Featured Posts
Home » நூல்கள் » ஸூஃபியிஸம் vs இஸ்லாம் தொடர்.. » வழிகெட்ட ஸூஃபித்துவக் கொள்கைகள்!

வழிகெட்ட ஸூஃபித்துவக் கொள்கைகள்!

ஸூஃபியிஸம்: ‘ஏகத்துவமும், பல இறைக்கொள்கைகளும் ஒன்றுதான். இவைகள் எல்லாம் இறைவனை அடையும் பல்வேறு வழிகளில் ஒன்று’ என்று ஸூஃபிகளில் சிலர் கூறுகின்றனர். ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில்.

இஸ்லாம்: அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான். “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னத்தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்கும். என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக” (அல்குர்ஆன்:20:14)

“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: ‘நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்’ என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (அல்குர்ஆன்:21:25)

ஸூஃபியிஸம்: இன்னும் சில ஸூஃபியாக்கள் அத்வைத பைத்தியம் முற்றிப்போய் தம்மைத் தாமே கடவுளாகக் கூறிக் கொள்கின்றனர். மன்சூர் ஹல்லாஜ் என்ற ஸூஃபி ‘அனல் ஹக்’ நானே இறைவன் என்று பிதற்றித் திரிந்தார்.

இஸ்லாம்: “இன்னும், அவர்களில் எவரேனும் ‘அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்’ என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு – நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் – இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்கு கூலி கொடுப்போம்” (அல்குர்ஆன்:21:29)

ஸூஃபியிஸம்: நபி (ஸல்) அவர்கள் ‘மறைவான ஞானம் அறியும் வழி’ என்ற இரகசியத்தை அலி (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. மறைவான இரகசியத்தை அறியும் அந்த ஞானவழி அலி (ரலி) அவர்களின் பரம்பரை மூலம் ஸூஃபிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இஸ்லாம்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ‘யார் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் வஹியின் மூலம் அருளியவற்றில் சிலவற்றை மறைத்து விட்டார்கள் என்று கூறுகிறாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். அல்லாஹ் கூறுகிறான்: “தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும். (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரைநேர்வழியில் செலுத்தமாட்டான்” (அல்குர்ஆன்: 5:67) எனக் கூறினார்கள்’. அறிவிப்பாளர்: மஸ்ரூக் (ரலி) நூல்: புகாரி (4477, 6832) முஸ்லிம் (259) திர்மிதி (2994) அஹ்மத் (23094)

மேலும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களில் சிலருக்கு சில சமயங்களில் சில பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவை ஹதீஸ் கிரந்தங்கள் வாயிலாக அத்தோழர்கள் மூலம் முழு உம்மத்திற்க்கும் போதிக்கப்பட்ட அமல் ஆகும். அவ்வாறில்லாமல், நபி (ஸல்) அவர்கள் எவருக்கும் கற்றுத்தராத விஷேசமான கல்வியை (மற்ற நபித்தோழர்களிடம் மறைத்து) அலி (ரலி)க்கு மட்டும் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறுபவர், நபியவர்களின் தூதுத்துவத்தைக் களங்கப்படுத்தி, இறைவன் மக்களுக்கு அருளியவற்றில் சிலவற்றை மறைத்து, மேற்கண்ட இறைக்கட்டளைக்கு நபியவர்கள் மாறுசெய்து மோசடி செய்து விட்டார்கள் என்று துணிந்து நபி (ஸல்) மீது அவதூறு கற்பிக்கின்றார். நவூதுபில்லாஹி மின்ஹா!

ஒருமுறை அலி (ரலி) அவர்களிடம் தான் இவ்வாறு கேட்டதாக அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்:

‘குர்ஆனில் இல்லாத (விஷேச) ஞானம் எதுவும் உங்களிடம் உண்டோ?’ என நான் அலி (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை விளங்குவதில் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற ஞானத்தையும், இதோ இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னிடமில்லை என்று கூறினார்கள். ஏட்டில் உள்ளது என்னவென்று நான் கேட்டபோது அவை நஷ்டஈடு, கைதிகளை விடுதலை செய்வது, நிராகரிப்பாளர்களின் கொலை சம்பந்தப்பட்ட சட்டங்கள் தான் இவை என்று கூறிவிட்டார்கள். ஆதாரநூல்: புகாரி (2820, 4663) இப்னுமாஜா (2648)

உண்மையில் சற்று சிந்தித்தால் இது எவ்வளவு பெரிய பொய் என்பது விளங்கும். நபித்தோழர்களில் அலி (ரலி) அவர்களைவிட அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற உயர்ந்த நபித்தோழர்களுக்கு சொல்லித்தராமல் அலி (ரலி)க்கு மட்டும் விஷேசமாகக் கற்றுக் கொடுத்தார்கள் என்றால், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் விளங்கத் தகுதியற்றவர்கள் என்று பொருள். இம்மார்க்கத்தை இவர்களைவிட யாரால் தெளிவாக விளங்க முடியும்? மேலும் அலி (ரலி) அவர்கள் இதனை நபி (ஸல்) அவர்களுக்குப் பின் பிறருக்கு கூறியிருந்தால் மார்க்கத்தில் நபிக்கு மோசடி செய்தவர்களாவார். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் தமக்கு மட்டும் விஷேசமாக கூறியதை எப்படி பிறருக்கு சொல்லலாம்? அப்படி அலி (ரலி) அவர்கள் மற்ற நபித்தோழர்களைவிட எந்த அறிஞனை அதை சொல்லித் தருவதற்கு தகுதியானவராக கண்டார்கள்? எனவே அலி (ரலி) அவர்களை மட்டிலும் உயர்த்தி மற்ற நபித்தோழர்களை (அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) உட்பட) இழிவுபடுத்தும் இந்த வழிகெட்ட ‘ஷியா’ கொள்கையை விட்டும் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!

“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்துகொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாக தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை” (அல்குர்ஆன்: 7:188)

‘மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது’ என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்களாவன:

*எவரேனும் முஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார்.

*எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார்.

*எவரேனும் இறைவனிடமிருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார்கள் என்று கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார். அறிவிப்பாளர்: மஸ்ரூக் (ரலி) நூல்: புகாரி (4477, 6832). முஸ்லிம் (259). திர்மிதி (2994). அஹ்மத் (23094)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *