Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » நபியின் எளிய வாழ்க்கை.

நபியின் எளிய வாழ்க்கை.

தருமி அவர்களே, நீங்கள் அடிக்கடி எம்மை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள் நன்றி! உங்களின் மறுமொழியை அனுமதித்தேன். தொழில் நுட்பக் கோளாறோ என்னவோ தெரியவில்லை, மறுமொழி சம்பந்தப்பட்ட பதிவில் வெளி வரவில்லை. மீண்டும் அனுமதித்துப் பார்த்தேன் இது ஏற்கெனவே வந்து விட்டதென்று ஏற்க மறுத்து விட்டது. நீங்கள் கேள்வியாக வைத்திருப்பதால், விளக்கத்தைத் தனிப் பதிவில் சொல்லலாமே என்று இப்பதிவு!

உங்கள் மறுமொழி…

Dharumi has left a new comment on your post “இறைவன் மன்னிக்காத குற்றம்.”:

இன்னொரு சந்தேகம்; அதை இங்கே கேட்பதில் ஒரு வசதி. அதனால் இந்தப் பழைய பதிவுக்கே, தொடர்ச்சியாக இருக்கட்டுமே என்று வந்துள்ளேன்.

இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.

சரியாகச் சொல்லியுள்ளேனா?

மேலும் அறிந்தவை: முஸ்லீம் ஒன்றுக்கு மேல் பெண்களை மணம் செய்யலாமென்றாலும் அவர் தான் மணக்கப் போகும் பெண்ணை / பெண்களை நல்லபடியாகக் காப்பாற்றும் அளவுக்கு வசதியோடு இருக்கவேண்டியது அவசியம்.

(கேள்வி: 1)அந்த அளவு தரித்திரத்தில் வாழ்ந்தவரென்றால் அவரால் எப்படி அத்தனை பெண்களை மனைவியாக்க முடிந்தது? அது தடை செய்யப்பட்டதல்லவா?

நபி இறந்த பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் நபிக்கு வழித்தோன்றல்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால் அவரது சொத்தின் மேல் அவரது மனைவியர்களுக்கு எந்த வித பாத்தியதையும் கிடையாது என்று சொல்லிவிட்டதாகவும் வாசித்தேன்.

(கேள்வி: 2)இறந்தபிறகு தர்க்கம் வரும் அளவு சொத்தை விட்டு விட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறதே? பரம ஏழையாயிருந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவரிடம் எப்படி dispute வரும் அளவு சொத்து?

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by Dharumi to விமர்சனம் – விளக்கம் at 1/23/2007 02:46:43 AM
——————————-

//இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.

சரியாகச் சொல்லியுள்ளேனா?// – தருமி

ஒரு வல்லரிசின் அதிபராக இருந்த நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது, ”ஒரு யூதரிடம் தமது கவச ஆடையை ஈடாக வைத்து, முப்பது பக்கா கோதுமையைப் பெற்றிருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்” இதைச் சேர்த்துக் கொண்டால் நீங்கள் சொல்லியது சரிதான்!

இனி உங்கள் இரு கேள்விக்கும் பொதுவாகவே சொல்லி விடுகிறேன்.

மக்காவைத் துறந்து மதீனா வந்தடைந்த அன்றே தொழுகைக்கான பள்ளிவாசல் கட்டுவதற்காக இரு இளைஞர்களுக்குச் சொந்தமான நிலத்தை விலைக்குக் கேட்டார்கள். இலவசமாகத் தருவோம் விற்க மாட்டோம் என்று இளைஞர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறுதியில், இலவசமாகப் பெறாமல் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதுதான் இன்றைய மஸ்ஜிதுந் நபவி என்று அழைப்படும் மதீனாவில் அமைந்தள்ள நபியின் பள்ளிவாசல்.

பள்ளிவாசல் கட்டுவதற்காக விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் சிறிது இடத்தை ஒதுக்கி, தமக்குத் தங்குவதற்கு மிகச் சிறிய அளவிலான வீடுகளை நபி (ஸல்) அவர்கள் அமைத்துக் கொண்டார்கள்.

ஆன்மீகம், ஆட்சி என இரு தலைமைப் பொறுப்புகள் நபி (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது. அதனால் தலைமைப் பொறுப்புகளை நிர்வாகம் செய்வதற்கே முழு நேரங்களும் சரியாக இருந்தது. மற்ற தொழில்கள் செய்வதற்கான அவகாசங்கள் இருக்கவில்லை. ஆயினும் சமுதாயப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டு, குடும்பத்திற்கான வருவாய்க்கும் வழி செய்திருந்தார்கள்.

நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்து, அதற்கொரு மேய்ப்பவரையும் அமர்த்திக் கொண்டார்கள். ஒரு ஆடு குட்டி போட்டால் பெரிய ஆடு ஒன்றைத் தமக்கென எடுத்துக் கொள்வார்கள். இப்படியே, ஆட்டுப் பண்ணை நூறு ஆடுகளுக்கும் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். மேலும் ஆடுகளிலிருந்து கிடைக்கும் பால், அதுவும் குடும்பத்திற்கு கிடைத்துக் கொண்டிருந்தது. பல மனைவியரைக் கொண்ட நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த வருவாய் பற்றாக் குறையாகவே இருந்திருக்கும்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் போரில் பங்கெடுத்துக் கொண்டார்கள். போரில் தோற்றவர்களின் உடமைகள் வெற்றிப் பெற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வழமை இருந்தது. தோற்றவர்களின் உடமைகள் வெற்றி பெற்ற அணியிலுள்ள போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படும். நபி (ஸல்) அவர்களும் – குதிரையேற்றத்திலும், வாள் வீச்சிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் – போரில் கலந்து கொண்டதால் போர் வீரர்களுக்கு கிடைக்கும் பங்கு அவர்களுக்கும் கிடைத்தது. அப்பவும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு கைபர், பதக் என்ற தோட்டங்கள் கிடைத்தன. அதிலிருந்து கிடைத்த வருமானம் நபியின் குடும்பத்தினருக்கும், ஏழைகளுக்கும் செலவிடப்பட்டு வந்தது. நபியவர்களின் மரணத்திற்கு முன்…

”என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (புகாரி)

நபி (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்து விட்டதால், நபியவர்களின் மரணத்திற்குப்பின் அந்த சொத்துக்கள் ஆட்சியாளர்களின் பொறுப்பில் ஏற்கப்பட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் நபியின் மனைவியருக்கு வாழ்க்கைச் செலவுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களின் மறைவுக்குப் பின் அதுவும் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல், ஊழியர்களின் செலவு போக, அனைத்தும் அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டு தர்மம் செய்யப்பட்டது.

இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரரசின் மன்னராகத் திகழ்ந்தார்கள். அரசு நிதியில் கோதுமைகள், பேரீச்சம் பழங்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்களென குவிந்திருந்து அவற்றை அனுபவிக்கும் முழு அதிகாரம் இருந்தும் எளிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பசியின் காரணமாக வயிற்றில் கல்லையும் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஒருமுறை ஒரு கிராமவாசி வந்து நபி (ஸல்) அவர்களின் மேலாடையை இழுத்தார், முரட்டுத் துணியாக இருந்ததால் நபியவர்களின் பிடரி சிவந்து விட்டது. கிராமவாசி துணியை இழுத்துக் கொண்டே ”முஹம்மதே எனது இரு ஒட்டகங்களின் நிறைய பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திலிருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்திலிருந்தோ நீர் தரப்போவதில்லை” என்று கூறுகிறார். ”இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை தர மாட்டேன்” என்று நபியவர்கள் கூறிய பின்னும் ”நான் விட மாட்டேன்” என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறிய போதும், விட மாட்டேன் என்று மறுத்து ”இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் கருத்து)

மன்னரிடமிருந்து, நாட்டின் குடி மக்கள் தமக்குச் சேர வேண்டியதை உரிமையுடன் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். ஆனாலும் ஸகாத் எனும் தர்மமாக வழங்கப்பட்ட செல்வங்களை தாமும், தம் குடும்பத்தாரும் உண்ணலாகாது என்று தடை விதித்துக் கொண்டார்கள். எளிய வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட நபி (ஸல்) அவர்களை மணம் செய்து கொண்ட பெண்களும் எளிமையை விரும்பியே ஏற்றுக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சொத்துக்காக சச்சரவு நடந்தது உண்மைதான் –

”என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (புகாரி)

இதை அறிவித்த பின் சச்சரவில் நீடித்துக் கொண்டிருக்கவில்லை!

அன்புடன்,
அபூ முஹை

3 comments

  1. இரண்டாவது கேள்விக்குப் பதில் தந்திருக்கிறீர்கள்.
    நன்றி…….

  2. அபூ முஹை

    தருமி உங்கள் வருகைக்கு நன்றி!

    //இரண்டாவது கேள்விக்குப் பதில் தந்திருக்கிறீர்கள். நன்றி…….//

    முதலாவது கேள்விக்கும் பதிலளித்துள்ளேன், முதல் கேள்விக்கான பதிலை நீங்கள் விளங்கும்படி நான் சொல்லவில்லை என்று கருதுகிறேன்!

    //மேலும் அறிந்தவை: முஸ்லீம் ஒன்றுக்கு மேல் பெண்களை மணம் செய்யலாமென்றாலும் அவர் தான் மணக்கப் போகும் பெண்ணை / பெண்களை நல்லபடியாகக் காப்பாற்றும் அளவுக்கு வசதியோடு இருக்கவேண்டியது அவசியம்.

    (கேள்வி: 1)அந்த அளவு தரித்திரத்தில் வாழ்ந்தவரென்றால் அவரால் எப்படி அத்தனை பெண்களை மனைவியாக்க முடிந்தது? அது தடை செய்யப்பட்டதல்லவா?// – தருமி

    முதல் கேள்விக்கு முன் நீங்கள் எழுதியுள்ள விளக்கத்தில் அவசியம் என்பது உறுதியாக அவசியம் என்பதல்ல. கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டள்ள தடை செய்யப்பட்டதல்லவா? என்ற கேள்வியும் வசதியற்றவர்கள் திருமணமே செய்து கொள்ளக்கூடாது, அல்லது பலதார மணம் செய்து கொள்ளக்கூடாது என வற்புறுத்துமேயானால் அது தவறானக் கருத்து.

    ஏழ்மையில் இருப்பவர்கள் திருமணம் செய்வது (ஹராம்) விலக்கப்பட்டிருக்கிறது – தடை செய்யப்பட்டிருக்கிறது என்ற கண்டிப்புடன் கூடாது என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை.

    குடும்பம் நடத்தத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டுவது ஆண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதால், குடும்பப் பராமரிப்புக்கு வசதி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளட்டும் என்பது ஒரு நிபந்தனையே தவிர, தடையல்ல. தனக்கு ஆடம்பரம் எதுவும் தேவையில்லை காஞ்சியோ, கூழோ நீ குடிப்பதை எனக்கும் தா என்று ஒரு பெண், ஒரு எளியவரை மணக்க முன் வந்தால், அது அவர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கை அதற்கு தடையேதுமில்லை!

    //எளிய வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட நபி (ஸல்) அவர்களை மணம் செய்து கொண்ட பெண்களும் எளிமையை விரும்பியே ஏற்றுக் கொண்டார்கள்.// – அபூ முஹை

    தடை செய்யப்பட்டதல்லவா? என்று நீங்கள் எழுதியதை நீக்கி விட்டால்… எளிமை ஒரு தடையே இல்லை! திருமணத்திற்கு பெண்ணின் விருப்பம் இருந்தால் போதும், அதுவே பலதார மணத்திற்கும்.

    அன்புடன்,
    அபூ முஹை

  3. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *