Featured Posts
Home » ரியாளுஸ்ஸாலிஹீன் » ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-21)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-21)

21, தபூக் யுத்தமும் தடுமாற்றமும்

ஹதீஸ் 21: கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: (இவர்தான் கஅப்(ரலி)அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப்(ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கி விட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன்.

கஅப்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., தபூக் யுத்தத்தைத்தவிர! ஆனால் பத்று போரில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்! அதில் கலந்துகொள்ளாமல் இருந்த எவரும் கண்டிக்கப்படவில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் – குறைஷிகளின் வாணிபக் குழுவைத் தாக்குவதற்காகத்தான் புறப்பட்டிருந்தார்கள். அங்கே முன்னறிவிப்பு இல்லாமல் அவர்களையும் அவர்களுடைய பகைவர்களையும் மோதச் செய்தான், அல்லாஹ்!

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாங்கள் உறுதிமொழி கொடுத்தபோது நடைபெற்ற நள்ளிரவு கணவாய் உடன்படிக்கையில் நபி(ஸல்) அவர்களிடம் நான் ஆஜராகியுள்ளேன். அதற்குப் பகரமாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெறுவதை நான் விரும்பவில்லை. அதைவிட பத்ருப் போர்தான் மக்களிடையே அதிகம் பேசப்படக்கூடியதாக இருந்தாலும் சரியே!

தபூக் போரில் நபி(ஸல்) அவர்களை விட்டும் நான் பின்தங்கியிருந்தபோது நடைபெற்றது பற்றி நான் அறிவிப்பது என்னவெனில், நான் அதிக அளவு சக்தியும் சௌகரியமும் முன்னெப்போதும் பெற்றிருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்கு முன்பு ஒரு பொழுதும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் இருந்ததில்லை. ஆனால் அந்தப் போரின்போது இரண்டு ஒட்டகங்களை நான் சேகரித்து வைத்திருந்தேன்.

நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனை மற்றொரு விஷயத்துடன் இணைத்து மறைத்தே பேசுவார்கள். இவ்வாறு இந்தப் போரும் வந்தது! நபியவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்டது கடுமையான வெயில் நேரத்தில்! அதுவும் நெடியதொரு பயணத்தை மேற்கொண்டார்கள். பாலைவெளியைக் கடந்து செல்ல நேர்ந்தது! எதிரிகளின் அதிக எண்ணிக்கை கொண்ட படையைச் சந்திக்க நேர்ந்தது! எனவே முஸ்லிம்கள் தங்களுடைய போர்த் தளவாடங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக யதார்த்த நிலையை அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். முஸ்லிம்கள் எங்கு நோக்கிச் செல்ல வேண்டும் என்பது தமது நாட்டம் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் முஸ்லிம்கள் அதிக அளவில் புறப்பட்டிருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை எந்த ஏட்டிலும் பதிவு செய்து வைக்கப்படவில்லை. (அதாவது அரசாங்கப் பதிவேடு என்று எதுவும் அப்பொழுது இல்லை)

கஅப்(ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: போருக்குப் புறப்படாமல் தங்கி விடலாமென விரும்பும் எவரேனும் இருந்தால் நாம் கலந்து கொள்ளாதது பற்றி அல்லாஹ்விடம் இருந்து வஹி (குர்ஆன் வசனம்) இறங்கினாலேதவிர அது யாருக்கும் தெரியப் போவதில்லை – என்றே எண்ணிக் கொண்டிருந்தார்!

நபி(ஸல்) அவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்ட நேரத்தில் கனிகள் கனிந்திருந்தன., நிழல்கள் நன்கு அடர்த்தியாகி விட்டிருந்தன! நான் அவற்றின் மேல் அதிக மையல் கொண்டிருந்தேன்!

நபி(ஸல்)அவர்கள் போருக்கான ஏற்பாட்டைச் செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடன் முஸ்லிம்களும் அதற்கான ஏற்பாட்டை முழுமையாக்கி விட்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் போருக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகக் காலையில் புறப்படலானேன். ஆனால் எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பி வருவேன்.

நான் என் மனத்திற்குள் சொல்லிக்கொள்வேன்: நாம் நாடிவிட்டால் ஏற்பாட்டைச் செய்துமுடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது!- இந்த எண்ணம்தான் தொடர்ந்து என்னைத் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தது! மக்களோ இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்!

நபி(ஸல்)அவர்கள் தோழர்களுடன் ஒருநாள் அதிகாலையில் போருக்காகப் புறப்பட்டு விட்டார்கள். நானோ அதுவரையில் எவ்வித ஏற்பாட்டையும் செய்து முடிக்காமலேயே இருந்தேன். பிறகு மறுநாள் காலையில் சென்றேன். எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பி வந்தேன். இவ்வாறு நான் தாமதமாகிக்கொண்டே இருந்தேன். படைவீரர்களோ மிக வேகமாகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். வெகுதூரம் சென்று விட்டார்கள். நானும் பயணம் புறப்பட முனையத்தான் செய்தேன். எப்படியேனும் அவர்ளைப் பிடித்துவிட வேண்டும் என நாடத்தான் செய்தேன். அந்தோ! அப்படி நான் செய்தேனில்லையே! எனது விதியில் அந்தப் பாக்கியம் எழுதி வைக்கப் பட்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

நபி(ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்கள் மத்தியில் சென்றபொழுது -நயவஞ்சகனென்று இழித்துக் கூறப்பட்டவனையும் (பெண்கள் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளைப் போன்ற) இயலாதவர்களையும் தக்க காரணம் உடையவர்களையும் தவிர என்னைப்போல் போருக்குக் கிளம்பாதிருந்த எவரையும் நான் காணவில்லை. இது எனக்கு மிகுந்த துயரம் அளிக்கலானது!

நபி(ஸல்) அவர்கள் தபூக் சென்றடையும் வரையில் என்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. தபூக்கில் மக்கள் மத்தியில் அவர்கள் அமர்ந்திருந்த பொழுது கேட்டார்கள்: கஅப் பின் மாலிக் என்ன செய்தார்? பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் பதில் சொன்னார்: அல்லாஹ்வின் தூதரே! அவர் அணிந்திருக்கும் வேஷ்டியும் மேலங்கியும் அவரைத் தடுத்து விட்டன! தமது ஆடையழகைக் கண்டு பூரிப்படைவதே அவரது வேலை!

அதற்கு முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: நீ எவ்வளவு மோசமான வார்த்தையைக் கூறிவிட்டாய்! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவரது விஷயத்தில் நல்லதைத் தவிர வேறெதையும் அறிந்திருக்கவில்லை! – நபி(ஸல்) அவர்கள் மௌனமாகி விட்டார்கள்.

இதற்கிடையில் வெள்ளை ஆடை அணிந்த ஒரு மனிதர் பாலைவனத்தில் கானல் அசைவதுபோல் வந்துகொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். இவர் அபூ கைஸமா- ஆகத்தான் இருக்கவேண்டும் என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அபூ கைஸமாதான் வந்து கொண்டிருந்தார்! இவர் ஒரு அன்ஸாரித் தோழர். இவர் தான் ஒரு மரைக்கால் பேரீத்தம் பழத்தைப்போர்) நிதியாக வழங்கினார். அப்பொழுது அவரை நயவஞ்சகர்கள் குறை பேசினார்கள்.

சிந்தையில் இருந்து பொய் அகன்றுவிட்டது!

கஅப்(ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தபூக்கில் இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் செய்தி எனக்குக் கிடைத்த பொழுது கவலை என்னை ஆட்கொண்டது! எப்படிப் பொய் சொல்லலாமெனச் சிந்திக்க ஆரம்பித்தேன். நாளை நபியவர்களின் கோபத்தை விட்டும் எப்படித் தப்பிக்கப் போகிறோமோ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இது தொடர்பாக எனது குடும்பத்தில் விஷயஞானம் உடைய அனைவரிடமும் ஆலோசனை கலந்தேன்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் இதோ வந்துவிட்டார்கள் என்று சொல்லப் பட்டபொழுது (எனது சிந்தையிலிருந்து) பொய் அகன்றுவிட்டது. பொய் சொல்லி எந்தவகையிலும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பது எனக்கு உறுதியாகி விட்டது. எனவே அவர்களிடம் உண்மையே கூறுவது என்று உறுதியான முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

நபி(ஸல்) அவர்கள் அதிகாலையில் வருகை தந்தார்கள். அவர்கள் எப்போது பயணத்திலிருந்து திரும்பி வந்தாலும் முதலில் பள்ளிவாசல் சென்று இரண்டு ரக்அத் தொழுவார்கள். அப்படியே அமர்ந்து மக்களிடம் உரையாடுவார்கள்.

அப்படி அமர்ந்திருந்தபொழுது – போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்டவர்கள் வந்து நபியவர்களிடம் சாக்குப் போக்குச் சொன்னார்கள்., அவர்களிடம் சத்தியம் செய்தார்கள். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பது சொச்சம் இருந்தது. அந்த மனிதர்கள் வெளிப்படையாய் எடுத்துவைத்த வாதங்களை நபியவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள். அவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். அவர்களின் உள்ளத்து ரகசியங்களை உயர்வுமிக்கவனாகிய அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள்!

கடைசியாக நான் சென்றேன். நான் ஸலாம் கூறியபொழுது நபி(ஸல்) அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தியவாறு புன்னகை செய்தார்கள். பிறகு சொன்னார்கள்: ‘அருகே வாரும்’ – நான் சென்று நபியவர்களின் முன்னால் அமர்ந்தேன்.

என்னிடம் கேட்டார்கள்: நீர் ஏன் புறப்படாமல் இருந்து விட்டீர்? நீர் ஒட்டகத்தை வாங்கி வைத்திருக்கவில்லையா?

நான் சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாங்களின் சமூகத்திலன்றி உலகில் வேறொருவர் முன்னால் நான் அமர்ந்திருந்தால் ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி அவரது கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமென நான் கருதியிருப்பேன். அந்த அளவுக்கு வாதம் புரியும் திறனை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான்.

ஆனாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உறுதியாக அறிந்துள்ளேன்: அதாவது இன்று நான் தாங்களிடம் பொய் சொல்லி அதனடிப் படையில் தாங்கள் என்னைப் பொருந்திக் கொண்டாலும் அல்லாஹ் என் மீது உங்களைக் கோபம் கொள்ளச் செய்தே தீருவான்! நான் உங்களிடம் உண்மை உரைத்து, அதனால் நீங்கள் என் மீது கோபம் கொண்டால் நிச்சயமாக நான் அது விஷயத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் தக்க காரணம் எதுவுமில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உங்களுடன் (போருக்குப்) புறப்படாமல் தங்கி விட்டபொழுது நல்ல ஆற்றல் உடையவனாக – வசதி உடையவனாகவே இருந்தேன். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு!

அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இவர்தான் உண்மை சொல்லியுள்ளார். நீர் செல்லலாம்., அல்லாஹ் உம் விஷயத்தில் தீர்ப்பளிக்கும் நேரத்தை நீர் எதிர்பார்த்திரும்,

ஸலாம் சொல்வேன். அருகிலேயே தொழுவேன்,

பனூ ஸலிமா கிளையைச் சேர்ந்த சிலர் என்னைத் தொடர்ந்து நடந்து வந்தார்கள். என்னிடம் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன்பு நீர் எந்தப் பாவமும் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. போருக்குப் புறப்படாதிருந்த ஏனையோர் சாக்குப்போக்கு சொன்னதுபோல் நீரும் சாக்குப்போக்குச் சொல்வதற்கில்லாமல் செய்துவிட்டீரே! நபியவர்கள் உமக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தனை செய்வதே உமது பாவத்திற்குப் பரிகாரமாக – போதுமானதாக ஆகியிருக்குமே!,,

கஅப்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவ்வாறு அவர்கள் என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தனர். எந்த அளவுக்கெனில், நபியவர்களிடம் திரும்பிச் சென்று முன்பு நான் சொன்னது உண்மையல்ல என்று சொல்லிவிடலாமா? என்றுகூட நான் சிந்தித்தேன்.

– பிறகு அந்த மனிதர்களிடம் கேட்டேன்: என்னைப்போல் இந்நிலைக்கு ஆளானோர் எவரேனும் உண்டா?

அவர்கள் சொன்னார்கள்: இரண்டு போர் உம்மைப்போல் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். நீர் சொன்னதுபோன்றே அவர்களும் சொன்னார்கள். உமக்குச் சொல்லப்பட்டதுபோன்றே அவர்களிடமும் சொல்லப்பட்டுள்ளது,

‘அவர்கள் யார் யார்? ”

‘முறாறா பின் ரபீஇல் ஆமிரி, ஹிலால் பின் உமையா -அல் வாகிஃபி”

கஅப்(ரலி)அவர்கள் சொல்கிறார்கள்: ‘அவர்கள் என்னிடம் சொன்ன இரண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள் எனில், இருவரும் பத்றுப் போரில் கலந்துகொண்டவர்கள். அவ்விருவரிலும் எனக்கு ஒரு முன்மாதிரி இருந்தது! ”

கஅப்(ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: அவ்விருவரைப் பற்றியும் மக்கள் என்னிடம் சொன்போது நான் பேசாமல் சென்றுவிட்டேன்.

போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் எவரும் பேசக்கூடாதென நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மக்கள் எங்களை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்கள். (அல்லது இந்த இடத்தில் கஅப் அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம் :) எங்கள் விஷயத்தில் மக்களின் நடவடிக்கை மாறிவிட்டது,

எனது மனத்தில் விரக்தி ஏற்பட்டு இந்தப் பூமியே என்னைப் பொறுத்து அன்னிய பூமியாகத் தென்பட்டது. நான் முன்பு அறிந்த பூமியாக அது இல்லை. ஐம்பது இரவுகளாக இந்நிலையிலேயே நாங்கள் இருந்தோம்.

என்னுடைய இரு தோழர்களோ அடங்கிவிட்டார்கள். அழுத வண்ணம் வீட்டிலேயே முடங்கிக்கிக் கிடந்தார்கள். மூன்று பேரில் நான்தான் வயதில் குறைந்தவனாகவும் வலிமை மிக்கவனாகவும் இருந்தேன்.

நான் வெளியே செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்துகொள்வேன். கடைவீதிகளிலே சுற்றுவேன். யாருமே என்னுடன் பேசமாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும்போது அவர்களிடம் ஆஜராவேன். அவர்களுக்கு ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கிறார்களா? இல்லையா? என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.

பிறகு அவர்களுக்கு அருகிலேயே தொழுவேன். ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் பொழுது நபியவர்கள் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்களின் பக்கம் முன்னோக்கும்பொழுது என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

இவ்வாறாக முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு நீடிப்பதை நான் உணர்ந்தபோது – ஒருநாள் அப்படியே நடந்துசென்றேன். அபூ கதாதாவின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன். அவர் என் சிறிய தந்தையின் மகன். எனக்கு மிகவும் பிரியமானவர். அவருக்கு நான் ஸலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனது ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை. நான் கேட்டேன்: அபூ கதாதாவே! அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்கிறேன்: நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியாதா? – அவர் மௌனமாக இருந்தார். மீண்டும் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து அவரிடம் அவ்வாறு கேட்டேன். அப்பொழுதும் அவர் மௌனமாகவே இருந்தார். மூன்றாவது தடவையும் கேட்டேன். அப்பொழுது சொன்னார். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் மிகவும் அறிந்தவர்கள்.

என் கண்களிரண்டும் கண்ணீர் வடித்தன. வந்த வழியே திரும்பி சுவர் ஏறித்தாவி வெளியே வந்தேன்.

அப்படியே மதீனாவின் கடைவீதியில் நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, உணவுப் பொருள்களை மதீனாவில் விற்பனை செய்ய வந்திருந்த சிரியா தேசத்து விவசாயி ஒருவன் அங்கே, கஅப் பின் மாலிக்கை அறிவித்துக் கொடுப்பவர் யார்? என்று கேட்டுக் கொண்டிருந்தான். உடனே மக்கள் என் பக்கம் சுட்டிக்காட்டி அவனுக்கு என்னைத் தெரியப்படுத்தத் தொடங்கினார்கள். உடனே அவன் என்னிடம் வந்தான். கஸ்ஸான் மன்னன் எழுதிய ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தான். நான் எழுத்தறிவு உடையவனாக (அதாவது எழுதவும் படிக்கவும் தெரிந்தவனாக) இருந்தேன். அந்தக் கடிதத்தைப் படித்தேன். அதில் எழுதப்பட்டிருந்தது:

‘நான் எழுதுவது என்னவெனில், உம்முடைய தோழர் உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் எனும் செய்தி எங்களுக்குக் கிடைத்துள்ளது. கேவலமும் உரிமையிழப்பும் உடைய நாட்டில் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம். எங்களிடம் வந்துவிடும். நாங்கள் உம்மை உபசரிப்போம்’

அதைப் படித்தபொழுது- இதுவும் ஒரு சோதனையே என்று சொன்னேன், பிறகு அந்தக் கடிதத்தை அடுப்பில் தூக்கி வீசி எரித்து விட்டேன்.

இவ்வாறு ஐம்பதில் நாற்பது நாட்கள் கழிந்துவிட்டபொழுது வஹி எனும் இறையருட்செய்தி வருவது தாமதமானபொழுது நபியவர்களின் தூதுவர் என்னிடம் வந்துசொன்னார்: நீர் உம் மனைவியை விட்டும் பிரிந்திருக்குமாறு நபியவர்கள் உமக்குக் கட்டளையிடுகிறார்கள்.

அவளை நான் விவாவகரத்து செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும் ? என்று நான் கேட்டேன்,

இல்லை. அவளைவிட்டும் விலகியிரும்! அவளை நெருங்கக் கூடாது என்றார் அவர்.

இதேபோன்ற கட்டளையை என்னிரு தோழர்களுக்கும் நபி(ஸல்) அனுப்பியிருந்தார்கள். நான் என் மனைவியிடம் சொன்னேன்: நீ உன் பெற்றோரிடம் சென்றுவிடு! அல்லாஹ் இந்த விஷயத்தில் ஒரு தீர்ப்பை அளிக்கும் வரையில் அவர்களிடம் தங்கியிரு.

ஹிலால் பின் உமையாவின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து சொன்னாள்: ஹிலால் பின் உமையா தள்ளாத வயதுடைய முதியவராக இருக்கிறார். அவருக்குப் பணிவிடை செய்பவர் யாரும் இல்லை. நான் அவருக்குப் பணிவிடை செய்வதைத் தாங்கள் விரும்பவில்லையா? என்ன?

அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியில்லை. ஆனால் அவர் உன்னை நெருங்கக்கூடாது.

அதற்கு அந்தப் பெண்மணி கூறினாள்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எந்தச் செயலின் பக்கமும் எந்த அசைவும் அவரிடம் இல்லை. அவரது விவகாரம் இவ்வாறு ஆனதிலிருந்து இன்றுவரை அவர் ஓயாது அழுது கொண்டே இருக்கிறார்”

என்னுடைய குடும்பத்தினர் சிலர் என்னிடம் சொன்னார்கள்: உமது மனைவி விஷயத்தில் நபியவர்களிடம் நீர் அனுமதி கேட்கக்கூடாதா?

நான் சொன்னேன்: அவள் விஷயத்தில் நபியவர்களிடம் நான் அனுமதி கேட்டால் நபியவர்கள் சொல்லப்போவதென்ன என்பது எனக்கு என்ன தெரியும்? நானோ இளைஞனாக இருக்கிறேன்.

இதேநிலையில் பத்து நாட்கள் கழிந்தன. எங்களோடு எவரும் பேசக்கூடாது என்று தடைவிதித்து ஐம்பது நாட்கள் நிறைவடைந்தன!

உண்மைக்குக் கிடைத்த பரிசு

பிறகு ஐம்பதாவது நாள் அதிகாலையில் எங்களது வீடொன்றின் மாடியில் நான் ஃபஜ்ர் தொழுகை தொழுது கொண்டிருந்தேன். நான் அந்த நிலையிலே -அதாவது, எங்களைப் பற்றி (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ளதுபோல் – உயிர்வாழ்வதே எனக்குக் கஷ்டமாகிவிட்டது. பூமி இவ்வளவு விரிவாக இருந்தும் என்னைப் பொறுத்து குறுகிப்போய் விட்டது என்ற அந்நிலையிலே இருந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஸல்வு என்ற மலை மீதேறி சப்தமிட்டு அழைப்பவரின் அழைப்பைக் கேட்டேன்!

‘ ஓ!….! கஅப் பின் மாலிக்! நற்செய்தி பெறுவீராக!”

-அப்படியே ஸஜ்தாவில் விழுந்தேன். நமது துன்பம் நீங்கியது என்பதை அறிந்தேன்!

நபி(ஸல்)அவர்கள் ஸுப்ஹு தொழுதபொழுது, எங்களது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு எங்கள் மீது மீண்டும் கருணை பொழிந்துவிட்டான் என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

உடனே மக்கள் அந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்திடப் புறப்பட்டு விட்டார்கள். என் இரு தோழர்களை நோக்கியும் நற்செய்தியாளர்கள் சென்றனர். ஒருவர் குதிரை மீது ஏறி என்னை நோக்கி விரைந்து வந்தார். அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒருவரோ என்னை நோக்கி விரைந்து வந்தவர் மலை உச்சியிலே ஏறிவிட்டார். அவரது குரலின் வேகம் குதிரையை விடவும் விரைவானதாக இருந்தது.

எவரது உரத்த குரலினால் நற்செய்தியை நான் செவியுற்றேனோ அவர் என்னிடம் வந்தபோது அவரது நற்செய்திக்குப் பரிசாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவற்றை அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்பொழுது அவற்றைத் தவிர வேறு ஆடைகள் என்னிடம் இல்லை. பிறகு இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்துகொண்டு நபி(ஸல்) அவர்களிடம் ஆஜராக நாடியவாறு புறப்பட்டேன். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்தனர். பாவமன்னிப்புக் கிடைத்ததன் பேரில் என்னை வாழ்த்திக் கொண்டிருந்தனர்! மக்கள் என்னிடம் சொன்னார்கள்: உமது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டதன் பேரில் உமக்கு வாழ்த்துக்கள்!

அவ்வாறாக மஸ்ஜிதுக்குள் நுழைந்தேன். அங்கு நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் எழுந்து என்னை நோக்கி ஓடிவந்தார். எனக்குக் கைலாகு கொடுத்தார். எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! அவரைத் தவிர முஹாஜிர்கள் வேறெவரும் எழுந்து வரவில்லை. தல்ஹா(ரலி) அவர்களின் இந்த உபகாரத்தை கஅப்(ரலி) அவர்கள் என்றென்றும் மறக்காமல் இருந்தார்கள்!

கஅப்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:’நான் நபி(ஸல்)அவர்களுக்கு ஸலாம் சொன்னபொழுது – நபியவர்கள் கூறினார்கள். அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது: உம் அன்னை உம்மை ஈன்றெடுத்த நாள் முதல் உமக்குக் கிடைக்கப்பெறாத சிறந்ததொரு நாளினைக் கொண்டு மகிழ்வு அடைவீராக!

நான் கேட்டேன்: ‘இது தங்களிடம் நின்றும் உள்ளதா? அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததா? ”

நபியவர்கள்: ‘இல்லை. இது, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும் ”

நபி(ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது சந்திரனின் ஒருபகுதியைப் போலிருக்கும். நபியவர்களின் இந்நிலையை நாங்கள் அறிபவர்களாய் இருந்தோம்.

நான் நபி(ஸல்) அவர்களின் முன்னால் உட்கார்ந்தபொழுது சொன்னேன்: ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு மன்னிப்புக் கிடைத்ததன் பொருட்டு நன்றி செலுத்திடவே எனது எல்லாச் சொத்துகளையும் அல்லாஹ் – ரஸூலின் பாதையில் தர்மம் செய்கிறேன் ”

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: ‘உமது சொத்தில் சிறிது அளவை உமக்காக வைத்துக் கொள்ளும். இதுவே உமக்குச் சிறந்ததாகும்’

நான் சொன்னேன்: ‘கைபரில் இருந்து எனக்குக் கிடைத்த பங்கை எனக்காக நான் வைத்துக் கொள்கிறேன் ”

மேலும் நான்சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசியதனால் தான் அல்லாஹ் எனக்கு ஈடேற்றம் அளித்துள்ளான். எதிர்காலத்தில் என் ஆயுள் முழுவதும் உண்மையே நான் பேசுவேன் என்பதும் – எனக்கு மன்னிப்பு கிடைத்ததன் பொருட்டு நான் செலுத்தும் நன்றியாக உள்ளது.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில், உண்மையே பேசுவேன் என நான் வாக்குறுதி கொடுத்த நாளில் இருந்து இன்று வரை முஸ்லிம்களில் எவரைக் குறித்தும் (நான் அறியேன் அதாவது) உண்மை பேசும் விஷயத்தில் அல்லாஹ் என்னைச் சோதனைக் குள்ளாக்கியதை விடவும் அழகாக அல்லாஹ் அவரைச் சோதனைக்குள்ளாகியதை நான் அறியேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களிடம் அவ்வாறு நான் வாக்குறுதி கொடுத்ததில் இருந்து இன்றைய தினம்வரை எந்தச் சூழ்நிலையிலும் பொய் பேச நான் நாடியதே இல்லை. எதிர் காலத்திலும் அதிலிருந்து அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு”

கஅப்(ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: அப்போது அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இதுதான்: ‘நபியையும் – துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் அல்லாஹ் பொறுத்தருளினான். அவர்களில் ஒருசிலரின் உள்ளங்கள் நெறி தவறுதலின்பால் சற்று சாய்ந்துவிட்டிருந்த பிறகும்! (ஆனால் அவர்கள் நெறிதவறிச் செல்லாமல் நபிக்கு பக்கபலமாக இருந்தார்கள்! அப்பொழுது) அல்லாஹ் அவர்களை மன்னித்தான். திண்ணமாக அவன் அவர்கள் விஷயத்தில் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவனாக இருக்கிறான். மேலும் விவகாரம் ஒத்தி போடப்பட்டிருந்த மூவரையும் அவன் மன்னித்து விட்டான். அவர்களது நிலைமை எந்த அளவு மோசமாகி விட்டதெனில், பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்து அது குறுகி விட்டிருந்தது., அவர்கள் உயிர் வாழ்வதே கஷ்டமாகிவிட்டது. மேலும் அல்லாஹ்விடம் இருந்து தப்பிப்பதற்கு அவனது அருளின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் அவர்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களின் மீது கருணை பொழிந்தான். திண்ணமாக அவன் பெரும் மன்னிப்பாளன். கருணை மிக்கவன். இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வாய்மையாளர்களுடன் இருங்கள்” (9: 117 – 119)

கஅப் (ரலி) அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இஸ்லாத்தின் பால் அல்லாஹ் எனக்கு வழிகாட்டிய பின்பு நபி(ஸல்)அவர்களிடம் நான் உண்மை பேசியதைவிட பெரியதோர் அருட் கொடையை அல்லாஹ் என் மீது அருளிடவில்லை! அவர்களிடம் நான் பொய்சொல்லி இருந்தால் பொய் சொன்னவர்கள் அழிந்து போனதுபோல் நானும் அழிந்துபோயிருப்பேன். நிச்சயமாக அல்லாஹ் (வஹி எனும் இறையருட் செய்தியை இறக்கியருளியபொழுது) பொய் சொன்னவர்கள் குறித்து மிகவும் மோசமான நிலையைக் கூறினான்., வேறு எவர் விஷயத்திலும் அப்படிக் கூறவில்லை. அல்லாஹ் கூறினான்:

‘நீங்கள் அவர்களிடம் திரும்பிவரும்பொழுது அவர்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்திட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்வார்கள். எனவே நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமலே இருந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் அசுத்தமானவர்கள். உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகம்தான். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டிட வேண்டும் எனும் நோக்கத்தில் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ், பாவிகளான இத்தகைய மக்கள்மீது திருப்தி கொள்ளமாட்டான்’ (9: 95-96)

கஅப்(ரலி) அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: ‘எவர்கள் நபியவர்களிடம் வந்து சத்தியம் செய்தார்களோ, நபியவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் வாங்கினார்களோ அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினார்களோ அத்தகையவர்களின் விவகாரத்தைவிடவும் எங்கள் மூவரின் தீர்ப்பு பிற்படுத்தப்பட்டது. அல்லாஹ் பின்வருமாறு குர்ஆன் வசனத்தை இறக்கியருளி எங்கள் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரையில் நபி(ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தை ஒத்தி போட்டார்கள்’

‘விவகாரம் ஒத்தி போடப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்’)

– இங்கு குல்லிஃபூ எனும் வார்த்தை, நாங்கள் மூவரும் போரில் கலந்துகொள்ளாமல் பின்தங்கியிருந்தவர்கள் எனும் ரீதியில் சொல்லப்பட்டதல்ல, மாறாக, எவர்கள் நபியவர்களிடம் வந்து சத்தியம் செய்து சாக்குப்போக்குச் சொல்லி – நபியவர்களும் அதனை ஒப்புக் கொண்டார்களோ அவர்களை விடவும் எங்களது தீர்ப்பை (تَخْلِيْفٌ) பிற்படுத்துதல், எங்களது விவகாரத்தை ஒத்திப்போடுதல் என்பதே கருத்து. (புகாரி, முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில் உள்ளது: ‘நபி(ஸல்)அவர்கள் தபூக் போருக்குக் கிளம்பியது வியாழக்கிழமையில்! மேலும் வியாழக்கிழமையிலேயே பயணம் புறப்பட விரும்பக்கூடியவர்களாய் இருந்தார்கள்’

இன்னோர் அறிவிப்பில்: ‘பயணத்திலிருந்து திரும்பிவந்தால் முற்பகல் – வேளையில்தான் வருவார்கள். (ஊரை) வந்தடைந்தால் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுவார்கள். பிறகு அங்கு அமர்ந்திருப்பார்கள்.

தெளிவுரை

முதல் கோணல் முற்றும் கோணல்

தபூக் போர் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு நடைபெற்றது. முஸ்லிம்கள் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன் ரோம் நாட்டுக் கிறிஸ்தவர்கள் பெரும் படை திரட்டிக் கொண்டிருப்பதாக நபி (ஸல்)அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களை எதிர்த்துப் போர் புரிவதற்காக முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு நபியவர்கள் தபூக் நோக்கிப் புறப்பட்டார்கள்.

தபூக்கை அடைந்தபொழுது அங்கு எதிரிகள் யாரையும் காணோம். அவர்களின் போர் நடவடிக்கையோ நடமாட்டமோ எதுவும் இல்லை. முஸ்லிம்களை எதிர்த்து வெற்றிகொள்ள முடியாது எனக்கருதி, கிறிஸ்தவர்கள் பின்வாங்கி விட்டிருந்தார்கள். ஆகையால் நபியவர்கள் தபூக்கில் இருபது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் போர் எதுவுமின்றி மதீனா திரும்பினார்கள்.

மதீனாவில் இருந்து முஸ்லிம்கள் போருக்காகப் புறப்பட்டபொழுது கடுமையான கோடை காலம்! பழங்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு நெருங்கிய பருவம்!

நயவஞ்சகர்களோ மறுமை பற்றிக் கவலைப்படாமல் உலக வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள். அவர்களில் யாரும் போருக்குப் புறப்படவில்லை. கழனிகளிலும் கனிகளிலும் கவனம் செலுத்தினார்கள். நிழலில் தஞ்சம் புகுந்தார்கள். தபூக் நோக்கிப் பயணமாவது அவர்களுக்கு மிகவும் சிரமமாகப்பட்டது! வாய்மையான இறைவிசுவாசிகளோ, நபியவர்களிடம் இருந்து கட்டளை பிறந்ததும் உடனே போருக்குப் புறப்பட்டு விட்டார்கள்! பயணத்தின் நீண்ட தொலைவோ அறுவடைக்குக் காத்திருந்த கனிகளோ அவர்களின் ஊக்கத்தைக் குலைத்திடவில்லை!

ஆனால் கஅப் பின் மாலிக்(ரலி)அவர்கள் தக்க காரணம் எதுவுமின்றியே தபூக் நோக்கிப் புறப்படாமல் பின்தங்கி விட்டார்கள். அவர்கள் வாய்மையான இறைநம்பிக்கையாளரே தவிர வஞ்சகர் அல்லர்! அவர்கள் சொன்னார்கள்:

‘நபி(ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்பொழுதும் பின் தங்கியதில்லை’

ஆம்! கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள் ஓர் இறைவழிப் போராளியாகவே திகழ்ந்தார்கள்.

பத்று போரின் பின்னணி!

‘ஆனால் பத்றுப் போரைத் தவிர’

– பத்று போரில் கஅப்(ரலி) அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அன்று நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்து வெளிக்கிளம்பியது போரை நாடியல்ல. குறைஷிகளின் வாணிபக்குழு ஒன்றைத் தாக்கி வியாபாரச் சரக்குகளைப் பறிக்க வேண்டும் என்றுதான் புறப்பட்டிருந்தார்கள். அதனால் நபியவர்களுடன் வந்தது குறைந்த அளவிலான தோழர்களே!

இங்கு ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்காவாசிகளின் வாணிபக்குழு மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் வியாபாரச் சரக்குகளைப் பறிப்பதற்காக நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் புறப்பட்டது வரம்பு மீறிய செயலோ அநீதியோஅல்ல. மக்கத்து குறைஷிகள்தாம் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடும் தொல்லை கொடுத்து மக்காவில் வாழும் உரிமையை அவர்களிடம் இருந்து பறித்து விட்டிருந்தாகள்! வீடு, வாசல்கள், சொத்து – சுகங்கள் அனைத்தை விட்டும் அவர்களை வெளியேற்றியிருந்தார்கள்! ஆகையால் குறைஷிகளின் வாணிபக்குழு மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் வியாபாரச் சரக்குகளைப் பறிப்பதற்காக முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கை – தங்களுடைய உரிமைகளில் சிலவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் முயற்சியே ஆகும்.

ஆக! நபியவர்கள், வாணிபக்குழவை எதிர்கொள்வதற்காகப் புறப்பட்டதால் தான் அதிகப் படையையும் திரட்டவில்லை., போதிய ஆயுதங்களையும் குவித்துக்கொள்ளவில்லை! நபியவர்களோடு புறப்பட்டிருந்த முஸ்லிம்கள் வெறும் 313 பேர்தான்! உடன்சென்ற வாகனங்களும் குறைவுதான். எழுபது ஒட்டகங்களும் இரண்டு குதிரைகளும்தான் இருந்தன!

முஸ்லிம்கள் புறப்பட்டு வருவதை அறிந்த வாணிபக்குழுவின் தலைவர் அபூஸுப்யான், வியாபாரக் கூட்டத்தைக் காப்பாற்ற வருமாறு குறைஷிகளுக்குத் தூது அனுப்பிவிட்டுப் பாதையைக் கடலோரமாக மாற்றிக் கொண்டுத் தப்பிவிட்டார்.

அபூ ஸுப்யான் அனுப்பிவைத்த ஆள் மக்கா நகர் வந்து அபாய அறிவிப்புச் செய்து உதவி கேட்டதும் குறைஷிகள் – தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் உட்பட அனைவரும் போருக்கான ஏற்பாட்டுடன் புறப்பட்டு விட்டார்கள். பெரிய அளவில் ஆயுதங்ளைச் சேகரித்துக் கொண்டு ஏறக்குறைய ஆயிரம் பேர் திரண்டு வந்தார்கள்!

அபூ ஸுப்யான் – நாங்கள் தப்பித்து வந்துவிட்டோம்., நீங்கள் மக்கா திரும்புங்கள். இப்போதைக்குப் போர் வேண்டாம் என்று மீண்டும் தூது அனுப்பிக் கேட்டுக்கொண்ட பிறகும் குறைஷித் தலைவர்கள் மக்கா திரும்பவில்லை. சண்டைக்கு வலியவந்தார்கள். ஆம்! குறைஷித் தலைவர்கள் ஆணவத்துடன் போர் முரசு கொட்டிக் கொண்டுவந்து பத்று மைதானம் வந்து முகாமிட்டார்கள். இறுதியில் அவர்களுடைய ஆணவத்திற்குக் கிடைத்த பரிசு வரலாறு காணாத தோல்விதான்!

இவ்வாறு முஸ்லிம்கள் பத்றுப் போரைச் சந்தித்தது எதிர்பாராத ஒன்றாகும். அதனால்தான் அதில் கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை!

ஆனால் தொடக்க காலத்தில் நபியவர்களிடம் – இஸ்லாத்தின் பேரில் பைஅத் எனும் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த நிகழ்ச்சியில் தாமும் கலந்துகொண்டதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள் கஅப்(ரலி) அவர்கள். அந்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்திற்கு முன்பு மினாவில் ஒரு கணவாயில் வைத்து நடைபெற்றது. பத்று போரைவிட அதுதான் தமக்குப் பிரியமானது என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் ஐயமின்றி அது ஒரு மகத்தான உடன்படிக்கை., மாபெரும் விசுவாசப் பிரமாணம்! ஆனாலும் பத்று போர்தான் காலமெல்லாம் மக்களிடையே பேசப்படும் வகையில் பிரபலம் அடைந்தது! ஏனெனில் அது முக்கியமானதொரு போர். பிரபலம் அடைந்துவிட்டது. என்ன இருந்தாலும் உறுதிமொழி எடுக்கும் ஒரு நிகழ்ச்சி போரைப் போல் பிரபலமாக முடியாது!

ஆக, கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள் தமக்குத்தாமே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். பத்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புத் தப்பினாலும் அந்தக் கணவாய் உடன்படிக்ககையின் பாக்கியம் கிடைத்ததே என்று!

‘நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனை மறைத்தே பேசுவார்கள்’

அதாவது தங்களது நாட்டத்தை வெளிப்படுத்தமாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தெற்கு நோக்கிப் புறப்பட நாடியிருந்தால் – வடக்கு நோக்கிப் புறப்பட வேண்டும் என்பதுபோல் பேசுவார்கள். கிழக்கு நோக்கிப் புறப்பட நாடியிருந்தால் மேற்கு நோக்கிப் பயணமாக வேண்டும் என்பதுபோல் பேசுவார்கள். – இது நபியவர்கள் மேற்கொண்ட விவேகமிக்க நடவடிக்கை. போர்த் தந்திரம்!

ஏனெனில், எங்குச் செல்லப் போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அது பற்றிய செய்தி எதிரிகளுக்குக் கிடைத்துவிடலாம். அதற்கேற்ப அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்., போருக்குப் பொருத்தமான இடமென எந்த இடத்தை நபியவர்கள் தேர்வு செய்துள்ளார்களோ அந்த இடத்தை விட்டும் எதிரிகள் விலகிச் சென்றிடவும் செய்யலாம்!

ஆனாலும் தபூக் போர்ச்சூழ்நிலையில் பொதுவான இந்த வழக்கத்திற்கு ஏற்ப நபியவர்கள் மறைத்துப் பேசவில்லை. தபூக் நோக்கிப் புறப்படப் போகிறோம் என்பதைத் தெளிவுபடவே கூறினார்கள். அப்படிச் செய்ததற்குப் பலகாரணங்கள் இருந்தன:

1) முன்பு நாம் குறிப்பிட்டதுபோன்று -அது கடுமையான கோடை காலம். கனிகள் அறுவடைக்குத் தயாராகி வந்த நேரம்! மனித மனம் சுக வாழ்வை நாடும் இயல்புடையதாகவும் சோம்பலின் பக்கம் சாயக்கூடியதாகவும் தானே உள்ளது. எனவே மனத்தைக் கட்டுப்படுத்திப் பயனுள்ள பணிகளில் நாட்டம் செலுத்த வேண்டுமெனில் இலட்சியம் தெளிவாக இருப்பது அவசியம்!

2) மதீனாவில் இருந்து தபூக் வெகுதொலைவில் இருந்தது. எங்கும் ஒரேபாலைவெளி. மணற்பரப்பு!அத்துடன் கோடை வெயிலும் சுட்டெரித்துக் கொண்டிருந்தது! ஆகையால் இந்தப் பயணத்தில் முஸ்லிம்கள் கடுமையான தாகத்தையும் களைப்பையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இத்தகைய சூழ்நிலையில் எங்குச் செல்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் தான் அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள முடியும்!

3) எதிரிகளோ அதிக வலிமையுடன் இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை திகைப்பூட்டும் அளவு இருந்தது. அதனை எதிர்கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஊக்கத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் எங்கு நோக்கிப் புறப்படுகிறோம். யாரை எதிர்த்துப் போர் புரியப் போகிறோம் என்பதைத் தெளிவாகக் கூறினார்கள்!

‘நபி(ஸல்)அவர்களும் முஸ்லிம்களும் போருக்கான தயாரிப்பைச் செய்து முடித்திருந்தார்கள் . . .”

ஆனால் கஅப்(ரலி)அவர்கள் அதைப் பிற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தினமும் காலையில் வாகனத்தில் ஏறி, இதோ! இப்பொழுதே நான் புறப்பட்டுச் சென்று நபியவர்களை அடைந்துவிடுவேன். முஸ்லிம்களோடு இணைந்துவிடுவேன் என்று கூறுவார்கள்தான். ஆனால் அவர்களால் அப்படிச் செயல்பட முடிவதில்லை. நிலைமை அவர்களை மேலும் மேலும் தாமதப்படுத்திக் கொண்டே சென்றது!

படிப்பினைகள்

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய பாடம் இதுதான். சத்தியத்தை அறிந்துவிட்டால் உடனே அதன்படி செயல்படத் தொடங்கிட வேண்டும். சத்தியத்தின் பால் முன்னேறிச் செல்ல முயன்று கொண்டிருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அப்படிச் செய்யாமல் அசட்டையாக இருந்து விட்டால் அதன் நற்பேற்றையே இழக்க வேண்டிய நிலை வந்துவிடும். குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைக் கவனியுங்கள்:

‘ஆரம்பத்தில் இந்த வேதத்தின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாதிருந்ததுபோன்று (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாதிருக்கும் வகையில்) அவர்களுடைய இதயங்களையும் பார்வைகளையும் நாம் திருப்புகிறோம். மேலும் வரம்பு மீறிய போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு அவர்களை விட்டுவிடுகிறோம் ”
( 6:110)

ஆம்! நற்பணிகளை நோக்கி நாம் விரைந்திடவில்லையானால் – ஷைத்தானின் ஊசாட்டமும் மனஇச்சையும் நம்மை மிகைத்துவிடும். எந்த நல்ல காரியமும் நம் கையை விட்டும் போய்விடும்.

எடுத்துக்காட்டாக, தொழுகையை எடுத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் பலரைப் பார்த்திருக்கலாம். தொழுகைக்காக மஸ்ஜித் நோக்கி வருவார்கள்தான். ஆனால் முன் வரிசைக்கு வரமாட்டார்கள். அதில் அவர்களுக்கு அப்படியொரு அலட்சியம்! எப்பொழுதும் கடைசி வரிசையில்தான் நிற்பார்கள்! அப்படிப்பட்டவர்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் செய்த எச்சரிக்கையைப் பாருங்கள்: ‘சிலர் தொடர்ந்து தாமதமாகவே வருகிறார்கள். இறுதியில் அல்லாஹ்வும் அவர்களைத் தாமதப்படுத்தி விடுகிறான்” (முஸ்லிம்)

ஆம்! யார் தாமதத்தை வழமையாக்கிக் கொள்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் தாமதத்தில் சிக்கவைத்து விடுகிறான்.

கஅப் பின் மாலிக்(ரலி)அவர்கள் தபூக்கின் பயண ஏற்பாடுகளை எல்லா முஸ்லிம்களுடனும் சேர்ந்து செய்யாமல் நாளை நாளை என்று தாமதப்படுத்தினார்கள். இறுதியில் மிஞ்சியது தாமதமும் கவலையும் கலக்கமும்தான்!

ஆம்! போரில் கலந்து கொள்ளும் நற்பேறு கைக்கு எட்டாத தொலைவுக்கு விலகிச் சென்றபொழுது – கஅப்(ரலி) அவர்கள், மதீனாவின் தெருக்களுக்கும் கடைவீதிகளுக்கும் வருகிறார்கள். அங்கிருந்த நிலையைக் கண்டதும் அவர்களது மனம் பதறியது. நபி(ஸல்) அவர்களோ அபூ பக்ரோ உமரோ உஸ்மானோ அலீயோ (ரலி . . . அன்ஹும்) யாரும் இல்லை! முஹாஜிர்களும் இல்லை. அன்ஸாரிகளும் இல்லை! தெருக்களில் அங்கும் இங்கும் நடந்து சென்றுகொண்டிருந்தது நயவஞ்சகர்கள் மட்டும்தான்! தவிர நோயாளிகள், முதியவர்கள் என பலவீனப்பட்டவர்கள் இருந்தார்கள், அவ்வளவுதான்!

இப்படிப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் மதீனாவில் இல்லையே! அவர்களுடன் நாமும் தங்கியிருக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டு விட்டதே என்று தம்மைத்தாமே நொந்துகொள்கிறார்கள் கஅப்(ரலி)!

நபி(ஸல்)அவர்கள் தபூக்கில் தோழர்களுடன் இருக்கும்பொழுது கஅப்(ரலி) அவர்களைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு பனூ சலிமா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கஅப் அவர்கள் மீது குற்றம் சுமத்த, அதற்கு முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் தக்க பதில் கொடுத்தார்கள்! ஆனால் நபி(ஸல்) அவர்கள் குற்றம் சுமத்தியவர் பற்றியோ மறுத்தவர் பற்றியோ எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்கள்.

இந்த நேரத்தில், தூரத்தில் ஒருவர், வெள்ளைவெளேரென ஆடைகள் அணிந்து கானல் அசைவதுபோல் வந்து கொண்டிருந்த நபரைக் குறித்து இவர் அபூ கைஸமாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நபியவர்கள் சொன்னதுபோன்று அபூ கைஸமாதான் வந்து கொண்டிருந்தார். – இது நபி(ஸல்)அவர்களின் நுட்பமான மதிப்பீட்டையும் கூர்மையான பார்வையையும் எடுத்துக்காட்டுகிறது.

கஅப்(ரலி) அவர்கள், அபூ கைஸமா(ரலி) அவர்களைப் பற்றி கூறிய தகவலில் பல விஷயங்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன.

அதாவது, போர் நிதி வழங்குமாறு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஆணையிட்டபொழுது ஒரேஒரு மரைக்கால் பேரீத்தம் பழத்தை நிதியாக அளித்தது, இந்த அபூ கைஸமாதான்! – அதைத்தான் நயவஞ்சகர்கள் கேலிசெய்தார்கள். இந்த ஒருமரைக்கால் பேரீத்தம் பழம் அல்லாஹ்வுக்குத் தேவையா என்ன? என்று நக்கல் பேசினார்கள்.

இதேபோல் – அதிக நிதியுதவி செய்தவர் பற்றியும் – இப்படி அதிக அளவு அள்ளிக்கொடுக்கிறாரே இவர்., அல்லாஹ்வின் உவப்பை நாடியா செய்கிறார், பேரும் புகழுக்காகவும்தானே வாரிவழங்குகிறார்! என்று பேசினார்கள்!

ஆனால் எந்த ஒரு தர்மமனாலும் – அரைப் பேரீத்தம் பழமேயானாலும் ஓர் அணுஅளவுப் பொருளானாலும் அதுவும் இறைவழிப்போருக்கு உதவினால் மறுமையின் நற்பயன் கிடைக்கும் என்கிறது இஸ்லாம்.

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘திண்ணமாக ஒருமனிதர் பேரீத்தம் பழம் அளவுக்கு ஒருபொருளைத் தர்மம் செய்கிறார். அதனையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். பிறகு அதனை அவருக்காக எவ்வாறு பல்கிப் பெருகச் செய்கிறான் எனில், உங்களில் ஒருவர் தனது ஒட்டகக் குட்டியைக் கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதுபோன்று பல்கிப்பெருகச் செய்கிறான் அல்லாஹ். இறுதியில் (குறைந்த அளவிலான) அந்தத் தர்மம் உஹுத் மலைபோன்று பெருகி விடுகிறது” (நூல்: புகாரி, முஸ்லிம்)

மற்றொரு தடவை சொன்னார்கள்: ‘(தர்மம் கொடுப்பதன் மூலம்) உங்களை நரகத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். பாதிப் பேரீத்தம் பழத்தை வழங்குவது மூலமானாலும் சரியே! ” (நூல்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: ‘ஒருவன் அணுஅளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவன் கண்டுகொள்வான். அணுஅளவு தீமை செய்திருந்தாலும் அதனை அவன் கண்டுகொள்வான்” (குர்ஆன் 99: 8)

இதன்படியே ஒவ்வொரு தோழரும் தத்தம் வசதிக்கும் சக்திக்கும் ஏற்ப போர் நிதிக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ஆனால் இஸ்லாம் வெற்றிபெறும் வகையில் யாரும் செயல்பட்டு விடக்கூடாது என்பதுதான் நயவஞ்சகர்களின் எதிர்பார்ப்பு! அதனால்தான் அதிகஅளவு நிதி அளித்தவர் பற்றியும் அவதூறு பரப்பினார்கள். குறைவாக நிதி அளித்தவர் பற்றியும் கேலிபேசினார்கள்.

நயவஞ்சகர்களின் இத்தகைய விஷமத் தனத்தையே கஅப்(ரலி) அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். குர்ஆனும் இதனை ஓரிடத்தில் கூறுகிறது:

‘இறைநம்பிக்கையானர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தர்மங்களைப் பற்றியும் இந்த நயவஞ்சகர்கள் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவு செய்வதற்காகச்) சிரமப்பட்டு உழைத்ததைத் தவிர வேறெதுவும் பெற்றிருக்காதவர்களப் பற்றியும் இவர்கள் கேலி செய்கிறார்கள். அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கிறான். மேலும் இவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் உண்டு” (9: 79)

இத்தகைய வஞ்சகர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்தான் இருந்தனர் என்பதில்லை. அன்றைய வஞ்சகர்களின் வாரிசுகள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்களுடைய மூதாதையர்கள் விட்டுச் சென்ற பணியை – முஸ்லிம்களைக் கேலிபேசுகிற பணியை – இஸ்லாத்திற்குக் கேடு விளைவிக்கிற சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இறைவனின் படைப்புகளிலேயே இவர்கள்தாம் மிகவும் கேடுகெட்டவர்கள்!

‘என் குடும்பத்தில் விஷய ஞானமுடைய அனைவரிடமும் ஆலோசனை கலந்தேன் ”

ஏதாவது பொய்சொல்லித் தப்பிக்கத்தான் கஅப்(ரலி) அவர்கள் முதலில் திட்டமிட்டுள்ளார்கள். அது பற்றி தம் குடுப்பத்தினரிடம் ஆலோசனையும் செய்துள்ளார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பிய பொழுது தான் உண்மை சொல்லி விடுவது என்கிற உறுதிப்பாடு அவர்களுக்கு வந்தது.

நயவஞ்சகர்கள் பொய்யான சாக்குப்போக்குகள் சொல்லி, பொய் சத்தியம் செய்தார்கள். தங்களை மன்னிக்கும்படி கோரினார்கள். அவர்களின் வெளிப்படையான நிலையை ஏற்றுக்கொண்டு அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள் நபிவர்கள்! மட்டுமல்ல நயவஞ்சகர்களுக்காகப் பாவ மன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கவும் செய்தார்கள்! ஆனாலும் அது அவர்களுக்கு எவ்விதப்பயனும் அளிக்கவில்லை, அல்லாஹ் கூறுகிறான்:

‘(நபியே!) நீர் இவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரினாலும் கோராவிட்டாலும் சரி – எழுபது தடவைகள் இவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் கூட அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான்.’
‘(9: 80)

ஆனால் கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள் உண்மையே உரைத்தார்கள். தமது தவறை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்கள். அது பற்றியே நபியவர்கள் கூறினார்கள்:

‘இவர்தான் உண்மை உரைத்துள்ளார்”

கஅப்(ரலி)அவர்களின் வாய்மைக்கும் சிறப்புக்கும் இதுவே போதுமான சான்று. அதற்கு நபியவர்கள் வழங்கிய நற்சான்றே இது!

‘அல்லாஹ் உமது விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் நேரத்தை எதிர் பார்த்திரும் ”

கஅப் பின் மாலிக் அவர்கள் அல்லாஹ் – ரஸூலின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராகவும் முழுமையான நம்பிக்கை கொண்டவராகவும் புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்பொழுது அவர்களுடைய பனூ ஸலிமா குலத்தினர் சிலர் தவறான ஆலோசனையை வலியுறுத்தினார்கள். அப்படிச் செய்யலாமே என்றுதான் கஅப்(ரலி)அவர்களது மனம் முதலில் விரும்பியது. வேறு இரு தோழர்களுக்கும் இதேநிலை எற்பட்டுள்ளது., அவ்விருவரும் உண்மையைத் திரும்பப் பெறுவதற்காக நபியவர்களிடம் செல்லவில்லை என்றும் தெரியவந்தது.

‘மக்கள் என்னிடம் சொன்ன இரண்டு பேரும் எப்படிப்பட்டவர்களெனில் இருவரும் பத்று போரில் கலந்து கொண்டவர்கள். அவ்விருவரிலும் எனக்கு முன்மாதிரி இருந்தது”

ஆம்! அல்லாஹ், சில பேருக்குச் சிலநேரங்களில் நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கிறான். வாய்மையில் நிலைத்திருக்க – தீமையை நாடாதிருக்க நல்ல முன்மாதிரியைக் காண்பித்துக் கொடுத்துப் பேருதவி புரிகிறான்! கஅப்(ரலி) அவர்கள் தம் இருதோழர்களையும் பின்பற்றி உண்மையிலிருந்து பின்வாங்கக்கூடாது என்று உறுதிகொண்டார்கள். சோதனைக்கு மேல் சோதனைகள் வந்தாலும் எல்லாவற்றையும் தாங்குவதெனும் உறுதிப்பாட்டில் உள்ளம் உறுதிபூண்டது! பொய்யிலிருந்து முழுமையாக அவர்களை அல்லாஹ் காத்தருளினான். கஅப்(ரலி) அவர்களது உளத்தூய்மைக்குச் சான்றாகத் திகழும் அந்த உண்மை வரலாற்றை குர்ஆனி லும் இடம்பெறச் செய்து அவர்களுக்குச் சிறப்பளித்தான்!

படிப்பினைகள்

1) நல்லெண்ணம். ஆம்! ஒருவரின் உள்ளத்தில் நல்லெண்ணம் இருந்தால் அல்லாஹ் அவர் மீது பேருபகாரம் புரிகிறான். பாவத்திலிருந்து அவரைக் காப்பாற்றுகிறான். கஅப்(ரலி) அவர்களைப் பாருங்கள். நபிவர்களிடம் பொய் சொல்ல நாடியபொழுது உண்மையே பேசும்படி செய்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அதற்குக் காரணம் அவர்களது உள்ளத்தில் உறுதியுடன் உறைந்திருந்த நல்லெண்ணமே!

2) இறைநம்பிக்கையில் முழுஉறுதிப்பாடு. ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி நபியவர்களிடம் இருந்து தப்பித்து விட்டாலும் நாளை அல்லாஹ் கோபம் கொண்டால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று கஅப்(ரலி) அவர்கள் சொல்லியிருப்பது அவர்களது இறைநம்பிக்கையின் உறுதிப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது. நாம் என்றென்றும் நினைவில் கொண்டு பின்பற்றத்தக்க பாடமாகும் இது.

அந்த மூன்று தோழர்கள் மீதும் சமூகத்தடை விதித்து நபியவர்கள் கட்டளை பிறப்பித்தபொழுது அனைத்து மக்களும் அதனை ஏற்று அப்படியே செயல்படுத்தினார்கள்.

‘நான் நபியவர்களிடம் ஆஜராவேன்!. ஸலாத்திற்குப் பதில் சொல்லிட உதடுகளை அசைத்தார்களா இல்லையா? என்பதை நான் அறியேன்”

ஆம்! கஅப் பின் மாலிக்(ரலி) அவர்களின் ஸலாத்திற்கு நபி(ஸல்) அவர்களே பதில் சொல்லவில்லை. நபியவர்களோ நற்குணத்தில் சிறந்தவர்கள். அனைவரிடமும் நல்ல முறையில் பழகக்கூடியவர்கள்! ஆயினும் அந்தத் தோழர்களைச் சற்றுக் கடினமாக நடத்தவேண்டும். பண்படுத்த வேண்டும் எனும் கட்டளைக்கு நபியவர்களும் கட்டுப்பட்டார்கள்.

‘என்னுடைய இரண்டு தோழர்களும் மிகவும் மனம் நொந்து போனார்கள். அழுதவண்ணம் தங்கள் வீடுகளிலேயே முடங்கி விட்டார்கள்”

ஆம்! அந்த மூவரில் கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள் மட்டுமே மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத் – கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்டிருந்தார்கள். பிறகு நாட்கள் செல்லச் செல்ல அவர்களும் வீட்டிலேயே தொழலானார்கள். அந்த அளவுக்கு மனவேதனையும் சஞ்சலமும் அவர்களை வாட்டியெடுத்தது! (அதன் விவரம் பின்னால் வருகிறது)

‘ஒருநாள் அப்படியே நடந்து சென்றேன். அபூ கதாதாவின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன் ”

அதாவது, வாசல் வழியாக உள்ளே செல்லாமல் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளார்கள். வாசல் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சுற்றுச் சுவரில் ஒருபகுதியில் இடிபாடு ஏற்பட்டு லேசாகத் தாண்டி உள்ளே செல்லும் வகையில் அமைந்திருக்க வேண்டும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

‘நான் அவருக்கு ஸலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனது ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை”

கஅப் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் அபூ கதாதா(ரலி) அவர்கள். மக்கள் எல்லோரும் புறக்கணித்துவிட்ட நிலையில் நெருங்கிய உறவுடைய-பாசத்திற்குரிய சகோதரராவது சந்தோசமாகப் பேசுவார்., ஆறுதல் சொல்லி மனத்தைத் தேற்றுவார் என்றுதான் அவரிடம் சென்றுள்ளார்கள், கஅப்(ரலி)அவர்கள். ஆனால் அவரும் பேசவில்லை. ஸலாத்திற்குக் கூடப் பதில் சொல்லவில்லை. – இதற்குக் காரணம் அல்லாஹ்-ரஸூலின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும் என்பதுதானே தவிர கஅப் அவர்களைத் தனிப்பட்ட முறையில் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல!

‘என் கண்கள் இரண்டும் கண்ணீர் வடித்தன. வந்த வழியே திரும்பி சுவர் ஏறித் தாவி வெளியே வந்தேன் ”

அபூ கதாதா(ரலி) அவர்களிடம் – நான் அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிப்பவன் இல்லையா? என்று, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மூன்றுமுறை கேட்டார்கள், கஅப் பின் மாலிக் அவர்கள். நிலையின் கடுமையை உணர்த்தக்கூடிய மிகப்பெரியதொரு சத்தியமாகும் இது! அபூ கதாதா(ரலி) அவர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும்: கஅப்(ரலி) அவர்கள் அல்லாஹ்வையும் ரஸூலையும் அதிகம் நேசிப்பவர்கள் என்பது! மூன்றாவது தடவையில் ஒப்புக்கு ஒரு பதிலைச் சொன்னார்., அல்லாஹ்வும் ரஸூலும் தான் மிகவும் அறிந்தவர்கள் என்று! இது அந்தக் கேள்விக்குரிய பதிலாகக் கருதப்படாத ஒரு வார்த்தையாகும். – இந்தக் கட்டத்தில்தான் கஅப்(ரலி) அவர்கள் மனம்நொந்து கண்ணீர் வடித்து விட்டார்கள்.

‘ஷாம் தேசத்து விவசாயி ஒருவர், கஅப் பின் மாலிக்கை எனக்குக் காண்பித்துத் தருபவர் யார்? என்று அங்கே கேட்டுக் கொண்டிருந்தார்”

அன்றைய ஷாம் தேசத்து விவசாயிகளைக் குறிப்பதற்கு நபதி (பன்மை:அன்பாத்) எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலைவனப்பகுதிகளில் பூமிக்கடியில் எங்கெங்கு தண்ணீர் உள்ளதென ஆய்வு (இஸ்தின்பாத்) செய்வதே அவர்களுடைய பணி. அதனால்தான் அவர்கள் நபதி – அன்பாத் என்று அழைக்கப்படுகிறார்கள்.

‘அவன் என்னிடம் வந்தான். கஸ்ஸான் மன்னன் எழுதிய ஒருகடிதத்தை என்னிடம் கொடுத்தான்”

இந்த கஸ்ஸான் மன்னன் இறைநம்பிக்கை இல்லாதவன். நிராகரிப்பாளன். கஅப் பின் மாலிக்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்திக் குழப்பம் விளைவிக்கத் திட்டமிட்டான். வாய்மைமிக்க அந்தத் தோழருக்கு ரகசியக் கடிதம் எழுதி அனுப்பி அவரைத் தன் பக்கம் இழுக்கச் சதி செய்தான். ஆனால் அல்லாஹ் – ரஸூலின் மீதான நம்பிக்கையில் – வாய்மையான அன்பில் உறுதியாக இருந்த அந்தத் தோழர் அந்தக் கடிதத்தைப் பார்த்தபொழுது இதுவும் ஒரு சோதனையே என்று சொல்லியவாறு அதனை அடுப்பில் வீசி எரித்தார்!

கஅப்(ரலி) அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையே! அதுவும் ஒரு சோதனையே! மிக நெருங்கிய உறவினர் உட்பட மக்கள் அனைவரின் புறக்கணிப்புக்குள்ளாகி மனம் நொந்துள்ள ஒருமனிதரைப் பக்கத்து நாட்டு மன்னனே வலை விரித்து அழைக்கும் பொழுது – ராஜ மரியாதை தருவதாகக் கூறும்போது அதிலிருந்து தப்பிப்பது கடினம்தானே! ஆனால் கஅப் அவர்கள் அந்தச் சோதனையிலும் சாதனை படைத்தார்கள். கடிதத்தை கையில் வைத்துக் கொண்டிருந்தால், அவ்வப்பொழுது அதைப் படித்துப் பார்க்க வேண்டியது வரும்., மன்னனிடம் சென்று நிம்மதியாக இருக்கலாமே என்று தீய மனம் தூண்டும். ஷைத்தானின் ஊசாட்டமும் விரட்டிக் கொண்டுவரும்! அப்படியொரு வழிச்சறுகல் ஏற்பட்டுவிடக் கூடாது., அதற்கான எந்த வாய்ப்பும் இருக்கக்கூடாது என்றுதான் கடிதத்தையே அடுப்பிலிட்டு அழித்தார்கள்!

‘ வஹி (எனும் இறையருட்செய்தி) தாமதமானபொழுது . . . நீர் உம் மனைவியை விட்டும் விலகி இருக்கும்படி நபியவர்கள் உமக்குக் கட்டளையிடுகிறார்கள் ”

வஹி வருவது தாமதமானதில் அல்லாஹ் ஒரு தத்துவத்தை அமைத்து வைத்தான். வஹியின் பக்கம் மக்கள் அனைவரையும் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டுமென்பதுதான் அது. வாய்மையும் தூய்மையும் மிக்க இந்தத் தோழர்களின் விஷயத்தில் இப்பேரண்டத்தின் அதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறானோ, எப்பொழுது வஹி வரப்போகிறதோ? என்று அனைவரையும் எதிர்பார்க்கச் செய்வதே இறைவனின் நாட்டம் – ஆயிஷா(ரலி) அவர்கள் மீது அபாண்டம் சுமத்தப்பட்ட நிகழ்ச்சியின்போதும் இவ்வாறுதான் வஹி வருவது தாமதமாயிற்று!

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் அந்த மூன்று தோழர்களுக்கும் மேலும் ஒருகட்டுப்பாட்டை விதித்தார்கள் நபி(ஸல்) அவர்கள். அவர்களை விட்டும் அவர்களுடைய மனைவியரே விலகிக்கொள்ள வேண்டும் என்பது தான் அது.

கஅப்(ரலி) அவர்கள் நல்ல திடகாத்திரமான – வாலிபத் துடிப்புள்ளவர். மனைவியுடன் வாழக்கூடாது என்று அவரை விலக்கி வைப்பது மிகவும் கஷ்டமான சமாச்சாரம்தான்!

ஆயினும் நபியவர்களின் தூதுவர் வந்து அந்தக் கட்டுப்பாட்டை அறிவித்த பொழுது –

‘நான் என் மனைவியை மணவிலக்கு செய்துவிடவா? அல்லது நான் என்னசெய்ய வேண்டும்?’ என்றுதான் கேட்டார்கள் கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள். ஆகா! இத்துணை சோதனைகளிடையேகூட நபியவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்தான் அவர்கள் ஆர்வமாக இருந்துள்ளார்கள். மனைவியை மணவிலக்கு செய்யும்படி சொன்னால்கூட அதற்கும் அவர்கள் தயார் என்பதையே அவர்களது வார்த்தை காட்டுகிறது.

தூது கொண்டுவந்தவர் சொன்ன பதிலையும் கவனியுங்கள். நபியவர்கள் சொல்லி அனுப்பிய வார்த்தைகளையே அவர் திரும்பச் சொன்னாரே தவிர அவற்றை மாற்றவோ புதியதொரு கருத்தைக் கற்பிக்கவோ அவர் முயற்சி செய்யவில்லை. முன்சொன்ன வார்த்தைகளையே திரும்ப ஒருமுறை சொல்லி அவற்றின் யதார்த்தமான கருத்தையே வலியுறுத்தினார். நபி(ஸல்) அவர்களின் கட்டளைகள் – ஹதீஸ்களைப் பொறுத்து ஸஹாபாக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்!

படிப்பினைகள்

இந்நிகழ்ச்சிகளில் நமக்குப் பல படிப்பனைகள் உள்ளன:

1) இறைத்தூதரின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிதல்! ஊர் விலக்கு எனும் தண்டனை மிகக் கடுமையானது. அதனைச் சற்றுத் தளர்த்த வேண்டும் என்று யாரும் மேல் முறையீடு செய்யவில்லை. அல்லது அதை செயல்படுத்த முடியாதபடி குடும்ப ரீதியான நெருக்கடியையோ குழப்பத்தையோ எவரும் ஏற்படுத்தவில்லை – அந்த மூன்று தோழர்களோ அவர்களுடைய குடும்பத்தினரோ யாரும் அப்படிச் செய்யவில்லை! அவர்களுடைய மனைவிரேகூட நபியவர்களின் கட்டளையை மீறவில்லை. அலட்சியம் செய்யவில்லை. அதற்குக் கீழ்ப்படிய வேண்டாமென தம் கணவர்களைத் தூண்டவில்லை! நபித்தோழர்களின் வாழ்வில் நடைபெற்ற இத்தகைய சமூகக் கட்டமைப்புக்கு உலகில் வேறெந்த சமூகத்திலும் நிகர் காண்பது கடினமே!

2) தீய சக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதும் நமது சமுதாயத்தினுள் ஊடுருவுவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு அளிக்காதிருப்பதும்!

3) குழப்பத்திற்கும் வழிகேட்டிற்கும் இழுத்துச் செல்லக்கூடிய வழி வகைகளை அடைத்து விடுவது! – கஸ்ஸான் மன்னனின் கடிதம் கையில் இருந்தால் அவனது நாட்டில் தஞ்சம் புகலாம் எனும் தீய எண்ணத்திற்குப் பலியாக வேண்டியது வரலாம். அதனால் அந்தக் கடிதத்தையே தீயிட்டுக் கொளுத்தி அதன் வழியை அடைத்து விட்டார்கள், கஅப்(ரலி) அவர்கள்!

‘பிறகு ஐம்பதாவது நாளின் அதிகாலையில் எங்களது வீடொன்றின் மாடியில் ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்தேன் ”

ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்ததால் அப்படிச் செய்யவில்லை. முன்பு சொன்னதுபோல் – பள்ளிவாசல் சென்றால் பேசுவார் யாருமில்லை. வலியச் சென்று ஸலாம் சொன்னாலும் பதில் வருவதில்லை. இந்நிலையில்தான் கஅப்(ரலி) அவர்கள் மனம் நொந்து வீட்டிலேயே தங்கி விட்டார்கன். மற்ற இருதோழர்களின் நிலையும் இதுவே!

‘அவரது நற்செய்திக்குப் பகரமாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவற்றை அவருக்கு அணிவித்தேன் ”

மலை மீதேறி உரக்கக் குரல் கொடுத்தவர் மூலம்தான் நற்செய்தி பற்றிய தகவல் முதலில் கிடைத்தது. அவர்தான் பரிசுக்குரியவர் ஆனார். அணிந்திருந்த இரு நல்லாடைகளையும் களைந்து அவருக்குப் பரிசாக நல்கி விட்டு இரவல் ஆடைகளை அணிந்துகொண்டே நபியவர்களிடம் சென்றார்களெனில் அந்தச் செய்தி எவ்வளவு ஆனந்தத்தை அவர்களுக்கு அளித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

‘நான் நபி(ஸல்) அவர்களிடம் செல்லப் புறப்பட்டேன். மக்கள் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்தார்கள்”;

எந்த மக்கள்? அல்லாஹ் -ரஸூலின் கட்டளைப்படி அம்மூன்று தோழர்களையும் ஊர் விலக்கிவைத்த அதே மக்கள்தான்! மன்னிப்பு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் அனைவருக்கும் அளவிலா ஆனந்தம்! ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களின் உள்ளத்தில் – அவர்களுடைய சகோதரர்களின் பேரில் இருந்த நேசம்தான்! தங்களுக்கு எதை விரும்பினார்களோ அதையே தம் சகோதரர்களுக்கும் விரும்பினார்கள்.

அந்த நேசத்தினால்தான் -அம்மூன்று தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாக அறிவிக்கப்பட்டபொழுது – திருக்குர்ஆனின் வசனங்களையே இறக்கியருளிச் சிறப்பித்தபொழுது யாரும் பொறாமைப்படவில்லை. புளகாங்கிதத்துடன் ஓடோடிவந்து வாழ்த்துக்கூறி மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்!

‘தல்ஹா பின் உபைதுல்லாஹ் எழுந்து என்னை நோக்கி ஓடிவந்தார். எனக்குக் கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் ”

பள்ளிவாசலில் நபியவர்களுடன் அமர்ந்திருந்த தோழர்களில் தல்ஹா மட்டும்தான் எழுந்துவந்து கஅப்(ரலி) அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதனைப் பெரும் மரியாதையாகவும் பேருபகாரமாகவும் கஅப்(ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வருகை தருபவருக்காக எழுந்து நிற்பது கூடுமா?

இந்த இடத்தில் மேலும் சில விவரங்களை அறிந்துகொள்வது பயன் மிக்கது. அதாவது, ஓர் அவையினுள் வருபவரை நோக்கி எழுந்து செல்வதும் கைலாகு கொடுப்பதும் ஆகுமானவையே., கண்ணியம் அளிப்பவையே!

இதே போல வருகை தருபவருக்காக எழுந்து நிற்பதிலும் தவறில்லை. அப்படிச் செய்வது கூடாதென எந்தத் தடையும் வரவில்லை.

ஆனால் ஒருவர் வரும்பொழுது உட்கார்ந்திருப்பவரை எழுந்து நிற்கும்படிச் செய்வதும் எழுந்து நிற்குமாறு வற்புறுத்துவதும் தான் கூடாது என்று தடை வந்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ‘தனது வருகையின் பொழுது பிற மக்கள் நிற்பவர்களாய்க் காட்சியளிக்க வேண்டுமென யார் விரும்புகிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகமாக் கிக்கொள்ளட்டும் ‘நூல்: அபூ தாவூத், திர்மிதி

ஆக, எழுவதென்பது மூன்று வகையில் உள்ளது:

வருகை தருபவரை நோக்கி எழுந்து செல்வது

வருகை தருபவருக்காக எழுந்து நிற்பது

உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கருகில் நின்றுகொண்டிருப்பது

1) வருகை தருபவரை நோக்கி எழுந்து செல்வதில் தவறில்லை. நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மூவகை ஆதாரங்களும் இதற்குண்டு.

சொல்லாதாரம்: பனூகுறைளா எனும் மதீனாவாழ் யூதர்களின் விஷயத்தில் தீர்ப்பளிப்பதற்காக ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்கள் வருகை தந்தபொழுது யூதர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘உங்கள் தலைவரின் பக்கம் எழுந்து செல்லுங்கள் ”

– பனூ குறைளா போருக்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியாகும் இது. இந்த யூதர்கள், முஸ்லிம்களுடன் செய்திருந்த உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதாலும் குறிப்பாக, அகழ் யுத்தத்தில் மிகக் கடுமையான நெருக்கடியில் எதிரிகளுக்குச் சாதகமாக அவர்கள் நடந்ததாலும் நபி(ஸல்) அவர்கள் அந்த யூதர்களை முற்றுகையிட்டுக் கைது செய்தார்கள்.

இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? அதுபற்றித் தீர்ப்பளிக்கும் பொறுப்பு ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸஅத் பின் முஆத் அவர்கள், மதீனத்து முஸ்லிம்களில் அவ்ஸ் கோத்திரத்திரத்தின் தலைவர். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தை மேற்கொண்டு மதீனா வருவதற்கு முன்பே பனூ குறைளா யூதர்களுக்கும் அவ்ஸ் கோத்திரத்துக்கும் உடன்படிக்கை இருந்தது. அந்த வகையில் இருசாராரும் நேச குலத்தவர்கள் ஆவர். ஆகையால் தங்களது நேசகுலத்தின் தலைவர் ஸஅத் பின் முஆத் அவர்களை நடுவராக ஆக்குவதற்கும் அவர்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அந்த யூதர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள்.

அகழ் யுத்தத்தில் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளாகியிருந்த ஸஅத் பின் முஅத்(ரலி) அவர்களால் நடக்க இயலாதிருந்தது. அதனால் வாகனத்தின் மீது அமர்ந்து வந்தார்கள். ‘உங்கள் தலைவரின் பக்கம் எழுந்து செல்லுங்கள்” என்று யூதர்களை நோக்கி நபியவர்கள் கூறியதும் அவர்கள் எழுந்து சென்று ஸஅத்(ரலி) அவர்களை வரவேற்று வாகனத்தில் இருந்து கீழே இறக்கினார்கள்! (அந்த யூதர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டுமென ஸஅத்(ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என்பது வரலாறு)

அங்கீகாரம்: இது நாம் விளக்கம் அளிக்கும் இந்த நபிமொழியில் உள்ளது. -கஅப்(ரலி)அவர்கள் மஸ்ஜிதினுள் நுழைந்தபொழுது அவர்களை நோக்கி தல்ஹா(ரலி) அவர்கள் எழுந்து சென்றார்கள். இது நபி(ஸல்) அவர்களால் மறுக்கப்படாததால் அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றதாகிறது.

செயல் ரீதியான ஆதாரம்: பனூ ஸகீப் கோத்திரத்தாரின் தூதுக்குழுவினர் – ஹுனைன் போருக்குப் பிறகு ஜுஅரானா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபொழுது அந்தத் தூதுக்குழுவினரை நோக்கி நபியவர்கள் எழுந்து சென்றார்கள். (மற்றோர் அறிவிப்பில், எழுந்து நின்றார்கள் என்றுள்ளது)

2) வருகை தருபவருக்காக எழுந்து நிற்பது. இதில் குற்றமில்லை. வருகை தருபவருக்காக எழுந்து நிற்கவில்லையாயின் அது மரியாதைக் குறைவாகக் கருதப்படும் சூழ்நிலையில் அது ஆகுமானதே! அப்படி நிற்காமலிருப்பது சிறந்ததாயினும் அத்தகையதொரு வழக்கம் நடைமுறையில் இருக்கும்பொழுது அதில் குற்றமில்லை.

3) ஒருவர் உட்கார்ந்திருக்க மற்றொருவர் அவருக்கருகில் – அவருக்குக் கண்ணியம் அளிப்பதற்காக நின்றுகொண்டிருப்பது! இது தடை செய்யப்பட்டதாகும். நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: ‘அந்நியர்கள் சிலர், சிலருக்கு கண்ணியம் அளிக்கும் பொருட்டு நின்று கொண்டிருப்பது போன்று நீங்கள் செய்யாதீர்கள்” எந்த அளவுக்கெனில், தொழுகையில் கூட இமாம் நிற்க இயலாமல் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் அவரைப் பின்பற்றித் தொழுபவர்கள் உட்கார்ந்துதான் தொழுதிட வேண்டும். நின்று கொண்டு தொழக்கூடாது.

ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்)அவர்கள் பிணியுற்ற பொழுது- அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்த நாங்கள் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அபூ பக்ர்(ரலி) அவர்கள், நபியவர்களின் தக்பீரை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் எங்களை நோக்கித் திரும்பிப் பார்த்தார்கள். நாங்கள் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே எங்கள் பக்கம் உட்காருமாறு சமிஞ்கை செய்யவே நாங்களும் உட்கார்ந்தோம்., உட்கார்ந்து கொண்டே நபியவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழுதோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்து ஸலாம் கொடுத்தபொழுது சொன்னார்கள்: சற்று முன்னர் – ரோமர்களும் பாரசீகர்களும் செய்வது போன்று நீங்களும் செய்ய முனைந்து விட்டீர்களே! அவர்கள்தாம் தங்களுடைய மன்னர்கள் உட்கார்ந்து கொண்டிருக்க அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருப்பார்கள்! நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள்” (முஸ்லிம்)

ஆனால் உட்கார்ந்து கொண்டிருப்பவருக்கு அருகில் மற்றொருவர் நிற்க வேண்டிய தேவை இருந்தால் – அந்தச் சூழ்நிலையில் அது கூடும். ஆம்! ஒருவர் மீது எதிரிகள் திடீர் தாக்குதல் தொடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிற சூழ்நிலையில் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக அவரருகில் மற்றொருவர் நின்று பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருப்பதில் குற்றமில்லை.

இதேபோல ஒருவருக்குக் கண்ணியம் கொடுப்பதற்காகவும் நம்மிடையே உள்ள கட்டமைப்பையும் தலைமைக்குக் கீழ்ப்படியும் பண்பையும் எதிரிகளுக்கு உணர்த்தி உள்ளச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவருக்கு அருகில் ஒருவர் நின்றுகொண்டிருப்பதில் குற்றமில்லை.

நபி(ஸல்) அவர்கள் வரலாற்றில் – ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இப்படி நடைபெற்றது. உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மக்கத்து குறைஷிகள் சார்பில் சில தலைவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் நபியவர்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது புகழ்பெற்ற நபித்தோழர் முஃகீரா பின் ஷுஅபா(ரலி) அவர்கள், கையில் வாளை ஏந்திக்கொண்டு நபியவர்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்.

ஆக, உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கு அருகில் நின்று கொண்டிருப்பதன் நோக்கம் பாதுகாப்பு அளிப்பதாகவோ எதிரிகளுக்கு உணர்த்துவதாகவோ இருந்தால் அதில் குற்றமில்லை.

லட்சியக் குழுவினரின் சிறு தவறுகூட ……!

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களிடம் அவ்வாறு நான் வாக்குறுதி கொடுத்ததில் இருந்து இன்றைய தினம்வரை எந்தச் சூழ்நிலையிலும் பொய் சொல்ல நான் நாடியதில்லை. எதிர் காலத்திலும் அதிலிருந்து அல்லாஹ் என்னைக் காத்தருள்வான் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு”

உண்மை பேசியதால் கஅப்(ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஈடேற்றம் அளித்தான், அல்லவா? அதற்கு கைமாறு செலுத்த வேண்டும். தமது தவறுக்குப் பரிகாரமாகவும் அமைய வேண்டும் என்று இவ்வாறு அவர்கள் சபதம் செய்துள்ளார்கள். இனி வாழ்நாள் முழுவதும் உண்மையே பேச வேண்டுமென உறுதியேற்றுச் செயல்பட்டுள்ளார்கள். வாய்மைமிகு அந்த ஸஹாபியின் வரலாறு உண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் அளவு புகழ் பெற்றுவிட்டது!

‘நபியையும் – துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் திண்ணமாக அல்லாஹ் பொறுத்தருளினான் ”

கஅப்(ரலி) அவர்களுக்கும் ஏனைய இருதோழர்களுக்கும் மன்னிப்பு வழங்கியதாக அறிவித்த இந்த மூன்று வசனங்களின் விளக்கத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலில் நபியைப் பொறுத்தருளியதாக அல்லாஹ் அறிவித்திருப்பது ஏன்? போரில் கலந்துகொள்ளாதிருக்க சில நயவஞ்சகர்களுக்கு நபி அனுமதி அளித்ததைத் தவறு என்று அல்லாஹ் கருதியிருக்கலாம். அல்லது இறைவனின் மன்னிப்பும் கருணையும் – நபி உட்பட எல்லோருக்கும் தேவையே எனும் பொருளிலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்! – அவர்கள் இறுதி நபி., முந்தைய, பிந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட தூய்மையான தூதர்!

பிறகு முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் பொறுத்தருளியதாகக் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் இவ்விரு சாராரின் சிறுசிறு பிழைகளை மன்னித்து நன்மைகளை அள்ளி அள்ளி வழங்கினான். உன்னதமான அந்தஸ்துகளை அவர்களுக்கு அளித்தான்.

இந்த வசனத்தில் முஹாஜிர்களை முதலில் கூறியிருப்பதற்குக் காரணம், அவர்கள் அன்ஸார்களை விடவும் சிறந்தவர்கள் என்பதே! ஏனெனில் அவர்கள், ஹிஜ்ரத் (நாடுதுறத்தல்) நுஸ்ரத் (பேருதவி புரிதல்) என்கிற இருவகை தியாகங்களையும் ஒருசேர நிறைவேற்றியவர்கள்!

துன்பம் சூழ்ந்த நேரத்தில் எனும் சொல் தபூக் போரையும் அப்பொழுது நிலவிய கடும் நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறது. வரலாற்றில் இந்த போருக்கு ஃகஸ்வதுல் உஸ்ரா (கஷ்ட காலத்துப் போர்) என்றுகூட ஒருபெயர் உண்டு.

‘அவர்களில் ஒருசிலரின் உள்ளம் நெறிதவறுதலின் பால் சற்று சாய்ந்து விட்டிருந்த பிறகும் . . .”

அதாவது அன்று முஸ்லிம்களில் சிலர் – வாய்மையாளர்களாய் இருந்ததுடனேயே போரில் கலந்திடாமல் தவிர்க்கவே விரும்பினார்கள். ஏனென்று கேட்டால் ஏதாவது சொல்லிக் கொள்ளலாம் என்றே கருதினார்கள். ஆயினும் தக்க நேரத்தில் அவர்களின் உள்ளம் தெளிவு பெற்றது. சத்தியத்தில் நிலைத்திருக்கும் உறுதியை அல்லாஹ் அவர்களுக்கு நல்கினான். அவர்களது தடுமாற்றம் நீங்கியது. தயக்கம் மாறியது. நபியவர்களுடன் சேர்ந்து போருக்குப் புறப்பட்டார்கள்.

‘விவகாரம் ஒத்தி போடப்பட்டிருந்த மூவரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான். அவர்களது நிலைமை எந்தஅளவு மோசமாகி விட்டதெனில், பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்துக் குறுகிவிட்டது. அவர்கள் உயிர் வாழ்வதே கடினமாகி விட்டது”

அந்த மூன்று தோழர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை எனும் ஒட்டுமொத்த சமூகப் புறக்கணிப்பு குறித்துத்தான் இவ்வாறு சித்தரிக்கப் பட்டுள்ளது, குர்ஆனில். ஆம்! பூமி இவ்வளவு பரந்து விரிந்து இருந்தும் இம்மதீனா வாழ் மூன்று தோழர்களின் வாழ்க்கை வட்டம்தான் மிகவும் குறுகலாகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமானது.

இத்தகையதொரு கடுமையான தண்டனை கொடுக்கப்ட்டதன் நோக்கம், போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியிருந்த அந்தத் தோழர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் அவர்கள் ஒருலட்சியக் குழுவைச் சேர்ந்தவர்கள். சத்தியத்திற்குச் சான்று வழங்கும் கடமையை ஏற்றிருந்த, நீதி வழிவந்த, நடுநிலைமிக்க ஒரு சமுதாயத்தின் அங்கத்தினர்கள்! உலகில் மனித குலத்தைச் சீர்திருத்தம் செய்யும் லட்சியத்திற்காகத் தோற்றுவிக்கபட்டிருக்கும் உன்னதமான உம்மத்தினர்கள்! இப்படிப்பட்டவர்களின் சிறுதவறுகூட கண்டிக்கப்படாமல்- களையப்படாமல் நீடித்தால் எதிர்காலத்தில் பின்னடைவுக்கும் பெரும் வீழ்ச்சிக்கும் அது வழிவகுத்து விடலாம். மட்டுமல்ல அத்தகைய கடுமையான நடவடிக்கை எடுத்ததில் ஏனைய தோழர்களுக்கும் தக்க படிப்பினை இருந்தது. ஏன் எல்லாக் காலத்து முஸ்லிம்களுக்கும் நல்ல பாடத்தை அது வழங்குகிறது என்பதே உண்மை.

இந்தத் தொடரில் நயவஞ்சகர்களின் மிக மோசமானநிலை குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்களோ நபியவர்களிடம் பொய்யான சாக்குப் போக்குகள் சொல்லித் தப்பித்து விட்டிருந்தர்கள். அந்த மோசமான நிலை இதுதான்:

‘எனவே நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமலே இருந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் ரிஜ்ஸ் – அசுத்தம் ஆவர்”

அரபி மொழியில் ரிஜ்ஸ் என்றால் நரகல் என்று பொருள். மது நரகல்! மனிதனின் மலம் நரகல்! ஆடுமாடுகளின் சாணம் நரகல்! இதுபோன்று நயவஞ்சகர்களும் நரகல்தான்! (இத்தகைய இழிநிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக)

‘திண்ணமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்கள் மீது திருப்தி கொள்ளவே மாட்டான் ”

நயவஞ்சகத்தை நாம் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் மன்னிப்பையும் இலட்சியமாகக் கொண்டே நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் நம் மீது அதிருப்தி கொண்ட நிலையில் மக்கள் அனைவரும் நம் மீது திருப்தி கொண்டாலும் அது நமக்குப் பயன் அளிக்கப் போவதில்லை! ஆனால் அல்லாஹ் நம்மைப் பொருந்திக் கொண்டானெனில் மக்களின் உள்ளங்களையும் நம் பக்கம் ஈர்த்துக்கொண்டு வருவான். அவர்களும் நம்மைப் பொருந்திக் கொள்ளும்படி செய்வான்!

குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது: ‘எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்காக விரைவில் கருணைமிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான்”

”திண்ணமாக அல்லாஹ், பாவிகளான இத்தகைய மக்கள் மீது திருப்தி கொள்ளவே மாட்டான்”

என்கிற வசனம் பாவங்கள் குறித்து எச்சரிக்கை செய்கிறது. எந்த ஒரு பாவத்தைச் செய்தாலும் அது, அல்லாஹ்வின் கோபத்திற்குத்தான் நம்மை ஆளாக்கும். பாவத்தில் பலவகை உள்ளன. குஃபர் – இறை நிராகரிப்பும் நயவஞ்சகமும் கொடிய பாவங்களாகும். தவிர பெற்றோரை நிந்திப்பது பாவம்! இரத்த பந்தத்தை முறிப்பது பாவம்! ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது பாவம்! ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுவது பாவம்! பொய் பேசுவது பாவம்!

ஆக, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் மன்னிப்பையும் பெற வேண்டுமெனில் பாவங்களை விட்டொழிக்க வேண்டும். அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

அறிவிப்பாளர் அறிமுகம் – கஅப் பின் மாலிக்(ரலி)

கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள் மதீனாவைச் சேர்ந்தவர்கள். மக்காவில் நபி(ஸல்) அவர்களுக்கும் மதீனத்து முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற இரண்டாம் கணவாய் உடன்படிக்கையில் கலந்து கொண்டு தொடக்க காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்! பத்று, தபூக் நீங்கலாக ஏனைய எல்லாப் போர்களிலும் இவர்கள் கலந்து கொண்டார்கள்! நபி(ஸல்)அவர்களுடைய கவிஞர்களுள் இவரும் ஒருவர்! முதுமையினால் கண்பார்வை இழந்திருந்தார்கள். 77 ஆம் வயதில் முஆவியா(ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் ஷாம் தேசத்தில் மரணம் அடைந்தார்கள். ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு மதீனாவில் மரணம் அடைந்தார்கள் என்று மற்றொரு கருத்தும் உள்ளது.

கேள்விகள்

1) தபூக் போருக்குப் புறப்படவிடாமல் நயவஞ்சகர்களைத் தடுத்தது எது?

2) பத்று யுத்த்தின் பின்னணியைச் சுருக்கமாக விளக்கவும்.

3) நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் மறைத்தே பேசுவார்கள் என்பதை விளக்கவும்.

4) கஅப்(ரலி) அவர்கள் தபூக் நோக்கிப் புறப்படாமல் ஏன் தாமிதமானார்? எப்படித் தாமதமானார்?

5) நபி(ஸல்) அவர்கள் தபூக்கை அடைந்த பிறகு தூரத்தில் வெள்ளைவெளேரென ஆடை அணிந்து கானல் அசைவதுபோல் வந்து கொண்டிருந்தவர் யார்? அவரைக் குறித்து கஅப்(ரலி) கூறியது என்ன?

6) கஅப்(ரலி) அவர்களைப் போல் தபூக்கில் கலந்துகொள்ளாமல் மேலும் இரு தோழர்கள் பின்தங்கினார்கள். அவர்களைக் குறித்து கஅப் அவர்கள் கூறியதன் கருத்தை விளக்கவும்.

7) கஅப்(ரலி) அவர்களுக்கும் அபூ கதாதா(ரலி) அவர்களுக்கும் நடந்த உரையாடல் என்ன, அதிலுள்ள படிப்பினைகள் என்ன?

8) கஸ்ஸான் கொடுத்துனுப்பிய கடிதம் பற்றிய செய்தி என்ன? கஅப்(ரலி) அவர்கள் அளித்த பதில் என்ன? அதிலுள்ள படிப்பினைகள் என்ன?

9) ஐம்பது நாட்கள் வரை நீடித்த ஊர்க்கட்டுப்பாட்டின்பொழுது வஹி இறங்குவது தாமதமானதன் தத்துவம் என்ன?

10) அம்மூன்று தோழர்களின் மனைவியர் தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் பிறப்பித்த புதிய கட்டளை என்ன? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?

11) ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அம்மூன்று தோழர்களும் அனுபவித்த துன்பங்களை விளக்கவும்.

12) பனூ குறைளா போர் எப்பொழுது நடைபெற்றது? – எந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் பொறுப்பு ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது?

13) கஅப்(ரலி) அவர்கள் தங்களது தவறுக்குப் பரிகாரமாகவும் அல்லாஹ் அளித்த மன்னிப்புக்கு நன்றியாகவும் என்னென்ன செய்தார்கள்?

14) வாய்மையான தோழர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

15) இந்நிகழ்ச்சியில் நயவஞ்சகர்களின் நிலைமை என்ன? குர்ஆன் வசனம் அவர்களை எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?

16) முஹாஜிர்கள், அன்ஸார்கள், நயவஞ்சகர்கள் இம்மூன்று வார்த்தைகள் பற்றி விளக்கம் எழுதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *