Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து….

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து….

1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சொன்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, ‘அபூபக்ரே! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து கொள்வோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. எனவே, நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன் மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்” என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே, ‘நீ யாருடைய பணியாள்? இளைஞனே!” என்று கேட்டேன். அவன், ‘மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)” என்று அல்லது மக்காவாசிகளில் ஒருவரின் (பணியாள்) என்று பதிலளித்தான். நான், ‘உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?’என்று கேட்டேன். அவன், ‘ஆம் (இருக்கிறது)” என்று சொன்னான். நான், ‘நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?’ என்று கேட்டேன். அவன், ‘சரி (கறக்கிறேன்)” என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், ‘(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக் கொள்” என்று சொன்னேன். -அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்: தம் இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை கண்டேன். அவன், உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகத்தை தணித்துக் கொண்டு, உளூச் செய்து கொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும், ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப் பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், ‘பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு, ‘(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (வந்துவிட்டது)” என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னுமாலிக் தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் முஸ்லிமாகியிருக்கவில்லை.) நான், ‘(எதிரிகள்) நம்மிடம் வந்து சேர்ந்து விட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராகாவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே, சுராகாவுடன் அவரின் குதிரை தன் வயிறு வரை பூமியில் புதைந்து விட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் இப்னு முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: ‘பூமியின் ஓர் இறுகிய பகுதியில்” என்று (அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்கள் என) கருதுகிறேன். உடனே சுராகா, ‘நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக கருதுகிறேன். எனவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களை விட்டுத் திசைதிருப்பி விடுவேன்” என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தன்னைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், ‘உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை” என்று கூறலானார். மேலும், (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பியனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்.

புஹாரி :3615 அல்பராவு பின் ஆஸிஃப் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *