Featured Posts

இத்தா

2014 களில் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “இத்தா” நாடகத்திற்காக கதைவசனம் எழுதிக் கொண்டிருந்தேன். அக்காலப் பகுதியில் பெரும்பான்மை மொழிக் காரியாலயத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்ததால், சக உத்தியோகத்தர்களுடன் அது பற்றிக் கலந்துரையாடும் சூழல் ஏற்பட்டது. எனக்குப் பக்கத்து இருக்கைக்குச் சொந்தமான பெண் உத்தியோகத்தர், நான் சிங்கள மொழியில் பேசினாலும்கூட எனக்குத் தமிழில் பதிலளிப்பார். அந்தளவுக்கு தமிழ்மொழிக்குப் பரீட்சயமானவர்.

எனது எழுத்து ஆர்வம் பற்றி ஏற்கெனவே, அறிந்து வைத்திருந்த அவர், புதிதாக என்ன எழுதுகின்றீர்கள்? என வினவினார். “இத்தா” நாடகத்திற்கு கதை வசனம் எழுதுவதாகக் கூறிவிட்டு, அதுபற்றி மேலதிக விளக்கம் கோருவார் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவர் விடயத்தைச் சட்டெனப் புரிந்ததோடு, தன் அனுபவம் ஒன்றினையும் பகிர்ந்தார்.

அவர் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த வேளை, “இத்தா இருத்தல்” முஸ்லிம் பெண்களை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது? அது பற்றிய அவர்களின் உளவியல் என்ன? என்பன பற்றிய ஆய்வறிக்கை திரட்டுவதற்காக களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கிறார்.

இதற்காக முஸ்லிம் நண்பிகளின் உதவியுடன் “இத்தா” மேற்கொண்டிருந்த பல பெண்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ஒரு தாயாரிடம் சென்றவர், இத்தா இருப்பது பெண்களின் உரிமை மீறல் என்ற வகையில் விவாதித்தும் உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த தாயார் அவரது பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமைதியடைந்ததும் உரையாடல் முற்றுப்பெற்று, திரும்பி வரும் வழியில் தனக்கு எதிர்பாராத வாகன விபத்தொன்று நடந்ததாகவும், அந்தக்கணம் அந்த தாயின் மனம் புண்படும்படியாக பேசிவிட்டோமோ? என்ற உறுத்தல் தனக்குள் ஏற்பட்டதாகவும் கூறினார். அது அவரது கடந்த காலமாக இருந்ததனால், இத்தா பற்றிய தற்போதைய அவரது எண்ணப்பாடு என்ன? என்பதை ஆவலுடன் கேட்டேன். அவர் மூன்று விடயங்களை முன்வைத்து இத்தா மேற்கொள்வதை மறுத்தார்.

1. பெண் கருவுற்றுள்ளாரா? என்பதனை அறிய வேண்டுமாயின், அதற்கு பல சோதனைகள் தாராளமாக இருக்கின்றன. அதற்கு மூன்று மாதங்கள் தேவையற்றது என்றார்.

2. குழந்தையின் தந்தை பற்றி அறிவதாயின் மரபணுச்சோதனை (டீ.என்.ஏ) முறை இருக்கிறது.

3. இத்தா என்பதே தேவையற்றது எனும்போது, கருவளத்தினை இழந்த வயதான பெண்களும் இத்தாவை எதற்காக மேற்கொள்ள வேண்டும்?

போன்ற வினாக்களைத் தொடுத்துவிட்டு, இதற்கெல்லாம் விடையில்லைதானே? என்று கூறி எழுந்து சென்றார்.

காரண காரியங்களை ஆராய்ந்திடவோ, புத்தியிலிட்டுத் தீட்டவோ, விஞ்ஞானத்துக்குள் போட்டு அலசி எடுக்கவோ, அவசியமற்ற இஸ்லாம், மனிதனின் புத்திக்கு எட்டாத பல விடயங்களைத் தன்னகத்தே சுமக்கின்றது.

அது மனிதர்களைப் பார்த்து,சிந்திப்பீராக! என்ற வாசகத்தை கூறிக்கொண்டே இருக்கிறது.

ஆனால், இவ்வாறானதொரு பேசுபொருளை முஸ்லிம் அல்லாத ஒரு விஞ்ஞானியே சிந்தித்துள்ளார்.

ஆம், கருவியல் ஆய்வாளரான றாபர்ட் கில்ஹாம் என்பவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்னும் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில், ஆண்பெண் உறவில் மரபணுக்கள் எவ்வாறான பங்களிப்பினைச் செய்கின்றது? என்ற ஆராய்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆய்வின் இறுதியில் ஒரு பெண்ணின் உடம்பில் ஆணின் மரபணுவின் தடயங்கள் உடனே மறைவதில்லை எனவும், அவை முற்றாக அழிவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் மூன்று மாதங்கள் எனவும் கண்டுபிடித்துள்ளார்.

இதனை தனது முஸ்லிம் நண்பரும் பேராசிரியருமான ஹாசிம் மசாவியிடம் கூறியுள்ளார்.
மேலும், ஒரு பெண்ணானவள் கணவருடன் உறவு வைத்த நிலையில் அந்தக் கணவரைப் பிரிந்தால் அவள் மூன்று மாதங்கள் கடந்தபின்னர், மறுமணம் செய்து கொள்வதே அவளுக்கு பாதுகாப்பினைத் தரக்கூடியது என விளக்கியுள்ளார்.

அதனைக் கேட்ட நண்பர் ஹாசிம் மசாவி, கணவரைப் பிரிந்த (Divorced woman) ஒரு பெண் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும். அந்தக் காலப்பகுதியில் அவள் மறுமணம் செய்ய கூடாது. என்ற இஸ்லாமியர்கள் பின்பற்றும் விவாகரத்துச் சட்டத்தினை விளக்கியுள்ளார். அதைக் கேட்ட மருத்துவர் ஆச்சரியத்துடன் சத்தியத்தினை உணர்ந்தார்.

அதாவது, மூன்று மாதங்கள் கடக்காத நிலையில் பெண் மறுமணம் செய்து பெற்றெடுத்த குழந்தையில், முந்தைய கணவரின் மரபணுவின் தடயங்களும் இருக்கும். இதனை வைத்து இரண்டாவது கணவர் குழந்தை தன்னுடையதல்ல எனக்கூறவோ, அதனால், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படவோ வாய்ப்பு இருப்பதை அறியலாம்.

அவரது கண்டுபிடிப்பினை “சூடான் விஷன்” என்ற தினசரிப் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிற மதத்தவர்களால் எதிர்ப்பலைகள் கிளம்பிய வரலாறும் ஒரு புறம் நடந்தேறியுள்ளது.

அல்- குர்ஆனின் அல்-பகறா மற்றும் அத்-தலாக் சூறாக்களில், மாதசுழற்சி நின்றுபோன பெண்களும்கூட கணவனைப் பிரிந்தால் (Divorced woman) மூன்றுமாத காலம் இத்தா இருக்கக் கட்டளையிடுகின்றது. மறைவானவற்றை அறிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்.

இஸ்லாத்தையும் பெண் அடிமைத்துவத்தையும் இணைத்து பேசுவோருக்கும் இதில் சிறந்த அத்தாட்சி உள்ளது. அதேவேளை, ஆய்வாளர் றாபர்ட் கில்ஹாம் அவர்களின் கண்டுபிடிப்பில் இத்தா பற்றி விளக்கம் பூரணத்துவம் அடைந்ததாகக் கருத முடியாது. இன்னும் பல அறிவாளிகளுக்காகவும் ஆய்வுகளுக்காகவும் எதிர்காலங்கள் காத்துக்கிக்கின்றன.

-பர்சானா றியாஸ்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *