Featured Posts
Home » நூல்கள் » இறைநேசர்களிடம் உதவி தேடலாமா? தொடர் » 3. வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே!

3. வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே!

நாங்கள் பாவங்கள் செய்த பாவிகள். ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர்கள் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் என சிலர் கூறுகின்றனர். நாம் பாவங்கள் நிறையச் செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் பொருளை புரிந்து கொள்வதில்லை. அல்லாஹ் மிகப்பெரும் கருணையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்று திருமறையின் பல இடங்களில் கூறுகின்றான்.

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கை இழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக” (அல்குர்ஆன்: 39:53)

மேற்கண்ட வசனத்தில் ஒருவர் எவ்வளவுதான் பாவங்கள் செய்திருப்பினும், அவர் அல்லாஹ்வுக்கே முற்றிலும் வழிபட்டு தம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவற்ரை மன்னிப்பதாகக் கூறுகின்றான். ஆனால் பாவம் செய்தவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று கூறுவது மேற்கண்ட வசனத்தை நிராகரித்தல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!

ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில்தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும், பிரார்த்திக்கவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த அமல்களையும் செய்யமுடியாது. அவருக்கும் இந்த உலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீதுகளுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.

* அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்கள் அல்லர்:-

“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்த பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப் பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (அல்குர்ஆன்: 16:20-21)

* இறந்த நல்லடியார்களுக்கும் இவ்வுலகத்தில் இருப்பவர்களுக்கும் இடையில் ஒரு திரையிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:-

“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்” (அல்குர்ஆன்: 39:42)

“….அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல்குர்ஆன்: 23:99-100)

* இறந்த நல்லடியார்களால் நாம் கூறுவதைக் கேட்க முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்:-

“….நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது….” (அல்குர்ஆன்: 27:79-81)

“….அன்றியும் உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களைச் செவியேற்கும்படிச் செய்கிறான். கப்றுகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்” (அல்குர்ஆன்: 35:22-23)

“நீங்கள் அவர்களை பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்க மாட்டார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணை வைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள். யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்” (அல்குர்ஆன்: 35:14)

“அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும், தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன்: 7:197)

இங்கு ‘என் அடியார்கள்’ என்று அல்லாஹ் குறிப்பிடுவதில் சாதாரண மக்களும் நல்லடியார்களான இறைநேசர்களும் அடங்குவர். அவர்களைக்கூட கஷ்டம், துன்பம், துயரம், வியாதி போன்றவற்றிலிருந்து நம்மை காப்பவர்களாக நினைக்கக்கூடாது. (மேற்கண்ட வசனம் காஃபிர்களை நோக்கி கூறப்பட்டவையாக இருப்பினும் இதில் முஸ்லிம்களுக்கும் படிப்பினை இருக்கிறது.) அதற்கு அந்த நல்லடியார்கள் சக்தி பெற்றவர்களும் அல்ல என்று இரைவன் எச்சரிக்கின்றான். இறைவனே சக்தி பெற்றவன், மேலான பாதுகாவலன் என்பதற்கு சான்றாக இறைவன் தன் அருள்மறையின் மற்றொரு வசனத்தில் ஏனைய இறைநேசர்களை விடவும் மிக உயர்ந்தவர்களான நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்:

“கூறுவீராக: நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெற மாட்டேன்” (அல்குர்ஆன்:72:21)

“(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை” (அல்குர்ஆன்: 7:188)

* நல்லடியார்களைப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-

“நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்” (அல்குர்ஆன்: 18:102)

* நல்லடியார்களால் பரிந்து பேச முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்:-

“….அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?” (அல்குர்ஆன்: 32:4)

“அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ‘அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?’ (என்று)” (அல்குர்ஆன்: 39:43)

* நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களால் நம் அழைப்பைச் செவியுற முடியாது:-

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:-

‘உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும்வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும்’ அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

‘நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், ‘இந்த இடத்திலிருந்து உன்னை இறைவன் எழுப்பும்வரை உறங்குவீராக’ என்று கூறுவார்கள்…. தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும்வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்’ அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி ஹதீஸ் சுருக்கம்.

என் குடும்பத்தாரிடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும்போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க அந்த ஆத்மா பர்ஸக் உலகிலிருந்து இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பார்களா? எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மரணித்த நல்லடியார்களின் ஆத்மா இருக்கும்போது, நல்லடியார்கள் அவர்களது கப்றுகளில் இருந்து கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள் அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புகின்றவர்கள் மேற்கண்ட ஹதீஸை நிராகரித்தவர் ஆவார்.

* நல்லடியார்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் எனக் கூறுபவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்:-

“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்)” (அல்குர்ஆன்: 39:3)

இங்கே சிலர் கூறலாம், நாங்கள் அவர்களை வணங்கவில்லையே, அந்த நல்லடியார்களிடம் ‘இறைவனிடம் எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தாருங்கள் என்று தானே பிரார்த்திக்கிறோம்’ இந்த வசனம் எப்படி எங்களுக்குப் பொருந்தும்? என்று கேட்கலாம். நபி (ஸல்) அவர்கள் ‘பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும்’ என்று கூறியிருக்கிறார்கள். அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் (ரலி) நூல்: அபூதாவூத்.

அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையிலே பல்வேறு இடங்களில் தன்னைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் பிரார்த்தனையும் ஒரு வணக்கம் என்றே கூறுகின்றான்.

இதுபோன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் (பார்க்க: 6:71, 7:192, 10:106-107, 17:56-57, 26:62, 34:22) இருந்து நாம் விளங்குவது என்னவென்றால்:-

* இறந்தவர்களால் சிபாரிசு, பரிந்துரை செய்ய முடியாது (10:18)

* இறந்த நல்லடியார்கள் புது மணமகனைப் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். (ஹதீஸ்)

* நல்லடியார்களைப் பாதுகாப்பவனாக அல்லாஹ்வே இருக்கிறான். அவர்கள் பாதுகாவலர்கள் அல்லர். (7:196)

* இறந்த நல்லடியார்களால் பதிலளிக்க முடியாது. (17:56)

* அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. (35:13)

* அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கக் கூடாது. (10:106, 6:71, 23:117)

* அல்லாஹ்வின் இல்லங்களில் நல்லடியார்களை அழைக்கக் கூடாது. (72:18)

எனவே என்றோ இறந்து விட்ட நல்லடியார்கள் பிரார்த்தித்தால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்று ஒருவர் நம்பி, அந்த நல்லடியாரின் கப்றில் கையேந்தி நின்றால் நிச்சயமாக அவர் மேற்கூறப்பட்ட இறைவசனங்களை நிராகரித்ததோடல்லாமல் இறைவனுக்கு இணைவைத்த மகா பாவியாகி விடுவார். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!

* ஷுஹதாக்கள் என்றும் உயிர் வாழும் தியாகிகளாயிற்றே!

இன்னும் சிலர் மேற்கண்ட வசனங்கள் எல்லாம் சாதாரண மக்களைக் குறிக்கின்றது. ஆனால், ‘இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை ‘(அவர்கள்) மரணித்து விட்டவர்கள்’ என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள். எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்” (அல்குர்ஆன்: 2:154 மற்றும் 3:169) இவ்வசனங்கள் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த ஷுஹதாக்கள் உயிரோடு இருப்பதாக கூறுகிறதே! அப்படியானால் இவ்வசனத்தின் பொருள் என்ன என்று கேட்கின்றனர்.

இவ்வசனங்களுக்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அளித்த விளக்கமாக ‘ஸஹீஹ் முஸ்லிமில்’ பின்வரும் ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது.

‘மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவ்வசனம் குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவினோம். அதற்கு அவர்கள் கூறினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்.

‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் உடலுக்குள் இருக்கும் அவைகள் அர்ஷில் மாட்டப்பட்டுள்ள கண்ணாடி கூண்டுகளுக்குள் இருக்கும். சுவர்க்கத்தில் அவை நினைத்தபடி சுற்றித்திரிந்து விட்டு அந்த கூண்டுக்குள் வந்து சேரும். அவற்றைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்று இறைவன் கேட்பான். இனி எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நாங்களோ சுவர்க்கத்தில் விரும்பிய இடங்களிலெல்லாம் கனிவகைகளை உண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு இறைவன் அவர்களிடம் மூன்று முறை கேட்பான். தாங்கள் ஏதாவது ஒன்றௌ கேட்காமல் விடப்படமாட்டோம் என்பதை உணர்ந்து கொள்ளும் அவர்கள், ‘இறைவா எங்கள் உயிர்கள் எங்கள் உடல்களில் மீட்கப்பட வேண்டும். மீண்டும் ஒருமுறை உன்னுடைய பாதையில் நாங்கள் உயிர் நீக்க வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு வேறு எந்த தேவையும் கிடையாது என்பதைக் காணும் இறைவன் அவர்களை (வேறொன்றும் கேட்காமல்) விட்டுவிடுவான்’ ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 4651.

இதுதான் இந்த ஆயத்துக்களின் விளக்கம். ஆனால் நம்மில் சிலர், ஷஹீதுகள் கப்றின் உள்ளே உயிரோடு இருக்கிறார்கள்; அவர்களிடம் நம் தேவைகளைக் கூறினால் அவர்கள் அதைச் செவியுற்று, அத்தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்றோ அல்லது அவர்கள் இறைவனிடம் சிபாரிசு (பிரார்த்தனை) செய்கிறார்கள் என்று எண்ணுவதோ தவறு.

மறைந்த நல்லடியார்களால் நமக்காக இறைவனிடம் சிபாரிசு (பிரார்த்தனை) செய்ய முடியுமானால், அந்த நல்லடியார்களை விட இறைவனிடம் மிகவும் அந்தஸ்தில் உயர்ந்தவர்களான நபி (ஸல்) அவர்கள்தான் நமக்காக சிபாரிசு (பிரார்த்தனை) செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள். அப்படி இருக்க நபி (ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லாதபோது அவர்களை அழைத்து சிபாரிசு (பிரார்த்தனை) செய்வது ஆகுமென்றிருந்தால், அதை நம்மைவிட நபி (ஸல்) அவர்களின் தோழர்களே மிகவும் அறிந்திருப்பார்கள் யாராலும் மறுக்க முடியாது. ஆனால் புகாரியில் இடம்பெற்றுள்ள பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்.

‘வறட்சி ஏற்படும் போதெல்லாம் உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை அல்லாஹ்விடம் மழையை வேண்டி பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்வார்கள். மேலும், ‘இறைவா! உன்னிடம் மழை வேண்டி பிரார்த்திக்குமாறு நாங்கள் நபி (ஸல்) அவர்களை கேட்டுக் கொள்பவர்களாக இருந்தோம். நீயும் எங்களுக்கு மழையை தந்தருளினாய். (நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே இல்லாத) இப்பொழுது நபிகளாரின் சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களை உன்னிடத்தில் மழைக்காக பிரார்த்திக்குமாறு கேட்டிருக்கிறோம். ‘இறைவா! எங்களுக்கு மழையைத் தந்தருள்’ என்று பிரார்த்திப்பார்கள். மழையும் பெறுவார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (954, 3434)

மறைந்த இறைநேசர்களிடம் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால், உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இப்பூவுலகில் வாழ்ந்த காலங்களில் மழைக்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொண்டது போலவே நபி (ஸல்) அவர்கள் மறைந்த பின்பும் அவர்களிடமே கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கேட்காமல் தங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களை இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டதிலிருந்து மறைந்தவர்களிடம் (அவர்கள் நபியாக இருந்தாலும்) பிரார்த்திக்குமாறு கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது.

இங்கு கவனிக்க வேண்டியது: நம்முடன் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர்களிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்தும், நேர்வழி நடந்த கலீஃபாக்களின் நடைமுறையிலிருந்தும் பெறப்பட்ட சுன்னாவாகும்.

ஆய்வு தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *