Featured Posts
Home » நூல்கள் » இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள் (Book) » இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்

இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்

 நூல்: “இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்”

ஒரு இயந்திர வாகனத்தை உருவாக்க எத்தனையோ பாகங்கள் தேவை! அதேபோல் இந்த உலகத்துக்கு எத்தனையோ விதமான மனிதர்கள் தேவை! மனிதர்கள் பல்வேறு வகையான சமூகத்தைச் சேர்ந்தவர்களாக, இனத்தவராக, மொழியினராக படைக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அனைவரும் ஒரே விதமாக ஏன் படைக்கப்படவில்லை?

ஆம் அது ஒரு நியாயமான கேள்வியே!!

சற்று சிந்தித்துப் பாருங்கள்! மனிதர்கள் அனைவரும் ஒரே விதமாக படைக்கப்பட்டிருந்தால், பரஸ்பர அறிமுகத்துக்கும், பல்வேறுபட்ட வாழ்க்கை வழிமுறைகளுக்கும் இடம் கிடைத்திருக்குமா என்ன?

ஆகவே மனிதர்கள் பரஸ்பரம் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டே இவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை! இவ்வாறு படைக்கப்பட்ட மனிதனின் வாழ்வு எப்படி அமைய வேண்டும்? ஒரு மோட்டார் வாகனத்தின் பல்வேறு பாகங்கள் வெவ்வேறு விதமாக இருப்பினும் அவையனைத்தும் ஒரேவிதமான இயக்கவரையோடு (Mechanism) இயங்குகின்றன. அந்த மோட்டார் வாகனத்தை ஒழுங்காக இயக்க வைக்க வேண்டும் என்பதே அந்த வரைவு!

எனவே பலவிதமான மனிதர்களைக் கொண்டிருந்தாலும் இந்த உலகத்தின் ஒழுங்கான இயக்கத்துக்கு ஒரேவிதமான வாழ்க்கை வழிமுறை அவசியம். ஒரேயொரு ஓட்டுநர் மட்டுமே அந்த மோட்டார் வாகனத்தை சரியாக இயக்கிச் செல்ல முடியும். அதேபோன்று, இந்த வாழ்க்கையும் அதனை இயக்கத் தெரிந்த தனித்த – ஒரேயொரு ஆற்றலால் மட்டுமே ஒழுங்காக இயங்க முடியும்.

அந்த இயக்க வரைவே இஸ்லாம்! அதனை வரைந்தவனே இறைவன்!!

ஆனால், அந்தோ…! அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த வரைவுத் திட்டமான இஸ்லாத்தை இன்று பழமைவாதம், அடிப்படைவாதம் எனும் பெயரால் மக்களை விட்டும் அந்நியமாக்கச் செய்ய, பல முனைகளில் இருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக செப்டம்பர் 11, 2001 – அமெரிக்க உலக வர்த்தக தாக்குதலுக்குப் பிறகு, அந்த வரைவுத்திட்டம் பல்வேறு பழிச்சொற்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. தகவல் தொடர்பு ஊடகங்களும், தொலைதொடர்பு சாதனங்களும் கூட இதனை படுகச்சிதமாக செய்து வருகின்றன.

எனவே, இஸ்லாத்தைக் குறித்த தவறான அபிப்பிராயங்களைக் களைவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இப்பணியை செவ்வனே நிறைவேற்றி, முஸ்லிம் அல்லாதவர்கள் – ஏன் ஒரு முஸ்லிமிடத்திலும் தோன்றும் ஐயப்பாடுகளைக் களைந்து இஸ்லாம் குறித்த உண்மையான விளக்கத்தை முன் வைப்பதே இப்பதிவின் முக்கிய அம்சமாகும்.

வாசக அன்பர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இஸ்லாம் குறித்த ஐயப்பாடுகளுக்கு வினா-விடை பாணியில் விளக்கம் தரப்பட்டிருக்கின்றது! இறைவன், இறைத்தூதர், இறைஇல்லம் (மஸ்ஜித்), திருக்குர்ஆன், இயேசுகிறிஸ்து, போர் (ஜிஹாத்), பெண், குடும்பம், உறவுமுறை என்று அனைத்து துறை சார்ந்த வினாக்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பதிவுகளை படிக்கும் ஒரு வாசகர், எவ்வித முன் அனுமானமுமின்றி அதனைத் தெளிவான கண்ணோட்டத்துடன் அணுகினால், இஸ்லாம் குறித்து ஒரு சரியான முடிவுக்கு வருவது திண்ணம்!

மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் (IPC)- தமிழ் பிரிவு
குவைத்.
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *