Featured Posts
Home » நூல்கள் » இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள் (Book) » முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆனது எப்படி?

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆனது எப்படி?

அப்பொழுது அவருக்கு வயது 40! வழக்கம்போல் ஹிரா குகையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த வேளை அது! வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் வஹீ எனப்படும் இறைச்செய்தி முதன் முதலாக இறங்கிற்று. அவருடைய வாழ்வில் 23 வருடங்கள்வரை இறங்கிய இந்த இறைச்செய்தியே திருக்குர்ஆன் எனப்படுகின்றது.

வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக தான் பெற்ற இறைச்செய்தியான திருக்குர்ஆனை தன் சமூகத்தாரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். ஒரு சிறிய கூட்டம் அவருடைய இந்தப் பேச்சுக்கு செவிசாய்க்க ஆரம்பித்தது. இதன் விளைவாக அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாக நேர்ந்தது.

இறைநம்பிக்கை கொண்ட அந்த சிறிய கூட்டத்தின் மீது அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஒரு கட்டத்தில் மக்காவாசிகளின் பகைமை உணர்வு முற்றிப்போனது. எந்த அளவுக்கு எனில், கி.பி. 622ல் அந்நகரை விட்டு புலம்பெயர்ந்து செல்லும்படி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். இறைக்கட்டளைக்கேற்ப மக்கா மாநகரை விட்டு வடக்கே 260 மைல்கள் தொலைவில் அமைந்த மதீனா எனும் நகருக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் சென்றார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இந்நிகழ்ச்சி ஹிஜ்ரா – புலம் பெயர்தல் எனப்படுகின்றது. அன்றிலிருந்து தான் இஸ்லாமிய நாட்காட்டி ஹிஜ்ரி துவங்குகின்றது.

அதன் பின்னர் பல்லாண்டுகள் கழித்து இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவரைப் பின்பற்றியோரும் மக்கா மாநகருக்கு திரும்பும் தருணம் வந்தது. மக்கா மாநகரம் திரும்பிய அவர்கள், தமது பகைவர்களையெல்லாம் மன்னித்தார்கள். ஓர் உன்னத இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிரந்தரமாக நிறுவினார்கள்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது 63-ஆம் வயதில் மரணம் அடைவதற்கு முன்பாகவே அரபுலகின் ஒரு பெரும்பகுதி இஸ்லாமிய குடையின் கீழ் வந்தது. மேலும், அவருடைய மரணத்துக்குப் பின் ஒரு நூற்றாண்டுக்கு உள்ளாகவே, இஸ்லாம் மேற்கே ஸ்பெயினுக்கும், தூரக்கிழக்கே சீனதேசம் வரையிலும் பரவியது.

இஸ்லாமிய பரவல் உலகில் தாக்கத்தை உருவாக்கியது எப்படி?

இஸ்லாம் எனும் இறைமார்க்கம் அமைதியாகவும் அதேவேலையில், வேகமாகவும் பரவியதற்கு பல காரணங்கள் கூற முடியும். அவற்றில் மிக முக்கியமானது, மிக எளிமையான அதன் சித்தாந்தமும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அமைந்த அதன் கொள்கை விளக்கமுமே என்றால் அது மிகையல்ல.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *