Featured Posts
Home » பொதுவானவை » ஹதீஸ் ஒரு சிறு விளக்கம் – 2: தபகாத் இப்னு ஸஃது

ஹதீஸ் ஒரு சிறு விளக்கம் – 2: தபகாத் இப்னு ஸஃது

திண்ணையில் வெளியான எனது முந்திய ஹதீஸ் பற்றிய கடிதத்தை ‘குழப்பவாதம்’ என்றும் ‘திசை திருப்பும் முயற்சி’ என்றும் தனது 27.1.05 பதிவில் குற்றம் சாட்டிய நேசகுமார், அதே பதிவில் ‘ஹதீதுகளைப்பற்றி சொல்லியிருக்கும் சலாஹ¤தீன் தபகாத் பற்றியும் கொஞ்சம் ஆய்ந்து எழுதியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களை கலந்தாலோசித்து திரட்டிய தகவல்களை இங்கு முன்வைக்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாக தொகுக்கும் பணி தொடங்கியது. நபிகளார் அவர்களின் காலத்தில் குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் அறிவிக்கப்படும்போது அவ்வசனங்களை எழுத்து வடிவத்தில் அவ்வப்போது குறித்து வைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஹதீஸ்களையும் எழுத்து வடிவத்தில் குறித்து வைத்தால் வீணான குழப்பம் ஏற்படும் என்பதால் ஹதீஸ்களை பதிவு செய்வதை நபிகளார் தடை செய்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர், உமர், ஆகிய கலிபாக்களின் ஆட்சிக்காலத்திற்கும் பிறகு, கலிபா உமறுப்னு அப்தில் அஜீஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது உத்தரவின்பேரில் அபூபக்கரிப்னு ஹஜ்ம் என்ற அறிஞர் அவர் அறிந்திருந்த ஹதீஸ்களை தொகுத்து ஒரு கிரந்தம் எழுதினார். இக்கிரந்தத்தை தொடர்ந்தே வேறு சில மார்க்க அறிஞர்களும் தங்களுக்கு தெரிந்த இதர ஹதீஸ்களையும் எழுத ஆரம்பித்தனர். இவ்வாறுதான் ஹதீஸ்களை தொகுக்கும் பணி தொடங்கியது.

இவ்வாறு தொகுக்கப்பட்ட கிரந்தங்களில், நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் ஆகியவைகள் மட்டுமில்லாமல், ஸஹாபிகள் எனப்படும் நபித்தோழர்களின் சொல் செயல் ஆகியவைகளும், அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் மார்க்கத் தீர்ப்புகளும் கலந்திருந்தன. தாபியீன்கள் நபிகளாரின் காலத்தில் பிறந்தே இருக்காத தலைமுறையினர். இவர்கள் ஸஹாபிகளிடமிருந்து மார்க்கத்தை கற்றவர்கள்.

இந்த காலக்கட்டத்திலிருந்தே பொய்யான ஹதீஸ்களை கூறுபவர்களும் தோன்றிவிட்டார்கள். அதிகமான ஹதீஸ்களை அறிந்து அறிவிக்கும் மார்க்க அறிஞர்களை மக்கள் பெரிதும் மதித்தனர். அத்தகைய மதிப்பு தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை காணப்பிடிக்காமல் அது வளரும் வேகத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் போன்ற காரணங்களினாலும், பொய்யான ஹதீஸ்களை புனைந்து மக்களிடையே இவர்கள் பரப்பத்தொடங்கினர்.

தபகாத் இப்னு ஸஃது தொகுக்கப்பட்ட காலத்தில் இவ்வகை கற்பனை ஹதீஸ்கள் நிறைய பரப்பப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. இதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு (ஹிஜ்ரி 194-ல்) தோன்றிய இமாம் புகாரி அவர்களின் காலத்திலும் இவர்களுக்கு பின் தோன்றிய மற்ற ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலத்திலும்தான் ஹதீஸ்களை ஆய்ந்து, தரம் பிரித்து, ஆதாரமானவைகளை இனங்கண்டு தொகுக்கும் பணி நடந்து வந்தது.

தபகாத் இப்னு ஸஃது பற்றியும், இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள, நேசகுமார் ஆதாரமாக காட்டும் நிகழ்வு பற்றியும் இனி சில ஆதாரங்களை காண்போம்.

ஹதீஸ்கலையின் பெரிய இமாம்களில் ஒருவரான இப்னுஸ்ஸலாஹ், இப்னு ஸஃது பற்றியும் அவரது தபகாத் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“இப்னு ஸஃது நம்பகமானவராக இருந்தாலும் அவர் தனது “தபகாத்”தில் பலவீனமான அறிவிப்பாளர்கள் வாயிலாக அதிகமான செய்திகளை அறிவித்துள்ளார். அத்தகைய பலவீனமான அறிவிப்பாளர்களில் முஹம்மத் பின் உமரும் ஒருவர்” (1)

இந்தக் கதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு யாரும் ஆதாரம் தரவில்லை என்கிறார் நேசகுமார். அப்படி கூறுவது தவறான வாதமாகும். நிறைய ஆதாரங்கள் உண்டு.

முதலில், இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை:

1) முஹம்மத் பின் யஹ்யா பின் ஹப்பான்
அவரிடமிருந்து
2) அப்துல்லாஹ் பின் ஆமிர்
அவரிடமிருந்து
3) முஹம்மது பின் உமர்
அவரிடமிருந்து
4) இப்னு ஸஃது

இந்த அறிவிப்பாளர் வரிசைப்படி நபி(ஸல்) அவர்கள் இப்படி நடந்துகொண்டதாக சொல்பவர், முஹம்மத் பின் யஹ்யா பின் ஹப்பான். இவர் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறக்கவே இல்லை. இவர் நபியின் மரணத்திற்கு பல்லாண்டுகளுக்குப் பின் பிறந்த ஒரு தாபிஈ ஆவார். ஒரு தாபிஈ, நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள், இப்படிச் சொன்னார்கள் என்று அறிவிக்கும் எந்தச் செய்தியும் ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் ஒப்புக்கொள்ளப்படாத செய்தியாகும்.

இந்தக் குறை மட்டுமல்ல, இதைவிட பெரிய குறை, இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் ஆமிர், ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர், மத்ரூத் (ஏற்றுக்கொள்ளமல் விடப்பட்டவர்) என்று வர்ணிக்கப்பட்டவர். (2)

அடுத்து, மூன்றாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் உமர்; இவரும் ஹதீஸ் கலை அறிஞர்களால், மத்ரூத் (ஏற்றுக்கொள்ளாமல் விடப்பட்டவர்) என்று அறிவிக்கப்பட்டவர் ஆவார். (3)

ஆக இந்தச் செய்தி பலவீனத்துக்கு மேல் பலவீனமானது என்பது தெளிவாகிறது.

இந்தச் செய்தி தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கவுரை) நூற்களில் வந்துள்ளதே என நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். அப்படியானால் குர்ஆன் விளக்கவுரையாளர்களின் தலைவர் என அறியப்படும் இமாம் இப்னு கஸீர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

திருக்குர்ஆனின் 32:37-வது வசனத்திற்கு கீழ் இமாம் இப்னு கஸீர் கூறுவது: “இப்னு அபீஹாத்தமும், தபரீயும் இவ்விடத்தில் சில செய்திகளை குறிப்பிடுகிறார்கள். அவை ஆதாரமில்லாதவையாதலால், அச்செய்திகளை நாம் புறக்கணிக்கவே விரும்புகிறோம். ஆதலால் அவற்றை இங்கு நாம் கொண்டுவரவில்லை”.

மேலும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது “ஜாதுல் மஸீர்” என்ற பிரபலமான திருக்குர்ஆன் விளக்கவுரையில், 32:37-வது வசனத்தின் விளக்கப்பகுதியில் மேற்படி கதையை சுட்டிக்காட்டி, இந்தக்கதையை மறுத்து விளக்கமளித்துள்ள அறிஞர்களின் விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார். இப்னுல் ஜவ்ஸீ, இப்னு கஸீரைவிட காலத்தால் முந்தியவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அடுத்து ஹதீஸ் கலை மேதை இப்னு ஹஜர், ஸஹீஹுல் புகாரியின் விளக்கவுரையில், 32:37-வது வசனத்திற்கு விளக்கமாக இடம்பெறும் ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் போது, “இப்னு அபிஹாத்தமும், தபரீயும் வேறு செய்திகளை (அதாவது மேற்படி கதைகளை) குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றை பல குர்ஆன் விரிவுரையாளர்கள் நகல் செய்துள்ளார்கள். அந்தச் செய்திகளை பேசுவதில் ஈடுபடுவதே வெறுக்கத்தக்கது” என்று கூறுகிறார்.

இப்படி ஹதீஸ்கலை அறிஞர்களாலும், குர்ஆன் விளக்கவுரையாளர்களாலும், இந்தக் கதை கட்டுக்கதைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

அதனால்தான் ‘ரஹீக்’ நூலின் ஆசிரியர், ஆதாரம் எழுதாமல் ‘கட்டுக்கதை’ என்று மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். தவிர யாருக்கும் பயந்துக்கொண்டு எதையும் அவர் மறைக்கவில்லை.

எனவே, நேசகுமார் இனி ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும், அவற்றையே ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புத்தகங்களையும், இவற்றை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட இணையத்தளங்களையும் படித்து தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மற்றபடி, நான் முன்பே சொல்லியதுபோல, நேசகுமாரின் கேள்விகள் என்னைப்போன்ற முஸ்லிம்களை ப்ல மார்க்க நூற்களை ஆழ்ந்து படிக்கவும், மார்க்க அறிஞர்களுடன் கலந்தாலோசிக்கவும், அறியாத பல விஷயங்களை அறிந்து கொள்ளவும் தூண்டுகிறது. எனவே, ஆதாரங்களின் அடிப்படையிலான பல கேள்விகளை நேசகுமார் தொடர்ந்து எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரைக்கான ஆதாரங்களை திரட்டி உதவிய சகோதரர்களுக்கு எனது நன்றிகள்!

– சலாஹ¤த்தீன் – 15 பிப்ரவரி 05

Reference books:

(1) இப்னுஸ்ஸலாஹ், நூல்: அல் முகத்திமா ஃபீ உலூமில் ஹதீஸ், பக்கம் 369, பதிப்பு தாருல் குத்துப் அல் இல்மிய்யா

(2) தஹ்தீபுத் தஹ்தீப், பக்கம் 245, பதிப்பு- தாருல் குத்துப் அல் இல்மிய்யா

(3) தக்ரீபுத் தஹ்தீப், பக்கம் 555, பதிப்பு- பைத்துல் அஃப்கார்.

(4) முஹம்மது அப்துல் காதர் ஸாஹிபு பாக்கவி (ரஹ்), நூல்: தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி தமிழ் மொழிபெயர்ப்பு பாகம்-1, பதிப்பு – இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிஷர்ஸ் & புக் செல்லர்ஸ்

One comment

  1. அபூ முஹை

    தரமான ஆய்வு. உங்கள் முயற்சிக்கு இறைவன் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *