Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (1-12)

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-12)

12. பாறையை அகற்றிய பிரார்த்தனைகள்!

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறிட நான் கேட்டுள்ளேன்: ‘உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேர் (ஒருபாதை வழியே) நடந்து சென்றனர். ஒருகுகையில் இரவு தங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாயினர். அவர்கள் குகையினுள் சென்றதும் மலையிலிருந்து ஒருபாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்துக் கொண்டது.

அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: நாம் செய்த நல்ல அமல்களின் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறெதுவும் இந்தப் பாறையை அகற்றி நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

அவர்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! என்னுடைய பெற்றோர் இருவரும் தள்ளாத வயதுடைய முதியோராய் இருந்தார்கள். நான் மாலைநேரத்தில் பால் கறந்து அவர்கள் இருவருக்கும் புகட்டிய பிறகுதான் என் மனைவி- மக்களுக்கும் பணியாட்களுக்கும் புகட்டுவேன்.

ஒருநாள் (ஆடுகளை மேய்த்திட) புல்-செடிகொடிகளைத் தேடிச் சென்றது வெகு தூரத்திற்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது! மாலையில் அவர்கள் இருவரும் கண்ணயரும் வரைக்கும் கால்நடைகளை நான் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வரவில்லை! அவ்விருவருக்கும் தேவையான பாலை நான் கரந்து முடித்தபொழுது இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கக் கண்டேன். அவ்விருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பவோ அவர்களுக்கு முன்னர் என் மனைவி – மக்களுக்கும் பணியாட்களுக்கும் பால் புகட்டவோ நான் விரும்பவில்லை. கையில் பால் குவளையை ஏந்தியபடியே பெற்றோர்கள் விழித்தெழுவதை எதிர் பார்த்து நின்று கொண்டிருந்தேன். அதிகாலை உதயமாகும் வரையில்! பிள்ளைகள் என் காலடியில் பசி தாளாமல் கதறிக் கொண்டிருந்தனர்!

யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இவ்வாறு நான் செய்திருந்தேன் எனில் நாங்கள் சிக்கியிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டும் அகற்றுயாயாக!

– சிறிதளவு பாறை அகன்றது. அவர்களால் வெளியேற இயலாத வகையில்!

மற்றொருவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! என் சிறிய தகப்பனாருக்கு ஒருமகள் இருந்தாள். அனைவரினும் எனக்கு அவள் பிரியமானவள். (மற்றோர் அறிவிப்பில், பெண்கள் மீது ஆண்கள் அன்பு கொள்வதிலெல்லாம் கூடுதலாக நான் அவள் மீது அன்பு கொண்டிருந்தேன்) அவளை அனுபவிக்க வேண்டுமென நான் பெரிதும் விருப்பம் கொண்டேன். அவளோ என் விருப்பத்தை நிராகரித்து விட்டாள். இவ்வாறு இருக்கும்பொழுது வறுமையும் துயரமும் அவளை வாட்டின. என்னிடம் வந்தாள். அப்பொழுது எனது ஆசைக்குத் தன்னை அவள் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக 120 தங்க நாணயங்கள் அவளுக்கு கொடுத்தேன். அவள் எனக்கு இணங்கினாள்.

இவ்வாறாக அவளை என் வசத்திற்கு நான் கொண்டு வந்தபோது (மற்றோர் அறிவிப்பில் அவளது இரண்டு கால்களிடையே நான் அமர்ந்த பொழுது) அவள் சொன்னாள்:

‘அல்லாஹ்வுக்கு அஞ்சி விடு. எனது கற்பை அநியாயமாகப் பறித்து விடாதே!’

உடனே அவளை விட்டும் நான் விலகி விட்டேன். அப்பொழுது அவள் மீது அனைவரினும் அதிகமாக பிரியம் வைத்திருந்தேன். அவளுக்குக் கொடுத்திருந்த தங்க நாணயங்களையும் அப்பபடியே விட்டுக் கொடுத்தேன்.

யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இவ்வாறு நான் செய்தேன் எனில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்தை அகற்றுவாயாக!

அந்தப் பாறை இன்னும் சற்று விலகியது. ஆனாலும் அவர்களால் அதிலிருந்து வெளியேற இயலவில்லை!

மூன்றாமவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! நான் சில கூலி ஆட்களை வேலைக்கு அமர்த்தினேன். அவர்களது கூலியை அவர்களுக்கு நான் கொடுத்து விட்டேன். ஆயினும் ஒருநபர் தனது கூலியை வாங்காமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரது கூலியை (வியாபாரத்தில் ஈடுபடுத்திப்) பெருக்கினேன். அதன்மூலம் அதிகமான சொத்துக்கள் உருவாயின!

சில காலத்திற்குப் பிறகு அவர் வந்து அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை என்னிடம் ஒப்படைத்துவிடும் எனச் சொன்னார். நான் சொன்னேன். நீ பார்க்கிற அனைத்தும் உனது கூலியில் சேர்ந்ததே! ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், கூலியாட்கள் எல்லாமும் உனது கூலியே!

அதற்கு அவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னைப் பரிகாசம் செய்யாதீர்! என்றார். நான் சொன்னேன்: நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை!

பிறகு அவை எல்லாவற்றையும் அவர் எடுத்துக் கொண்டார். ஓட்டிச் சென்றார்! எது ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. -யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இதை நான் செய்தேன் எனில் எங்களது துன்பத்தை அகற்றுவாயாக!

– பாறை முழுவதும் அகன்றது. அவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றார்கள் ” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இது முற்காலத்து பனீ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று மனிதர்களின் வாழ்வில் நடைபெற்ற அபூர்வமான நிகழ்ச்சியாகும். பல படிப்பினைகளையும் தத்துவங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

குகையின் வாயிலை மூடிய கற்பாறையை அகற்றிவிட்டு வெளியேறுவதற்கு அம்மூவருக்கும் எந்த வழியும் இல்லை. பிறகு என்ன ஆனது? அல்லாஹ்வின் ஆற்றலின் பக்கம் அடைக்கலம் தேடி அவனது தனிப்பட்ட உதவி கிடைத்தாலே தவிர அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியாத நிலை! அப்பொழுதுதான் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் செய்த நல்ல அமல்களை எடுத்துச் சொல்லி அல்லாஹ்வின் நெருக்கத்தையும் தனிப்பட்ட அன்பையும் உதவியையும் பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்!

முதலாமவர், ஆடுகளை ஓட்டிக்கொண்டு தாமதமாக வீடு திரும்பிய பொழுது பெற்றோர் விழித்தெழுவதை எதிர்பார்த்திருப்பதா? அல்லது மனைவி மக்களின் பசியைப் போக்குவதா? எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்கிற நிலையில் பெற்றோருக்கே முன்னுரிமை கொடுத்தார்! பால்க் குவளையைக் கையில் ஏந்திய வண்ணம் விடியவிடிய அவர்களின் காலடியில் காத்து நின்றார். அவர்களின் தூக்கம் கெடக்கூடாது. அவர்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக!

என்ன ஆச்சரியம்! இவ்வாறு அவர் செய்த பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்பட்டு பாறை சிறிது விலகியது!

பெற்றோருக்குப் பணிவிடை செய்வது உயர் பண்பு மட்டுமல்ல. உயிரைப் பறிக்க வரும் ஆபத்திலிருந்து காப்பாற்றும் அளவு வல்லமை கொண்டதும்கூட என்பது இதிலிருந்து தெரிகிறது.

இரண்டாமவர் தனது பயபக்தியை – நல்லொழுக்கத்தை நினைவுகூர்ந்து அல்லாஹ்வின் அன்பையும் உதவியையும் வேண்டி உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்கிறார்.

அவரது சிறிய தந்தையின் அழகு மங்கையை வறுமை வாட்டிய பொழுது – அவளுடைய தந்தை மரணம் அடைந்த பிறகு உண்ண உணவின்றி அவள் வாடியபொழுது அவளாகவே அவரைத் தேடிவந்தாள். அப்போது அவரது விருப்பப்படி தவறான வழிக்கு தன்னை ஒப்படைக்க முன்வந்தாள்! இவ்வாறு பணத்திற்காகக் கற்பைப் பறிகொடுக்க இணங்குவது கூடாது. ஆனால் அவ்வாறுதான் நடந்தது!

ஆம்! பணத்தை அள்ளிக்கொடுத்து இன்பம் அனுபவிக்க அவர் தயாரான போதுதான் அந்த மெய்சிலிர்க்க வைக்கும் சொற்களை அவள் மொழிந்தாள்!- ‘அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள். அநியாயமாக என் கற்பை பறித்து விடாதே!”

அவளது இதய ஆழத்திலிருந்து கிளம்பிய இந்தச் சொல் அவரது இதய ஆழத்தில் பதிந்தது! உடனே இறைவனுக்கு அஞ்சி அவளை விட்டும் விலகினார்! இறையச்சத்தால் நடுங்கும் உள்ளத்தை அவர் பெற்றிருந்ததால்தான் அவள் மீது அவர் ஆத்திரப்படவில்லை. அப்பொழுதும் அவள் மீது அவருக்கு அன்புதான் இருந்தது. அதனால்தான் அவளுக்குக் கொடுத்த 120 தங்க நாணயங்களை அவர் திரும்பப் பெறவில்லை!

மனிதன் பலவீனமானவன். தீமை புரியுமாறு தூண்டும் அவனது உள்ளம் சிலபோது அவனைத் தீமையில் தள்ளிவிடுகிறது. அல்லது ஷைத்தானிய ஊசாட்டத்தினால் அவன் தீமையில் விழுந்து விடுகிறான். ஆக, மனிதன் ஒரு தீமையை நாடி, பிறகு இறையச்சத்தின் அடிப்படையில் அதிலிருந்து விலகுகிறான் என்றால் அது ஒரு நன்மையாகவே பதிவு செய்யப்படுவது மட்டுமல்ல. உதவியை ஈர்த்துவரும் அளவுக்கு இறைவனுக்கு உவப்பான உயர் பண்பாக மாறிவிடுகிறது!

இந்த அடிப்படையில்தான் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்த அந்த மனிதரின் பிரார்த்தனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாறை இன்னும் கொஞ்சம் விலகுகிறது!

இதனை இறையாற்றலின் சான்று என்றுதான் சொல்ல வேண்டும். இறைவன் நாடினால் முதல் தடவையிலேயே அதனை முற்றாக அகற்றியிருக்க முடியும். ஆயினும் ஒவ்வொருவரும் தத்தமது பிரார்த்தனையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்பது இறைநாட்டம் போலும்!

மூன்றாமவர், கூலியாளிடம் தான் நடந்து கொண்ட மனிதாபிமானத்தின் அடிப்படையிலான நடத்தையையும் உதவியையும் எடுத்துச் சொல்லி இறைஞ்சினார். தொழிலாளி பலகாலம் கடந்த பிறகு வந்து கூலி கேட்ட பொழுது நீ அப்பொழுதே ஏன் உனது கூலியை வாங்கிக் கொண்டு போகவில்லை. இப்பொழுது உனக்கு எதுவும் தரமுடியாது என்று அவரது உரிமையை அபகரித்துக் கொள்ளவில்லை! அல்லது இதோ உனது கூலி என்று ஓர் ஆட்டை மட்டும் கொடுத்து ஆளை அனுப்பி விடவில்லை. அப்படிச் செய்தாலும் அவர் வாங்கிக் கொண்டு சென்றிருப்பார்தான். ஆனால் அவர் அந்தக் கூலியாள் விட்டுச் சென்ற ஓர் ஆட்டை வியாபார ரீதியாகப் பல்கிப் பெருகச் செய்து – ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள் எனப் பெரும் மந்தையையே அள்ளிக் கொடுத்தார்! அவர் அமானிதத்தைப் பாதுகாத்தார் என்பது மட்டுமல்ல தொழிலாளர் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் உரிமைகளைப் பேணினார். பாதுகாத்துக் கொடுத்தார்.

இதுவும் இறைவனுக்கு உவப்பான- இறையுதவியை ஈர்த்துவரக்கூடிய நற்செயல்கள் என்பதை இந்நபிமொழி எடுத்துரைக்கிறது! இந்நபிமொழியில் இருந்து மேலும் பல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஃக்லாஸ் எனும் எண்ணத்தூய்மை மிகவும் முக்கியம். இம்மூன்று மனிதர்களில் ஒவ்வொருவரும் இஃக்லாஸை தங்களது பிரார்த்தனையில் குறிப்பிடுவதை நீங்கள் காணலாம்.’யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இதை நான் செய்தேன் எனில் எங்களது துன்பத்தை அகற்றுவாயாக!’

ஆனால் முகஸ்துதி அதாவது பிறர் பார்ப்பதற்காகவோ பாராட்டுவதற்காகவோ செயல்படும் போக்கு இருக்கிறதே அது, எல்லா அமல்களையும் பாழாக்கிவிடும். செய்த அமல்களெல்லாம் நீரில் ஒதுங்கும் நுரை போலாகி இறுதியில் ஒன்றுமில்லாமல் போய்விடும்! அமல் செய்த மனிதனுக்கு அவற்றால் எந்தப் பயனும் இராது.

பத்தினித் தன்மையின் சிறப்பு! விபச்சாரம் செய்வதற்கான சாதகமான சூழ்நிலை இருந்தும் அதிலிருந்து ஒருவன் விலகினான் எனில் அது மிகச் சிறப்பு மிக்க அமல்களில் ஒன்றாகும். வேறொரு நபிமொழி இத்தகைய பத்தினித்தனத்தை மேற்கொள்ளும் மனிதனை மிகவும் சிறப்பித்துக் கூறுகிறது: அதாவது, அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் தன் பிரத்தியேக நிழலின் கீழ் நிழல் கொடுக்கக் கூடிய ஏழு வகையினருடன் இந்த மனிதனுக்கும் நிழல் கொடுப்பான் என்று!

அல்லாஹ்வின் ஆற்றல் எத்துணை மகத்தானது என்பதும் இங்கு கவனத்திற்குரியது. அம்மூவரும் செய்த பிரார்த்தனை ஏற்கப்பட்டு பாறை முற்றாக விலகியது அல்லாஹ்வின் கட்டளைப்படியே! அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் மிக்கவன்!

அறிவிப்பாளர் அறிமுகம் – இப்னு உமர் (ரலி) அவர்கள்

இவர்கள் உமர் (ரலி) அவர்களின் புதல்வர். அப்துல்லாஹ் என்பது இவர்களின் இயற்பெயர். அபூ அப்துர் ரஹ்மான் என்பது இவர்களின் குறிப்புப் பெயர்.

நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்னர் பிறந்தார்கள். சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்ற இவர்கள் தம் தந்தை உமர் (ரலி) அவர்களுடன் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். பத்று மற்றும் உஹுத் போர்களில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் வயதின்மையே! ஆனால் அகழ் போரில் கலந்துகொள்ள அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். அதன் பிறகு நபியவர்கள் அனுப்பிய அனைத்துப் போர்ப்படைகளிலும் அவர்கள் கலந்து கொள்ளத் தவறியதில்லை.

ஷரீஅத் சட்டங்களை அதிகம் கற்றறிந்து மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்த – உலகில் பற்றற்ற வாழ்க்கையை மேற்கொண்ட தோழர்களுள் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஸஹாபாக்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் எந்தப் பிரிவிலும் சேராமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் காலகட்டத்தில் நபியவர்களின் சார்பாக குறைஷிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற உஸ்மான்(ரலி) அவர்களை குறைஷிகள் கொன்று விட்டார்கள் என்று பரவிய வதந்தியை அடுத்து நடைபெற்ற பைஅதுர் ரிள்வான் என்ற யுத்தப் பிரமாணத்தில் இப்னு உமர் அவர்களும் கலந்து கொண்டார்கள். 86 வது வயதில் – ஹிஜ்ரி 73 ஆம் ஆண்டு மக்காவில் மரணம் அடைந்த இவர்களது ஜனாஸா தீதுவா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து 1630 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேள்விகள்

1) வஸீலா (இறைவனின் பக்கம் நெருக்கம்) தேடுவது என்றால் என்ன? அதில் ஆகுமானதென்ன? கூடாததென்ன?

2) குகையை அடைத்திருந்த பாறை ஒரேயடியாக விலகாமல் படிப்படியாக விலகியதன் தத்துவம் என்ன?

3) இந்நபிமொழி தரும் படிப்பினைகளைச் சுருக்கமாக எழுதவும்.

4) அறிவிப்பாளர் குறித்து சிறு அறிமுகம் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *