியை ஸியாரத் செய்வதற்காகப் போவதே சுன்னத்தாகும். (நன்மையைக் கருதி) மூன்று பள்ளிகளுக்கு மாத்திரமே பிரயாணம் மேற்கொள்ளப்பட வேண்டும், மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய (ரசூல்(ஸல்) அவர்களின்) பள்ளி மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

2. மஸ்ஜிதுன் நபவியிலுள்ள சுவர்களை முத்தமிடுவதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும் தங்களின் நோக்கங்கள் நிறைவேற முடிச்சுக்கள் போடுவதும் தடுக்கப்பட வேண்டியதும், இணைவைக்கும் செயல்களுமாகும்.

3. நபி(ஸல்) அவர்களின் கப்ரையோ, அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் கப்ரையோ, பகீய் மய்யவாடியில் அடங்கப்பட்டிருக்கும் நபித் தோழர்களின் கப்ருகளையோ, உஹத் போர்களத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களின் கப்ருகளையோ ஸியாரத் செய்வதற்காக செல்லும் போது அவர்களிடம் பிரார்த்திப்பதற்கோ அல்லது அவர்கள் மூலம் பரக்கத் பெறுவதற்கோ அல்லது அங்குள்ள மண்களையோ கற்களையோ பரக்கத் நாடி எடுத்துச் செல்வதோ ஷிர்க் (அல்லாஹ்விற்கு இணைவைத்தல்) என்னும் மாபெரும் குற்றமாகும். நமது தேவைகளை நிறைவேற்றுபவனும் நமக்கு அருள்புரிபவனும் அல்லாஹ் மாத்திரமே.

4. வரலாற்றுச் சின்னங்களாகிய அகழ் யுத்தம், கிப்லத்தைன் பள்ளி போன்ற இடங்களை பரக்கத் நாடிச் செல்வதும் தவறாகும். இவைகள் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மாத்திரமே, இதனால் நாமும் பல படிப்பினைகள் பெற வேண்டும் என்பதற்காகவே அங்கு செல்ல வேண்டும்.

5. மஸ்ஜிதுன் நபவி செல்வதை ஹஜ்ஜின் ஒரு கடமையாக எண்ணுவது அறியாமையாகும். அதாவது நாற்பது வக்த் (நேர) தொழுகைகளை நபி(ஸல்) அவர்களின் பள்ளியிலே ஜமாஅத்தாகத் தொழுவது கடமை போன்றும், அப்படிச் செய்யாதவர்களின் ஹஜ்ஜை குறைவான ஹஜ்ஜாகக் கருதுவது. அதே போல் யார் மஸ்ஜிதுன் நபவியில் நாற்பது நேரத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு நரக விடுதலையும், நயவஞ்சகத் தனத்திலிருந்து விடுதலையும் கிடைக்கும் என நம்புவது. இவைகள் அனைத்தும் ஆதாரமற்றவைகளாகும். ஹஜ்ஜுக்கும் மஸ்ஜிதுன் நபவி செல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.

6. மஸ்ஜிதுன் நபவியில் தொழுவதை விட கஃபாவில் தொழுவது மிகச் சிறந்ததாகும். மஸ்ஜிதுன் நபவியில் தொழுதால் மற்றப் பள்ளிகளில் கிடைக்கும் நன்மைகளை விட 1000 மடங்கு அதிகம் கிடைக்கின்றது. கஃபாவில் தொழுதால் ஒரு இலட்சம் நன்மைகள் அதிகம் கிடைக்கின்றது. இதன் கருத்து மஸ்ஜிதுன் நபவிக்குச் செல்லக் கூடாது என்பதல்ல. மஸ்ஜிதுன் நபவிக்கு இவர்கள் கொடுக்கும் சிறப்புக்களை ஏன் கஃபாவிற்குக் கொடுப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டுவதே நோக்கமாகும்.

——————-

குர்ஆன் ஹதீதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்

குர்ஆன் ஹதீதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

صفة حجة النبي صلى الله عليه وسلم

باللغة التاميلية

جمع وترتيب

محمد ابراهيم كلندر لبي

நபி வழியில் நம் ஹஜ்

தொகுப்பு

K.L.M. இப்றாஹீம் மதனி

Co-Operative Office for Call & Guidance

Sanayiya, Phase 1

P.O. Box: 32628, Jeddah 21438

Tel.: 6369549, Fax: 6365051

5 comments

  1. Assalamu alikum ifraath muraiyil kurbaani kodukkaathavargalukku ithuvae serantha murai yaendreergal athan pinnae thamathu, matrum kiran haajigal kurbani kodukka vaendum yaendru sollugereergal!!? velakkam thaevai

  2. A.s.Rasool Mohideen

    Assalamu alaikkum

    this is useful for this month

  3. silarkal umarvitkaha aysha palliku shenru kulithu vittu wandu harathiku wandru umra seikirarkale , iadu nabi sal awarkal kathithanda sunnawa? iadu kooduma

  4. wasathi irunthum yaar hajj seyya willayo awar marumail yehoodiyaha eluppappaduwar enra hadees saheehanatha?

  5. barakallahu laka. allah ungalin enda paniyai samudayththitku payanulladaga aakuwanaga AAMEEN!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *