Featured Posts
Home » பொதுவானவை » தத்தெடுப்பு

தத்தெடுப்பு

இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் செய்வதன் பிரதான நோக்கமாகச் சந்ததிகளைப் பெருக்கிக்கொள்வதும் பாதுகாப்பான குடும்ப அமைப்பை உருவாக்குவதும் தான் உள்ளது பிள்ளைப்பேறு என்பது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடையாகும். திருமணம் செய்த அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கின்றான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கின்றான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குரஆன் 42:49,50).

திருமணம் முடித்து பல வருடங்கள் கடந்தும் பிள்ளை பாக்கியம் இல்லாமல் கவலைப்படுவோர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் அப்படி உள்ளவர்கள் தமக்கென்று ஒர் வாரிசு இருக்க வேண்டுமென்று எண்ணி குழந்தைகளை தத்தெடுக்க முன்வருகிறார்கள்

நபி ﷺஅவர்களின் வருகைக்கு முன்னர் ஜாஹிலியா சமுதாயத்தில் தத்தெடுப்பு முறை என்பது நடைமுறையில் இருந்து வந்தது யார் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பாரோ அக்குழந்தை அவரது சொத்திற்கு வாரிசாவார். இன்னும் அவரின் மனைவி மற்றும் பெண் மக்களை அப்பிள்ளை வளர்ந்த பின் திருமணம் செய்வது ஹராமாகவும் அவர்களுக்கு மத்தியில் மஹ்ரமான உறவும் இருந்துவந்தது சுருங்கக்கூறின் பெற்றெடுத்த பிள்ளையைப்போன்று வளர்ப்புப்பிள்ளையும் பாவிக்கப்பட்டார்கள்.  நபிﷺ அவர்களும் ஸைத் பின் ஹாரிஸா அவர்களை நுபுவத்திற்கு முன்னரே தத்தெடுத்தார்கள் தனது பிள்ளையைப்போன்றே அவரை பராமரித்து வந்தார்கள் மக்களெல்லாம் அவரை முஹம்மதின் மகன் ஸைத் என்றே அழைத்து வந்தனர் ஹிஜ்ரி மூன்று அல்லது ஐந்தாம் ஆண்டு வரை இந்நிலை நீடித்தது

அதன் பின்னர் வளர்ப்பு பிள்ளைகளை அவர்களின் உண்மையான தந்தையர்கள் யார் என்று அறியப்படுமானால் அவர்களின் பேருடன் சேர்த்துக் கூறுங்கள் அப்படி அவர்களின் தந்தை யார் என்று தெரியாமல் போனால் அவர்களுக்கு உங்களுக்கு மார்க்கச் சகோதரர்கள் என்று கூறுங்கள்  என்று அல்லாஹ் கட்டளையிட்டான். இன்னும் தத்தெடுத்த குழந்தையை ஒருவரின் உண்மையான குழந்தையைப்போன்று கூறுவதையும் அவன் ஹராமாக்கினான் அதே போன்று தனது தந்தையல்லாதவரை உண்மையான தந்தையாகக் கருதுவதையும் ஹராமாக்கினான் .

உங்களுடைய வளர்ப்புப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான். (அல்குர்ஆன் 33:4)

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:5).

நபிﷺகூறினார்கள்:

எவன் தெரிந்து கொண்டே தந்தையல்லாத ஒருவரை தந்தை என்று  வாதாடுகிறானோ அவனுக்கு சொர்க்கம் ஹராமாகும்.நூல் ஸஹீஹுல் புஹாரி 4326

அனஸ் அவர்கள் அறிவித்தார்கள் நபிﷺகூறினார்கள்

யார் தனது தந்தையல்லாத ஒருவரை தந்தை என்று  வாதாடுகிறானோ அல்லது பாதுகாவலரல்லாத ஒருவரை பாதுகாவலன் என்று வாதிடுவானோ அவன் மீது மறுமை நாள் வரை அல்லாஹ்வின் சாபம் நிலைத்திருக்கும்.நூல் அபூதாவூத் 5115

வளர்ப்பு பிள்ளை உண்மையான பிள்ளை அல்ல என்பதனால் ஜாஹிலியா காலத்தில் இருந்த சட்டங்களை இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் பின்பற்றபட்டன

வளர்ப்பு பிள்ளைக்கும் வளர்ப்பு பெற்றோருக்கும் மத்தியில் வாரிசுரிமை என்பதில்லை ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உயிருடன் இருக்கும் போது உபகாரம் செய்யலாம் அல்லது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை வஸியத் செய்யலாம் அதற்கு அதிகமாக எதையும் கொடுக்கக்கூடாது ஏனெனில் வாரிசுதாரர் யார் அவர்களுக்குரிய உரிமைகள் என்ன என்பதையெல்லாம் மார்க்கம் மிகத் தெளிவாக விளக்கியுள்ளது ஆனாலும் ஒருவர் நன்மையை கருதி தர்மமாக தந்தால் அதில் தவறில்லை.

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும். (அல்குர்ஆன் 33:6)

வளர்ப்பு தந்தையின் மனைவியை அவர் பிரிந்தால் வளர்ப்புப் பிள்ளை அவரை திருமணம் செய்யலாம் ஜாஹ்லியா காலத்தில் இது ஹராமாக இருந்தது

ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.33:37

ஸைத் பின் ஹாரிஸா அவர்கள் ஜைனப் அவர்களை தலாக் கூறிய பின்னர் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க நபிﷺ அவர்கள் திருமணம் செய்தார்கள்

தத்துப்பிள்ளை வளர்ப்பு மகன்/மகள் என்பது கூடாது என்று சொல்வதால் மனிதநேயத்தையோ இஸ்லாமிய சகோதரத்துவத்தையோ பிறர் மீது அன்பு பாராட்டுவதையோ உபகாரம் செய்வதையோகூடாது என்று மார்க்கம் சொல்லவில்லை இவைகளை செய்வதை நன்மையான காரியமாக நற்செயலாக வலியுறுத்துகிறது

நன்மையான காரியங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பதையும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவதையும் நேசம் கொள்வதையும் மார்க்கம் வலியுறுத்துகிறது.

இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:2)

அல்லாஹ்வின் தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள்’

ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.

அறிவிப்பாளர் நுஃமான் இப்னு பஷீர்(ரலி) நூல்:ஸஹீஹுல் புஹாரி 6011

 நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது

(இப்படிக் கூறும்போது) நபிﷺஅவர்கள் தங்களின் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

அறிவிப்பாளர் அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நூல்:ஸஹீஹுல் புஹாரி2446

லஜ்னத்து தாயிமாவின் ஃபத்வாவில் சொல்லப்பட்டுள்ளது

இந்த நபிமொழியின் அடிப்படையில் அநாதைகளையும் ஏழைகளையும் சம்பாதிக்க இயலாதவர்களையும் தந்தை யாரென்று அறியாதவர்களையும்  பொறுப்பேற்றுக்கொள்வதும் அவர்களுக்கு பயிற்சியளிப்பதையும் இன்னும் அவர்களுக்கு உபகாரம் செய்வதையும் சமுதாயம் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் அதை பொறுப்பேற்காவிட்டால் சமுதாயத்தில் அலட்சியமும், இறுக்கமும் வரம்புமீறுதலுக்கும்,ஒழுக்கமற்ற சமூகம் உருவாகவும்   காரணமாக அமைந்து விடுகிறது.எனவே இஸ்லாமிய அரசின் மீதுள்ள கடமை இயலாதவர்களுக்காகவும், அநாதைகள், ஏழைகளுக்காகவும் இல்லங்களை நிருவுவது கடமையாகும்.

வளர்ப்புப்பிள்ளை ஒருவரின் சொந்த பிள்ளையாக மாட்டார் எனவே அவரது மனைவி மற்றும் பெண்பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பிள்ளையாக இருப்பவர் மஹ்ரமாக ஆகமாட்டர் நிச்சயமாக அவர்கள் தங்களுக்கு மத்தியில் மஹ்ரம், அஜ்னபி உறவைப்பேணவேண்டும்

இஸ்லாமிய அரசில்லாத சூழலில் இஸ்லாமிய அமைப்புகள் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவிசெய்வானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *