Featured Posts
Home » சட்டங்கள் » உழ்ஹிய்யா » குர்பானி (உழ்ஹிய்யாவு)க்குப் பதிலாக பெறுமதியை பணமாக கொடுக்கலாமா? உஸ்தாத் மன்சூர்-க்கு மறுப்புரை

குர்பானி (உழ்ஹிய்யாவு)க்குப் பதிலாக பெறுமதியை பணமாக கொடுக்கலாமா? உஸ்தாத் மன்சூர்-க்கு மறுப்புரை

தவறான கருத்துகள் மக்கள் மன்றத்தில் பரவும் போது அதற்க்கு உடனடியான மறுப்புரையும், சரியான கருத்துகளையும் மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் இல்லையென்றால் தவறான செய்தியை உண்மையன நம்பி மக்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வகையில் இலங்கையில் இக்வானிய சிந்தனைவாதியான உஸ்தாத் மன்சூர் குர்பானி (உழ்ஹிய்யா) தொடர்பான ஆதாரமற்ற முறையில் பலசெய்திகளை ‘உள்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும்’ என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த நூலூக்கான மறுப்புரையை அஷ்ஷைக். அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி (Phd. Reading @ King Saud University, Riyadh – KSA) எழுதியுள்ளார் அதனை தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் நமது இஸ்லாம் கல்வி இணையதளத்தில் பதிவிடப்படுகின்றது. இதில் உஸ்தாத் மன்சூரின் குர்பானி (உள்ஹிய்யா) தொடர்பான 10 அறியாமையை பட்டியியலிடுகின்றார். (Islamkalvi Media Unit)

மதிப்புக்குரிய உஸ்தாத் மன்ஸூரின் உள்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும் என்ற கையேடு சம்பந்தமான சில மகாஸிதிய விமர்சனங்கள்

அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி Phd Reading KSA

உள்ஹிய்யா கால்நடைகளாக கொடுக்கப்பட வேண்டுமென்பதே குர்ஆன் ஹதீஸின் மிகத்தெளிவான நிலைப்பாடாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஸூரா ஹஜ்ஜின் 28, 32, 37 ஆகிய வசனங்கள் உள்ஹிய்யா மற்றும் குர்பானி பற்றிப் பேசும் போது கால்நடைகளையே குறிப்பிடுகின்றன.

நபியவர்களும் கால்நடைகளையே பலியிட்டுள்ளார்கள் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இன்று சிலர் மகாஸித் என்ற பெயரில் உள்ஹிய்யாவை ஒரு முக்கியமற்ற வணக்கம் போன்று சித்தரிப்பது மாத்திரமின்றி அதனைப் பணமாகக் கொடுப்பதே தற்காலத்துக்கு உகந்தது எனப் பிரச்சாரம் செய்வதைப் பார்த்தும் கேட்டும் படித்தும் வருகிறோம். இது சம்பந்தமாக மிஷ்காத் எனும் ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள குறித்த கையேட்டில் இடம்பெற்றுள்ள அறிவியல் தவறுகள், ஆய்வுத் தவறுகள் என பத்து தவறுகளைச் சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன்.

முதலாவது தவறு:

தோல்வி மனப்பான்மையை வெளிப்படுத்தியிருப்பதும் அந்நியர்கள் இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பொய்ன்ட்ஸ் வழங்குவதும்

மேற்குறிப்பிட்ட ஆய்வை வெளியிட்டிருக்கும் உஸ்தாத் அவர்கள், இனத்துவேசம் மற்றும் அந்நியர்களின் தவறான பிரச்சாரங்கள் என்பவையே, உள்ஹிய்யாவைப் பணமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணி என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நியர்களின் தவறான பிரச்சாரங்களுக்கு அஞ்சி மார்க்கத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்வதற்கு ஆரம்பித்தால் குர்ஆன் ஹதீஸின் பல வசனங்களை நீக்க வேண்டியேற்படும். உதாரணமாக ஒவ்வொரு தொழுகையிலும் ஓதப்படும், யூத கிறிஸ்தவர்களை எச்சரித்து இடம்பெறும் ஸூரா பாதிஹாவின் இறுதி இரு வசனங்களையும் ஓதக் கூடாது அல்லது விளக்கக் கூடாது அல்லது அந்நியர்களைத் திருப்திப்படுத்தும் விளக்கத்தை வழங்க வேண்டியேற்படும்.

அது மாத்திரமன்றி ஒரு கருத்தை அந்நியர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அதற்கு அறிவுபூர்வமான நியாயங்களைத் தெளிவுபடுத்தி, இஸ்லாத்தின் மகிமையைப் புரியவைப்பதே நமது கடமை. அதனை விட்டுவிட்டு இஸ்லாத்திற்கு நலவு செய்கிறோம் என்ற பெயரில், அந்நியர்களுக்கு திருப்தியேற்படும் விதத்தில் எங்காவது யாராவது கூறிய ஒரு கருத்தை வைத்து, குறிப்பிட்ட சட்டத்தை விட்டுக்கொடுப்பது, குளிக்கச் சென்று சேறு பூசியது போன்றாகும். ஏனெனில் அவர்கள் நம்மீது சுமத்திய “குர்பானிச் சட்டம் அநீதியே” என்ற குற்றச்சாட்டை நாமே ஏற்றுக்கொண்டவர்களாகிவிடுவோம். இஸ்லாத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதென்றால் குறிப்பிட்ட சட்டத்திற்கான அறிவியல் நியாயங்களைக் கூறவேண்டுமே அந்நியர்களுக்கு இன்னும் பொய்ன்ஸ்கள் வழங்கக்கூடாது. ஆரம்ப கட்டத்திலேயே பதிலீட்டைத் தேடிச் செல்லக் கூடாது. நாட்டில் மாடறுப்பதை உத்தியோகபூர்வமாகத் தடை செய்து எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்ற முடிவு வரும்போது பதிலீட்டை நோக்கிச் செல்வது ஓரளவு நியாயம் எனலாம்.

இரண்டாவது தவறு:

உள்ஹிய்யாவின் முக்கியத்துவத்தை முஸ்லிம்களின் உள்ளங்களில் இருந்து அகற்றுவதற்கான முயற்சி

உள்ஹிய்யா வாஜிபா சுன்னத்தா என்ற கருத்து வேற்றுமை காணப்படுவது அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு விடயமாகும். ஆனால் அது வாஜிப் இல்லை சுன்னத்துத்தான் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ஹிய்யா கொடுக்காமல் இருந்தாலும் பிரச்சினையில்லை, வசதியுள்ளவர்களும் தற்காலச் சூழ்நிலையில் தவிர்ந்துகொள்வதே சிறந்தது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு கூறுவதற்குக் காரணம் அதிகமான சகோதரர்கள் குர்பானி கொடுப்பதில் காட்டும் ஆர்வமேயாகும். மென்மேலும் மக்களை நல்லமல்களுக்கு ஆர்வமூட்ட வேண்டிய அறிஞர்கள், மக்களை இந்த வணக்கத்தை விட்டும் திசைதிருப்பும் மர்மம் என்ன? தனது உயிர் பொருளின் மீது கொண்ட பற்றா?

சீடர்கள் உஸ்தாத் செய்வதைப் பார்த்து உள்ஹிய்யா வணக்கம் கடமை என நினைப்பார்கள் என்றிருந்தால் இவ்வணக்கத்தை உஸ்தாத் சிலகாலம் தவிர்க்கலாம் என்பதற்கே, அபூபக்ர் மற்றும் உமர் (ரழி) அவர்கள் சில வருடங்கள் உள்ஹிய்யா கொடுக்காமல் விட்டதை ஆதாரமாகக் கொள்ளலாமே தவிர, மக்கள் இவ்வணக்கத்தைப் புறக்கணிப்பதற்கு ஆதாரமாகக் கொள்வது மிகப்பெரும் தவறாகும். அவ்வாறு செய்தால் காலப்போக்கில் உள்ஹிய்யா என்ற வணக்கமே சமூகத்தில் இருந்து மறைந்துவிடும். இவ்வாறு சில வணக்கங்கள் சமூகத்தில் இருந்து மறைந்து போவது எந்த மகாஸிதில் உள்ளடங்கும் ? என்பதை உஸ்தாத் அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்பதற்காக மார்க்க விவகாரங்களில் கவனயீனமாக நடக்க வேண்டுமா? அல்லது மார்க்கத்தை உறுதியாகக் கடைபிடித்து சோதனைகளைத் தாங்கிங்கொண்டு வாழவேண்டுமா?
முஃமின்களைச் சோதிப்பதும் ஷரீஆவின் மகாஸித்களில் பிரதானமான ஒன்று என்பது உஸ்தாத் அவர்களுக்குத் தெரியாமல் சென்றதன் மர்மம் என்னவோ?
சோதனை ஏற்பட்டாலும் மார்க்கத்தை விட்டுக்கொடுக்காமல் உண்மையான முறையில் நடப்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்துவதற்காகவே சோதனைகளை ஏற்படுத்துகிறான். 29:2,3 என்ற குர்ஆனிய வசனங்களை நவீன மகாஸிதிகளுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம்.

மூன்றாவது தவறு:

சில மகாஸித்களை மாத்திரம் கவனத்திற்கொண்டு ஏனைய மகாஸித்களை புறக்கணித்தமை

உள்ஹிய்யாவின் நோக்கங்களில் ஒன்றாக ஏழைகளுக்கு உதவுதல் என்பது குறிப்பிடப்பட்டிருப்பதனால் பணத்தின் மூலமாகவும் அதனை நடைமுறைப்படுத்தலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் உள்ஹிய்யாவின் பெறுமதியை தர்மம் செய்வது, மகாஸித் சிந்தனையின் அடிப்படையில் தவறில்லை என நிரூபிக்க முற்பட்டுள்ளார் உஸ்தாத் அவர்கள்.
இதுதான் உஸ்தாத் அவர்கள் அடிக்கடி விடும் முக்கியமான தவறாகும். ஒரு சட்டத்தின் நோக்கங்களில் ஏதாவதொன்றை குறிப்பாக உலக நலன்களுடன் சம்பந்தப்படுவதை மாத்திரம் கவனத்திற்கொண்டு தீர்ப்புக் கூறுவதே அத்தவறாகும். ஏனெனில் ஒரு சட்டத்துக்கு பின் பல நோக்கங்கள் காணப்படும். அவற்றில் சில, இம்மை மற்றும் மனிதனுடன் சம்பந்தப்பட்டதாகவும், ஏனையவை மறுமை மற்றும் இறைவனுடன் சம்பந்தப்பட்டவையாகவும் இருக்கும். நாம் ஒரு நோக்கத்தை மாத்திரம் அடைய முயற்சித்தால் ஏனையவை பாதிக்கப்பட்டுவிடும்.
இது மாத்திரமின்றி ஒரு நோக்கத்தை அடைவதற்கு தெளிவான ஒரு வழிகாட்டல் குர்ஆன் ஸுன்னாவில் இருக்கும் போது நாம் ஒரு மாற்றுவழியை அதற்குக் கூறுவது எவ்விதத்திலும் அறிவுடைமை ஆகாது. அது அல்லாஹ்வுக்கு பாடம் நடாத்துவதாகும். முக்காலமும் அறிந்த இறைஞானத்திற்கு முன் நமது அறிவு எங்கே! என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆழ்ந்த நீண்ட வாசிப்பு மற்றும் அனுபவம் உள்ளது என்பதற்காக மார்க்கத்தில் நமது சிந்தனையை இறைக் கட்டளைக்கு முரணாக நுழைவிப்பது மிகப்பெரும் அநியாயமும் அதிகப் பிரசங்கித்தனமுமாகும்.

உஸ்தாத் அவர்களின் கூற்றுப்படி உள்ஹிய்யாவின் நோக்கங்களில் ஒன்றே இப்ராஹீம் நபியின் தியாக வரலாற்றை நினைவு கூறுவதாகும். பணத்தைக் கொடுத்தால் இந்த மகாஸித் என்னாவது? ஆனால் கால் நடைகளைப் பலியிடுவதனால் இரு நோக்கங்களும் நிறைவேறும். அது மாத்திரமின்றி குர்பானி எனும் வணக்கத்தை உயிர்ப்பித்தல் குர்பானிப் பிராணிகளான அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களை மதித்தல் போன்றவையும் உள்ஹிய்யாவின் நோக்கங்களில் உள்ளவையே. உஸ்தாத் அவர்களின் தீர்ப்பின் படி ஒரு நோக்கமே நிறைவேறும். ஷரீஅவின் தீர்ப்பின் படி அனைத்து நோக்கங்களும் நிறைவேறும்.

நான்காவது தவறு:

தூர நோக்கமின்மையும் சதித்திட்டங்களைக் கவனத்தில் கொள்ளாமையும்

இனத்துவேசம் வளரும் என்பதனால் உள்ஹிய்யாவைப் பணமாகக் கொடுக்கும் முடிவுக்கு வரவேண்டும் என்ற உஸ்தாத் அவர்களின் முடிவு, அந்நியர்களின் தவறான பிரச்சாரங்களின் உண்மைத் தன்மையைக் கவனத்தில்கொள்ளாத தூர நோக்கற்ற ஒரு கருத்தாகும்.
ஏனெனில் நாம் உள்ஹிய்யாவைக் கொடுக்காவிட்டால் இவர்களது இனத்துவேசம் நீங்கிவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு என்பதை உஸ்தாத் அவர்களால் உறுதிசெய்ய முடியுமா?
மாறாக அந்நியர்கள் விமர்சிக்கும் விடயங்களையெல்லாம் விட்டுக்கொடுத்தால் இன்னும் பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம்.
“யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களது மார்க்கத்தை நீங்கள் பின்பற்றும் வரை உம்மைப் பொருந்திக்கொள்ளப் போவதில்லை.” என்ற இறைவசனமும் கூறுவது அதைத்தானே.
உலகளாவிய ரீதியில் இஸ்லாத்துக்கெதிரான பிரச்சாரத்தில் ஓர் அத்தியாயமே இலங்கையில் உருவெடுத்துள்ள இனப்பிரச்சினையாகும். உண்மை முஸ்லிம்களாக நாம் வாழும் வரை நமக்கெதிரான பிரச்சாரங்கள் ஓயப்போவதில்லை என்பதை உஸ்தாத் அவர்கள் தெரியாதவரல்ல. பர்மாவில் உள்ஹிய்யாக் கொடுத்ததனால்தான் இன ஒழிப்புச் செய்யப்பட்டதா என்பதைச் சற்று சிந்தித்தால் கூட, விடை இலகுவாகக் கிடைத்துவிடும்.
இன்னும் சில நாட்களில் பள்ளிவாயில்கள் நிர்மானிப்பதைத் தவிர்க்குமாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டால் ‘‘பூமி முழுவதும் தொழுமிடமே, எனவே பள்ளிவாயில்களை இடித்துத்தரைமட்டமாக்குங்கள்‘‘ என நவீன மகாஸிதிகள் பத்வாக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லைதான். உலக நடப்புக்களைக் கவனத்தில் கொண்டு தீர்ப்பு வழங்குவதை அடிப்படையாகக்கொண்ட உஸ்தாத் போன்றவர்கள் இப்பிரச்சாரங்களுக்குப் பலியாகியதுதான் ஆச்சரியம்.

ஐந்தாவது தவறு

பிக்ஹுல் மஆலாத் பற்றிய தவறான புரிதல்

அடுத்து உஸ்தாத் அவர்கள் பிக்ஹுல் மஆலாத் என்ற ஒரு அடிப்படையை வைத்து உள்ஹிய்யாவுக்குப் பதிலாக பணத்தை தர்மம் செய்யலாம் என நிறுவ முற்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஏனெனில் குறிப்பிட்ட அடிப்படையின் மூலம் சாதாரணமாக செய்வதற்கு அனுமதியுள்ளவற்றை தீய விளைவுகளைக் கருத்தில்கொண்டு தடைசெய்யலாமே தவிர, மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டவற்றை மாற்ற முடியாது. இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தில் சுன்னத்தான அல்லது வாஜிபான ஒரு காரியத்தை மாற்றுவதற்கு இந்த அடிப்படையைப் பயன்படுத்தமுடியாது. அவ்வாறு மாற்ற முடியுமென்பது அல்லாஹ்வையும் ரஸூலையும் அவமதிப்பதாகும். கியாமத் வரைக்கும் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அல்லாஹ் அறிந்தே வைத்துள்ளான். எனவே நாம் அனுமானிக்கும் பின்விளைவுகளின் அடிப்படையில் சுன்னாவான காரியங்களை மாற்றமுடியாது. நமக்கு செய்வதற்கு வாய்ப்பும் வசதியும் துணிவும் இல்லையெனில் தவிர்ந்து கொள்ளலாம். ஆனால் மற்றவர்களையும் தவிர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுவது மிகப்பெரும் தவறாகும். அவ்வாறு செய்வது முக்கியமான ஒரு வணக்கத்தை அச்சமுதாயத்தில் இருந்து துடைத்தெறிவதற்கு வழிகோலும்.

ஆறாவது தவறு:

ஆதாரமற்ற கருத்தை வெறும் அறிஞர்களின் கூற்றின் அடிப்படையில் முன்வைத்தல்

தமது கருத்துக்கு ஆதாரம் கூற முற்பட்ட போது இமாம் குர்துபியின் தப்ஸீர் நூலில் குறிப்பிடப்படும் சில அறிஞர்களது கருத்தை மாத்திரம் முன்வைத்திருப்பது மாபெரும் தவறாகும். விளக்கம் கூற வந்த குர்ஆன் வசனம்தான் இதற்கான ஆதாரம் என இமாம் குர்துபீ அவர்களே கூறவில்லை. ஏனெனில் பொதுவாக இமாம் குர்துபி அவர்கள், வசனங்களுடன் நேரடியாக சம்பந்தமற்ற சட்டதிட்டங்களையும் தமது நூலில் குறிப்பிடுவது வழமை என்ற அடிப்படையில்தான் இக்கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார்களே தவிர அதற்கான எவ்வித ஆதாரங்களையும் குறிப்பிடவில்லை என்பதோடு அக்கருத்தைப் பற்றிய தனது நிலைப்பாட்டைக் குறிப்பிடவுமில்லை.
எனவே உள்ஹிய்யா கால்நடைகளிலேதான் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் பல ஆதாரங்களுக்கு முன்னிலையில் அறிஞர்களின் கூற்றை மாத்திரம் முன்வைத்து, அக்கருத்தே சரியானது என வாதிடுவதை இஸ்லாமியச் சட்டக் கலையில் பரிச்சயமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். இதனைப் பற்றி இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள் குறிப்பிடும் போது ,
அறிவென்பது மார்க்க ஆதாரங்களுக்கும் அறிஞர்களது கூற்றுக்களுக்கும் இடையில் அறிவீனமாக முரண்கற்பிப்பதல்ல, எனக் கூறுகிறார்கள்.

ஏழாவது தவறு:

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களது சரியான கூற்றைக் கவனிக்கத் தவறியதும், துறைசார் நூல்களை அனுகாமையும்

இமாம் மாலிக் அவர்கள் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே சிறந்தது என்ற கருத்துடையவர்கள் என்பதே சரியான கூற்றாகும், என மாலிகி மத்ஹபின் துறைசார் நிபுணரும் இமாம் மாலிகின் கருத்துக்களில் நன்கு பரிச்சயமுள்ள இமாம் அப்னு அப்தில் பர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தம்ஹீத் 23/192

அதற்கு மாற்றமான அறிவிப்பு பலவீனமானதாகும் என்பதை உஸ்தாத் அவர்கள் கவனிக்கவில்லை. ஏனெனில் இது போன்ற தலைப்புக்களில் ஆய்வு சமர்ப்பிக்கும் போது துறை சார்ந்த நூற்களை அனுகாது தமக்குத் தேவையான ஆனால் தலைப்புக்கு அந்நியமான நூற்களை அனுகியதே இத்தவறு நிகழ்வதற்கான காரணம்.

எட்டாவது தவறு:

ஒரு இடத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் செயற்பட்டு இன்னுமொரு இடத்தில் ஆதாரங்களைக் கவனிக்காது அறிஞர்களின் கூற்றுக்களைச் சார்ந்து கருத்துக் கூறல்

உள்ஹிய்யா வாஜிபா சுன்னத்தா என எழுதும் போது, அறிஞர்களின் கருத்துக்களைக் கருத்திற்கொள்ளாது அவைகள் ஆதாரத்துக்கு முரணானவை எனக் கூறிவிட்டு, உள்ஹிய்யாவுக்குப் பகரமாக பெறுமதியை வழங்கலாமா என எழுதும் போது, ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர் என்பதுடன் சுருக்கிக்கொண்ட மர்மம்தான் என்ன? இது ஆய்வு முறையில் தெளிவான முரண்பாடாகும். ஆய்வில் எப்பொழுதும் வலிமையாக ஆதாரம் உள்ள கருத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர, தான் விரும்பும் கருத்துக்கு சாதகமான நியாயங்களைத் தேடக்கூடாது. அதனையே “முன்முடிவுடன் செயற்படுதல்” என்ற ஆய்வுத்தவறாக அடையாளப்படுத்துவர் அறிஞர்கள்.

ஓன்பதாவது தவறு:

பிலால் (ரழி) அவர்களது கூற்றில் வெளிப்படைத் தன்மையைப் பேணாமை

சேவலை உள்ஹிய்யாவாக கொடுக்கலாம் அல்லது அதனைப் பணமாகக் கொடுக்கலாம் என்ற பிலால் (ரழி) அவர்களின் கருத்து விமர்சனத்துக்குரியதாகும் என்பது உஸ்தாத் மேற்கோள் காட்டிய, முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலிலே இடம்பெற்றிருந்தும் அதனைக் குறிப்பிடத் தவறியமை அறிவியல் அமானிதத்துக்கு செய்யும் மோசடியாகும்.
உள்ஹிய்யாவைப் பணமாகக் கொடுப்பது எனக்கு விருப்பமானது என்ற கூற்று பிலால் (ரழி) அவர்களுக்குரியதா அல்லது அவரது மாணவருக்குரியதா என்பது எனக்குத் தெரியாது என்ற அறிவிப்பாளரின் கூற்றே அந்த விமர்சனமாகும்.
அதனால்தான் என்னவோ குறிப்பிட்ட பிலால் ரழி அவர்களது கூற்றை மூல நூலிலிருந்து குறிப்பிடாது தலைப்புக்கு அந்நியமான தப்ஸீர் குர்துபியிலிருந்து குறிப்பிட்டுள்ளார் போலும்.
ஆச்சரியம் என்னவென்றால் பிலால் (ரழி) அவர்களின் கூற்றுப்படி உள்ஹிய்யாவாக சேவலையும் அறுத்துப் பலியிடலாம் என்றே இவர்கள் பத்வா வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பறவைகளை உள்ஹிய்யாவாகக் கொடுப்பதை வித்தியாசமான கருத்து என்பதாக உஸ்தாத் அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. அவ்வாறு கூறினால் தம்மை மக்கள் தவறாக நினைத்துக்கொள்வார்கள் என்ற பயமோ? என்னவோ?
இதன் மூலம் பிலால் (ரழி) அவர்களின் கூற்றில் ஆதாரபூர்வமான பகுதியை ஏற்றுக்கொள்ளாமல் விமர்சனத்துக்குரிய பகுதியை மாத்திரம் நடைமுறைப்படுத்துமாறு வாதிடுகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாகும்.
தமது கருத்துக்கு ஆதாரம் திரட்டுவதே இவர்களின் நோக்கமாக உள்ளதே தவிர ஆதாரத்தின் அடிப்படையில் தமது நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் எண்ணம் இவர்களிடம் இருப்பது போல் தெரியவில்லை.
அல்லாஹ்வே போதுமானவன்.

பத்தாவது தவறு:

தலைப்புடன் சம்பந்தமுடைய இமாம் நவவியின் முக்கியமான கூற்றைப் புறக்கணித்தமை

உள்ஹிய்யா சுன்னத் என்பதற்கு இமாம் நவவியின் கூற்றைக் குறிப்பிட்ட உஸ்தாத் அவர்கள் கால்நடைகளை மாத்திரமே உள்ஹிய்யா கொடுக்கலாம் என்பதே ஏகமனதான கருத்து என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்ற இமாம் நவவியின் கூற்றைக் குறிப்பிடாமை பெரும் சந்தேகத்தையே எழுப்புகிறது.
அவ்வாறு குறிப்பிடுவது இதற்கு மாற்றமான கருத்துக்களை வலுவிழக்கச்செய்து விடும் என்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இவ்வாறு ஏகமனதான கருத்துள்ள விடயங்களில் மாற்றுக்கருத்து இருப்பதை அறிந்தால் சற்று அவதானமாக அதன் உண்மைத்தன்மைய அலசிப்பார்க்க வேண்டும். சில வேளை அவர்கள் கூறாததாகவோ அல்லது வேறு ஒரு கருத்தில் கூறியதாகவோ இருக்க வாய்ப்புண்டு.
நாம் மேலே குறிப்பிட்டதைப் போன்று சில கூற்றுக்கள் உறுதிசெய்யப்படாதவை. ஷஃபி மற்றும் அபூஸவ்ர் ஆகியோரின் கருத்துக்கள் அறிவிப்பாளர் வரிசையின்றி குறிப்பிடப்பட்டிருப்பதனால் அதுவும் வலுவான வாதமல்ல.
அல்லது அவற்றின் நேரடிக் கருத்தில் அதனைப் புரிந்துகொள்ளாமல் உள்ஹிய்யா வாஜிப் இல்லை என்பதை உணர்த்துவதற்காகக் கூறப்பட்டவையே தவிர பெறுமதியைக் கொடுப்பதற்கு ஆர்வமூட்டுவதற்காகக் கூறப்பட்டவையல்ல என்றே கருத வேண்டும். இவ்வாறுதான் அறிஞர்களான இப்னு அப்தில் பர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்இஸ்தித்கார் 5/230

அது மாத்திரமின்றி இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூட தனது நூலான முஹல்லாவில் (6/9) உள்ஹிய்யா சுன்னா என்ற பாடத்தில் இதனைக் குறிப்பிடுவது அதனையே நமக்கு உணர்த்துகிறது. அது மாத்திரமின்றி பணமாகக் கொடுக்கலாம் என இப்னு ஹஜ்ம் (ரஹ்) அவர்கள் எங்கும் குறிப்பிடவில்லை.
குர்ஆன் சுன்னாவில் இடம்பெறும் வார்த்தைகளை நேரடியாகப் புரிந்துகொள்ளாமல் மகாஸித்களின் அடிப்படையிலும் குர்ஆனுக்கு முரணின்றியுமே புரிந்துகொள்ள வேண்டும் என அடிக்கடி கூறுவோர் நேரடி ஆதாரங்களுக்கு மாற்றமான அறிஞர்களின் கூற்றுகளுக்கு மதிப்பு வழங்குவது மிகப்பெரும் முரண்பாடாகும்.

முடிவுரை:
எனவே உள்ஹிய்யாவுக்குப் பதிலாக பெறுமதியை வழங்கலாம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸிலும் ஆதாரம் இல்லை என்பதுடன் அதனை அனுமதிக்கும் விதமாக இடம்பெற்றுள்ள அறிஞர்களது கருத்துக்களும் விமர்சனத்துக்குரியவையே. மேலும் மகாஸிதுஸ் ஷரீஆவுக்கும் இக்கருத்து முரணானதே.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

2 comments

  1. குர்பானி முக்கியமான அமல்,; கொடுக்கமுடியாது என்ற சூழ்நிலையில் ; அது , இல்லை என்று ஆகி விடாது , இறைவன் சொல்லி ஜிப்ரயில் [அலை ] வழிகாட்டலில் இப்ராஹிம் நபி [ செய்த ] மாபெரும் தியாகத்தின் வடிவம் , குர்பான் கொடுக்கும் போது மனதில் நிற்பதும் நிலைப்பதும் இப்ராஹிம் நபியே .

  2. Safiyyah Ibnathu Meeran

    அழ்ழாஹ் உங்கள் வாழ்விலும் அறிவிலும் பரகத் செய்வானாக எனப் பிரார்தித்தவளாக……

    சிறந்த ஒரு தெளிவு

    الحمدلله
    الله يبارك فيكم

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *