Featured Posts
Home » நூல்கள் » மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 5.

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 5.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை – அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக ‘திரிசூலம்’ வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.

அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

‘விசுவ இந்து பரிஷத்’ ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை – அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் ‘பக்தி போதை’யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.

மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது – அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் – அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!.

கி. வீரமணி


இறைவன் நாடினால் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *