Featured Posts
Home » பொதுவானவை » நூல் அறிமுகம்: இயற்கை மதம்

நூல் அறிமுகம்: இயற்கை மதம்

நூல் அறிமுகம்: இயற்கை மதம்

ஆசிரியர்: அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)

முதன் முதலாக திருமறையை எளிய தமிழில் மொழிபெயர்த்து அதன் போதனைகள் முறையான மார்க்கக் கல்வி பெறாத சாதாரண தமிழ் முஸ்லிம்களையும் சென்றடையச் செய்த இந்த மார்க்க அறிஞருக்கு தமிழ் முஸ்லிம் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

இந்தப் பெரியார் எழுதிய பிற நூற்களுள் ஒன்றே இந்த ‘இயற்கை மதம்’. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்நூல் இஸ்லாமின் ஆன்மிக நம்பிக்கைகளை விளக்குவதுடன், இஸ்லாம் போதிக்கும் அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் போன்றவற்றை விமரிசிப்பவர்களுக்கும் தக்க பதிலளிக்கிறது. பிற சமூகங்களில் வழக்கத்திலுள்ள தீண்டாமை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை கடுமையாக சாடும் இந்நூல், இத்தகைய சமூக கொடுமைகளுக்கு இஸ்லாம் எப்படி தீர்வளிக்கிறது என்பதைப் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை முன் வைக்கிறது. இரட்டைத் தம்ளர் முறை இன்றளவும் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்நூலின் கருத்துக்கள் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்திப்போவது ஆச்சரியமான ஒன்றல்ல.

அக்கால சோவியத் ரஷ்யாவைப் பற்றியும் அவர்களின் பொது உடைமைக் கொள்கையைப் பற்றியும் எழுதும்போது, நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “… அந்த ஸோவியத் அரசாங்கம் பின்பற்றும் பொது உடைமைக் கொள்கையானது அதன் ஆட்சிக்குட்பட்ட மக்களை வெகு சீக்கிரத்தில் மிக்க தாழ்ந்த நிலைமைக்கு கொண்டு வந்து அவர்கள் கேவலம் அடையும்படி செய்யும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை”. இக்கூற்று தற்காலத்தில் எவ்வளவு உண்மையாகி விட்டது என்பதைப் பார்க்கும்போது ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை நமக்கு புலப்படுகிறது.

இந்நூல் முன்வைக்கும் செய்தியை சுருக்கமாக அதன் பதிப்புரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். ‘இறைவனின் மார்க்கமான இஸ்லாமின் வாழ்க்கை நெறி, பின்பற்றுவதற்கு இலகுவானது; சாத்தியமானது; எவ்வித குறைகளோ குற்றங்களோ இல்லாதது; இயற்கைக்கு உகந்த முறையில், அறிவார்ந்த சீர்திருத்தங்களுக்கு எல்லாம் முன்னோடியாக, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எனவே, இஸ்லாம் ஓர் இயற்கை மதமே!’

இந்நூலிற்கு ஹிஃபாஜத்துல் இஸ்லாம், ஸைஃபுல் இஸ்லாம், சுதேசமித்திரன் போன்ற பத்திரிக்கைகளிலும் திருவாளர் ஈ.வெ.ரா. பெரியார், ஜூட்டி எம். கிருஷ்ணமாச்சாரி ஆகியோரும் மதிப்புரைகள் எழுதியுள்ளனர்.

ஈ.வெ.ரா. பெரியார் இவ்வாறு குறிப்பிடுகின்றார், ‘இயற்கை மதம்’ என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக்கொள்கைகள் இயற்கைத்தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் அதில் தெளிவுபட விளக்கிக் காட்டியிருப்பதுடன், இஸ்லாமிய மதச்சட்டங்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமானவை, அனுபவ சாத்தியமானவை, எந்நாட்டிலும் உள்ளவர்கள் எளிதில் அனுசரிக்கக் கூடியவை என்பதாகவும் விளக்கிக் காட்டுகின்றார். … இந்நூல் இந்து மக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்ற சமய வித்தியாசமின்றி அனைவரும் வாங்கி வாசித்துப் பார்க்க வேண்டியதொரு நூலாகும்’.

வெளியீடு:

தாருல் ஹுதா
211 (102) லிங்கி செட்டி தெரு
மண்ணடி. சென்னை 600 001
தொலைபேசி: 044 25247866, 98401 74121

இணையத்தளம்: www.darulhuda.info
மின்னஞ்சல்: click@darulhuda.info

டபுள் டெம்மி சைஸில் 128 பக்கங்கள்
விலை: ரூ.30

One comment

  1. இப்னு ஹம்துன்.

    நன்றி நண்பரே!- நல்லதொரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *