Featured Posts
Home » Featured » ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா?

ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா?

-மவ்லவி அப்பாஸ் அலீ MISc-

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி வந்தால் முதலில் அந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். சஹீஹான ஹதீஸிற்குரிய அனைத்து நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது நபி(ஸல்) அவர்களின் கூற்றாக எடுத்துக்கொள்ளப்படும். ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்குரிய நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டாலும் அது பலவீனமான செய்தியாகிவிடும். இதன் பின் அதை நபி(ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி அறிவிக்கக்கூடாது. மேலும் அதனடிப்படையில் மார்க்கத் தீர்ப்பும் தரக்கூடாது.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை ஆராயும்போது இத்துறையில் பாண்டித்துவம் பெற்ற நமக்கு முன்னால் வாழ்ந்த நல்லறிஞர்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் என்பதையும் அவசியம் கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களே இவ்விசயத்தில் நம்மை விட நன்கறிந்தவர்கள்.

கப்று வழிபாட்டை கண்டித்து தவ்ஹீத் பேசிய கேரளத்து அறிஞர்களில் சிலர் இந்த ஒழுங்குமுறைகளை கவனிக்கத் தவறிவிட்டனர். தன் கண்ணில்பட்ட செய்திகளை சரியாக ஆராயாமல் மக்களிடம் எடுத்துச் சொன்னதால் இதன் மூலம் கேரளாவில் தவ்ஹீத் சிந்தனை உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற குழப்பங்களும் பிரிவினைகளும் தோன்றிவிட்டது.

இந்த குழப்பத்திற்கு காரணமாக அமைந்த பலவீனமான ஒரு செய்தியைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக அறிந்துகொள்வோம்.

எந்த மனிதனும் இல்லாத ஒரு இடத்தில் நமக்கு ஆபத்துகள் ஏற்பட்டால் அப்போது வானவர்களை நாம் அழைத்து உதவி தேடலாம். நம் கண்களுக்குத் தெரியாத வானவர்கள் அங்கே இருப்பார்கள் என்ற கருத்தில் ஒரு பலவீனமான செய்தி இடம்பெற்றுள்ளது. இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாம் எனக் கூறும் கப்று வழிபாட்டுக்காரர்கள் இதனை தங்கள் வழிகெட்ட கொள்கைக்கு மிகப்பெரிய ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள்.

பலவீனமான செய்தி 1
Untitled-1

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஏதாவது ஒன்றை தவறவிட்டால் அல்லது நீங்கள் மனித இனம் இல்லாத பகுதியில் இருக்கும் போது உதவி தேவைப்பட்டால் அப்போது அல்லாஹ்வின் அடியார்களே. என்னை காப்பாற்றுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே என்னை காப்பாற்றுங்கள். என்று கூறட்டும். ஏனென்றால் நம் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் இருக்கின்றார்கள். இது அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது. (தப்ரானீ (14146))

தப்ரானியில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பில் ஒரு அறிவிப்பாளரின் பெயர் தவறாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை நூலாசிரியர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் என்று தவறாக கூறியுள்ளார்.

அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் பலவீனமானவர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று அபூ ஹாதிம் கூறியுள்ளார். இவர் நேர்மையானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

அப்துர் ரஹ்மான் இந்த செய்தியை தன்னுடைய தந்தை ஷரீக் பின் அப்தில்லாஹ் வழியாக அறிவிக்கின்றார். ஷரீக் பின் அப்தில்லாஹ்வும் நினைவாற்றல் குறைபாட்டின் காரணமாக பலவீனமானவர் ஆவார்.

இவர் நேர்மையானவர் என்றாலும் மிகவும் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என யஃகூப் பின் ஷைபா கூறியுள்ளார். ஹதீஸ்களை தவறாக மாற்றி அறிவிப்பவர் என இப்ராஹீம் பின் யஃகூப் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார். மற்றும் பலரும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (தஹ்தீபுல் கமால்)

மேலும் இவர் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையை செய்யக்கூடியவர் என்றும் யஹ்யா பின் கத்தான் கூறியுள்ளார். இவர் மேற்கண்ட செய்தியை யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாக கேட்டதாக சொல்லவில்லை. இதன் காரணத்தாலும் இந்த செய்தி பலவீனமாகின்றது.

இத்துடன் இந்த அறிவிப்பாளர் தொடரில் முறிவும் உள்ளது. இந்த செய்தியை உத்பா பின் கஸ்வான் என்ற நபித்தோழரிடமிருந்து ஸைத் பின் அலீ என்பவர் அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் நீண்ட கால இடைவெளி உள்ளது.

நபித்தோழர் உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 17 வது வருடத்தில் மரணிக்கின்றார். ஆனால் ஸைத் பின் அலீ ஹிஜ்ரீ 80 வது வருடத்தில் தான் பிறக்கின்றார். உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்கள் மரணித்து 63 வருடங்களுக்குப் பிறகே ஸைத் பின் அலீ பிறக்கின்றார். எனவே இவ்விருவருக்கும் இடையில் பலர் விடுபட்டுள்ளனர். இது மோசமான அறிவிப்பாளர் தொடர் முறிவாகும். இதன் காரணத்தாலும் இந்த செய்தி பலவீனமாக உள்ளது.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீஜ‚ல் அத்கார் என்ற நூலில் இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவுள்ளது என்று கூறியுள்ளார். இமாம் ஹைஸமீ அவர்கள் மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஸைத் பின் அலீ உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்களை அடையவில்லை என்றும் இதன் அறிவிப்பாளர்களில் சிலர் பலவீனமானவர்கள் என்றும் கூறியுள்ளார். அல்பானீ அவர்களும் மேற்கண்ட காரணங்களால் இந்த செய்தி பலவீனமானது என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் இந்த செய்தி நான்கு காரணங்களால் பலவீனமாக உள்ளது.

1. அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் பலவீனமானவர்.
2. ஷரீக் பின் அப்தில்லாஹ் பலவீனமானவர்
3. ஷரீக் பின் அப்தில்லாஹ் தத்லீஸ் செய்யக்கூடியவர்.
4. அறிவிப்பாளர் தொடர் முறிவு

இப்படிப்பட்ட மிகவும் பலவீனமான செய்தியைத் தான் கப்று வணங்கிகள் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாக காட்டுகின்றனர். மக்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடுகின்றனர்.

பலவீனமான அறிவிப்பு 2
இதேக் கருத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தாக இன்னொரு அறிவிப்பும் உள்ளது. இதுவும் பலவீனமானதாகும்.

Untitled-2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் பாலைவனப் பகுதியில் இருக்கும் போது அவருடைய வாகனம் தப்பிவிட்டால் அவர் அல்லாஹ்வின் அடியார்களே என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள். அல்லாஹ்வின் அடியார்களே என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள் என்று கூறட்டும். ஏனென்றால் பூமியில் அல்லாஹ்விற்காக சிலர் இருக்கின்றனர். அவர்கள் அதை உங்களிடத்தில் திருப்பி அனுப்புவார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
நூல் : தப்ரானி

இந்த செய்தியில் மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை நம்பகமானவர் என்று எந்த அறிகரும் நற்சான்று அளிக்கவில்லை. இவர் யார் என அறியப்படாதவர் என அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களை தவறுதலாக அறிவிப்பவர் என இப்னு அதீ கூறியுள்ளார். (லிசானுல் மீசான்)

இந்த செய்தியில் இன்னொரு குறையும் உள்ளது. இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் புரைதா என்பவர் அறிவிக்கின்றார். இவ்விருவருக்கிடையே அறிவிப்பாளர் தொடரில் முறிபு இருப்பதாக இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 32ல் மரணிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் புரைதா ஹிஜ்ரீ 105 ல் மரணிக்கின்றார். இருவரின் மரணத்திற்கும் இடையில் 73 வருடங்கள் உள்ளது. எனவே அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்பதால் இதன் தொடர் முறிவுள்ளதாகின்றது. இதன் காரணத்தாலும் இந்த செய்தி பலவீனமாக உள்ளது.

பலவீனமான அறிவிப்பு 3
இந்த செய்திக்கு இன்னொரு பலவீனமான அறிவிப்பு உள்ளது.

Untitled-3

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யாரும் இல்லாத பூமியில் வெட்ட வெளியில் உங்களில் ஒருவருடைய வாகனம் அல்லது ஒட்டகம் தப்பி ஓடிவிட்டால் அவர் அல்லாஹ்வின் அடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறட்டும். அவருக்கு உதவி செய்யப்படும். (நூல் : முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா)

இந்த செய்தியில் இரண்டு பலவீனங்கள் உள்ளது. முதலாவது பலவீனம் என்னவென்றால் இதில் இடம்பெறும் முஹம்மது பின் இஸ்ஹாக் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் தான் நேரடியாக கேட்டதை தெளிவுபடுத்தும் வாசகத்தை கூறினாலே இவரின் அறிவிப்பு ஏற்கப்படும். ஆனால் மேலுள்ள அறிவிப்பில் இவர் அப்பான் பின் ஸாலிஹிடம் தான் நேரடியாக கேட்டதாக கூறவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

இரண்டாவது பலவீனம் என்னவென்றால் இந்த செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அப்பான் பின் ஸாலிஹ் என்பவர் தான் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழர் அல்ல. இவர் ஹிஜ்ரீ 100க்குப் பிறகு மரணிக்கின்றார். இவர் எந்த நபித்தோழரையும் சந்திக்கவில்லை. எனவே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலர் விடுபட்டிருக்கிறார்கள். விடுபட்டவர்கள் யார்? என்ற விபரம் தெரியாத காரணத்தால் இது பலவீனமாக உள்ளது.

பலவீனமான அறிவிப்பு 4

Untitled-4

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மரத்தின் இழைகள் கீழே விழுந்தாலும் அதை பதிவு செய்யும் வானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே பயனத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் அடியார்களே உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் என்று அழைக்கட்டும்.
நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

இந்த அறிவிப்பில் உசாமா பின் ஸைத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள் யஹ்யா பின் மயீன் அபூ ஹாதிம் நஸாயீ இப்னு சஅத் இப்னு ஹிப்பான் அபூ தாவுத் இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்)

இவர் இந்த செய்தியை அறிவிக்கையில் பலருக்கு இதை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். அபூகாலித் என்பவருக்கு மட்டும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இவர் இந்த செய்தியை சரியான அடிப்படையில் அறிவிக்காமல் குழம்பியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

இத்துடன் இவரை விட வலுமையானவரான முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்புக்கு மாற்றமாகவும் இவருடைய அறிவிப்பு உள்ளது.

முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள் அப்பான் பின் ஸாலிஹிடமிருந்து அறிவிக்கையில் முழு அறிவிப்பாளர் தொடரையும் கூறாமல் முர்சலாகவே அறிவித்தார். அதாவது நபித்தோழரை குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். மூன்றாவது பலவீனமான அறிவிப்பாக மேலே நாம் இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

ஆனால் உசாமா பின் ஸைத் அவர்கள் அப்பான் பின் சாலிஹிடமிருந்து அறிவிக்கையில் முர்சலாக அறிவிக்காமல் முழு அறிவிப்பாளர் தொடரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதால் இந்த முரண்பாட்டின் மூலம் இவர் இந்த செய்தியை சரியான அடிப்படையில் அறிவிக்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இப்படிப்பட்ட பலவீனமான செய்தியை அடிப்படையாக வைத்து அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய உதவியை வானவர்களிடமோ இந்த உலகத்தை விட்டும் உலகத்தின் அனைத்து தொடர்புகளை விட்டும் முழுவதுமாக பிரிந்துவிட்ட இறந்தவர்களிடமோ கேட்க முடியாது.

மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் நமக்கு ஆபத்து ஏற்பட்டால் பிடரி நரம்பை விட நமக்கு மிக அருகில் இருக்கும் சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ்வை மட்டுமே நாம் அழைக்க வேண்டும். அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இறந்தவர்களை அழைப்பதற்கு ஆதாரமாகுமா?
கப்று வணக்கத்தை நியாயப்படுத்துவதற்கு ஒரு ஆதாரப்பூர்வமான செய்தி கூட கிடையாது. எனவே தான் இறந்தவர்களை பிரார்த்திப்பவர்கள் பிரபல்யமான ஹதீஸ் நூற்களான புகாரி முஸ்லிம் திர்மிதீ அஹ்மது போன்ற ஹதீஸ் நூற்களை விட்டுவிட்டு வேறு நூற்களில் யாருக்கும் தெரியாத பலவீனமான செய்தியை தேடிப்பிடித்து தங்களின் தவறான கொள்கையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் பூமியில் இருக்கின்றார்கள் என்று இந்த செய்தி கூறுகின்றது. எனவே இந்த செய்தி பூமியில் உள்ளவர்களைப் பற்றிப் பேசுகின்றது.

மனிதர்கள் இறந்துவிட்டால் இந்த பூமியை விட்டுப் பிரிந்து மறைவான கப்று வாழ்க்கைக்குச் சென்றுவிடுகின்றனர். கப்றில் விசாரணை செய்யப்பட்டு நல்லவராக இருந்தால் கியாமத் நாள் வரும் வரை கப்றில் உறங்கிக்கொண்டே இருப்பார்கள். இறந்தவர் தீயவராக இருந்தால் கியாமத் நாள் வரும் வரை வேதனை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார். இச்செய்தி இறந்தவர்களைப் பற்றி பேசவில்லை. அவ்வாறிருக்க இதை வைத்துக்கொண்டு இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்று எவ்வாறு வாதிட முடியும்?

இந்த செய்தி மனிதர்கள் அல்லாத வேறு ஒரு அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி பேசுகின்றது. அந்தப் படைப்பு வானவர்கள் தான் என்று இது தொடர்பாக வரும் வேறொரு பலவீனமான அறிவிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

Untitled-5

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மரத்தின் இழைகள் கீழே விழுந்தாலும் அதை பதிவு செய்யும் வானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே பயனத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் அடியார்களே உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் என்று அழைக்கட்டும். நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக அல்லாஹ் சில வானவர்களை பூமியில் ஏற்படுத்தியுள்ளான். எந்த மனிதரும் இல்லாத இடத்தில் உதவி தேவைப்பட்டால் அந்த வானவர்களை அழைக்கலாம் என்று தான் இந்த செய்தி கூறுகின்றது. இந்த செய்தியைக் கொண்டு ஜின்களிடம் உதவி தேடலாம் என்று கூறுவதும் தவறானதாகும். ஏனென்றால் இச்செய்தி ஜின்களைப் பற்றியும் பேசவில்லை.

கப்று வழிபாட்டுக்காரர்கள் இச்செய்தியில் கூறப்பட்டது போல் மனிதர்கள் இல்லாத இடத்தில் ஆபத்து ஏற்படும் போது வானவர்களை அழைப்பதில்லை. மாறாக சதா காலமும் இறந்துவிட்டவர்களை அழைத்து வருகின்றனர். இவர்களின் கொள்கைக்கும் செயலுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத செய்திகளை கொண்டு வந்து தங்களின் வழிகெட்ட கொள்கையை நியாயப்படுத்த முயற்சிப்பதைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் இவர்களால் காட்ட இயலாது.

யாரும் இல்லாத நேரத்தில் தேவை ஏற்படும் போது வானவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்ற கருத்தும் தவறானதாகும். ஏனென்றால் இந்தக் கருத்தைக் கூறும் மேற்கண்ட செய்திகள் பலவீனமாக உள்ளது.

நாம் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒவ்வொரு தொழுகையிலும் அல்பாத்திஹா அத்தியாயத்தில் உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என் நாம் கூற வேண்டும். நாம் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற பாடத்தை இதன் மூலம் அல்லாஹ் நமக்கு கற்றுத்தருகிறான்.

வானவர்களாக இருந்தாலும் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களாலும் உதவ முடியாது. எனவே நமக்கு எப்படிப்பட்ட பாதிப்பு எந்த இடத்தில் ஏற்பட்டாலும் சர்வ வல்லமையும் படைத்த வல்ல ரஹ்மானை மட்டுமே அழைக்க வேண்டும்.

Also read by pdf eBook

One comment

  1. அஸ்ஸலாமு அலைக்கும்!!
    மௌலவி அப்பாஸ் அலி அவர்களுக்கு, உங்களது ஒரு பதிவை இஸ்லாம் கல்வி காமில் ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா? என்ற தலைப்பின் கீழ் படித்தேன், அதில் கப்று வழிபாட்டை கண்டித்து தவ்ஹீத் பேசிய கேரளத்து அறிஞர்களில் சிலர் இந்த ஒழுங்குமுறைகளை கவனிக்கத் தவறிவிட்டனர் என்றும் மேலும் செய்திகளை சரியாக ஆராயாமல் மக்களிடம் எடுத்துச் சொன்னதால் இதன் மூலம் கேரளாவில் தவ்ஹீத் சிந்தனை உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற குழப்பங்களும் பிரிவினைகளும் தோன்றிவிட்டது என்றும் பதிந்துள்ளீர்கள்.மேற்கூறிய விஷயம் சம்பந்தமாக தங்களிடம் எனது சந்தேகத்தை கேள்விகளாக கீழே தந்துள்ளேன், உங்களது பதிலின் மூலமாக எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு தாழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
    1. தன் கண்ணில்பட்ட செய்திகளை சரியாக ஆராயாமல் மக்களிடம் எடுத்துச் சொன்ன அந்த தவ்ஹீத் பிரிவு ஏது?(கேரளாவில் தவ்ஹீத்குழுக்கள் பல உள்ளன )
    2. இதன் மூலம் கேரளாவில் தவ்ஹீத் சிந்தனை உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற குழப்பங்களும் பிரிவினைகளும் தோன்றிவிட்டது. குழப்பம் ஏற்பட்டு பிரிந்து போன பிரிவுகளும் அதன் உலமாக்களையும் தெரிய படுத்தவும்.
    3. மேலே கேட்ட கேள்விகளுக்கு தங்களிடம் பதில் இல்லையென்றால் பின்பு கேரளாவில் தாங்கள் எடுத்து காட்டிய அந்த பஹீனமான ஹதீஸின் கருத்துக்களை அல்லது அந்த ஹதீஸை ஒப்பு கொள்ள கூடிய தங்களது தவறான கொள்கைகளுக்கு ஆதாரமாக இந்த ஹதீஸை காட்ட கூடிய அந்த கூட்டம் யார்.?
    தங்களின் பதிலை ஆவலுடன் காத்திருக்கும் உங்களதும் மௌலவி முஜாஹித் இப்னு ரஸின் அவர்களின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் அதிகமாக விரும்பும் இறைவனின் அடிமை
    ABU SHEBIN
    AL-JUBAIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *