Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » புனித மாதங்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

புனித மாதங்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

‘(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்ட (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவற்று)க்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’ (2:194)

புனித மாதங்களில் போர் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. அந்தப் புனித மாதங்களில் எதிரிகள் போரை ஆரம்பித்தால் நாம் எதிர் தாக்குதல் செய்யலாம். அந்த சந்தர்ப்பத்தில் கூட வரம்பு மீறக் கூடாது என அற்புதமான போர் விதிகளை இந்த வசனம் கூறுகின்றது.

‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கையானது, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவற்றில்; (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.’
(9:36)

புனித மாதங்கள் நான்கு என இந்த வசனம் கூறுகின்றது. இந்தக் குறித்த மாதங்கள் போர் செய்யத் தடை செய்யப்பட்ட மாதங்களாகும்.

மக்கத்துக் காபிர்கள் முஹம்மத்(ச) அவர்களுடன் பத்து வருடங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருந்தனர். அந்த ஒப்பந்தத்தை அவர்களே முறித்தனர். அவர்களுக்கு எதிராக நபி(ச) அவர்கள் நடவடிக்கை எடுக்கும் போது கூட இந்த நான்கு மாத கால அவகாசத்தைக் கொடுத்தார்கள்.

‘இணைவைப்பாளர்களில் யாருடன் நீங்கள் உடன்படிக்கை செய்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக்கொள்ளும் (அறிவிப்பாகும்.)’

‘எனவே நீங்கள் நான்கு மாதங்கள் இப்பூமியில் சுற்றித் திரியுங்கள். நிச்சயமாக உங்களால் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் இந்நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’
(9:1-2)

எனவே, போர் செய்வது தடுக்கப்பட்ட இம்மாதத்தில் போர் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பதில் நபி(ச) அவர்கள் மிகுந்த அக்கறையைக் காட்டியுள்ளமையை அறியலாம்.

நபி(ச) அவர்கள் உளவு வேலைக்காக ஒரு குழுவினரை மதீனா எல்லைக்கு அனுப்பினார்கள். அவர்கள் எதிரிகளைச் சந்தித்த போது போர் செய்வது தடுக்கப்பட்ட மாதத்தில் அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்திவிட்டனர். இதை நபி(ச) அவர்கள் அங்கீகரிக்காததுடன் அவர்கள் மீது தனது கடுமையான அதிருப்தியையும் வெளியிட்டார்கள்.

மக்கத்துக் காபிர்களைப் பொருத்த வரையில் முஸ்லிம்கள் பலரைக் கொலை செய்தவர்கள்; ஊரை விட்டும் விரட்டியவர்கள்; உடைமைகளைச் சூறையாடியவர்கள். அவர்கள் முஸ்லிம்களை மக்காவிற்குள் நுழையவிடாமல் தடுத்தவர்கள் என பல தவறுகளைச் செய்தவர்கள். அவர்கள் மீதுதான் தாக்குதல் நடாத்தப்பட்டது. இருப்பினும் நபி(ச) அவர்கள் தனது தோழர்கள் மீது கடுமையான அதிருப்தியை வெளியிட்டார்கள். அச்சந்தர்ப்பத்தில் பின்வரும் வசனம் அருளப்பட்டது.

‘(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அதில் போர் புரிவது பெரும் குற்றமாகும். (எனினும்) அல்லாஹ்வின் பாதையை விட்டும், (மக்களைத்) தடுப்பதும் அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுப்பதும் அங்குள்ளோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் குற்றமாகும். மேலும், குழப்பம் விளைவிப்பது கொலையை விடப் பெரும் குற்றமாகும் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்களுக்கு முடியுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களைத் திருப்புகின்ற வரை உங்களுடன் அவர்கள் போரிட்டுக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் எவர் தனது மார்க்கத்தை விட்டும் மாறி காபிராக மரணித்தும் விடுகின்றாரோ, அவர்களது செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகளாவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.’ (2:217)

இந்த வசனமும் புனித மாதங்களில் போர் செய்வது கொடிய குற்றம் என்பதை உறுதி செய்கின்றது. மக்கத்துக் காபிர்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிடும் போது அது ஒன்றும் பெரிதில்லை என்று கூறப்படுகின்றது.

எதிரிகளுடனும் போர்க் களத்தில் கூட வரம்பு மீறாது நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

அடுத்து, புனித மாதங்கள் பற்றி அல்குர்ஆன் பேசினாலும் அம்மாதங்கள் எவையென அல்குர்ஆனில் கூறப்படவில்லை. அவை ‘துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ரஜப் மாதங்களாகும். இது குறித்து நபிமொழிகளே பேசுகின்றன. ‘குர்ஆன் மட்டும் போதும், நபிமொழி தேவையில்லை’ என்று வாதிடும் வழிகேடர்களால் நபிமொழிகளின் துணை இல்லாமல் அந்த நான்கு மாதங்களும் எவை என்பதைக் கண்டறியவே முதுடியாது. இதிலிருந்து குர்ஆன் மட்டுமன்றி நபிமொழியும் வஹீ எனும் வேத வெளிப்பாடுதான் என்ற உண்மையையும் உறுதி செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *