Home » பொதுவானவை » தலையங்கம் » வெனிஸியூலா முஸ்லிம்கள்

வெனிஸியூலா முஸ்லிம்கள்

மவ்லவி. மஸ்ஊத் ஸலஃபி
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

 

(இக்கட்டுரை முல்தகா அஹ்லில் ஹதீத் இணையத்தளத்தில் பிரசுரமான கலானிதி அஹ்மத் அப்துஹு அவர்களின் ஆக்கத்தைத் தழுவியது)

வெனிஸியூலா 21 மாநிலங்களைக் கொண்டமைந்த ஒரு குடியரசாகும். இஸ்பானிய மொழியை அரச கரும மொழியாகக் கொண்ட இந்நாட்டின் சனத்தொகை 30 மில்லியனை எட்டுகிறது. இதில் முஸ்லிம்களின் சனத்தொகை சுமார் ஓரிலட்சமாகும்.

வெனிஸியூலாவிற்குள் எப்போது இஸ்லாம் நுழைந்தது?
பெரும்பாலான தென்னமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகளைப் போன்று 15-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் வெனிஸியூலாவிலும் இஸ்லாம் நுழைந்தது. ஆபிரிக்காப் பிராந்தியத்திலிருந்து ஆயிரக் கணக்கான முஸ்லிம் அடிமைகளை இஸ்பானியர்கள் வெனிஸியூலாவிற்குக் கொண்டு சென்றதைப் போன்று ஸ்பைனிலிருந்தும் முஸ்லிம்களைத் தம்முடன் வெனிஸியூலாவிற்கு இஸ்பானியர்கள் கூட்டிச் சென்றனர். ஆனாலும் இஸ்பானியக் காலணித்துவம் முஸ்லிம்களுக் கெதிராக மேற்கொண்ட அடக்கு முறைகள், மனிதப் படுகொலைகள், கிருஸ்தவமயமாக்கல் நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் இருப்பானது வெனிஸியூலாவில் மறையத் துவங்கியது. இஸ்பானியக் காலணித்துவத்திலிருந்து 19-ம் நூற்றாண்டில் வெனிஸியூலா விடுதலையானது. 20-ம் நூற்றாண்டில் ஸிரியா, லெபனான், பலஸ்தீனத்திலிருந்து மக்கள் வெனிஸியூலாவுக்குச் செல்ல ஆரம்பித்தனர். வெனிஸியூலாவில் இஸ்லாம் மறுமலர்ச்சி பெற இவர்களே பிரதான காரணமாகும். இருபதாம் நூற்றாண்டின் அரைவாசியில் வெனிஸியூலாவிற்கு ஏழைகளாக வந்த அரேபிய முஸ்லிம்கள், தமது திறமைகளாலும் உழைப்பாலும் நாளடைவில் அந்நாட்டைக் கட்டியெழுப்புமளவுக்கு எழுச்சி பெற்றனர். இதன் காரணமாக 70, 80-களில் அந்நாட்டின் பல பகுதிகளில் சிறியளவிலான இஸ்லாமிய வழிகாட்டல் மையங்கள், சிறியளவிலான மஸ்ஜித்கள் உருவாக்கப்பட்டன. சில வருடங்களுக்கு முன்னரே இவைகள் விசாலமாக்கப்பட்டதுடன் பெரியளவிலான மஸ்ஜித்கள், மதரஸாக்கள், அடக்கஸ்தலங்களும் அந்நாட்டின் சில கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெனிஸியூலாவின் பல நரகங்களில் முஸ்லிம்கள் பரந்து வாழ்கின்றனர். தலைநகர் கரகாஸில்தான் முஸ்லிம்களின் தொகை அதிகமாகவுள்ளது. வெலன்ஸியா, பர்கிஸிமிடோ போன்ற நகரங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். வெனிஸியூலாவில் அஹ்லுஸ்ஸுன்னாவின் அடிப்படையில் சுமார் 15 மத்திய நிலையங்கள் காணப்படுகின்றன. தலை நகர் கரகாஸில் மஸ்ஜிதுல் இப்ராஹீமீ எனும் மஸ்ஜித் அமைந்துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் மிக உயரமான மினாராவைக் கொண்டுள்ள இந்த மஸ்ஜித் லத்தீன் அமெரிக்காவில் இஸ்லாமிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. வகுப்பறைகள், அலுவலகங்கள், விளையாட்டரங்கம் போன்றவை இம்மஸ்ஜிதுக்குள் அமைந்துள்ளன.

மர்கிரீதா நகரில் மிகப் பெரும் தொழுமிடம், மிகப்பெரும் இஸ்லாமியப் பாடசாலை போன்றன காணப்படுவதுடன் 30,000 சதுர அடிகளைக் கொண்ட மிகப் பெரும் அடக்கஸ்தலமும் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே இது திறந்து வைக்கப்பட்டது. வெலன்ஸியா நகரில் ஒரு இஸ்லாமிய பாடசாலையும், முஸ்லிம்களின் அடக்கஸ்தலமும் அமைந்துள்ளன. இந்நகரில் பலஸ்தீன இஸ்லாமிய வழிகாட்டல் மையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதைப் போன்று ஏனைய நகரங்களிலும் இவ்வாறான மஸ்ஜித்கள், தொழுமிடங்கள், பாடசாலைகள் காணப்படுகின்றன.

வெனிஸியூலாவில் தஃவா நடவடிக்கைகள்
அண்மைய வருடங்களாக வெனிஸியூலாவில் குறிப்பிடத்தக்களவில் இஸ்லாமிய எழுச்சியை காண முடிகின்றது. அங்கு செயற்படுகின்ற இஸ்லாமிய அமைப்புக்களின் உழைப்பினால் இம்மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தஃவா நடவடிக்கைகளுக்காக வெனிஸியூலா தொடர்பாடல் மத்திய நிலையம் என்ற மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய வழிகாட்டல்கள், உரைகள், கருத்தரங்குகள் போன்ற சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன. மர்கிரீதா இஸ்லாமிய சமூகத்தின் ஒத்துழைப்புடன் இவை மேற்கொள்ளப்படுகின்றன.

வெனிஸியூலா தொடர்பாடல் மத்திய நிலையத்தின் சேவைகள்

 1. அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் எகிப்திலுள்ள ஜம்இய்யத்து தப்லீகில் இஸ்லாமி என்றமைப்பினால் இஸ்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நூற்கள், பிரசுரங்கள் இந்நிருவனத்தால் வெனிஸியூலாவின் பல நகரங்களில் வினியோகிக்கப்படுகின்றன.
 2. வானொலி, பிராந்திய பத்திரிகைகள் மூலம் இஸ்லாம் பற்றிய செய்திகள் அலாவப்படுகின்றன.
 3. இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களுக்கு மார்க்கக்கல்வி, அரபு மொழி போதனைகளுக்காக கருத்தரங்குகள் ஏற்படுத்தப்பட்டு, தஃவாவுக்காக அவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.
 4. முஸ்லிம்களுக்காகவும், ஏனையோருக்காகவும் தஃவா, கலாசார ஒன்று கூடல்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இந்நடவடிக்கைகளால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

வெனிஸியூலா முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

லத்தீன் அமெரிக்க முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர் நோக்குகின்றனர். அவற்றுள் சில :

 1. வெனிஸியூலாவில் காணப்படும் அமைதியின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல் இஸ்லாமிய நிருவனங்களையும் பாதித்துள்ளது.
 2. வெனிஸியூலாவின் பொருளாதார வீழ்ச்சியால் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது இங்குள்ள முஸ்லிம் சமூகத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. அன்றாட உணவுக்காக உழைக்க வேண்டிய நிர்பந்தம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதால் தஃவா நடவடிக்கைகளில் பங்கு கொள்வதில் அவர்கள் நெருக்கடிக்குள்ளாகின்றனர்.
 3. வெனிஸியூலாவில் முழு அளவிலான இஸ்லாமிய சூழல் இல்லாமை, அங்குள்ள முஸ்லிம்களை பெருமளவில் பலகீனப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்களில் பலர் கிறித்தவ மதத்தைத் தழுவியுள்ளனர்.
 4. மார்க்கக் கல்வி, அரபு மொழிக் கற்கைகளுக்காக அரபு நாட்டுப் புலமைப் பரிசில்கள் இங்குள்ள மாணவர்களுக்குக் கிடைப்பது மிக அரிதாகக் காணப்படுகின்றது.
 5. இஸ்பானிய மொழியில் தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்கள் இல்லாமை மிகப்பெரும் குறையாகவுள்ளது. இங்கு மார்க்க அறிஞர்கள் காணப்பட்ட பேதிலும் அவர்களுக்கு இஸ்பானிய மொழியில் போதுமான தேர்ச்சி கிடையாது.
 6. திருமணமாகாத முஸ்லிம் பெண்களின் தொகை கூடிக்கொண்டு செல்கின்றது. இங்குள்ள முஸ்லிம் வாலிபர்கள் தமது பூர்வீகப் பெண்களை மணக்கின்றனர் அல்லது முஸ்லிமல்லாத பெண்களை மணக்கின்றனர். வெனிஸியூலா முஸ்லிம்கள் எதிர்கொள்ளவேண்டிய மிகப்பாரிய சவால்களில் இதுவுமொன்றாகும்.
 7. இங்குள்ள அரேபிய முஸ்லிம்களுக்கும் வெனிஸியூலாவின் பூர்வீக முஸ்லிம்களுக்குமிடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றமையினால் வெனிஸியூலாவின் பூர்வீக முஸ்லிம்களின் பிரச்சிணைகள் பற்றிய தகவல்கள் அந்நாட்டு அரபு முஸ்லிம்களுக்குக் கிடைப்பதில்லை.
 8. அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இங்குள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இல்லை.

மேற்கூறப்பட்ட சவால்களை எதிர் கொள்ளப் போதுமான வழிவகைகள்

 1. மார்க்க அறிவு, அரபு மொழியில் தேர்ச்சி பெறுவதற்காக இங்குள்ள மாணவர்களுக்கு அரபு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட வேண்டும்.
 2. முஸ்லிம்களிடம் மார்க்க அறிவையும், சூழலலையும் ஏற்படுத்துவதற்காக பரந்தளவில் முஸ்லிம் பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
 3. இங்குள்ள முஸ்லிம் யுவதிகளை மணப்பதற்காக இங்குள்ள முஸ்லிம் வாலிபர்களுக்கு ஆன்மீக, சடரீதியான உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
 4. இங்கு காணப்படும் இஸ்லாமிய வழிகாட்டல் மையங்களுடன் வெனிஸியூலா முஸ்லிம்கள் இணைக்கப்பட்டு இந்நிருவனங்கள் வாயிலாக அவர்களின் பிரச்சிணைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
 5. இங்குள்ள இஸ்லாமிய அறிஞர்களுக்கு இஸ்பானிய மொழியைக் கற்பிப்பதற்காகக் கற்கை நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 6. புதிதாக இஸ்லாத்தைத் தழுவியோருக்கு இஸ்லாமிய அடிப்டை அறிவு, அரபு மொழிப் போதனைகள் வழங்கப்பட வேண்டும்.
 7. இங்குள்ள முஸ்லிம்களுக்கிடையில் பிணைப்பையும் ஐக்கியத்தையும் உண்டாக்குவதற்காக இப்தார் ஒன்று கூடல் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்டுள்ளவற்றில் பெரும்பாலானவை மர்கிரீதா நகரில் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்நகரில் வாழும் முஸ்லிம்களின் ஒத்துழைப்புடன் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *